கடமையை செய்தால், பலனை எதிர்பார்க்கலாம்!

0
147

ஏப்ரல் மாதம் பிறந்தாச்சு… நிறைய வகுப்புகளுக்கு தேர்வுகள் முடிந்திருக்கும், தொடக்கப்பள்ளி, நடு நிலைப் பள்ளிகள் மட்டும் தேர்வுகள் நடந்துகொண்டிருக்கும் நேரம் இது. இன்னும் ஒரு சில நாட்களில் அவர்களுக்கும் தேர்வு முடிந்து கோடை விடுமுறையை எதிர்கொள்ள ஆவலாய் இருப்பார்கள்.
கோடை விடுமுறைக்கு எந்த ஊருக்குப் போகலாம்? எங்கெல்லாம் சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், அடுத்த ஆண்டுக்கான முன்னேற்பாட்டை பெற்றோர்களாகிய நீங்கள் மனதில் ஏற்றுவதோடு, அந்தச் சிந்தனைகளை மெல்ல மெல்ல உங்கள் குழந்தைகள் மனதிலும் விதைக்க வேண்டுமென்பதற்காகவே இந்தப் பகுதி.
பள்ளிக்கு முந்தைய நிலையிலுள்ள குழந்தைகளுக்கு…
அதாவது உங்கள் குழந்தை மூன்று வயதைத் தொட்டு, இந்த ஆண்டு முதல் ஏதேனும் ஒரு பள்ளியில் சேர்ந்து படிக்க சீட் வாங்கியிருப்பீர்கள்.
இதுவரை உங்களையே சுற்றி சுற்றி வீட்டிற்குள் வலம் வந்துகொண்டிருந்த உங்கள் குழந்தை முதன்முதலாக மூன்றாவதாக ஒரு உலகத்தை பார்க்கப் போகிறான். அந்த உலகத்தில் முதன்முதலில் ஆசிரியர் என்ற உறவையும், நண்பர்கள் என்ற புதிய உறவுகளையும் உங்கள் குழந்தைப் பார்க்கப் போகிறான்.
புதியச் சூழல், புதிய உறவுகள் என்று வரும்போது நிச்சயம் உங்கள் குழந்தை மட்டுமல்ல, பெற்றோர்களாகிய உங்களுக்கும் ஒரு பரிதவிப்பு இருக்கவே செய்யும். இந்த பரிதவிப்பு அகல முதலாவதாக பெற்றோர்களாகிய நீங்கள் உங்களை மனதளவில் தயார்படுத்திக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் புதியதொரு சூழலை சந்திக்கவிருக்கும் உங்கள் குழந்தையிடம் ஆசிரியரின் மகிமையை சொல்லிக்கொடுங்கள், தாய்போன்ற முக்கியத்துவம் வாய்ந்தவர் ஆசிரியர் என்பதைச் சொல்லி, ஆசிரியர்கள் மீதான பயத்தையும், பள்ளி மீதான பயத்தையும் முதலிலேயே அகற்றிவிடுங்கள். உடனடியாக அந்த பயத்தை நீக்கிவிட முடியாவிட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாக அதை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.
குழந்தைகளுக்கு முதல் 5 வயதில் சரிவிகித உணவானது குழந்தைகளுக்கு கிடைத்தே ஆகவேண்டும் என் கிற படியால், உணவில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். அவசரமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்பதற்காக கடையில் கிடைக்கும் பாக்கெட் உணவுகளை நிச்சயமாக குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்துவிடாதீர்கள். அது குழந்தைகளின் மொத்த ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கிவிடும். இப்போதிருந்தே, உணவை சிந்தாமல் சாப்பிடுவதற்கும், முறையாக எடுத்துச் சாப்பிடுவதற்கும், தண்ணீர் அருந்துவதற்கும், கை கழுவுவதற்கும் கற்றுக்கொடுங்கள்.
மழலையர் பள்ளியை பொறுத்தவரையில் குழந்தைகளை கவனிக்க செவிலியர்கள் இருந்தாலும், நம் குழந்தைகள் அவரவர்களின் வேலையை அவர்களே செய்யப் பழகிக்கொண்டால் அது சிறப்பு தானே.
