‘முடிந்தவரை உனதாக்கு’

0
87

வெற்றியாளர்களில் இரண்டு வகை…
உலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும்விட வேகமாக ஓடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை… அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டுமொத்த உலகத்தையும் அந்தத் திசையில் தன் பின்னால் ஓடிவரச் செய்பவர்கள் இரண்டாவது வகை…
பில்கேட்ஸ் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்।’ உழைக்க மட்டுமல்ல… உழைப்பை விட்டு விலகியும் இருக்கத் தெரிய-வேண்டும்…’ இதுதான் பில்கேட்ஸ் நமக்கு உணர்த்தியிருக்கும் சமீபத்திய பாடம். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு பொருள் இருக்கிறது. ஒரு எம்.பி.ஏ. பாடத் திட்டத்துக்கு நிகரான வாழ்க்கைமுறை அவருடையது.
பள்ளிக்கூட காலத்திலேயே பில்கேட்ஸ் கொடுக்கிற பாடத் திட்டத்தைப் படிப்பதைவிட, விருப்பமானதைப் படிப்பதுதான் சிறந்தது என்பதை நம்பினார்। மற்ற மாணவர்களிடமிருந்து வேறுபட்டு, படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்த பில்கேட்ஸை, சியாட்டில் நகரின் ‘லேக்சைட் (Lake Side) பள்ளி’யில் அவருடைய பெற்றோர் சேர்த்தனர். அங்கே பில்கேட்ஸை ஈர்த்தது ராட்சத சைஸில் பூதம் போல இருந்த கம்ப்யூட்டர்.
அந்தக் காலத்தில் கம்ப்யூட்டரை விஞ்ஞானக் கூடங்களில் மட்டுமே பயன்படுத்தினார்கள். இரவு பகலாக அதன் முன் தவமாகக் கிடந்த பில்கேட்ஸ், தானாகவே புத்தகங்களையும், கையேடுகளையும் படித்து கம்ப்யூட்டர் மொழியான ‘பேசிக்’கில் (BASIC) புரோகிராம் எழுதத் தொடங்கினார். அவருடைய பள்ளித் தோழர் பால் அலெனுக்கும் அதே ஆர்வம் இருந்தது. திடீரென்று ஒருநாள், ‘இனிமேல் மாணவர்கள் கம்ப்யூட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது’ என்ற அறிவிப்பு வந்தது. இருவரும் கவலைப்பட்டனர். அந்தக் காலகட்டத்தில் கம்ப்யூட்டரை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்தது। ‘அந்த கம்ப்யூட்டரில் ஏதாவது குறைபாடு இருந்தால் வாடகை கொடுக்கத் தேவையில்லை’ என்று வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. குறைபாடுகள் அதிகம் இருக்கவும் செய்தன.
பில்கேட்ஸ் நினைத்திருந்தால் வாடகைக்கு கம்ப்யூட்டர் எடுத்து, அதில் உள்ள குறைபாடுகளைச் சொல்லி, வாடகை கட்டாமல் பயன்படுத்தியிருக்க முடியும்। ஆனால், அவர் கம்ப்யூட்டர் வாடகைக்குத் தரும் நிறுவனங்களில் ஒன்றான ‘கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷனு’க்குச் சென்று அவர்கள் கம்ப்யூட்டரில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். அதனால், அந்தக் குறைபாடுகள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு வாடகைப் பணம் பெருகியது. பில்கேட்ஸ் சம்பளமாகப் பெற்றுக்கொண்டது இலவசமாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் உரிமையை!
கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதைவிட, புதிய திசையில் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் கலை அவரிடம் நிறையவே இருந்தது। வாகனப் போக்குவரத்து விவரத்தை கம்ப்யூட்டரில் சேகரிக்கும் ‘டேட்டா என்ட்ரி’ வேலை 17 வயது பள்ளி மாணவன் பில்கேட்ஸூக்குக் கிடைத்தது. ஒவ்வொரு வாகனமும் கடந்து செல்லும்போது காகிதச் சுருளில் ஒரு துளை போடப்படும். அந்தத் துளைகளை எண்ணி கம்ப்யூட்டரில் பதிவு செய்வதுதான் அவருக்கு வேலை.
துளைகளை எண்ணிச் சொல்வதற்கு சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து, ‘டிராஃப்- ஓ -டேட்டா’ (Traf-O-Data) என்று பெயரிட்ட பில்கேட்ஸூக்கு, இந்தத் தொழிலில் நல்ல லாபம் கிடைத்தது. போக்குவரத்து விவரங்களை அலசி அதை நெறிப்படுத்துவதற்காக பல நகராட்சிகள் அந்தக் கருவியை நாடியபோது, ‘இனிமேல் நாங்களே அந்த வேலையை நகராட்சிகளுக்குச் செய்துதருவோம்’ என்று அமெரிக்க மத்திய அரசு அறிவித்துவிட்டது. பில்கேட்ஸின் பிஸினஸ் படுத்துவிட்டது.
