பிளஸ்டூக்குப் பிறகு… சிங்கப்பூரில் படிக்கலாம்!

0
59

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வெளி நாடுகளில் ஏதோ ஒரு நாட்டில்தான் பட்டப் படிப்பை படிக்க வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருக்கும் மாணவர்களும், அறிவியல் தொழில் நுட்பப் படிப்பை வெளி நாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் சிங்கப்பூர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
சிங்கப்பூரில் இருக்கும் இரண்டு உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து படிப்பதன் மூலம் மாணவர்கள் உடனடி வேலைவாய்ப்பு பெறுவதோடு மட்டுமின்றி, உலகளவிலான அறிவியல் அறிவையும் வளர்த்துக்கொள்ள முடியும்.
ஆசிய கண்டத்தில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள மாணவர்கள் வெளி நாட்டில் உயர்கல்வி படிக்கவேண்டும் என்று விரும்பிவிட்டாலே அவர்கள் தேர்வு செய்யும் நாடு சிங்கப்பூராகத்தான் இருக்கும். ஏனெனில் இந்த நாட்டில் சீனம், மலாய் மொழி பேசுபவர்கள் தவிர, தமிழ் பேசுபவர்களும் அதிகளவில் இருக்கிறர்கள். அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ ஆஸ்திரேலியாவில் படிப்பதைக்கூட மாணவர்கள் அந்நியமாகத்தான் நினைப்பார்கள். ஆனால் சிங்கப்பூரில் படிப்பதை தன்னுடைய நாட்டில் படிப்பதைப் போன்று உணர்வார்கள். அதுதான் இந்த நாட்டின் தனிச்சிறப்பு.
சிங்கப்பூரில் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர், நான்யாங் டெக்நானாலஜிக்கல் யுனிவர்சிட்டி ஆகிய பல்கலைக்கழகங்கள் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றவை. பெரும்பாலான ஆசிய கண்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிங்கப்பூரில் உள்ள இந்தக் கல்வி நிலையங்களை தேர்வு செய்வதறு இன்னோரு அடிப்படைக் காரணம், அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டுப் பல்கலைக்கழகங்களைவிட இங்கு செலவு மிகக் குறைவு.
இங்குள்ள கலாசார பண்பாட்டு அம்சங்கள் நமக்கு மிகவும் நெருக்கமானவை. திறமையான மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை பெற்றுக்கொள்ள முடியு. அதே நேரத்தில் மாணவர்கள் தங்கள் படிப்புக்காலம் முடிந்ததும் சிங்கப்பூரில் பதிவு பெற்ற தொழில் நிறுவனத்தில் பணிபுரியவும் வாய்ப்பிருக்கிறது. அதை ஒரு நிபந்தனையாகவும் கல்வி நிலையங்கள் கொண்டிருக்கிறது. இன்னும் கூடுதல் வசதியாக, சிங்கப்பூரில் பதிவுபெற்ற தொழில் நிறுவனத்தின் கிளைகள் வேறு நாடுகளில் இருந்தால் அதிலும் இங்கு கல்விக் கற்ற மாணவர்கள் பணிபுரிய முடியும்.
சிங்கப்பூர் பல்கலைக்கழகத்திலேயே முது நிலைப் படிப்பையும் படித்து விட்டுக்கூட சிங்கப்பூரில் பதிவு பெற்ற தொழில் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
அண்மைக் காலத்தில் சிங்கப்பூரில் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள் குறிப்பாக தமிழக மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையும் கிடைப்பதால் பிளஸ் டூ தேர்வில் மிக அதிகமான மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களை இந்த இரு பல்கலைக்கழகங்களிலும் சேர ஆர்வத்துடன் விண்ணப்பிக்கிறார்கள்.
சிங்கப்பூரில் உள்ள முக்கியப் பல்கலைக்கழகம் என்.யு.எஸ். என்று அழைக்கப்படும் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர். ஆசியாவிலேயே நான்காவது சிறந்த கல்வி நிறுவனமாக வர்ணிக்கப்படும் இந்தக் கல்வி நிலையம் உலக அளவில் முதல் 35 இடத்திற்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்தே இந்தப் பல்கலைக்கழகத்தின் பெருமையைத் தெரிந்து கொள்ளலாம். இந்தப் பல்கலைக்கழகத்தில் 100க்கும் மெற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தில் இள நிலைப் பட்டப் படிப்புகளில் தோராயமாக 25 ஆயிரம் மாணவர்களும் முது நிலைப் பட்டப் படிப்புகளில் தோராயமாக 9 ஆயிரம் மாணவர்களும் படிக்கிறார்கள். இள நிலைப் பட்டப் படிப்புகளில் படிக்கும் குறைந்தபட்சம் 20 சதவீத மாணவர்களும் முதுநிலைப் பட்டப் படிப்பில் படிக்கும் குறைந்தபட்சம் 20 சதவீத மாணவர்களும் வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள். என்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர், அக்கவுண்டன்சி, கலை, பிசினஸ், கம்ப்யூட்டிங், பல் மருத்துவம், இண்டஸ்ட்ரியல் டிசைன், சட்டம், மருத்துவம், புராஜக்ட் அண்ட் ஃபெசிலிட்டிஸ் மேனேஜ்மெண்ட், ரியல் எஸ்டேட் அண்ட் சயின்ஸ் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் உள்ளன. தற்போது பிளஸ் டூ தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம். பள்ளி வகுப்புகளில் கடைசியாக நடத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்களுடன் இந்தப் பல்கலைக்கத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அதற்கான மதிப்பெண் சான்றிதழ் விவரங்களைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கலாம். பிளஸ் டூ தேர்வில் மிக அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களுக்கு நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளன. இதில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் மார்ச் இறுதிவாக்கில் விண்ணப்பிக்கவேண்டியதிருக்கும். பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள் குறித்த விவரங்கள், அட்மிஷன் விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விரிவாக உள்ளன.
உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைப் பல்கலைக்கழக அட்மிஷன் பிரிவுக்கு எழுதிக்கேட்டும் தெரிந்து கொள்ளலாம். ஸ்காலர்ஷிப் கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கும் தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
சிங்கப்பூரில் உள்ள மற்றொரு முக்கியப் பல்கலைக்கழகம் என்.டி.யு. என்று அழைக்கப்படும் நான் யாங் டெக் நினிக்கல் யுனிவர்சிட்டி. 1955 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் காலப் போக்கில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. உலகளவில் முதல் நூறு இடங்களில் இடம் பெற்றுள்ள பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று.

50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இந்தப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் படிக்கிறார்கள். இள நிலைப் பட்ட வகுப்புகளில் குறைந்தபட்சம் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் முது நிலைப் பட்ட வகுப்புகளில் குறைந்தபட்சம் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் படிக்கிறார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தில் இள நிலைப் பட்ட வகுப்புகளில் சேர பிளஸ் டூ வில் தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். படிப்பில் சிறந்த மாணவர்களுக்கும் விளையாட்டு போன்ற துறைகளில் திறமையை வெளிப்படுத்தியுள்ள மாணவர்களுக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கக் கல்வி உதவித்தொகை கிடைக்கும். இந்தப் பல்கலைக்கழகத்திலும் படிக்கச் சேர விரும்பும் மாணவர்கள் மார்ச் இறுதி வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டியதிருக்கும்.

விவரங்களுக்கு : www.nus.edu.sg, www.ntu.edu.sg


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here