வேலு நாச்சியாரின் நினைவு தினம் டிசம்பர் 25

0
618

இன்று நாம் பார்க்கும் சம்பவங்கள், நிகழ்வுகள் அனைத்தும் நாளைய வரலாறு. இந்த ஆவணங்கள் சரியானவர்கள் கையில் கிடைத்து, திறம்பட எழுதினால் மட்டுமே அந்த வரலாறு உண்மையானதாக இருக்கும். இல்லையேல் அது ஒரு சாராருக்கு மட்டுமே துதிபாடும், ஒரு சமூகத்தை மட்டுமே புகழ்ந்துபேசும் நூலாக மட்டுமே இருக்குமே தவிர அது உண்மையான வரலாறாக இருக்காது.
அப்படிப்பட்ட வரலாற்றைத்தான் இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம். மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற வாசகம், இந்த வரலாற்று நாயகியின் வரலாற்றைப் படித்தால் புரியும். ஜான்சி ராணியைப் பற்றி நம் பாடப் புத்தகங்கள் புகழ்பாடிய அளவிற்கு வேலு நாச்சியாரின் புகழ் நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கப்படவில்லை என்பதே வரலாறு நமக்கு இழைத்திருக்கும் மிகப்பெரும் பிழை. போர் தந்திரம், தற்கொலைப் படை தாக்குத, கொரில்லா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சண்டைப் பயிற்சிகளை கற்றுத் தேர்ந்து, வெள்ளையர்களை ஓடி ஓடி விரட்டிய வேலு நாச்சியாரின் மேன்மை பொருந்திய வரலாற்றைத்தான் இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம்.
‘நமது பாரத நாடு ஆங்கில ஆளுமையின்கீழ் அடிமைப் பட்டுக் கிடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் 1857 ஆம் ஆண்டில் வட இந்தியாவில் மீரட் நகரத்தில் தோன்றிய சிப்பாய்க் கழகத்தின் மூலமாக முதல் இந்திய விடுதலைப் போராட்டம் துவங்கியது. 1858 ஆம் ஆண்டில் ஜான்சி ராணி என்றழைக்கப்பட்ட ‘ராணி லக்ஷ்மி பாய்’ ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் புரட்சி செய்து தானே போர்க்களம் புகுந்து போர்புரிந்து வரலாற்றில் இடம் பிடித்தாள்.’
இதுதான் நாம் படித்த வரலாறு. இந்த வரலாறு உண்மைதான். ஆனால் மறைக்கப்பட்ட வரலாறு என்னவெனில், ஜான்சி ராணி வெள்ளையர்களை எதிர்ப்பதற்கு 77 ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது தமிழ்நாட்டில் ஆங்கிலேயரை எதிர்த்து ஆண் வேடம் தரித்து வாளெடுத்துப் போர் புரிந்த, ஆங்கிலேயரின் ஆளுமையை எதிர்த்து துடித்தெழுந்த நம் தமிழரின் முதல் விடுதலைப் போராட்ட வரலாறு மறக்கப்பட்டது. தன் உடலை எரியூட்டிக்கொண்டு வெடிமருந்துக் கிடங்கினுள் புகுந்து அதை அழித்து ஆங்கிலப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திய அனேகமாக உலகத்தின் முதல் பெண் தற்கொலைப் போராளியின் அடையாளம் அழிக்கப்பட்டது.
தென் தமிழ்நாட்டில் இருக்கின்ற சிவகங்கையின் அரசிதான் வேலு நாச்சியார். இந்த வீர மங்கைதான் ஆங்கிலேயரை எதிர்த்துப் போருக்குக் கிளம்பிய முதல் இந்தியப் பெண்ணரசியாவார். தனது அன்புக் கணவரை நயவஞ்சகமாகக் கொன்று நாட்டைப் பறித்துக்கொண்ட ஆங்கிலேயரைப் பழி வாங்குவதற்காக எட்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு இறுதியில் எடுத்த சபதத்தை முடித்து வீரமங்கையானவர் வேலுநாச்சியார்.
ராமநாதபுரம் சமஸ்தானத்தின் அரசர் செல்லமுத்து சேதுபதி. அவரின் அரசியார் முத்தாத்தாள். 1730 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் நாளில் தாங்கள் பெற்றெடுத்த பெண்குழந்தைக்கு வேலு நாச்சியார் என்று பெயரிட்டார்கள். அரச தம்பதிகளுக்கு வேறு குழந்தைகள் இல்லாததால் வேலு நாச்சியார் ஒரு ஆண் மகன் போலவே வளர்க்கப்பட்டார். போர்க்கலைகள் பயிற்றுவிக்கப் பட்டார். சிறந்த கல்வி கற்றுவிக்கப் பெற்றார். ஏழு மொழிகள் கற்று பன்மொழி வித்தகரானார் வேலுநாச்சியார்.