இந்தச் சமயத்தில் அவர் ஹார்வர்ட் கல்லூரியில் இணைந்தார்। அதற்குப் பக்கத்திலேயே பால் அலெனுக்கு ஒரு வேலை கிடைத்தது. இருவரும் அடிக்கடி சந்தித்தனர். 1975 ஜனவரி மாதம் ‘பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ்’ இதழில் ‘உலகின் முதல் மைக்ரோ கம்ப்யூட்டர் அல்டெய்ர் 8800’ என்று வந்த கட்டுரையை எடுத்துக்கொண்டு பில்கேட்ஸிடம் ஓடிவந்தார் அலென். அதைத் தயாரித்த எம்.ஐ.டி.எஸ். (MITS) நிறுவனத்தைத் தொடர்புகொண்ட கேட்ஸூம் அலெனும், ‘உங்கள் கம்ப்யூட்டரில் பேசிக் புரோகிராம் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும். அதைச் செயல்படுத்த உதவும் பேசிக் இன்டர்பிரட்டர் (புரோகிராமை கம்ப்யூட்டர் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றித்தரும் இடைநிலை சாஃப்ட்வேர்) எங்களிடம் இருக்கிறது’ என்று சும்மா சொல்லிவைத்தனர்.
உண்மையில் அவர்களிடம் சாதாரண ரக கம்ப்யூட்டர் கூட கிடையாது.
‘எம்.ஐ.டி.எஸ்-ஸின் ஹார்ட்வேர், தனது சாஃப்ட்வேர் இரண்டும் சேர்ந்து முழுமையான கம்ப்யூட்டராக இயங்கும்’ என்ற ஒப்பந்தம் போட்டார் பில்கேட்ஸ். இனி இங்கு என்ன வேலை என்று ஹார்வர்டில் இருந்து வெளியேறினார். 1975 ஏப்ரலில் ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் உருவானது. இனி எதிர்காலம் மைக்ரோ கம்ப்யூட்டருக்குத்தான் என்பதை உணர்ந்த பில்கேட்ஸ், தன்னுடைய சாஃப்ட்வேர் உரிமையை, கம்ப்யூட்டர் தயாரிக்கும் பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்தார்।
ஆனால் கூடிய விரைவிலேயே எம்.ஐ.டி.எஸ். அதிருப்தி அடைந்தது. பில்கேட்ஸை நீதிமன்றத்துக்கு இழுத்தது. ஆனால், எதைப் பற்றியும் அவர் கவலைப்படவேயில்லை. வெறும் ‘பேசிக்’ புரோகிராமோடு நிற்காமல் ‘ஃபோர்ட்ரான்’, ‘கோபால்’ ஆகிய மொழிகளுக்கும் இன்டர்பிரட்டர் உருவாக்கினார்.
அவற்றை கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களிடமே கொடுத்து கம்ப்யூட்டரோடு பொட்டலம் கட்டி விற்கும்படி ஒப்பந்தம் போட்டார். பில்கேட்ஸின் சாஃப்ட்வேர் இல்லாமல் கம்ப்யூட்டர் முழுமையடையாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார். மிகப்பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்., மைக்ரோசாஃப்ட் நிறுவனக் கதவுகளைத் தட்டியதுதான் பில்கேட்ஸின் வாழ்வில் திருப்புமுனை!
குட்டி கம்பெனிகளெல்லாம், மைக்ரோ கம்ப்யூட்டர் தயாரிக்கும்போது, தான் பின் தங்கிவிடக்கூடாது என்று தாமதமாக விழித்துக்கொண்ட ஐ.பி.எம். நிறுவனம், நெருக்கடியான காலக்கெடுவோடு பில்கேட்ஸிடம் வந்து நின்றது.
அந்தக் காலக்கெடுவுக்குள் ஹார்ட்வேரை உருவாக்குவது சிரமமில்லை. ஆனால், அதைச் செயல்பட வைக்கும் சாஃப்ட்வேர்… அந்த சாஃப்ட்-வேரை ஹார்ட்வேருக்குப் புரியவைக்கும் ஆப-ரேட்டிங் சிஸ்டம்… இதையெல்லாம் உருவாக்குவது அத்தனை எளிதில்லை. சாஃப்ட்வேருக்கு ஓகே சொன்ன மைக்ரோசாஃப்ட், இன்னொரு நிறுவனத்தின் ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள ஐ.பி.எம். நிறுவனத்திற்கு சிபாரிசு செய்தது. ஆனால், இந்த நிபந்தனைக்கு ஐ.பி.எம். உடன்படவில்லை. மறுபடியும் பில்கேட்ஸை நீதிமன்றத்துக்கு இழுத்தது ஐ.பி.எம்.
