இந்தியாவில் பெண் கல்வி!

0
224

‘ஓர் ஆணிற்குக் கல்வியறிவு அளிப்பது என்பது ஒரு நபருக்குக் கல்வியறிவு அளிப்பதாகும் . ஒரு பெண்ணிற்குக் கல்வியறிவு அளிப்பது என்பது ஓர் குடும்பத்திற்கே கல்வியறிவு அளிப்பதாகும் ‘ என்று கூறினார், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு.
ஆண்டிற்கு, 18 மில்லியன் வீதம் பெருகி வரும் மக்கள் தொகையானது நம் நாட்டின் மிகப்பெரிய மனித வளமாகக் கருதப்படுகிறது . இதில் 50% பேர் பெண்கள் . எனவே பெண்களின் முன்னேற்றத்தை புறந்தள்ளிவிட்டு நம் சமூக வளர்ச்சி என்பது ஏமாற்றத்தைத் தரும். ஆகையால் இந்த இடத்தில் பெண்களின் கல்வியானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அணூt.15 பெண்களுக்கு அரசியல், சமூக, பொருளாதார, சட்ட மற்றும் இதர அனைத்துத் துறைகளிலும் சம உரிமை மற்றும் வாய்ப்பினை உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும் கடந்த 50 ஆண்டுகளாக, நாட்டில் ஆண் -பெண் எழுத்தறிவு விகித வேறுபாடு 20 முதல் 26 % நிலவி வருகிறது. சமூகத்தில் நிலவும் ஆண் – பெண் பாலின வேறுபாடுகளைக் களைவதே இதற்கு உரிய வழி, என புரிந்துகொண்ட மத்திய அரசு 1986ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அனைவருக்கும் கல்வி என்பதனை உறுதி செய்தது . நாட்டின் உற்பத்தித் திறன், தேசிய வருமானம், வளர்ச்சி போன்றவற்றில் கல்வியறிவு மற்றும் பெண்களின் இன்றியமையாமையை உணர்ந்த நமது அரசு தனது ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது .
எட்டாவது (1992-97 ), ஒன்பதவாது (1997-2002), பத்தாவது (2002 -07 ) ஐந்தாண்டுத் திட்டங்களில் மகில சமக்யா , ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் , சர்வ சிக்ஸ அபியான் போன்ற பல்வேறு வகையான கல்வித் திட்டங்களை அரசு செயல்முறைப்படுத்தியது. இதன்மூலம் பெண்கல்வி ஓரளவு முன்னேற்றத்தை எட்டியது. 2007 இன் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி புள்ளியியல் அறிக்கைப்படி, ஆரம்ப , நடுநிலை , உயர்பள்ளி மற்றும் கல்லூரி மேல்படிப்புகளில் பெண்களின் சேர்க்கை விகிதம் முறையே 47%, 44%, 42%, 39% ஆக இருக்கிறது.
இது 1951 ஆம் ஆண்டில் இருந்ததை விட ஏறக்குறைய 30% வளர்ச்சி ஆகும் . 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி பெண்களின் எழுத்தறிவு விகிதம் 49.10% அளவிற்கு உயர்ந்துள்ளது . இருப்பினும் பீகார் , சத்தீஸ்கர் , குஜராத் , ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பெண்களின் நிலை மிகவும் பின்தங்கியே உள்ளது . சர்வதேச மக்கள்தொகை அறிவியல் கழகத்தின் 1995-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, பெண்கள் எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ள இந்திய மாநிலங்களில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது . பெண்களின் அறியாமை , வறுமை , வேலையின்மை மற்றும் போதிய கவனிப்பு , ஊட்டச்சத்து குறைவு காரணமாக பிறந்த 1000 குழந்தைகளில் சுமார் 100 குழந்தைகள் இங்கு இறந்து போகின்றனர் .
மாறாக கேரளம் போன்ற பெண்கள் எழுத்தறிவு விகிதம் அதிகம் உள்ள மாநிலங்கள் மற்றும் உயர் கல்வி முடித்த பெண்களை அதிகமாகக் கொண்ட மாநிலங்களில் குழந்தைகள் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது . எனவே தான் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு தேசிய மேம்பாட்டுக் கழக அறிவுரையின் பேரில், நடப்பு ஐந்தாண்டுத் திட்டத்தில் (2007 – 12) ஆண் – பெண் எழுத்தறிவு விகித வேறுபாட்டை 10% ஆகக் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்வி வளர்ச்சிக்காக 2004 – 05 ல் அரசு செலவளித்த தொகை ஆரம்ப, மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மேற்படிப்புகளுக்கென முறையே 1,46,712 கோடி , 5,72,160 கோடி , 8,19,232 கோடி ரூபாய் ஆகும் . 1990 களில் நாடு முழுவதும் இருந்த சுமார் 2,55,000 அமைப்பு சாரா கல்வி மையங்கள் மூலம் ஏறக்குறைய 60 லட்சம் குழந்தைகள் எழுத்தறிவு பெற்றனர். இது போன்ற மையங்கள் இன்னும் பல அமைக்கப்பெற வேண்டும். குடும்ப வறுமை , வரதட்சிணை பிரச்சினை போன்றவற்றின் காரணமாக பெண்குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் கல்வி குறைந்துவிடக்கூடாது. அதற்கு பெற்றோரின் மனநிலை மாற வேண்டும். பெண்கள் நாட்டின் கண்கள் என்றார் பாரதிதாசன் . கண்கள் இரண்டினில் ஒன்றைக் கெடுத்து காட்சிக் கெடுத்திடலாமோ?


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here