1746 ஆம் ஆண்டில் தனது 16 வது வயதில் அப்போதைய சிவகங்கை நாட்டின் மன்னராயிருந்த ‘முத்து வடுகநாத துரை ‘யை மணந்தார் வேலு நாச்சியார். மன்னருக்கு நல்ல துணைவியாக மட்டுமல்லாமல் சிறந்த நண்பராகவும் ஆலோசகராகவும் திகழ்ந்தார் அவர். ராமநாதபுரம் மன்னரின் படையில் தளபதியாகப் பணி செய்தவர் ‘உடையார் சேர்வை’ என்று அழைக்கப்பட்ட மூக்கையா பழனியப்பனின் புதல்வர்கள் ‘பெரிய மருது ‘ என்றழைக்கப்பட்ட வெள்ளை மருதுவும் ‘சின்ன மருது ‘ என்றழைக்கைப்பட்ட மருது பாண்டியனையும் மன்னர் முத்து வடுகநாதர் இருவரையும் தனது படைத்தளபதிகளாக்கிக் கொண்டார்.
18 ஆவது நூற்றாண்டின் துவக்க காலத்தில் சிவகங்கையில் தத்தமது வியாபார உரிமைகளை நிலை நாட்டுவதில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையில் சச்சரவு இருந்து வந்தது. ஆங்கிலேயரின் எதேச்சதிகாரப் போக்கு பிடிக்காத சிவகங்கை மன்னரோ, பிரெஞ்சுக்காரர்களைத் தேர்வு செய்யவே, ஆங்கிலேயருக்கு சிவகங்கை மன்னர் மீது கோபத்தை உண்டாக்கியது. இதனால் கோபம் கொண்ட ஆங்கில கர்னல் ஜோசப் ஸ்மித் மற்றும் லெப்.கர்னல் பான்ஜோர் தலைமையில் ஆங்கிலப் படைகள் சிவகங்கையைச் சுற்றி வளைத்தன. மருது சகோதரர்களின் தலைமையிலான சிவகங்கைப் படைகள் வீரத்துடன் ஆங்கிலப்படைகளை எதிர்த்து நின்றன. இந்தப் போரில் வேலுநாச்சியார் தாமே போர்க்களத்துக்கு வந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார்.
ஆனாலும் முடிவோ துயரமானது. ஆங்கிலேயர்கள் அரசரை ஏமாற்றி போர்க்களத்தின் முன்னணிக்கு வரவழைத்து வஞ்சகமாகக் கொன்றார்கள். அதன்பின் சிவகங்கைப்படை அழிக்கப்பட்டது.
வேலு நாச்சியார் மகள் வெள்ளச்சி நாச்சியாருடனும் நம்பிக்கைக்குகந்த அமைச்சர் தாண்டவராயருடனும் தப்பிச்சென்று மைசூர் சுல்தானின் ஆளுகைக்குட்பட்டிருந்த திண்டுக்கல்லில் தஞ்சம் புகுந்தார். சிறிது காலம் கழித்து மருது சகோதரர்களும் அரசியுடன் இணைந்து கொண்டார்கள்.
மைசூர் அரசன் திப்பு சுல்தானிடம் உதவி கோரினார் வேலு நாச்சியார். வேலுநாச்சியாரின் தெளிவான உருது மொழிப் பேச்சினைக்கேட்ட திப்பு, வியந்து போனான். திப்புவின் ஆதரவோடு வேலுநாச்சியார் விருப்பாச்சியிலும் திண்டுக்கல் அருகேயுள்ள அய்யம்பாளையத்திலும் மறைந்து வாழ்ந்தார். சிவகங்கை நாடு ஆங்கிலேயரின் கூட்டாளியான ஆற்காடு நவாப்பின் கைகளுக்கு மாற்றப்பட்டது. ஆனால் சிவகங்கை மக்கள் நவாப்புக்கு அடிபணியவோ வரி செலுத்தவோ மறுத்தார்கள். அமைச்சர் தாண்டவராயர் மூலமாக சிவகங்கை குடிமக்கள் ராணி வேலு நாச்சியாரைத் தொடர்பு கொண்டார்கள்.
