ஆசிரியர் தினம் – செப்டம்பர் 5

0
173

18 ஆம் நூற்றாண்டு… நம் தேசத்தில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட காலகட்டம். கணவரை இழந்தவர்கள் உடன் கட்டை ஏறும் பழக்கமும், குழந்தைகள் திருமணமும் சர்வ சாதாரணமாக அரங்கேறிக்கொண்டிருந்த காலம் அது. பெண் என்பவள் வீட்டில் கணவருக்கு சேவகம் செய்வதற்காக படைக்கப்பட்டவள் என்பதே சித்தாந்தமாக இருந்தது. பெண் கல்வியை யாராவது ஊக்கப்படுத்தினாலோ, அதை கடைப்பிடித்தாலோ அவர்களை சமூகத்தை விட்டே புறக்கணித்த, அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி ஆண்ட அடிமை காலம் அது.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிராவ் பூலேவுக்கும், சாவித்திரிக்கும் திருமணம் நடந்தது. சாவித்திரிக்கு அப்போது 9 வயதுதான். 12 வயதே நிரம்பிய ஜோதிராவ் பூலேவுக்கு அக்கால கட்டத்திலேயே முற்போக்கு சிந்தனை அதிகம்.
தன் மனைவி சாவித்திரி எப்படியாவது கல்வியறிவு பெற்றாக வேண்டும் என்று விரும்பினார். விருப்பத்தோடு நின்றுவிடாமல், துணிச்சலாக சாவித்திரியை கல்வி கற்க அனுப்பினார். அவரின் இந்தச் செயலை ஒட்டு மொத்த கிராமமும் எதிர்த்தது. வீட்டிற்கே வந்து சண்டையிட்டுச் சென்றார்கள். ஆனால் ஜோதிராவ் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.
தன் மனைவி கல்வியறிவு பெற்றால் மட்டும் போதும் என்ற ஒரே சிந்தனைதான் அவருக்கு மேலோங்கியிருந்தது. பள்ளிப் படிப்பை முடித்த கையோடு, ஆசிரியர் பயிற்சிக்கும் அனுப்ப திட்டமிட்டார் ஜோதிராவ். இப்போது எதிர்ப்பு வீட்டிற்குள்ளிருந்தே கிளம்ப ஆரம்பித்தது. தன் மனைவியை அழைத்துக்கொண்டு தனியாக சென்றார் ஜோதிராவ். பெரும் போராட்டத்திற்குப் பிறகு, ஆசிரியர் பயிற்சியையும் சிறப்பாக முடித்தார் சாவித்திரி. ஆங்கில ஏகாதிபத்தியத்தில் அடிமைப்பட்டுக்கொண்டிருந்த நம் தேசத்தில் பெண்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கல்வி முற்றிலுமாக மறுக்கப்பட்டிருந்தது.
இதை துடைத்தெறிய முடிவு செய்த ஜோதிராவ் தாழ்த்தப்பட்டவர்களுக்காக பள்ளி ஒன்றை துவங்கினார். அந்தப் பள்ளிக்கு தன் மனைவி சாவித்திரியையே ஆசிரியராக நியமித்தார். 8 மாணவர்களுடன் அந்தப் பள்ளி செயல்பட ஆரம்பித்த அதே நேரத்தில், ஒட்டுமொத்த கிராமமும் ஜோதிராவ், காயத்ரி தம்பதி மீது வெறுப்பையும் கோபத்தையும் உமிழ ஆரம்பித்தது.
காயத்திரி தினம் தினம் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் கிராம வாசிகள் கற்களைக் கொண்டு தாக்க ஆரம்பித்தனர். அதுமட்டுமல்லாமல் சாணத்தைக் கரைத்து அவர் மேல் ஊற்றினர். ஊர் மத்தியில் அவமானத்தை சந்தித்தாலும் தன்னுடைய கொள்கையிலிருந்து சற்றும் பின்வாங்கவில்லை சாவித்திரி.
“பள்ளிக்குச் செல்லும் வழியில் என்னை சாணத்தைக் கரைத்து அடிக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்” என்று தனது கணவரிடம் பரிதாபமாக கேட்டார் சாவித்திரி.
“பள்ளிக்குச் செல்லும்போது இன்னொரு புடவை எடுத்து வைத்துக்கொள். சாணம் பட்ட புடவையை பள்ளிக்குச் சென்று மாற்றிக்கொள்” என்று அறிவுறுத்தினார் ஜோதிராவ்.
இப்படி அரும்பாடுபட்டு தன் பணியை செவ்வனே செய்த ஜோதிராவ் பூலே – சாவித்திரி ஆரம்பித்த அந்த பள்ளிதான் தாழ்த்தப்பட்டோருக்கான இந்தியாவின் முதல் பள்ளி. அடிமைத்தளைகளை தன் முட்டிமோதி மாணவர்களுக்கு கல்வியறிவு போதித்த சாவித்திரி பாய் பூலேதான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை.
எட்டி மிதித்த சமூகத்தை தன்னுடைய கல்வியாலும், தன் கற்பித்தல் திறனாலும் புறந்தள்ளி, நூற்றுக்கணக்கான ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டி ஒட்டுமொத்த கிராமத்திற்கும் கல்வியின் முக்கியத்துவத்தை புரியவைத்த ஆசிரியர் சாவித்திரி பாய் பூலே அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் நாள் இது.
செப்டம்பர் 5 – ஆசிரியர் தினம்.
“கல்வி இல்லையேல் எதுவுமில்லை!
ஞானம் இல்லையேல் மிருகங்களே மிச்சமாகும்” – சாவித்திரி பாய் பூலே.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here