டூரிசம்…ஜாலியாக படிக்கலாம் வாங்க…

0
459

ஓரே வேலை வேலை என்று பணியில் முழ்கி இருப்பவர்களுக்கும், நகர வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் விலகி அமைதி வேண்டும் என்பவர்களும், கிராமத்திலேயே வாழ்ந்து பழகியவர்களும் கொஞ்சம் தான் வெளியே பயணித்து தான் பார்க்கலாமே என்று கிளம்புபவர்களுக்கும் சுற்றுலா ஒரு வரப்பிரசாதம். சுற்றுலா செல்லும் பழக்கம் பண்டைய காலத்தில் இருந்து வந்தாலும், இப்போது மக்களிடையே சுற்றுலா செல்வது மிகவும் அதிகரித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் சுற்றுலாத் தலங்களுக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் கூடியுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இதனால், நம் பண்பாடும், கலாசாரமும் உலகளவில் பரவுவதுடன் அன்னியச் செலவாணியும் நாட்டுக்கு கிடைக்கிறது. தற்போது பன்னாட்டு நிறுவனங்கள் ஆரம்பித்து, சிறய நிறுவனங்கள் கூட மாதத்திற்கு ஒரு தடவை சுற்றுலாத் தளங்களுக்கு பணியாளர்களை அழைத்துச் செல்கின்றனர்.
அரசின் சுற்றுலாத் துறையும், தனியார் சுற்றுலா நிறுவனங்களும் பேக்கேஜ் டூர், ஆன்மீகச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா என பல விதங்களில் சுற்றுலாவை வகைப்படுத்தி அனைத்து விதமான மக்களையும் போட்டி போட்டுக் கொண்டு ஈர்க்கிறார்கள்.
சுற்றுலாத் துறை என்பது இப்போது வளர்ந்து வரும் துறைகளில் முக்கியமான ஒன்று. இத்துறையை பொருத்தவரை நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரம் பேர் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள். கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புள்ள இத்துறையில், சுற்றுலாத் துறை சார்ந்த படிப்பு படித்தவர்கள் பணியில் இருப்பது மிகச் சொர்பமே.
அதனால், தற்போது சுற்றுலாத்துறை சார்ந்த ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் சான்றிதழ் (டிப்ளமோ) படிப்பு படித்தாலேயே வேலை கிடைக்கும் அளவுக்கு இருக்கிறது. தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களும் சுற்றுலா சார்ந்த சான்றிதழ் படிப்பு, இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பை நேரடியாகவும், அஞ்சல் வழி கல்வியாகவும் வழங்குகிறார்கள்.

மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் கீழ் இயங்கும் ’இண்டியன் இன்ஸ்டியூட் ஆஃப் டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மெண்ட்’( Indian Institute of Tourism and Travel Management) என்ற கல்வி நிலையம் இயங்கி வருகிறது. இந்த கல்வி நிலையத்தின் கீழ் குவாலியர், புவனேஸ்வர், டெல்லி, கோவா நான்கு இடங்களில் கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு Post Graduate Diploma in Management (Tourism & Travel), Post Graduate Diploma in Management (International Business), Post Graduate Diploma in Management (Services) போன்ற முதுநிலை பட்டயப்படிப்புகளும், இளநிலை பட்டப்படிப்புகளும் இருக்கின்றன. முதுநிலை பட்டயப்படிப்பு எம்பிஏ படிப்புக்கு இணையாக கருதப்படுகிறது. இதில் சேர்ந்த படிக்க, ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவு தேர்வில் நிறைய மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகிறவர்களை அழைத்து நேர்முகத் தேர்வை நடத்துகிறார்கள். இங்கு படித்தால் பல லட்ச ரூபாய் சம்பளத்துடன் வேலை நிச்சயம் என்பதால் நிறையவே போட்டி இருக்கிறது.
சுற்றுலாத் துறை சார்ந்த பட்டப்படிப்பை படித்தால், மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலும் பங்கு பெற்று இத்துறையில் கால்பதித்து, பொதுத் துறை மற்றும் சுற்றுலாத் துறையின் கீழும் வேலை பெறலாம். அரசு துறையில் சுற்றுலா துறை அலுவலகத்திலும், தகவல் அலுவலராகவும், சுற்றுலா வழிகாட்டியாகவும் பணியாற்றலாம். தனியார் நிறுவனங்களில் டிராவல் ஏஜண்ட்டிலும், டூர் அப்ரேட்டராகவும், விமான சேவை நிறுவனங்களிலும், ஹோட்டல் நிர்வாகத்திலும், போக்குவரத்து நிறுவனத்திலும், கார்கோ நிறுவனத்திலும் பணியாற்றவும் செய்யலாம். சுற்றுலாப் பணி என்பது ஒருங்கிணைக்கும் வேலை என்பதால், அலுவலகத்திலேயே அமர்ந்து கொண்டே அனைத்துப் பணிகளையும் செய்து முடித்து விடலாம். இதனால் பெண்களுக்கு மிகவும் ஏற்ற படிப்பு என்றே சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் ஆங்கில பேச்சு திறனைப் பெற்றிருந்தால் நிறையவே சம்பாதிக்க முடியும். குறிப்பிட்ட கால அனுபவத்துக்கு பின்பு, தனியே ஒரு நிறுவனத்தை தொடங்கியும் நடத்தவும் செய்யலாம்.

