நீங்கள் எதுவாக மாறப்போகிறீர்கள்?

0
118

எல்லாக் குழந்தைகளுக்கும், எல்லா மாணவர்களுக்கும் வாழ்க்கையில் தான் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று ஆசை இருக்கத்தான் செய்கிறது.
ஒரு சில மாணவர்களுக்கு தாங்கள் கலெக்டராக வேண்டும் என்று ஆசை. இன்னும் சில குழந்தைகளுக்கு மருத்துவராக வேண்டும். இன்னும் சில குழந்தைகளுக்கோ தாங்கள் அப்துல் கலாம் மாதிரி பெரிய ஆராய்ச்சியாளராக வேண்டும், இன்னும் சில குழந்தைகளுக்கோ நாட்டின் பிரதமராக வேண்டும். இந்த கனவுப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆசைகள் சரிதான். ஆனால் அது எல்லாமுமே நிறைவேறிவிடுகிறதா?
அன்பு மாணவச் செல்வங்களே… நீங்கள் கண்ட கனவு முற்றிலும் பலிக்கவேண்டும் என்பதே எங்களின் கனவும் கூட. இந்தப் பகுதி முற்றிலும் ஒரு விளையாட்டுப் பகுதி.
இந்தப் பகுதியில் சில கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இந்த புதிர் போட்டியை மாணவர்களாகிய நீங்கள் தனியாகவும் விளையாடலாம். அல்லது உங்கள் பெற்றோருடன் சேர்ந்தும் விளையாடலாம். ஆனால் நிச்சயம் விளையாட வேண்டும்.
இந்த விளையாட்டின் நோக்கம் என்ன தெரியுமா? நீங்கள் பெறப்போகும் உச்சபட்ச மதிப்பெண்கள் உங்கள் கனவை தீர்மானிக்கப்போகிறது. இதில் நீங்கள் கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கு சரியான பதிலை அளித்து அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்றுவிட்டால், நீங்கள் கண்ட கனவை நீங்கள் நிச்சயம் எதிர்காலத்தில் அடைவீர்கள். ஒருவேளை குறைவான மதிப்பெண்களைப் பெறும் பட்சத்தில் அது குறித்து கவலைகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களை இன்னும் மெருகேற்ற அதிகபட்சம் உழைக்க வேண்டும் அவ்வளவுதான்.
கீழே கேட்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் மிக நேர்மையாகவும், உண்மையாகவும் பதிலளிக்க வேண்டும். அப்போதுதான் இந்த விளையாட்டு அர்த்தமுள்ளதாக இருக்கும். சரி… இனி கேள்விகளுக்கு செல்வோமா?
1.உங்களுடைய பொழுதுபோக்கு உங்களுடைய கனவு சார்ந்த ஒன்றோடு தொடர்புடையதா? அல்லது முற்றிலும் அதற்கு எதிரானதா? அதாவது நீங்கள் உங்களது நேரத்தை அறிவியல், கணிதம் சார்ந்த விளையாட்டின் மூலம் கழிப்பீர்களா அல்லது தொலைக்காட்சியில் வரும் கார்ட்டூன் நிகழ்ச்சியைப் பாருத்து நேரத்தை கடத்துவீர்களா?
1. அறிவியல் விளையாட்டு 2. தொலைக்காட்சி பொழுதுபோக்கு.
2.சாப்பிடும் நேரத்தில் முழு கவனமும் சாப்பாட்டில் இருக்குமா? அல்லது வேறெந்த செயலிலுல் உங்கள் கவனத்தை செலுத்துவீர்களா?
1. முழு கவனமும் சாப்பாடில் மட்டுமே இருக்கும் 2. டி.வி. பார்ப்பேன்.
3.உங்களுக்கு அது மிக மிக பிடித்த பாடம். அந்தப் பாடத்திற்கு தினமும் ஆசிரியர் நோட்ஸ் கொடுப்பார், முக்கிய வரிகளை கோடிட்டுத் தருவார். தேர்வுக்கான முக்கிய கேள்விகளை குறிப்பிட்டுச் சொல்வார். இந்தச் சூழ் நிலையில் நீங்கள் தேர்வுக்கு தயாராகும்போது புத்தகத்தை முழுவதும் படிப்பீர்களா? அல்லது ஆசிரியர் குறித்துகொடுத்த முக்கிய கேள்விகளை மட்டும் படித்துச்செல்வீர்களா?
1. புத்தகம் முழுமையும் படிப்பேன் 2. முக்கிய கேள்விகளை மட்டுமே படிப்பேன்.