அதேபோல் தனியாக கழிவறைக்குச் சென்று சிறு நீர் கழிப்பதற்கான முறையை கற்றுக்கொடுங்கள். சில குழந்தைகள் வீட்டைத் தவிர வெளியிடங்களில் சிறு நீர் கழிப்பதை தவிர்க்கவே செய்யும். அது நல்ல விஷயமல்ல. இத்தகைய செயல், குழந்தையின் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கிவிடும். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
தொடக்கப்பள்ளி மாணவர்களின் பெற்றொர்களுக்கு…
உங்கள் குழந்தை 1 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று இரண்டாம் வகுப்புக்கோ, மூன்றாம் வகுப்பிலிருந்து நான் காம் வகுப்பிற்கோ, நான் காம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புக்கோ செல்பவர்களாக இருந்தால், இந்த காலக்கட்டத்தில் அதிகபட்சம் கவனமாக இருக்க வேண்டியது பெற்றோர்கள்தான்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதற்கான பருவம் இது. இந்தப் பருவத்தில் படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் பலத்திற்கும் முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம்தான் எதிர்காலத்தில் அவர்கள் பலமுள்ளவர்களாக இருப்பதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் வழி அமைத்துக்கொடுக்கும்.
குழந்தைகளை கண்டிப்பாக ஓடியாட விளையாட அனுமதியுங்கள். விளையாடுவதற்கான போதிய இடம் உங்கள் வீட்டின் அருகே இல்லாதபோது உங்கள் குழந்தையை அழைத்துக்கொண்டு பூங்காவிற்கோ, அல்லது மைதானத்திற்கோ அழைத்துச் செல்லுங்கள். அவர்களை விளையாடச் சொல்லுங்கள், முடிந்தால் அவர்களுடன் சேர்ந்து நீங்களும் விளையாடுங்கள்.
பள்ளியில் விளையாட்டு வகுப்பு என்பது நிச்சயம் உண்டு. அந்த வகுப்புக்கு பள்ளி முக்கியத்துவம் கொடுக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணியுங்கள். அப்படி கொடுக்காதபட்சத்தில் பள்ளி நிர்வாகத்திடம் நேரடியாக போய் விசாரியுங்கள். விளையாட அனுமதிக்கச் சொல்லி பெற்றோர் என்ற முறையில் வலியுறுத்துங்கள்.
உங்கள் குழந்தை எந்த விளையாட்டு விளையாட அதிகம் விரும்புகிறானோ, அதை தொடர்ச்சியாக விளையாட தொடர்ந்து ஆர்வமூட்டுங்கள். அவன் விளையாடும் விளையாட்டின் சிறப்புகளையும், அதன் மகிமையையும் தொடர்ந்து எடுத்துச் சொல்ல சோர்ந்துவிடவே விடாதீர்கள்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் தொடர்ந்து டி.வி. பார்ப்பதையோ, மொபைல் ஃபோனில் விளையாடுவதையோ அனுமதிக்கவே செய்யாதீர்கள்.
டீன் ஏஜ் பருவத்திற்கு முந்தைய பருவம்:
உங்கள் குழந்தை ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பிற்கோ, ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பிற்கோ செல்லக்கூடிய குழந்தைகளின் பெற்றோர் இந்தப்பகுதியை ஆழ்ந்து படியுங்கள்.
ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு என்பது டீன் ஏஜ் பருவத்திற்கு முந்தைய குழந்தைப் பருவத்தில் உங்கள் குழந்தைகள் நின்றுகொண்டிருப்பார்கள்.
இந்தப் பருவத்தில் டீன் ஏஜ் பருவத்திற்கான தாக்கம் கொஞ்சம் கொஞ்சம் இருக்கவே செய்யும், அதாவது நீங்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு எதிர் வார்த்தை பேசுவார்கள், நம் குழந்தைகள் நம்மை மதிப்பதே இல்லையே என்ற மனோ நிலை லேசாக பெற்றோர்களாகிய உங்களின் மனதில் எட்டிப் பார்க்கும். இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளை அழைத்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தித்த சவாலான விஷயங்களை சொல்லுங்கள், அதில் நீங்கள் சாமர்த்தியமாக மீண்டு வந்த சூட்சுமத்தை சொல்லுங்கள். வாழ்க்கையின் முக்கியத்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மனதிற்குள் ஏற்ற ஆரம்பியுங்கள்.
