அக்கினிக் குஞ்சு!

0
205

கலை என்பது கற்றுக்கொள்வது மட்டுமல்ல; கற்றுக்கொள்ள தூண்டுவதும், உணர வைப்பதும்தான். கலை என்பது வெறும் காட்சிப் பொருளாய் இருக்காமல் அக்கினிக் குஞ்சாக இருக்க வேண்டும்.
வழக்கம்போல காலை வேலைதான். ஆனால், அன்று வழக்கம்போல இருக்கவில்லை. ஒட்டுமொத்த நாளையும் ஒரு பாடல் பதம் பார்த்துவிட்டது. இது எனக்கு மட்டும் நடக்கும் நிகழ்வு அல்ல; நம்மில் எல்லோருக்கும் தினம் தினம் நடக்கும் நிகழ்வு. ஆனால், எத்தனை பேர் நம்மில் அந்த நிகழ்வை தொடர்ந்து அசைப்போட்டிருப்போம் என்பதுதான் என்னுடைய கேள்வி.
என் ஆழ்ந்த தூக்கத்தை சில பாடல் தட்டி எழுப்பியிருக்கிறது. வாழ்க்கையில் சவாலான பல கட்டங்களை சில பாடல், கடக்க வைத்திருக்கிறது. பல துக்கங்களை கடக்க வைத்திருப்பதோடு, பல சந்தோஷ தருணங்களையும் இந்த திரையிசைப் பாடல்கள் என்னுள் ஏற்படுத்தவே செய்திருக்கின்றன. இந்த உணர்வுகள் எனக்கு மட்டுமல்லாது, உங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
நம் ஒட்டுமொத்த உணர்வையும் எல்லாப் பாடல்களும் அசைத்துப் பார்க்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்வேன். பல பாடல்கள் என்னை கடந்து போய் இருக்கின்றன, ஆனால் அதில் ஒரு சில மட்டும்தானே என்னுள் மாற்றத்தை உண்டுபண்ணுகிறது, உத்வேகத்தை ஏற்படுத்துகிறது.
அப்படி என்னதான் இருக்கிறது அந்த குறிப்பிட்ட பாடலில் மட்டும்…
பாடலில் மட்டும்தானா இந்த கவர்ச்சி விசை இருக்கிறது, இல்லவே இல்லை. நிறைய விஷயங்களில் இருக்கிறது. சிலர் பேசும்போது பேசுபவர் நம் முன் நின்றிருந்தாலும், அவர் பேசும் வார்த்தைகள் நம்மை வேறு எங்கோ பயணிக்க வைக்கும். சிலரின் பேச்சுக்கள் நம் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போடும்.
கலை என்பது பாடல், ஆடல், பேச்சு, எழுத்து இதில் மட்டும் அடங்கிவிடவில்லை. வாழ்க்கையும் அடங்கும். வாழ்க்கைக் கூட ஒரு வகையில் கலைதான். சிலரின் வாழ்க்கை வரலாறு மட்டும்தானே நம்மை அசைத்துப் பார்த்திருக்கிறது. எப்படி இப்படியெல்லாம் வாழ முடியும். சாத்தியமே இல்லை என்று பலரின் வாழ்க்கை வரலாறு படித்து சிலாகித்து இருப்போம்.
நான் மேலே சொல்லி வருகின்ற ஒவ்வொரு விஷயத்தையும் கோர்வையாக பார்க்கும்போது ஏதாவது ஒரு விஷயம் உங்களுக்குள் புலப்படுகிறதா…?
நான் அப்போது ஒரு முன்னணி பத்திரிகையில் பணியாற்றி வந்தேன். பத்திரிகை என்பது என்னைப் பொறுத்தவரையில் குருகுலம் மாதிரி. அந்தப் பணியில் ஒரு தவம் இருக்க வேண்டும். அப்போதுதான், அந்தப் பணி நம்மை உச்சத்தில் கொண்டுபோய் அமர்த்தும். இல்லாவிட்டால், காணாமலேயே போய்விடுவோம்.
