உலக சுற்றுலா தினம் – செப்டம்பர் 27

0
571

தேடல் எப்போது தொடங்கியதோ அப்போதே சுற்றுலாவிற்கான அடித்தளம் போட்டாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் உணவுக்காக தொடங்கிய தேடல் இன்று மருத்துவத்தில் வந்து நிற்கிறது.
தமிழகத்தின் நில வரையறை, சீதோஷ்ண நிலை, வாழ்வியல் கலாசாரம் இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நம்முடைய உணவு, உடை, உறைவிடம் குறித்த அத்தனையும் நாம் தெரிந்ததே. எங்கு தேடினும், இட்லியும், எங்கு பார்ப்பினும் வேஷ்டியும், புடவையும்தானே தெரிந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு ஜிலேபியும் கிடைக்கிறது, இத்தாலி நாட்டு உணவும் கிடைக்கிறது. சீன நூடுல்ஸும் தடையில்லாமல் கிடைக்கிறது என்றால், எப்படி ஒருங்கிணைந்தது?
தீராத ஆர்வம், நிற்காத தேடல்தான் இன்று எல்லா தேசத்து உணவு வகைகளும், எல்லா தேசத்து உடை வகைகளும் கிடைக்கும் நகரமாக நாம் வாழும் இடம் மாறிப்போயிருக்கிறது.
தேடல்தானே மனித குலத்தின் வளர்ச்சிக்கான அடி நாதம். அதுதான் இங்கு நிகழ்ந்திருக்கிறது, இன்னும் தொடர்ச்சியாய் நிகழ்ந்துகொண்டும் இருக்கிறது. எங்கெல்லாம் வளர்ச்சி தலைதூக்குகிறதோ அங்கெல்லாம், சுற்றுலா என்பது சூத்திரமாய் இருந்திருக்கிறது.
சுற்றுலா உடலை மட்டுமல்ல, மனதையும் சேர்த்து குதூகலிக்கச் செய்யும் விஷயம். நம்முடைய இந்த வாழ்க்கை அழகானது. இந்த பூமி அழகானது. இந்த பூமியில் வசிக்கும் நாம் அழகானவர்கள். நம்மை மேலும் அழகாக்க, நம் வாழ்க்கையை மேலும் அழகாக்க நம்முடைய பிரபஞ்சத்தில் இயற்கையின் எழிலும், செயற்கையின் பிரம்மாண்டமும், அற்புதங்களும் அபரிமிதமாக கொட்டிக் கிடக்கின்றன. நம் வீட்டு தோட்டத்தில் புத்தம் புதிதாக பூத்திருக்கும் ஒற்றை ரோஜாவைக் கண்டு குதூகலிக்கும் நம்முடைய மனநிலை, ஊட்டியின் பிரம்மாண்டமான ரோஜாக் கண்காட்சியையும், நியூயார்க் மாநகரத்தின் பூங்காவின் பரந்து விரிந்த ரோஜாத் தோட்டத்தையும் நேரில் பார்க்கும்போது எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்! இயற்கையின் எழிலோடு, உங்களையும் சேர்த்து நீங்கள் முழுமையாக அனுபவிப்பீர்கள் என்பதுதான் உண்மை.
சின்ன வயதிலிருந்து, இன்றைக்கு வரை சுற்றுலா சென்று வந்த அனுபவங்களை நம் யாராலும் மறக்க முடியும் என்று நினைக்கிறீர்களா! இன்றைக்கு நினைவுகளை நொடிக்கு நொடி நம்முடைய செல்போன்களில் பதிவு செய்து விடுகிறோம். நினைவுகளை பதிவு செய்யும் காமிராக்களை பயன்படுத்த வசதி இல்லாத காலகட்டங்களில் கூட நாம் சென்று வந்த சுற்றுலாக்களின் நினைவுகள், அப்போது நாம் கற்றுக்கொண்ட விஷயங்கள் நம் மனதில் பசு மரத்தாணி போல பதிந்திருக்கும் என்பதை நம் யாராலும் மறுக்க முடியுமா!