குழந்தைகள் இந்தப் பருவத்தில் விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படிப்புக்கும் கொடுப்பதற்கு முயற்சி எடுங்கள். கணிதம், அறிவியல் பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து குழந்தைகள் படிகிறார்களா என்பதை கண்காணியுங்கள். பள்ளியில் கற்றுக்கொடுப்பதைக் கடந்து வீட்டிலும் அவர்கள் பக்கத்தில் அமர்ந்து, பாடங்களைக் கற்றுக்கொடுங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைகளில் கற்கும் திறன் குறித்து உங்களுக்கு தெரிய வரும்.
கற்கும் திறன் தெரிந்தால் மட்டுமே, அவர்களை எதிர்காலத்தில் எப்படி பயணிக்க வைப்பது என்ற அணுகுமுறையை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.

டீன் ஏஜ் பருவம் :
அதாவது 13 வயதிலிருந்து 19 வயதுவரையிலான இந்தப் பருவமானது 8 ஆம் வகுப்பிலிருந்து கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் வரையிலான காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் உடலில் மட்டுமல்ல, மனதிலும் பல்வேறு மாற்றங்களை உங்கள் குழந்தைகள் எதிர்கொள்வார்கள்.
இந்த காலகட்டத்தில் முடிந்தவரை அவர்களை சிந்தனைகள் வெளியே சிதறிவிடாதபடி எப்போதும் பரபரப்பாகவே (பிசியாகவே) அதிகபட்சம் வைத்துக்கொள்ளுங்கள். பல்வேறு வகுப்புகளில் சேருங்கள். பல்வேறு மொழிகள் இந்தப் பருவத்தில் கற்றுகொள்ள வழியமைத்துக்கொடுங்கள். ஒவ்வொரு வகுப்பிற்கும், முடிந்தவரை பெற்றோர்களாகிய நீங்களே அழைத்துச்செல்லுங்கள். அவர்களுடன் அதிக நேரம் செலவு பண்ணுங்கள். நிறைய பேசுங்கள். அவர்கள் பெற்றோர்களாகிய உங்களை நண்பனாக பாவிக்கும் அளவிற்கு நடந்துகொள்ளுங்கள்.
முடிந்தவரை தனியறை கொடுத்து அவர்களை தனிமையில் இருக்க வைப்பதையோ, உங்கள் குழந்தைகளை தனியாக தூங்குவதற்கோ அனுமதிக்கவே செய்யாதீர்கள். உங்கள் பக்கத்திலேயே இரவு நேரம் கழிக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். வகுப்பில் நடக்கும் விஷயங்கள், பள்ளியில் நடக்கும் விஷயங்களை விளையாட்டாய் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த விஷயங்கள், பிடிக்காத விஷயங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அவனுக்குப் பிடித்த விஷயங்கள்தான் உங்களுக்கும் பிடிக்கும் வகையில் நடந்துகொள்ள முயற்சியுங்கள்.
குடும்பத்தில் சில பொறுப்புகளை உங்கள் குழந்தையின் கையில் கொடுத்து, அந்தப் பொறுப்புகளை அவர்களையே கவனிக்கச் சொல்லுங்கள். வீட்டில் சின்ன சின்ன வேலைகளைச் செய்ய நிச்சயமாக கட்டாயப்படுத்துங்கள். தன்னம்பிக்கை பேச்சாளர்களின் பேச்சுக்கள் அடங்கிய பேச்சுக்களை அவ்வப்போது கேட்க தூண்டுங்கள்.
படிப்பின் முக்கியத்துவத்தை பக்குவமாக அவர்களுக்குள் புரிய செய்யுங்கள். படிப்பின் முக்கியத்துவத்தைவிட வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் சரியாக எடுத்துரைக்கவேண்டிய பருவம் என்பதையும் பெற்றோர்களாகிய நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு நீங்கள் கண்காணிப்பது தெரியாதபடி அவர்களை தொடர்ந்து கண்காணியுங்கள்.
