முள்ளை முள்ளால்தான்…?

0
168

சில பழமொழிகள் சாதாரண பழமொழிகளாக மட்டுமே நாம் கடந்துவிடுகிறோம். ஆனால், ஒவ்வொரு பழமொழிக்குப் பின்னும் ஒரு வாழ்வியல் தத்துவம் ஒழிந்துகொண்டிருக்கிறது. இதை பெரும்பாலும் நாம் கவனிப்பதேயில்லை.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்ற பழமொழி பரவலாக நாம் அறிவோம். காலில் குத்திய முள்ளை எடுக்க யாரும் பஞ்சை பயன்படுத்துவது கிடையாது. ஊக்கு, ஊசி போன்று ஏதேனும் ஒரு முள் போன்ற கருவியைப் பயன்படுத்திதான் எடுக்கிறோம். காய்ச்சலின் போது வாய் கசப்பாக இருக்கும். இந்த கசப்பை போக்குவதற்கும் காய்ச்சலை சரிசெய்வதற்கும் நாம் பயன்படுத்தும் மாத்திரையின் சுவையும் கசப்புதான்.
கிட்னியில் கல் வந்தால், பெரும்பாலும் நாம் கேள்விப்பட்டது தக்காளி சேர்த்துக்கொள்ளக்கூடாது, முட்டைகோஸ் போன்ற சில காய்கறிகளை உணவில் தவிர்க்க வேண்டும் என்று படித்திருப்போம். அந்த உணவு முறையையே நாம் பின்பற்றவும் செய்திருப்போம். சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் சொன்ன விஷயம் உண்மையிலேயே ஆச்சர்யம் தரும் வகையில் இருந்தது. கிட்னியில் கல்லை சரி செய்ய தக்காளியையே பயன்படுத்தாமல் இருப்பது சரியல்ல, ஏனெனில் கல்லை வெளிக்கொணர்வதற்கான, அதை சரிசெய்யும் மருந்தே அதில்தான் இருக்கிறது. தக்காளியை அப்படியே சாப்பிட்டால் உண்மையிலேயே கிட்னி கல் உறுவாகத்தான் செய்யும், அதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால், அதே தக்காளியை மென்று, கூழாக்கி உண்ணும்போது தக்காளியே மருந்தாகி கல்லை கரைக்க உதவுகிறது. இதுதான் கல்லை கரைப்பதற்கான சிகிச்சை என்று அந்த மருத்துவர் சொன்னபோது எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.
எப்போதெல்லாம், இந்தப் பழமொழியின் உள் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ளவில்லையோ, அப்போதெல்லாம் நாம் சவால்களை எதிர்கொள்ளவே செய்திருக்கிறோம்.
வாழ்க்கையின் தத்துவங்கள் எல்லாமுமே பழமொழியில் சூசகமாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், பழமொழியை வெறும் வார்த்தைகளாக மட்டுமே கவனிக்கிறோமே தவிர்த்து, அதனுடைய உள் அர்த்தங்களை நாம் புரிந்துகொள்வதே இல்லை.
பிரபஞ்சத்தில் வாழும் எல்லா உயிரினங்களும் சவால்களை எதிர்கொள்ளாமல் இல்லை, ஆனால் மனித இனம் மட்டுமே சவால்களை கண்டு அஞ்சி நடுங்குவதும், அந்த சவாலிலிருந்து தப்பித்து ஓடும் செயலிலும் தொடர்ந்து ஈடுபடுகிறது.
பிரச்சினைகளும், சவால்களும் மனித வாழ்க்கையில் மாறி மாறி வரும் நிகழ்வுகளே. அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. ஆனால், எல்லா சவால்களுக்கான தீர்வுகளும் வெளியில் தேடுவதுதான் தவறு. பிரச்சினைகளை சரிசெய்வதற்கான வரையறைகள் ஏராளமாய் நம்மைச்சுற்றி கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், அதை சரிசெய்யவேண்டிய தன் முனைப்பும், முயற்சியும் நம்மிடம்தானே இருக்கிறது.
பிரச்சினைகளை சரிசெய்யக்கூடிய வரையறைகளை மட்டும் வரிசைப்படுத்தினால் மட்டும் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை எதிர்கொண்டுவிட முடியாது. மாறாக தீர்வுகளை மனதிற்குள் ஏற்றவேண்டும். தீர்வுகளின்படி நடப்பதற்கு நம்மை நாம் தயார் பண்ண வேண்டும். வாழ்க்கையில் சாதிக்க நமக்கு முன்னால் சாதனை நிகழ்த்தியவர்கள் பற்றி படிக்கலாம், அவர்களின் நுணுக்கங்களை நம் மனதில் ஏற்றிக்கொள்ளலாம். ஆனால், நமக்கான சாதனைகளும், அதற்கான சூத்திரங்களும் நமக்குள்தான் இருக்கின்றன. அதைத்தான் நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். தீர்வுகளையும், பதில்களையும் எப்போது நமக்குள் நாம் தேட ஆரம்பிக்கிறோமோ அப்போது நாம் வரலாற்றில் இடம்பிடிக்க தகுதியாகிவிட்டோம் என்று அர்த்தம். இன்று வரலாற்றில் நாம் படிக்கும் ஒவ்வொருவரும் அவர்களுக்குள் தீர்வை தேடியவர்களே!


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here