சர்வதேச எழுத்தறிவு தினம் – செப்டம்பர் 8

0
239

இந்த சமூகம் நமக்கு கொடுத்த விஷயங்களுக்கு நாம் மிகப் பெரிய விஷயங்களை திருப்பித் தர வேண்டும் என்று கூட அவசியமில்லை. உங்கள் வீட்டில் வேலை செய்பவரின் குழந்தைகளையும், டிரைவரின் குழந்தைகளையும் நீங்கள் படிக்க வைக்கலாமே.
கற்கால மனிதர்கள் குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் இருந்து நாம் படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்து இன்று இருக்கும் இந்த நிலைமைக்கு வந்திருக்க என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? பூமியில் உள்ள மற்ற உயிரினங்கள் இத்தனை நூற்றாண்டுகளில் மிகச் சிறிய அளவிலேயே வளர்ச்சியடைந்திருக்கும்போது, மனிதர்களாகிய நம்முடைய இந்த அசாத்திய வளர்ச்சிக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்? ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதன் சேகரித்த அறிவை நமக்கு கொண்டு வந்து சேர்த்தது எது என்று நினைக்கிறீர்கள்? ஒரு தலைமுறைக்கும், இன்னொரு தலைமுறைக்கும் இணைப்பு பாலமாக இருந்தது எது என்று நினைக்கிறீர்கள்? பல விதமான கலாச்சாரம் மற்றும் நாகரிகங்களுக்கிடையே மொழி வளர்ச்சிக்கும், கருத்துப் பரிமாற்றங்களுக்கும் காரணமாக இருந்தது எது என்று நினைக்கிறீர்கள்? ஞானிகளின் தத்துவங்களும், கணித மேதைகளின் பகுத்தறிவும், அறிவியல் வல்லுனர்களின் கண்டுபிடிப்புகளும், சிந்தனையாளர்களின் எண்ணங்களும், வரலாற்றுச் சாதனையாளர்களின் சரித்திரங்களும் சாதாரண மனிதனை வந்தடைந்தற்கு எது காரணம் என்று நினைக்கிறீர்கள்?… எழுத்தறிவுதான்.
“கற்கை நன்றே, கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே” – வறுமையின் பிடியில் சிக்கி பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டாலும் கல்வி கற்பதை நிறுத்தக் கூடாது என்று எழுத்தறிவின் அத்தியாவசியத்தை எடுத்துச் சொல்கிறது நறுந்தொகை.
உலகத்தில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர், அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள். சுமார் 3௦1 மில்லியன் சிறுவர்கள், பாடசாலை வசதியில்லாமல் இருக்கிறார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். யுனெஸ்கோவின் அறிக்கைப்படி தெற்கு மற்றும் மேற்கு ஆசியப்பகுதியில் 58.6% மக்களும், ஆப்பிரிக்காவில் 59.7% மக்களும், அரபு நாடுகளில் 62.7% மக்களும் படிப்பறிவில்லாதவர்களாக இருகின்றனர். அதிக எழுத்தறிவு கொண்ட நாடுகளின் பட்டியலில் கியூபா, எஸ்டோனியா, போலந்து ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன. 177 நாடுகள் கொண்ட அந்த பட்டியலில் இந்தியா 147 வது இடத்தை பெற்றிருக்கிறது. இந்தியாவில் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலங்களில் கேரளா முதலிடத்தையும், பீகார் கடைசியிடத்தையும், தமிழகம் 11வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
இந்த விகிதாச்சாரங்களின் பட்டியலை பார்க்கும் பொழுது உலகத்தில் இவ்வளவு சதவீதம் பேர் படிப்பறிவில்லாதவர்களாக இருக்கின்றார்களா என்று நாம் ஆச்சரியப்படலாம். எல்லாம் அரசாங்கத்தின் தவறு என்று ஆதங்கப்படலாம். இந்த நிலைமையை மாற்ற நாம் என்ன செய்ய முடியும் என்று யோசிக்கலாம். உண்மைதான்! நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இல்லாத விஷயங்களை நம்மால் மாற்றவே முடியாது. ஆனால் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் விஷயங்களில் நம்மால் முடிந்ததை செய்ய வேண்டிய கடமை நமக்கு நிச்சயம் இருக்கிறது. இன்று நாம் என்ன படித்திருந்தாலும் அந்த படிப்பை முடிப்பதற்கு இந்த சமூகமும், அரசாங்கமும் நிச்சயம் ஏதோ ஒரு வகையில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. நாம் இந்த சமூகத்திடமிருந்து, அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்டதற்கு திருப்பித் தர வேண்டிய நேரம் இது.