உங்கள் குழந்தையின் நண்பர்களையெல்லாம் வீட்டிற்கு வரவழைத்து அவர்களிடம் மாதத்திற்கு ஒருமுறையேனும் உரையாடுங்கள். இந்த செயல் எந்த நாளும் உங்களிடம் நேர்மையாக நடந்துகொள்ளும் பண்பை உங்கள் குழந்தைக்குள் ஏற்படுத்தும்.
பத்தாம் வகுப்பு – 12 ஆம் வகுப்பு மாணவர்கள்:
வாழ்க்கையில் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் கட்டம் இது. உங்கள் குழந்தை எதிர்காலத்தில் என்னவாக மாறப்போகிறார் என்பதை உறுதிபடுத்தும் பருவம் இது. இந்தப் பருவத்தில் மாணவர்கள் அதிகம் உழைக்க வேண்டும்.
குழந்தைகள் தங்கள் வளர்ச்சிக்கு எவ்வளவு பிரயத்தனப்படுகிறார்களோ, அந்தளவிற்கு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து பிரயத்தனப்பட்டே ஆக வேண்டிய நிலை இது. உங்கள் குழந்தை வரலாற்று சாதனையாளராகப் போகிறாரா? அல்லது சாதாரண வாழ்க்கையை வாழப்போகிறார்களா? என்பதை குழந்தைகளைவிட பெற்றோர்கள் தீர்மானிக்கக்கூடிய இடம் இது. உங்கள் குழந்தைக்கென தனித்திறமை இருக்கிறது. அவர்களுக்கென்று ஒரு சுய அடையாளம் இருக்கிறது. அந்த சுய அடையாளத்தை வெளிக்கொணரும் பருவம் தான் இது. இந்தப் பருவத்தில் பெற்றோர்கள் தங்கள் மனதில் இருக்கும் ஆசைக்குத் தகுந்தவாறுதான் எதிர்காலப் படிப்பை தங்கள் குழந்தைகள் தேர்வு செய்யவேண்டும், அப்படித்தான் பயணிக்க வேண்டும் என்று எந்தவொரு நிலையிலும் குழந்தைகளிடம் வற்புறுத்தாதீர்கள்.
அவர்களை பேச அனுமதியுங்கள், அவர்களைப் பேசுவதை காதுகொடுத்துக் கேளுங்கள். அவர்களை பெற்றோர்களாகிய நீங்கள் மதிக்கிறீர்கள், அவர்களின் உணர்வுகளுக்கு பெரிய மதிப்பளிக்கிறீர்கள் என்ற விஷயத்தை முதலில் அவர்கள் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் முழுமையாக உங்களை நம்பிவிட்டால், அதற்குப் பிறகு எல்லாமே சுபம்தான்.
உயர்படிப்பை பொறுத்தவரையில் நீங்கள் சொல்லும் படிப்பை உங்கள் குழந்தைகள் தேர்வு செய்தே ஆகவேண்டும் என்று ஆசைப்படும் நீங்கள், அந்தப் படிப்புக்கான சாதக பாதகங்கள், எதிர்கால வாய்ப்புகள் எல்லாவற்றையும் சொல்லுங்கள். அதுவும் உங்கள் குழந்தைகள் புரிந்துகொள்ளும்படி பக்குவமாய் எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் ஏற்றுக்கொண்டால், நல்லது. இல்லையேல் அவர்கள் தேர்வு செய்து வைத்திருக்கும் படிப்பின் அவசியம் குறித்தும் அதன் முக்கியத்துவத்தைப்பற்றியும் அவர்களிடமே கேளுங்கள். அந்தப் படிப்பின் முக்கியத்துவத்தை உண்மையிலேயே அவர்கள் உணர்ந்திருந்தால், உண்மையிலேயே அவர்களின் உணர்வுகளுக்கு, ஆசைகளுக்கு மதிப்பளித்து, அவர்களை அவர்களின் பாதையில் பயணிக்க அனுமதியுங்கள்.
குழந்தைகளை அடிபணிய வைப்பது பெற்றோர்களின் கடமையல்ல, அவர்களை முழுமையாக அரவணைத்துச் செல்வதே சிறந்த பெற்றோர்களின் கடமையாகும்.
பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் கடமையை முழுமையாக உள்வாங்கி, அதன்படி உணர்ந்து செயல்பட ஆரம்பித்துவிட்டால், நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் நிச்சயம் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் நிகழ ஆரம்பித்துவிடும்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here