இன்றைக்கு பொருளாதாரம் வளர்ச்சியடைந்து விட்டது, வசதி வாய்ப்புகள் பெருகிவிட்டன, தனிமனிதர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விட்டது. உள்ளூரில் மட்டுமே விடுமுறை நாட்களை கழித்த நாம் இன்று உலகெங்கிலும் பயணிக்கிறோம். நாம் மட்டுமல்ல, உலகெங்கிலும் 1.2 கோடி மக்கள் சுற்றுலாத் தலங்களை நாடிப் பயணிக்கின்றனர். கடந்த 5௦ ஆண்டுகளில் சுற்றுலாத் துறை அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஒரு புதிய இடத்தின் மரபை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, மொழியை, நடைமுறையியலை, பின்புலத்தை தெரிவிப்பதில் சுற்றுலா மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சியில் சுற்றுலாத்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதில், வறுமையை ஒழிப்பதில், மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில், சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பதில், மொழி, இன, கலாச்சார வேற்றுமைகளை கொண்டாடுவதில், கலாச்சார, மொழி, பண்பாட்டு பரிமாற்றங்களில், பண்டைய நாகரீகங்களின் பதிவுகளை பாதுகாப்பதில், உலக நாடுகளுக்கிடையே நல்லுறவு மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதில், உலக அமைதியை வலுப்படுத்துவதில்…. சுற்றுலா முக்கிய இணைப்புப் பாலமாக விளங்குகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் முக்கிய நடைமுறைகளில் ஒன்று, அவர்களின் பணியாளர்கள் வருடந்தோறும் நிச்சயம் சுற்றுலா சென்று வர வேண்டும். அது பணியாளர்களின் செயல்திறனை பல மடங்கு அதிகரிக்கும் என்று நிறுவனங்கள் நம்புகின்றன. அதுமட்டுமில்லாமல் பணியாளர்களுக்கிடையே குழு மனப்பான்மையை வளர்ப்பதற்கான பயிற்சிகள் நிறுவனங்களில் நடத்தப்படாமல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு இயற்கைச் சுழல் நிறைந்த ரம்மியமான இடங்களில் மட்டுமே நடத்தப்படுகின்றன. மனித மனதை பாராசூட்டிற்கு ஒப்பிடுவார்கள். அவை விரிந்திருந்தால் மட்டுமே சிறப்பாக செயலாற்ற முடியும்.
நீங்களே யோசித்துப் பாருங்கள்! கடைசியாக நீங்கள் எப்போது விடுமுறை எடுத்து வெளியே சென்று வந்தீர்கள்? அது சில வாரங்களுக்கான விடுமுறையாகவோ அல்லது ஒன்றிரண்டு நாள் விடுமுறையாகக்கூட இருக்கலாம்… சமீபத்தில் எப்போது சென்று வந்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். “இருக்கும் வேலைகளை முடிப்பதற்கே நேரம் இருப்பதில்லை, ஊர் சுற்ற எங்கே நேரம் இருக்கிறது” என்பதுதான் உங்கள் பதிலாக இருக்கும் என்றால் நீங்கள் கடிகாரத்தை பார்த்து மட்டுமே உழல்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். நீங்கள் உங்களுடைய வேலையை திறனுடம் செய்து அதில் முழு திருப்தியை அனுபவிக்கிறீர்கள் என்றால் கூட பரவாயில்லை, நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம். வேலையிலும் திருப்தி இல்லை, சொந்த வாழ்க்கையிலும் திருப்தி இல்லை, பொது வாழ்க்கையிலும் திருப்தி இல்லை என்றால்… நீங்கள் ஏதோ கடமைக்கு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
உங்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துங்கள்.
சுற்றுலாப்பயணியாக மட்டுமே இல்லாமல் வாழ்க்கைப் பயணியாக இருங்கள். புதிய விஷயங்களை செய்யுங்கள். புதிய மனிதர்களை சந்தியுங்கள். கண்ணுக்கு புலப்படும் விஷயங்களுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று யோசியுங்கள். நாம் வசிக்கும் இந்த அற்புதமான உலகத்தை புரிந்து கொள்ள இவையே சூத்திரங்கள். செப்டம்பர் 27 – உலக சுற்றுலா தினம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here