ஒரு நாள், பத்திரிகையின் சர்குலேஷன் சம்பந்தமாக சீஃப் எடிட்டர் என்னை இண்டர்காமில் அழைத்தார். “புதுசா ஒரு கான்சப்ட் தோணுச்சு… இந்த காண்சப்பட்டை அடுத்த வாரம், வரக்கூடிய மேகசீன்ல புரோமோவா போட்ருங்க… அதுக்கு அடுத்த வாரத்துல இருந்து இந்த கான்சப்ட் பப்ளிஷ் ஆகணும்… பப்ளிஷ் ஆகுற தேதியில் இருந்து, சர்குலேஷனை தொடர்ந்து கண்காணிச்சிட்டே வாங்க”ன்னு சொன்னார்.
நானும் அவரின் பேச்சை ஆமோதித்து பணியை தொடங்கினேன். பிரமாண்டமான புரோமோ எல்லாம் கொடுத்து, கட்டுரையும் எடிட்டர் சொன்னது மாதிரி பிரசுரம் ஆனது.
பத்து நாட்கள் கடந்திருக்கும். எடிட்டர் என்னை சந்திக்க இண்டர்காமில் அழைப்பு விடுத்தார். “புது கண்டண்ட் எப்படியிருக்கு…? ரெஸ்பான்ஸ் ஓ.கே.வா”
“கண்டண்ட் நல்லா இருக்கு, எடிட்டோரியல்ல எல்லோருமே, ரொம்ப புதுசா இருக்குன்னு சொன்னாங்க…” என்றேன்.
”எடிட்டோரியல்ல இருக்கறவங்க அப்படித்தான் சொல்வாங்க… பப்ளிக் ரெஸ்பான்ஸ் எப்படியிருக்கு…?”
“இன்னும் லெட்டர் ஒண்ணுக்கூட வரலை…” என்றேன்.
ஓரிரு நிமிடங்கள் அமைதியாக இருந்தவர், “இன்னும் இரண்டு இஸ்யூக்கு, மேட்டரை தொடர்ந்து பிரசுரம் பண்ணுங்க. அதுக்கப்புறமும் பப்ளிக் ரெஸ்பான்ஸ் இல்லன்னா, அந்தப் பகுதியை நீக்கிடுங்க…” என்றார்.
ஒரு நிமிடம் அதிர்ந்தே போனேன்.
“சார்… இதுக்காக ரொம்ப மெனக்கிட்டிருக்கோம்… சட்டுன்னு இப்படி கண்டண்டை நீக்கிடுங்கன்னா… வாசகர்கள் ஏமாந்துட மாட்டாங்களா..? நம்முடைய இந்த செயல் பத்திரிகையின் புகழையல்லவா சேர்த்து கெடுத்துவிடும்..” என்று சொன்னேன்.
நீங்க சொன்னது சரிதான். பத்திரிகைல இது புதுசு இல்ல. சகஜம்தான்… ரீடர்ஸ் ரெஸ்பான்ஸ்ங்கறது… வாசகர்கள் பாராட்டி எழுதுற லட்டர்ல மட்டும் இல்லை. திட்டி எழுதக்கூடிய கடிதம் கூடத்தான். ஒரு பகுதிக்கு, ஒருத்தர் பாராட்டி எழுதிட்டார்னா… அந்த பகுதி நல்லாயிருக்குன்னு அர்த்தம். அதே பகுதியை ஒருத்தர் திட்டி எழுதியிருக்கார்னா… அவர் நம்ம கட்டுரையோடு பயணிக்க ஆரம்பிச்சாட்டார்னு அர்த்தம், அதோடுமட்டுமல்ல… அவர் நம்ம பகுதியை மற்ற கட்டுரைகளோடு ஒப்பிட்டி பார்த்திருப்பார். இந்தப் பகுதிக்காக அவர் ரொம்பவே மெனக்கிட்டிருக்கார்னு அர்த்தம். அந்த நேரத்துல, நாம பிரசுரிக்கிற அந்த குறிப்பிட்ட பகுதிக்காக இன்னும் நம்ம மெனக்கிட்டு உழைக்கணும்னு அர்த்தம். திட்டி எழுதுற அந்த வாசகர், அடுத்த இதழ் வரும்போது, தொலைபேசியில் நம்மை அழைத்து பேசிவிட்டார் என்றால், அந்தப் பகுதி இமாலய வெற்றி பெற்றிடுச்சுன்னு அர்த்தம். எனக்குத் தேவை, அந்த மாதிரியான ரெஸ்பான்ஸ்தான்.
