எண்ணித் துணிக!!

0
228

சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நிரம்பவே எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால், எண்ணியவர்கள் எல்லாம் வென்றிருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த எண்ணத்தை யார் துணிந்து செய்ய முற்பட்டார்களோ அவர்கள்தான் வென்றிருக்கிறார்கள்.
வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள்.. புரட்சியாளர்களாக இருந்தாலும் சரி, சர்வாதிகாரிகளாக இருந்தாலும் சரி, ஆராய்ச்சியாளர்களாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
துணிச்சல் என்ற அந்த ஒற்றை வார்த்தை ஒற்றுமைதான் அவர்களை வரலாற்றுப் பக்கங்களில் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. 6 அடி உயரமும் இல்லை, ஆஜானுபாகுவான உடற்கட்டும் இல்லை. ஆனால் இரண்டாம் உலகப்போரில் சர்வதேச சமூகம் ஒருவரைப்பார்த்து அச்சம் கொண்டது என்றால் அது ஹிட்லராகத்தானே இருக்க முடியும்.
சாதாரண பள்ளி ஆசிரியரான திலகர், இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னை போராளியாக நிலை நிறுத்தச் செய்ததது எது என்று உங்களுக்குள் கேள்வி கேட்டுப் பாருங்கள்.
உலகின் சிறந்த புரட்சியாளர்களின் முதல் வரிசையில் இருப்பவர் சேகுவாரா. அடிப்படையில் இவர் ஒரு மருத்துவர். அதுமட்டுமல்லாமல் ஆஸ்துமா என்ற நோயால் பீடிக்கப்பட்டவர். அவர் எப்படி உலகம் வியக்கும் போராளியானார் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்…
சேகுவாராவின் நோக்கம் எல்லாம், எல்லா நாடுகளும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது ஒன்று மட்டும்தான். அந்த சுதந்திரத்திற்கு புரட்சி ஒன்று மட்டும்தான் ஆயுதம் என்றால், அதையும் எடுக்க தயங்க மாட்டேன் என்று புறப்பட்டார். அடிமைத்தளையில் சிக்கியிருந்த கியூபா எனும் நாட்டை தன் விடா புரட்சி மூலம் விடுதலை பெறச் செய்தார். இன்னும் சொல்லப்பானால், கியூபா ஃபிடல் காஸ்ட்ரோவின் நாடுதானே தவிர்த்து, சேகுவாராவின் நாடல்ல. ஏனெனில் அவர் அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்தவர்.
‘கால்கள்தான் என் உலகம்’ என ‘சே’ ஒருமுறை தன் நண்பர் ஆல்பர்ட்டோவிடம் கூறியிருந்தார். ‘என் கால்கள் பதியக்கூடிய பெருவெளி அனைத்தும் எனது! அதில் வாழும் அனைவரும் என் சகோதரர்கள்’ என்று முழங்கினார். இதை ஃபிடல் காஸ்ட்ரோவிடமும் உறுதிபடுத்தினார். ‘கியூபாவுக்கு விடுதலை கிடைக்கும் வரைதான் நான் உங்களுடன் இருப்பேன். அதன்பின் நான் என் பயணத்தைத் தொடர்ந்து, வெவ்வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவேன்’ என அழுத்தமாகக் கூறியிருந்தார் ‘சே’. காஸ்ட் ரோவும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
படிப்பு என்பது வேறு; கொள்கை என்பது வேறு. கொள்கையில் நாம் பெற்றிருக்கும் துணிவும், அதை செய்யும் ஈடுபாடும்தான் நம்மை எப்போதும் முன்னிலைப்படுத்தும்.
அம்பானியாக ஆசைப்படுவது தப்பில்லை. அந்த எண்ணத்தை உங்களுக்குள் உறுதிப்படுத்திக்கொண்டீர்களா, அந்த எண்ணத்தை நாளும் நாளும் செதுக்க ஆரம்பித்துவிட்டீர்களா, செதுக்கிய அந்த எண்ணத்தை செயல்முறைப்படுத்துவதற்கான துணிவும் மனத்திடமும் வளர்த்துக்கொண்டுவிட்டீர்களா… என்று உங்களிடம் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருங்கள்.
