தாமஸ் ஆல்வா எடிசனின் நினைவு தினம் – அக்டோபர் 18.

0
163

சில வாசகங்கள்தான் நம் மனதை சுறுசுறுப்பாக்கும், சில பாடல்கள்தான் காலத்தைத் தாண்டி நம்மை பயணிக்க வைக்கும். அதேபோல் சிலரின் வாழ்க்கைதான் ‘அட..’ என்று சொல்ல வைக்கும்.
எல்லா வாசகங்களும் நம்மை பெரிதாக பாதிப்பதில்லை, எல்லா பொன்மொழிகளுமே நமக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அது ஏன் என்று யோசித்துப் பார்த்திருப்போமா… அப்படி யோசித்துப் பார்த்தால் ஒரு விடை கிடைக்கும்.
அயராத உழைப்பு, விடாப்பிடியான கொள்கை, சரியென்றால் யுகமே எதிர்த்து நின்றாலும் துச்சமென தூக்கிபோட்டுவிட்டு செய்யத்துணியும் மனத் திடம் இத்தகைய பண்புகள் யாரெல்லாம் பெற்றிருந்தார்களோ, அவர்களின் பொன்மொழிகளும், வாசகங்களும்தான் நம்மை பெரிதாக பாதித்திருக்கும். ஏனெனில் அவர்கள் உதிர்க்கும் வாசகங்கள் அனைத்தும் சாதாரண சொற்களின் தொகுப்பாக இருக்காது. மாறாக அந்த வாசகத்திற்குள் அவர்களின் அனுபவம் புலப்படும், அவர்களின் வலி தெரியும், அவர்களின் வெற்றிக்கான சூட்சுமம் இருக்கும்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவை அத்தனை அம்சங்களும்தான், அந்த வாசகத்தை பொன்மொழிகளாக கொண்டாட வைக்கிறது என்பதுதான் அதற்கான விடை. .
• திருப்தியின்மை ஏக்கம் ஆகிய இரண்டுமே வளர்ச்சிக்கு அவசியமானவை.
• கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்காமல் கடினமாக உழைத்தால்தான் என்னால் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது.
என்ற தத்துவங்கள் அனைத்தும் அவர் சாதாரணமாக உதிர்த்துவிடவில்லை.
உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத 1300 கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கையும், வெற்றியும் அவ்வளவு சாதாரணமானது அல்ல.
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் 1847-ம் ஆண்டு பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன், பள்ளிக்குப் படிக்கப்போனது வெறும் மூன்றே மூன்று மாதங்கள் மட்டுமே. ஒரு கட்டத்தில் சொந்தக் காலில் நிற்க விரும்பிய எடிசன், 13 வயதில் ரயிலில் செய்தித்தாள் மற்றும் மிட்டாய் விற்கும் வேலையில் சேர்ந்தார். பையில் எப்போதும் இயந்திர மாதிரிகளையும் ரசாயனக் கலவைகளையும் வைத்திருப்பார். ஒருமுறை, ரயிலின் ஓர் ஓரத்தில் ரசாயனக் கலவை கொட்டித் தீப்பிடித்துவிட்டது. பாதுகாவலர், எடிசனின் கன்னத்தில் அறைந்தார். ஏற்கெனவே காய்ச்சலால் அவரது காது மந்தமாகி இருந்தது. இந்தச் சம்பவத்துக்குப் பின், அவரது இடது காதில் 100 சதவிகிதம் கேட்கும் திறன் போய்விட்டது. வலது காதில் 20 சதவிகிதம் மட்டுமே கேட்கும் திறன் இருந்தது. ஆனால், இந்தக் குறைபாட்டை எடிசன் ஒருபோதும் தடங்கலாகக் கருதியதில்லை. மாறாக, தனது ஆராய்ச்சிகளிலிருந்து கவனம் சிதறாமல் மனதை ஒன்றுகுவிக்க முடிவதற்கு இந்தக் குறைபாடே காரணம் என்று பெருமிதமாக அவர் நினைத்தார்.
தன்னுடைய ஒவ்வொரு குறையையும் நிறையாக சிந்தித்ததால் மட்டுமே அவரைப் பற்றி நாம் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
ஒருமுறை எடிசனிடம், தோல்விக்கும் வெற்றிக்குமான காரணங்கள் பற்றிக் கேட்டபோது, ‘‘நமது மிகப் பெரிய பலவீனமே முயற்சிகளைக் கைவிடுவதுதான். நிறைய பேர், வெற்றிக்கு அருகில் வந்துவிட்டதை அறியாமல் தமது முயற்சியைக் கைவிட்டுவிட்டு, தோல்வியடைந்ததாக நொந்துகொள்கிறார்கள். இலக்கை நோக்கிய பயணத்தில், மீண்டும் ஒரே ஒருமுறை முயற்சித்துப் பாப்பதுதான் வெற்றிக்கான சூத்திரம்” என்றார்.
மதி நுட்பம் என்பதே 1 சதவீதம் ஊக்கமும், 99 சதவீதம் வியர்வையும் சேர்ந்ததுதான் என்று சொன்ன தாமஸ் ஆல்வா எடிசனின் நினைவுட் தினம் அக்டோபர் 18.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here