ஒரு வேளை அந்தப் பகுதிக்கு கடிதமே வரவில்லையென்றால், அந்தப் பகுதி யாருடைய மனதையும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றுதான் அர்த்தம். யாருடைய மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தாத எந்த ஒரு படைப்பும் படைப்பே இல்லை. அது ஒரு குப்பை. என்னுடைய இதழில், குப்பை வர நான் அனுமதிக்க மாட்டேன்… என்று அவர் சொன்ன வார்த்தைகள், பசுமரத்து ஆணிபோல நெஞ்சில் ஆழமாய் எனக்குப் பதிந்து போனது.
சமைக்கும் சமையல் ஆகட்டும், படிக்கும் படிப்பாகட்டும், விளையாடும் விளையாட்டு ஆகட்டும். எந்த ஒன்றிலும் ஈடுபாடு இருந்தால் மட்டுமே… அது உங்களை உச்சத்திற்கு எடுத்துச் செல்லும். கடும் உழைப்பு, உங்களை வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கும். ஆனால், ஈடுபாட்டோடு கலந்த உழைப்பு மட்டுமே உங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும்.
கடும் உழைப்பில் உடலும், அறிவும் மட்டுமே வேலை செய்யும். அந்த இடத்தில் மனம் தனியாகவே இருக்கும். ஈடுபாட்டோடு செய்யும் உழைப்பில்தான் உடல், அறிவோடு சேர்ந்து மனமும் சேர்ந்து பயணிக்கும். அந்த இடத்தில் உழைப்பு என்பது உங்களுக்கு பொழுது போக்காக மாறிப்போகும். உழைப்பு என்ற ஒன்று உங்கள் ரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்றாக மாறிப்போகும்.
செய்யும் வேலையைக் கூட கலையாக நினைத்து ஈடுபாட்டோடு செய்தால் மட்டுமே… அந்தப் பணி மற்றவர்கள் பாராட்டும்படி இருக்கும். இல்லையேல்… அந்த வேலையை சுமக்கும் சுமைதாங்கியாகவே மட்டுமே நீங்கள் இருப்பீர்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
பாரதியாரின் இந்தப் பாடலை… சத்தமாக வாசித்துப் பாருங்கள்… உங்களில் ஒரு ஆற்றல் பொங்கி வழியும். அல்லது உங்களுக்குள் புது உற்சாகம் ஊற்றெடுக்கும்.
இந்த இரண்டும் உங்களுக்குள் நிகழவில்லையென்றால், இந்தப் பாடலை சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை என்றே அர்த்தம்.
இன்று ஆயிரம் ஆயிரம் கவிஞர்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள். தினம் தினம் ஒரு கவிதை நூல் வெளியீடு நிகழத்தான் செய்கிறது. ஆனால், பாரதியாரின் வரிகள் மனதில் பதிந்ததுபோல, வேறு எந்த கவிஞனின் வார்த்தைகளும் மனதில் பதியாமல் போனதின் காரணத்தை யோசித்து பார்த்திருக்கிறீர்களா…?
மற்றவர்கள் கவிதைகள் அனைத்தும் நமக்கு கவிதைகளாக மட்டுமே தெரிந்தன. ஆனால், பாரதியின் வரியில் மட்டுமே… உயிர் இருந்தது. வலி தெரிந்தது, வேட்கை புரிந்தது, வாழ்க்கை விளங்கியது. ஏனெனில் பாரதிக்கு கவிதைதான் உயிர், கவிதைதான் மூச்சு. ஒவ்வொரு வார்த்தையிலும் தன் ஜீவனை கரையவிட்டிருந்தார். அந்த ஜீவன் தான், பாரதி மறைந்து நூற்றாண்டு கடந்தாலும்.. இன்றும் நமக்குள்ளே இளைஞனாய் உயிரோடிருக்கிறார்.
