வீரமாமுனிவரின் நினைவு தினம் – பிப்ரவரி 4

0
32

சிலரின் வெற்றி ஆர்ப்பாட்டத்தோடு இருக்கும். சிலரின் வெற்றியோ ஆர்ப்பட்டமில்லாமல், ஆரவரமில்லாமல் இருக்கும். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எந்த வெற்றி ஆரவாரமில்லாமல் நிகழ்கிறதோ அந்தவெற்றி நூற்றாண்டுகள் தாண்டி போற்றப்படுவதோடு, வரலாற்றின் அடையாளமாகவும் கருதப்படும். இரண்டாம் வகையைச் சார்ந்தவர்தான் இவர்.
எந்த ஒருவர் தன்னுடைய வேலையை, தலையாய் கொண்டு செய்கிறார்களோ, எந்த ஒருவர் அந்த வேலையால் கிடைக்கும் பலன் களையோ, அதனால் கிடைக்கும் புகழையும் எந்த ஒரு கட்டத்திலும் எதிர்பார்க்காமல் இருக்கிறாரோ அந்த ஒருவர் கர்மயோகி என்று அழைக்கப்படுவார். அத்தகைய கர்ம யோகிதான் இவர்.
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன், இத்தாலி நாட்டில் இருந்து புறப்பட்டு முதன்முதலாக இந்தியாவில் இவர் காலடி எடுத்துவைத்த ஆண்டு 1710. அவருக்கு அப்போது வயது 30. இத்தாலியில் இருந்து புறப்பட்ட அவருக்கு கொடுக்கப்பட்ட முக்கியப் பணியே, கிறித்துவ மதத்தை இந்தியாவில் பரப்புவதுதான். இந்தியாவில் முதன் முதலில் கோவாவில்தான் அவர் வந்து இறங்கினார். அங்கு தன் பணிகளை முடித்த கையோடு, அவர் விரும்பி வந்து சேர்ந்த இடம் தமிழ்நாடு. தமிழகத்தில் அவர் படித்த புத்தகங்கள், இலக்கியங்கள் எல்லாமும் சேர்ந்து அவரை தமிழ் படிக்கத் தூண்டியது. படித்ததோடு மட்டுமல்லாமல் அதில் புலமை மிக்கவராகவும் தன்னை மாற்றிக்கொண்டார்.
எப்போது மற்றவர்கள் வகுத்து வைத்தப் பாதையில் செல்லாமல், எவர் ஒருவர் தனக்கான ஒரு பாதையை தானே உருவாக்கி, அந்தப் பாதையில் தானும் பயணித்து மற்றவர்களையும் பயணிக்க வைக்கிறாரோ, அவரின் பெயர் வரலாற்றில் நிச்சயம் நீங்கா இடம் பிடிக்கும். அதுவரை காலம்காலமாய் இருந்த சில நடைமுறைகளை மாற்றினார்.
300 ஆண்டுகளுக்கு முன் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் கவிதைகள் வடிவிலேயும், கடுமையான இலக்கண நடையோடுமே இருந்திருக்கின்றன.
அத்தகைய பல நூல்கள், குறிப்பாக மக்களுக்கு எந்த இலக்கியங்கள் வாழ்க்கை வாழ்வதற்கு மிகத் துணையாக இருக்குமோ அவற்றில் சிலவற்றை மக்கள் படித்து பொருள் அறியும் வகையில் உரை நடை வடிவில் தொகுத்து எழுதிக்கொடுத்தார். அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று ‘ர‘ சேர்த்தேழுதுவது வழக்கம். ‘ஆ‘ என எழுத ‘அர‘ என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி ‘ஆ, ஏ‘ என மாறுதல் செய்தவர் இவர்.
தமிழின் மீது தான் கொண்டுள்ள ஈடுபாட்டினால் தன்னுடைய நடை உடைகளை மாற்றிக்கொண்டார். அதுவரை தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவைக்கென எந்த இலக்கியங்களோ, கதைகளோ இருந்தது இல்லை. அந்தக் குறையை முற்றிலும் முதன்முதலில் நீக்கியவர் இவர்தான். தமிழின் நகைச்சுவை கதைகள் என்ற பெயரினை மட்டுமல்லாமல், தமிழின் முதல் ஏளன இலக்கியம் என்ற பெயரையும் இவரின் ’பரமார்த்த குருவின் கதை’ படைப்பு பெற்றது.
தமிழின் முதல் அகராதி, தொன்னூல் விளக்கம், தேம்பாவணி, வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம், பேதகம் மறத்தல், ஞானக் கண்ணாடி, வாமணன் கதை உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் இன்றும் இவரின் புகழ்பாடிக்கொண்டிருக்கின்றன.
தமிழ் உள்ளவரை தன் பெயரை உச்சரிக்கும் அளவிற்கு சேவை செய்த அவர்தான் கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி என்ற வீரமாமுனிவர் ஆவார்.
பிப்ரவரி 4 : தைரிய நாதர், சுவடி தேடும் சாமியார் என்ற பல்வேறு புனைப் பெயர்களைக் கொண்ட வீரமாமுனிவரின் நினைவு தினம்


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here