கோபம் கொள்ளுங்கள்!

0
175

உங்களை உங்களுக்கு அடையாளப்படுத்தும் மாயக்கண்ணாடிதான் கோபம். ஆனால், நீங்கள் கொள்ளும் கோபம் நல்லதா? அல்லது கெட்டதா என்பதைப் பொறுத்துதான் பின் விளைவுகள் அமைகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
‘கொஞ்சம் கோபத்தை குறைச்சுட்டீங்கன்னா, இவ்ளோ பிரஷர் உங்களுக்கு வராது’ என்று மருத்துவர்கள் சொல்ல கேட்டிருப்போம். அப்படீன்னா கோபம் கெட்டதுதானே. தவிர்க்கப்பட வேண்டியதுதானே. அப்படியிருக்கையில் கோபம் கொள்வது எவ்வகையில் சரியாகும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
கோபத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று நல்ல கோபம், இன்னொன்று கெட்ட கோபம்.
அதென்ன கெட்ட கோபம்?
பகைவர்கள் அல்லது முகம் தெரியாத நபர்களுடன் நிகழும் வாக்குவாதத்தில், ’எனக்கு மட்டும் கோபம் வந்துசுன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது’ என்று பல்லைக் கடித்துக்கொண்டோ, அல்லது கெட்ட வார்த்தைகளை பிரயோகப்படுத்தியோ, அல்லது கிடைக்கும் பொருளை தூக்கி அடித்தோ செய்வது கெட்ட கோபம். இது சம்பந்தப்பட்ட இருவருக்கு இடையே மட்டும் அல்லது ஒரு சிறு குழுக்களுக்கு இடையே மட்டும் நிகழக்கூடியது. இந்த கோபத்தால் இருவரில் ஒருவர் உடலாலும் அல்லது மனதாலும் பாதிக்கப்படலாம். இந்த கோபத்தால் யாருக்கும் எந்த வகையிலும் நன்மை விளையாது.
இந்த கோபம் உடனடியாக மறக்கப்படும், அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி எடுத்துக்கொள்ளும். ஆனால், இந்த கோபத்தால் தொடர்ந்து கெட்டதே விளையுமே தவிர்த்து, எக்காரணத்தைக் கொண்டும் நன்மை ஏற்படப்போவதில்லை.
நல்ல கோபம் இதற்கு நேர் தலைகீழ். அந்த நிறுவனம் புதிதாக தொடங்கப்பட்ட இதழியல் நிறுவனம். முதல்கட்டமாக அந்த நிறுவனத்தில் நான் உள்பட நான்கு பேர் பணியில் சேர்ந்தோம். அதற்குப்பிறகு படிப்படியாக பணியாளர்களை தேர்வு செய்யும் படலம் நிகழ்ந்தது. அதில் முதலில் எடுக்கப்பட்ட நாங்கள் நால்வரில் நானும் இன்னொருவரும் முதல் நாளிலும் அடுத்த இரண்டு பேர் அடுத்த வாரத்திலும் பணியில் சேர்ந்தார்கள். மற்றவர்கள் அதன் தொடர்ச்சியாக பணியில் சேர்ந்தார்கள்.
ஒவ்வொரு நிறுவனத்திலும் பணித்திறமை என்ற ஒன்றைக்கடந்து பணியாளர்கள் மத்தியில் ஒரு அரசியல் நிகழ்வது சகஜமான ஒன்றுதான். அந்த நிறுவனத்திலும் அது நிகழாமல் இல்லை. பெரிய அரசியல் நிகழவே செய்தது. பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் கடந்திருக்கும். நிறுவனத்தின் அந்தக் கிளையின் பொறுப்பாளருக்கான தேர்வு நிகழ்ந்தது. நிறுவனத்தின் சட்டத் திட்டத்தின் படி, முதலில் சேர்ந்த பணியாளர்கள்தான் அந்தப் பதவிக்கு தகுதியானவர்களாக முடியும். அந்தப் பதவி எனக்கு கிடைக்க வேண்டும், அல்லது என்னுடன் அதே நாளில் பணிக்குச் சேர்ந்த என் நண்பருக்கு கிடைக்க வேண்டும்.
ஆனால், அங்கு நிகழ்ந்த நிகழ்வு வேறு. ஏற்கெனவே நிகழ்ந்த அரசியல் சிக்கலில் புதியவர் ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் திறமையானவரா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. இன்னும் சொல்லவேண்டுமானா, இந்த அரசியல் பிரச்சினைகளை தூண்டி விடுவதில் அவர்தான் மூலம் என்று சொல்லலாம். இந்த நிகழ்வு எனக்கும், என் நண்பருக்கும் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தவே செய்தது.