தற்போது சுற்றுலாத் துறையில் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களும் பல நகரங்களுக்கு தங்களுடைய சேவை மையத்தை தொடங்கி தங்களுடைய சேவையை போட்டி போட்டுக் கொண்டு வழங்குவதால் பெரிய அளவில ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
சுற்றுலாத் துறையோடு தொடர்பு உள்ள குடிபெயர்வு துறைகளிலும், சுங்கத்துறையிலும், டிராவல் ஏஜண்ட்சிஸ் நிறுவனத்திலும், ஏர்லைன்ஸ் நிறுவனத்திலும், டூர் ஆப்ரேட்டர் நிறுவனங்களிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. சுற்றுலாத் துறையின் கீழ் செயல்படும் மத்திய அரசின் நிறுவனங்களிலும், மத்திய அரசின் நிறுவனத்திலும் வேலை வாய்ப்பை பெறலாம்.
தொழில்நுட்பத்துறை, ஒரு சாராருக்கு மாத்திரமே வேலை வாய்ப்பை அள்ளி வழங்குகின்றன. ஆனால், சுற்றுலாத் துறை பல நிலைகளில் பல தரப்பட்ட திறன் படைத்தவர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருகிற துறையாக இருக்கிறது. குறிப்பாக, பயண முகவர்கள் ( ஏஜண்ட்கள்), விடுதி நடத்துபவர்கள், போக்குவரத்துத் துறையினர், கைவினைஞர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், வழிகாட்டிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள், புகைப்பட கலைஞர்கள் போன்று எண்ணற்ற பிரிவினர் சுற்றலாத்துறையின் வளர்ச்சியால் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள்.
அண்மைக்காலத்தில் சுற்றுலா துறை நன்கு விரிவு பெற்றுவருகிறது. இதில் நேரடியாக வேலைவாய்ப்பை பெறுகிறவர்களுக்கிடையே மறைமுகமாகவும் பலருக்கும் வேலைவாய்ப்பை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று சுற்றுலா மருத்துவச் சுற்றுலா, ஊரகச் சுற்றுலா, மலையகச்சுற்றுலா, அலையகச்சுற்றுலா, சாகசச் சுற்றுலா, சரித்திரச் சுற்றுலா என்று பலவேறு சுற்றுலா வகைகள் உருவாகி வேலைவாய்ப்புகள் பல பிரிவுகளில் உருவாகி இருக்கின்றன. மருத்துவச்சுற்றுலாவில் தமிழகம் சிறந்த இடத்தை பெற்று விளங்குகிறது. இதன் மூலம் பல்வேறு மருத்துவப் பணியாளர்களுக்குமான வேலை வாய்ப்பும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. சுற்றுலாவில் வழிகாட்டிகள் என்றழைக்கப்படும் கைடுகள் முக்கியப்பங்கு வகிக்கிறார்கள் என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். சுற்றுலா சார்ந்த விஷயங்களில் ஆர்வமும் அதே நேரத்தில் அந்தத் துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களும், டூரிஸம் சார்ந்தபடிப்பை தேர்வு செய்யலாம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here