இந்தமுறை எந்த மழுப்பலும் சொல்லாமல், நிச்சயம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் நாங்களே தயாரித்து தருகிறோம் என்று உறுதிகூறினார். இந்த உறுதிதான் அவரை உலகின் முதல் பணக்காரர் ஆக்கியது.
குறுகிய காலத்தில் ‘ஆபரேட்டிங் சிஸ்ட’த்தை புதிதாக உருவாக்க முடியாது என்பது பில்கேட்ஸூக்கும் தெரியும். ‘சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்’ (SCP) என்ற நிறுவனம் உருவாக்கியிருந்த ‘க்யூடாஸ்’ (QDOS) என்ற ‘ஆபரேட்டிங் சிஸ்ட’த்தை, வெறும் இருபத்தைந்தாயிரம் டாலர் விலைக்கு வாங்கினார். அதில் மராமத்து வேலைகளை செய்து,
தன்னுடைய கைவண்ணத்தைக் கொஞ்சம் காட்டி ‘டிஸ்க் ஆபரேட்டிங் சிஸ்டம்’ என்ற பெயரில் ஐ.பி.எம். நிறுவனத்திற்கு கொடுத்தார். ‘பர்சனல் கம்ப்யூட்டர் புரட்சி’ என்று சொல்லும் நிகழ்வாக இது 1981-ல் அமைந்தது.
தன் தயாரிப்புதான் பவுடர் பூசி, மேக்கப் போட்டு ‘ஐ.பி.எம்’- கம்ப்யூட்டரோடு விற்பனையாகிறது என்பது சியாட்டல் நிறுவனத்திற்கு பிறகுதான் தெரிந்தது. சியாட்டல் நிறுவனம் குய்யோ, முறையோ என்று கூவியது. பில்கேட்ஸ் இப்போது தனது செல்வாக்கால் சியாட்டலை கட்டுப்படுத்தினார். அன்றிலிருந்து இன்றுவரை பில்கேட்ஸ் உலக பணக்காரர் வரிசை பட்டியலில் முதன்மை இடத்திற்கு தள்ளப்பட்டார். அதே இடத்தை இன்றும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிகழ்வில் பில்கேட்ஸ் ஏமாற்றியிருக்கிறார், பித்தலாட்டம் செய்திருக்கிறார் என்றெல்லாம் மாணவர்களாகிய உங்கள் மனதிற்குள் தோன்றலாம். ஆனால், இது பித்தலாட்டமும் இல்லை, ஏமாற்று வித்தையும் இல்லை. இதுதான் வியாபார தந்திரம். அரசியலில் ஒருவரை வீழ்த்துவதும், மறுபடி அவரிடமே நட்பு பாராட்டுவதும் அரசியல் தர்மம் அதுதான் சாணக்கிய தந்திரம். உங்களைவிட உங்கள் அருகில் இருக்கும் உங்கள் ஆருயிர் நண்பர் 5 மதிப்பெண்கள் அதிகம் எடுத்துவிட்டார் என்பதற்காக ஒரு நாள் தூக்கத்தை தொலைத்திருப்பீர்கள். இது உங்கள் பொறாமையை காட்டவில்லை, மாறாக படிப்பில் உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் இடையிலான படிப்பு போட்டியை காட்டுகிறது. அதேதான் பில்கேட்ஸின் வாழ்விலும் அரங்கேறியிருக்கிறது.
ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும் தகுந்தவாறு சரி, தவறு என்ற சித்தாந்தம் மாறி மாறி வரும். இங்கு சரி என்பது, இன்னொரு இடத்தில் தவறு. இன்னொரு இடத்தில் தவறு என்பது மற்றொரு இடத்தில் முழுவதும் சரி. இதுதான் வாழ்க்கை தத்துவம். இந்த தத்துவம் புரிந்துவிட்டால் வாழ்க்கை புரிந்துவிடும். நல்லது கெட்டது தெரிந்துவிடும்.
பில்கேட்ஸ் வாழ்க்கை கற்றுத்தரும் வாழ்க்கை தத்துவம் : உன்னால் ஒரு செயல் முடியாதபோது, யாரால் முடியுமோ அவரை உன்னுடையதாக்கு!!


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here