4.அடுத்தவாரம் உங்களுக்கு தேர்வு. இன்று மாலை உங்கள் வீட்டிற்கு உங்களுக்குப் பிடித்த விருந்தாளிகள் வருகிறார்கள். அந்த விருந்தாளி என்றால் உங்களுக்கு கொள்ளை பிரியம். அதே நேரத்தில் நீங்கள் தேர்வுக்கு தயாராகவேண்டிய கட்டாயம். முதல் நாள் முழுவதும் விருந்தாளிகளுடன் பொழுதை கழித்துவிட்டு, அடுத்த நாள் முதல் உங்கள் கவனம் முழுவதும் படிப்பில் செலுத்துவீர்களா? அல்லது அந்த வாரம் முழுவதும் விருந்தாளிகளுடேனே கழிப்பீர்களா?
1. படிப்புக்குத்தான் முக்கியத்துவம் அளிப்பேன்
2. விருந்தாளிகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிப்பேன்.
5.உங்கள் முன் ஒரு வெள்ளை காகிதம் ஒரு பேனா, வீடியோ கேம்ஸ், பந்து, தொலைக்காட்சி ரிமோட். உங்களின் தேர்வு முதலில் எதுவாக இருக்கும்?
1. முதலில் காகிதம் பேனா 2.வீடியோ கேம்ஸ் அல்லது பந்து அல்லது ரிமோட்
6.காலையில் நீங்களாகவே எழும்புவீர்களா? அல்லது பெற்றோர் எழுப்பினால் மட்டும்தான் எழும்புவீர்களா?
1. நானாகவே எழும்பிவிடுவேன் 2. பெற்றோர் எழுப்பினால்தான் எழும்புவேன்.
7.உங்களுடைய புத்தக அலமாரி, நீங்கள் பயன்படுத்தும் அறை இந்த இரண்டையும் எப்படி வைத்திருப்பீர்கள்?
1. சுத்தமாக வைத்திருப்பேன். அலமாரியில் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைத்திருப்பேன்.
2. அலங்கோலமாக இருக்கும். அம்மாதான் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவார்.
8.வீட்டில் உங்கள் பெற்றோர் அல்லாத பெரியவர்கள் நாற்காலியில் அமர்ந்து இருக்கும்போது, உங்கள் நடவடிக்கை எப்படி இருக்கும்?
1. அவர்கள் செல்லும் வரை நின்றுகொண்டிருப்பேன் அல்லது அவர்கள் அமரச் சொன்னால் மட்டுமே அமருவேன்.
2. அவர்கள் உட்கார்ந்தால் என்ன, நானும் எதிரே அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்ப்பேன்.
9.அடுத்தவர்கள் தன்னைப் பற்றி என்ன பேசுவார்கள், பேசுகிறார்கள், பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதில் எப்போதும் அதிகம் கவனம் செலுத்துவீர்களா?
1. மற்றவர்களின் விமர்சனங்களை பெரிதாக தலைக்குள் ஏற்றிக்கொள்ள மாட்டேன்.
2. மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதில் ஆர்வம் காட்டுவேன்.
10.டி.வி. அல்லது செய்தித்தாளில் செய்திகளை பார்க்கும்போது நீங்கள் எந்த செய்திக்கு அதிகம் முக்கியத்துவம் அளிப்பீர்கள்?
1. அறிவியல், ஆராய்ச்சி சார்ந்த செய்திகளுக்கு
2. சினிமா, பொழுதுபோக்கு, கேளிக்கை சார்ந்த செய்திகளுக்கு
எல்லா கேள்விகளுக்கும் மனசாட்சிப்படி உண்மையாக பதிலளித்திருக்கிறீர்களா மாணவர்களே… சரி உங்களிடம் கேட்கப்பட்ட 10 கேள்விகளில் ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு பதில்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு பதில்களில் முதல் பதிலுக்கு மட்டுமே ஒரு மதிப்பெண் அளிக்கப்படுகிறது. இரண்டாம் பதிலுக்கு மதிப்பெண் கிடையாது. அப்படியானால் உங்களின் பதில்களில் எத்தனை பதில்கள் முதல் வகையில் இடம் பிடிக்கிறதோ அத்தனை மதிப்பெண்கள் பெற்றிருக்கிறீர்கள்.
இதில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சாதாரண கேள்விகள் கிடையாது. இவை அத்தனையும் இந்த சமுதாயத்தில் உங்களை தனித்தன்மையுள்ளவராக மாற்றுவதற்கான உளவியல் சார்ந்த கேள்விகள். இந்த கேள்வி பதில்களில் எத்தனை மாணவர்கள் உண்மையிலேயே 10 க்கு 10 மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ, வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் அந்த மதிப்பெண்களை தொடர்ந்து பெற்றுக்கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் அத்தனைபேரும் அவரவர்களின் வாழ்க்கையில் 100 சதவீதம் கண்ட கனவை நிச்சயம் அடைவார்கள்.
மற்றவர்கள் தொடர்ந்து 10 மதிப்பெண்களை பெறுவதற்கான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள பயிற்சி மேற்கொண்டுகொண்டே இருங்கள். ஏனெனில் முடியாது என்ற ஒன்றே எங்கும் கிடையாது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here