பிறக்கும்போது ஒன்றுமில்லாமல் இருந்த நமக்கு அடையாளம் தந்தவர்கள் நம்முடைய பெற்றோர்கள். ஒரு பூஜ்யத்தை “1” என்ற மதிப்பு மிக்க எண்ணாக மாற்றும் பணியைத்தான் நம் பெற்றோர்கள் செய்திருக்கிறார்கள். அதிலும் முக்கியமாக நம்முடைய பெற்றோர்களில் ஒருவரோ இல்லை இருவருமே படிப்பறிவில்லாதவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் நாம் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தார்கள். அவர்களை விட நாம் அதிகம் படிக்க வேண்டுமென கனவு கண்டவர்கள் அவர்கள். நமக்கு அடிப்படையை தந்தவர்களுக்கு நமது நன்றியுணர்ச்சியை செலுத்த வேண்டிய நேரம் இது. இன்றைக்கு இந்த இன்ஃபினி இதழில் இப்படியொரு கட்டுரையை எழுத வேண்டும் என்றாலும், அந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றாலும் அதற்கு முக்கிய காரணம் அன்றைக்கு நம் கை பிடித்து அ, ஆ, இ, ஈ எழுதவும், சொல்லவும் கற்றுக்கொடுத்த நம் ஆசிரியர்கள்தான். நம்முடைய அறிவு எங்கிருந்து பெறப்பட்டதோ அதற்கு காரணமானவர்களிடம் நமக்கு நன்றி உணர்ச்சி இல்லாமல் இருந்தால் அந்த அறிவினால் நமக்கு ஒரு பயனும் இல்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம்.
இந்த சமூகம் நமக்கு கொடுத்த விஷயங்களுக்கு நாம் மிகப் பெரிய விஷயங்களை திருப்பித் தர வேண்டும் என்று கூட அவசியமில்லை. உங்கள் வீட்டில் வேலை செய்பவரின் குழந்தைகளையும், டிரைவரின் குழந்தைகளையும் நீங்கள் படிக்க வைக்கலாமே. பண உதவி செய்யவில்லை என்றாலும் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம். வீட்டு வேலை செய்பவரின் மகள் எதிர்காலத்தில் வீட்டுவேலை செய்துதான் பிழைக்க வேண்டும் என்ற அவசியமும், டிரைவரின் மகன் வளர்ந்தவுடன் டிரைவராகத்தான் வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமும் இருக்காது. உங்களில் எத்தனையோ பேர் கிராமப்புறங்களில் இருந்து நகரத்திற்கு வந்து படித்து, இன்று நல்ல நிலைமையில் இருப்பீர்கள். நீங்கள் பிறந்து வளர்ந்த கிராம மக்கள் அடிப்படை கல்வித் தகுதியை தடையில்லாமல் பெறுவதற்கான தேவைகளை உருவாக்கித் தர உங்களால் முடிந்ததை செய்ய வேண்டியது நிச்சயம் உங்கள் கடமையாகும்.
இந்த உலகத்தை மாற்றுவதற்கான வலிமையான ஆயுதம் கல்வியறிவு – நெல்சன் மண்டேலா.
செப்டம்பர் 8 – சர்வதேச எழுத்தறிவு தினம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here