நம்பிக்கை என்பது…

0
346

வாழ்க்கையில் நம்பிக்கை என்பது சாதாரண ஒரு சொல்லாடலாக இருந்துவிடாமல் அது முழுமையாக இருக்க வேண்டும். நம்பிக்கை என்பது எப்போது முழுமையாகிறதோ அப்போது அதன்மூலம் கிடைக்கும் நன்மைகளை நாம் அனுபவிக்க முடியும்.
மிகப்பெரிய நிறுவனம் அது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும், உலக அளவில் நான்கு நாடுகளிலும் அந்த நிறுவனத்தின் கிளைகள் இயங்கி வருகின்றன. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எல்லோருக்கும் சிறப்பான ஊதியமே நிர்ணயம் செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஏதேனும் பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்த புதியவர்களை நிறுவனம் விரும்பி பணியமர்த்தும்போது, அவர்களுக்கு கொடுக்கும் ஊதியமானது இதுவரை வாழ்க்கையில் அவர்கள் எதிர்பார்க்கவே முடியாத ஊதியத்தைக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தும்.
இவ்வளவு ஊதியம் கொடுத்து பணிக்கு எடுக்கும் ஒரு நிறுவனம் அந்த ஊழியர்களிடமிருந்து பொதுவாக என்னவெல்லாம் எதிர்பார்க்கும்?
பொதுவாக மற்ற ஊழியர்களை விட தரமான உழைப்பு, உற்பத்தி பெருக்கம், முன்னெப்போதும் விட லாப சதவீதம். இதைத்தான் எல்லா நிறுவனங்களும் எதிர்பார்க்கும். ஆனால், இந்த நிறுவனமோ இந்த வழக்கமான கோட்பாடுகளுக்கெல்லாம் நேர் எதிரானது. சொன்ன ஊதியம் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் சரியாக சென்றடைந்துவிடும். உற்பத்தியில் முன்னெப்போதும் இல்லாததைவிட பெரும் சரிவு.. ஏற்பட்டாலும் புதிய நிர்வாக அதிகாரியிடம் நிறுவன தலைமை எந்தக் கேள்வியும் கேட்காது. குறிப்பிட்ட சில மாதங்களுக்குப் பிறகு பிரச்சினை அதுவாக சரியாகும். வளர்ச்சி படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும். இதுகுறித்து நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் நிறுவனர் பேசும்போது, “எல்லோரும் என்னிடம் கேட்கும் கேள்வி, இவ்வளவு பெரிய நபரை இந்த நிறுவனத்தில் இருந்து இவ்வளவு பெரிய ஊதியத்தில் அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், எதிர்பார்த்த பெரிய வளர்ச்சி இல்லையே… சம்பந்தப்பட்ட அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தமாட்டீர்களா என்று கேட்கிறார்கள். இத்தகைய கேள்விகளுக்கு நான் அளிக்கும் பதில் ஒன்றே ஒன்றுதான். கேட்கமாட்டேன் என்ற ஒற்றை பதில்தான்.”
நிறுவனர் மேலும் தொடர்ந்தார், “ஒரு நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றும் ஒருவரை என் நிறுவனத்திற்காக தேர்வு செய்யும்போது கண்மூடித்தனமாக உடனடியாக நாங்கள் எடுத்துவிடுவதில்லை. அவரின் குடும்ப பின்னணி, நிறுவனத்தில் அவருடைய செயல்பாடுகள், விசுவாசம், அர்ப்பணிப்பு, சாதனைகள் இவை ஒவ்வொன்றையும் அலசி ஆராய்வோம். இதுகுறுத்து நிறுவனத்தின் செயல் குழுவிடம் தீவிரமாக ஆலோசிப்போம். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஓரிரு நாட்களில் நடந்துவிடாது. இரண்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும். இந்த ஆலோசனை, அந்த நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் அந்த நபர் குறித்த எல்லா தகவல்களையும் விசாரித்தப் பிற்பாடு எங்களுக்கெல்லாம் முழு உடன்பாடு ஏற்பட்டப் பிறகே அவருக்கு வாய்ப்பு தருகிறோம். அதற்குப் பிறகு அவர்கள் மீது நாங்கள் வைக்கும் ஒரே விஷயம் நம்பிக்கை என்ற ஒன்று மட்டும்தான். எந்த ஒரு சூழ் நிலையிலும் அவர்கள் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை மீது கேள்வியெழும் வகையில் எங்கள் நிறுவனம் இதுவரை நடந்ததில்லை. புது நிறுவனம், புதிய செயல்பாடுகள், புதிய நிறுவன நிபந்தனைகள் இந்த எல்லாக்காரணிகளும் புதியவர்களுக்கு ஆரம்பத்தில் தொய்வைத்தான் ஏற்படுத்தும். இந்தத் தொய்வு எங்களுக்குமட்டுமல்ல, புதிதாய் சேர்ந்த அந்த நபரையும் மனதளவில் பாதிக்கவே செய்யும்.”
“தொய்விற்கான எந்த காரணத்தையும் நிர்வாகம் கேட்கவில்லையே என்ற எண்ணம் புதிய நபருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவே செய்யும். இந்த மகிழ்ச்சி அவருக்குள் தொடர்ந்து நீடிக்காது. தொய்வு மேலும் மேலும் தொடர்ந்துகொண்டிருந்தாலும், நம்மிடம் எந்தக் கேள்வியையும் நிறுவனம் கேட்கவில்லையே என்ற எண்ணங்கள், ஒரு கட்டத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தாமல் அவர்களை வேறு வகையில் சிந்திக்க வைக்கும். ‘நிறுவனம் நம் மீது அளப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. இந்த நம்பிக்கைக்கு நாம் என்ன செய்யப்போகிறோம், எப்படி பாத்திரமாகப்போகிறோம்’ என்ற மனப்போராட்டம் அவர்களுக்குள் நிகழ ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு அவர்கள் காட்டும் ஈடுபாட்டின்மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி எப்போதுமில்லாத அளவிற்கு உயரும். இது எல்லாமுமே நாங்கள் அவர்கள் மீது வைத்த பரிபூரண நம்பிக்கையினால் மட்டுமே ஏற்படும். இதுவே எங்கள் நிறுவனத்தின் தாரக மந்திரம். நம்பிக்கை என்பதே முழுமையாக நம்புவதுதான். ஒருவர் மீது அரைகுறையாக நம்பிக்கை வைப்பது என்பதே அவ நம்பிக்கைதான்.
இந்த கோட்பாடுதான் 99 சதவீதம் எங்கள் நிறுவனத்தை மென்மேலும் வளர்த்திருக்கவே செய்திருக்கிறது. இதுதான் நம்பிக்கையின் பலம்.
தொழில்முறை வாழ்க்கையில் மட்டுமல்ல, இறை வழிபாட்டில், இல்லற வாழ்க்கையில், குழந்தை வளர்ப்பில், நட்பு வட்டத்தில் இப்படி எல்லா பிரிவுகளிலும் இந்த நம்பிக்கை மட்டுமே உங்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும். வார்த்தை ஜால நம்பிக்கைகளெல்லாம் ஆரம்பத்தில் உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதுபோல இருந்தாலும், உங்களின் வளர்ச்சியை அது ஒட்டுமொத்தமாக பாதிக்கவே செய்யும்.”


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here