இந்த மூன்று செயல்களும் உங்களுக்குள் நிரந்தரமாக தங்கிவிட்டால் அதற்கு அடுத்தப்படியாக இன்னொன்று இருக்கிறது. அதுதான் கொண்ட செயல்களில் பின்வாங்காமை. நாம் செய்யும் செயல் எதுவாக இருந்தாலும், ஒரு செயலை செய்ய முடிவு செய்த பிறகு, வெற்றியோ தோல்வியோ, சாதகமோ, பாதகமோ அந்த செயல் முடியும்வரை, அந்த எண்ணம் முழுமையாக நிறைவேறும் வரை தொடர்ந்து போராடக்கூடிய வலிமையான மனம் தேவை.
நான் முன்னே சொன்ன உதாரணப் புருஷர்களும் சரி, இனி சொல்லப்போகும் உதாரணப் புருஷரும் சரி. கொண்ட செயல்களில் பின்வாங்காமை என்ற ஒற்றைக் குணத்தில் விடாப்பிடியாக இருந்ததினால்தான், அந்த செயலில் வெற்றிப்பெற்றிருக்கிறார்கள்.
சாதாரண வழக்குறைஞராக இருந்த காந்தி, மகாத்மாவாக ஆனதின் நிகழ்வுகளை கொஞ்சம் அசைபோட்டுப் பாருங்கள். ரயிலில் இருந்து காந்தி நிறவெறியினால் தள்ளப்படுகிறார். அந்த நிகழ்வே நிறவெறிக்கெதிரான, அடிமைத்தளைக்கெதிரான போராட்டத்தை அறவழியில் போராட அவரைத் தூண்டுகிறது.
இந்திய விடுதலைக்கான அவரின் அகிம்சை போராட்டம் ரோஜா பூக்களால் அமைந்த மெத்தையாய் இருக்கவில்லை. முற்படுக்கையாகத்தான் இருந்தது. காந்திக்கு எதிராக எத்தனை சவால்கள், எத்தனை அவச் சொற்கள்.
எதையும் கண்டு கலங்கவில்லை காந்தி. கொண்ட கொள்கையில் உறுதி, தர்மம்தான் வெல்லும் என்ற விடாப்பிடியான குணம் இவையெல்லாம்தான் இன்று அவரை தேசத்தந்தையாக கொண்டாட வைத்திருக்கிறது.
நீங்கள் எந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த நிதர்சனமான உண்மை. நீங்கள் நின்றுகொண்டிருக்கும் அந்த இடத்தில் இருந்து நீங்கள் உயர்வதையும், தாழ்வதையும் உங்கள் துணிச்சல்தான் முடிவு செய்கிறது என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
‘தில்லுக்குத்தான் துட்டு’ என்பார் மஹாத்ரயா. கேட்பதற்கு சாதாரணமான வாசகமாக இருக்கலாம். ஆனால், இது சாதாரணமானது கிடையாது. இதற்குள் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கொண்ட கொள்கையில் பின்வாங்காமை உள்ளிட்ட இத்தனை குணாதிசயங்கள் பொதிந்து இருக்கிறது.
நீங்கள் மாணவராக இருக்கலாம், அலுவலகத்தில் பணிபுரிபவராக இருக்கலாம், தொழில் முனைவொராக இருக்கலாம், இல்லத்தரசியாக இருக்கலாம். யாராக இருந்தாலும் சரி உங்களின் வாழ்க்கைப் பாதையானது மற்றவர்களுக்கு உதாரணமாய் இருக்க விரும்பினால், நீங்கள் செய்யவேண்டியது இந்த மூன்றே முன்று விஷயங்கள்தான்.
கொண்ட கொள்கையில் உறுதியாக இருங்கள்
உறுதியாய் இருக்கும் உங்கள் கொள்கையை துணிவுடன் செயல்படுத்துங்கள்.
அந்த செயல் முடிவுபெறும்வரை கொள்கையிலிருந்து பின்வாங்காமலிருங்கள்.
இந்த மூன்று விஷயங்களையும் தொடர்ந்து நீங்கள் பின்பற்றி வருவீர்களானால், உங்கள் வாழ்க்கை வரலாறாகும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here