ஒரு விஷயம் தெரியுமா…
அந்த சமயத்தில் சென்னையில் ஓர் இலக்கிய சங்கத்தார் கவிதைப் போட்டியொன்றை அறிவித்திருந்தார்கள். முதல் பரிசு முன்னூறு ரூபாய், இரண்டாவது பரிசு இரு நூறு ரூபாய், மூன்றாவது பரிசு நூறு ரூபாய் என்றும் அறிவித்திருந்தார்கள்.
புதுச்சேரி நண்பர்கள் பாரதியாரிடம் போய் இந்தப் போட்டிக்கு அவரை கவிதை எழுதியனுப்பமாறு சொல்லி வற்புறுத்தினார்கள். பாரதியார் முதலில் மறுத்தார் என்றாலும் பிறகு நண்பர்களது வேண்டுகோளுக்கிணங்க ஒரு பாடலை எழுதி அனுப்பினார்.
போட்டி முடிவு இரண்டொரு நாளில் வெளியானது. அதில் பாரதியார் வென்ற பரிசு என்ன தெரியுமா… மூன்றாவது இடம்.
அவர் எழுதியனுப்பிய பாடல்வரிகள்தான்…
’செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே’
முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அந்த கவிஞர்கள் யாருடைய மனதிலும் இல்லை. ஆனால், மூன்றாம் இடம் பிடித்த முண்டாசுக் கவிதான், நமக்கெல்லாம் உதாரணப் புருஷனாய் இருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் டூ தேர்வு முடிவு அறிவிக்கப்படும்போதெல்லாம, மாவட்ட அளவில், மா நில அளவில் தேர்ச்சிப் பெற்றவர்கள் எல்லாம்.. ‘எதிர் காலத்தில் நான் விஞ்ஞானி ஆவேன், நான் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பேன், என் மாவட்டத்தின் கலெக்டர் ஆவேன்…’ என்று இப்படி பல்வேறு பேட்டிகள் தொலைக்காட்சியில் நாம் பார்த்திருப்போம். உண்மையில் அவர்கள் சொன்னது மாதிரியே… விஞ்ஞானியாகவோ, ஆராய்ச்சியாளராகவோ, கலெக்டராகவோ ஆகியிருக்கிறார்களா என்று ஆராய்ச்சி செய்து பார்க்கும்போது… நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
ஏனெனில் அப்படி பேசியவர்களில் 1 சதவீதம் பேர் மட்டுமே, அவர்கள் சொன்னதுபோல ஆகியிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு… அந்தக் கனவு அன்றைய பேட்டியோடே முடிந்துவிட்டது.
ஏனெனில் மற்றவர்களின் உழைப்பில்… உடலும், அறிவும் மட்டுமே கலந்திருந்திருக்கின்றது.
நீங்கள்.. இந்த உலகத்தில் பத்தோடு பதினொன்றாக இல்லாமல், தனியொருவராக தெரிய வேண்டுமா.. அப்படியானால் உங்களை நீங்கள் பன்படுத்துங்கள். உங்களை மேன்மைப்படுத்தும் ஆற்றலும், சக்தியும் உங்களுக்குள்தான் புதைத்து கிடக்கிறது. அதை தோண்டி எடுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயத்தையே… தொழிலாக மாற்றுங்கள். அந்த விஷயத்தை யாருக்காகவும் எந்த நேரத்தில் விட்டுக் கொடுக்காதீர்கள்.
உங்களுக்கு பிடித்த விஷயமே உங்களது தவமாய் மாறட்டும்.
உங்களுக்கு பிடித்த விஷயமே உங்களது வாழ்வாய் மாறட்டும்.
உங்களுக்கு பிடித்த விஷயமே உங்களது சுவாசமாய் மாறட்டும்…
உங்களுக்கு பிடித்த விஷயத்தில் உங்களது ஜீவனை கரைய விடுங்கள்.
அப்புறம் பாருங்கள்… உங்களுக்கு பிடித்த விஷயம், நீங்கள் மட்டும் கொண்டாடுவதாய் இருக்காது. அது மற்றவர்களும் கொண்டாடும் விஷயமாய் மாறும். பத்தோடு பதினொன்றாய் நின்றிருந்த நீங்கள் இந்த பிரபஞ்சத்தில் மற்றவர்கள் பின்பற்றும் உதாரண புருஷராய் மாருவீர்கள். தனியொருவராய் மிளிருவீர்கள்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here