நாட்டையும் அன்புக் கணவரையும் இழந்து ஏழு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டிருந்த நாச்சியாரின் நெஞ்சத்தில் ஆங்கிலேயரைப் பழிவாங்க வேண்டும் என்ற வஞ்சம் தணலாகக் கனன்று கொண்டிருந்தது. சிவகங்கையின் மக்கள் அரசிக்குத் துணை நின்றார்கள். சுல்தான் திப்பு தனது பங்காக 5000 குதிரை வீரர்களையும் 5000 தரைப் படையினரையும் பீரங்கிப் படையின் ஒரு பிரிவையும் அனுப்பி வைத்தான். 1780 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் நாளில் மருது பாண்டியரின் தலைமையின் கீழ் சிவகங்கை நோக்கிப் புறப்பட்ட நாச்சியாரின் படை மதுரையை வென்று வழியெங்கும் தடைகளைத் தகர்த்து சிவகங்கைக்குள் நுழைந்தது.
ஒவ்வொரு ஆண்டும் சிவகங்கை அரண்மனையில் நவ ராத்திரியும், விஜய தசமியும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கமாயிருந்தது. அப்படியான ஒரு கொண்டாட்டத்துக்காக அரண்மனை பரபரப்பாக இருந்த ஒரு நேரத்தில், வேலு நாச்சியார் படையில் இருந்த குயிலியின் பெண்கள் படையணி சாதாரண மக்கள் போல உள்ளே நுழைந்தது. தனது படையினர் ஒரு பக்கம் கூட்டத்துக்குள் குழப்பம் ஏற்படுத்தி காவலர்களின் கவனத்தைத் திசை திருப்ப மறுபக்கம் குயிலி தன உடலின் மீது தீயைக் கொளுத்திக் கொண்டு வெள்ளையர்கள் சேமித்து வைத்திருந்த வெடி மருந்துக் கிடங்கினுள் புகுந்து வெடிக்கச் செய்து அழித்து தானும் சாம்பலானாள். இவ்வாறாக உலகின் முதல் பெண் தற்கொலைப் போராளியானாள் குயிலி.
வெடிமருந்துகளின் அழிவு வெள்ளையர் படைகளின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தியது. மருது சகோதரர்களின் படை ஆங்கிலேய மற்றும் நவாப்பின் படைகளை வென்று, அவர்களை சிவகங்கையிலிருந்து துரத்தியடித்தது. தனது 50 ஆவது வயதில் ராணி வேலு நாச்சியார் தனது கணவரைக் கொன்ற ஆங்கிலேயரை வென்று சபதத்தை நிறைவேற்றினார். இருந்தாலும் நாடு முழுவதையும் ஆக்ரமித்துக்கொண்ட ஆங்கிலேயருக்கு சிவகங்கையை விட்டு விட மனமில்லை. தங்களுக்கு முறைப்படி வரி செலுத்தி வந்தால் தாங்கள் வேலு நாச்சியாரின் ஆட்சியை ஏற்றுக் கொள்வதாக ஒரு சமாதான உடன்படிக்கைக்கு தயாரானார்கள். சிவகங்கையின் நலன் கருதி அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட பெரிய மருது, தனது சொந்தச் செல்வாக்கின் மூலமாக ஐந்து லட்சம் ரூபாய் பணத்தைத் திரட்டிக் கொடுத்து, வேலு நாச்சியாரை மீண்டும் சிவகங்கையின் அரசியாக்கினார். ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கீழ் சிவகங்கை தனி நாடானது. சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.

ராணி வேலு நாச்சியார் பெரிய மருதுவை தனது தளபதியாகவும், சின்ன மருதுவை அமைச்சராகவும் நியமித்துக் கொண்டார். அடுத்த சில காலங்களில் சிவகங்கையின் நிர்வாகத்திலும் முன்னேற்ற நடவடிக்கைகளிலும் பெரிய மருதுவின் பங்கு பெரிய அளவிலானதாகயிருநதது. ஏரிகளும் குளங்களும் வெட்டுவிக்கப் பட்டன. தஞ்சாவூரி லிருந்து திறமை வாய்ந்த வேளாண்மை விற்பன்னர்கள் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களுக்கு விவசாய நிலங்கள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது.
வாழ்நாள் முழுவதும் சவால்களையும் போராட்டங்களையுமே சந்தித்து அவற்றை துணிச்சலோடு எதிர்த்து நின்ற வீரப் பெண்ணரசி வேலு நாச்சியாரின் நினைவு தினம் டிசம்பர் 25.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here