மன உளைச்சலைக் கடந்து கட்டுக்கடங்காத கோபம் ஏற்பட்டது. நேரடியாக தலைமை நிறுவனத்திற்கு இங்கு நடக்கும் பிரச்சினைகளை கடிதம் மூலம் சொல்லிவிடலாமா என்றெல்லாம் எனக்குத் தோன்றியது. ஆனால், என் நண்பரோ இன்னொரு படி முன்னேறி, மறு நாள் அலுவலகத்தில் பெரிய பிரச்சினையையே அரங்கேற்றிவிட்டார். தன் பக்க நியாயத்தை மற்றவர்கள் மத்தியில் சத்தமாக சொல்லி சண்டையிடவே, அலுவலகத்தில் இருந்த ஒட்டுமொத்த பேரும் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
‘நியாயம் இல்லாத இடத்தின் எனக்கென்ன வேலை?’ என்று உச்சகட்ட கோபத்தில் வேலையை உதறிவிட்டுச் சென்றார். எனக்கோ பெரிய அதிர்ச்சி. கோபம் எனக்குள்ளும் இருக்கத்தான் செய்தது. ஆனால், இதை எப்படி கடந்து செல்வது என்பது மட்டுமே என்னுடைய சிந்தனையாக இருந்தது. இவர்கள் மத்தியில் இவர்களை விட உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்ற மட்டுமே என் மனதில் கனலாய் எரிந்துகொண்டிருந்தது. ஆனால், உச்சக்கட்ட கோபத்தில் பணியை துறந்துவிட்டச் சென்ற அந்த நபர், ஆறு மாதங்கள் வேலையிழந்து மிகவும் சிரமத்தையே சந்தித்தார். தான் உடனடியாக அந்த முடிவை எடுத்திருக்கக்கூடாதோ என்று சிந்தித்தார். தன் முடிவால் தன் குடும்பத்தினர் படும் சிரமத்தைப் பார்த்து தினம் தினம் வருந்தவே செய்தார். ஒரு கட்டத்தில் எதிர்பார்த்தபடி எதுவும் நிகழாததால், கிடைத்த வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார். இன்று வரை வாழ்க்கையை சவாலாக மட்டுமே கடந்துகொண்டிருக்கிறார்.
அவர் வெளியில் காட்டிய கோபத்தை நான் என்னுள் சிந்தனையாக மாற்றினேன், அதே இதழியல் துறையில் மற்றவர்களைக் காட்டிலும் பல்வேறு பிரிவுகளில் திறமையை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தேன். வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது, அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறி வேறொரு பெரிய நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் அமர்ந்தேன். இன்று அந்த நிறுவனத்தின் அத்தனைப் பேரைக் காட்டிலும், எனக்கு கிடைத்த சமூக மரியாதையும், கெளரவமும் கிடைக்க ஆரம்பித்தது.
அன்று ஏற்பட்ட கோபத்தால் விளைந்த விளைவுதான், புதிதாக பல விஷயங்களை நான் கற்றுக்கொள்ள தூண்டுகோலாக இருந்தது. என்னுடைய திறமை எனக்கே விளங்க ஆரம்பித்தது. எந்தச் சூழலையும் கூட்டம் சேர்க்காமல் தனியொருவராய் எதிர்கொள்ளக்கூடிய தைரியத்தை எனக்குள் விதைத்தது. இது அத்தனையும் கோபம் எனக்கு பரிசாய் தந்தது. நல்ல கோபம் உங்களை அடுத்த நிலைக்கு நகர்த்திச் செல்லும், நல்ல கோபம் உங்களை உங்களுக்கு அடையாளம் காட்டும், நல்ல கோபம் சவால்களை எதிர்கொள்வதற்கான மன திடத்தை ஏற்படுத்தித் தரும்.
1893 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதிவரை அவர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்திதான் அவர் பெயர். இந்தியாவில் இருந்த காலத்தைவிட தென் ஆப்பிரிக்காவில்தான் இருந்த காலம்தான் அதிகம்.
உலகம் மெச்சும் வழக்குறைஞராவதுதான் அவரின் கனவு, லட்சியம் எல்லாமும்.

1893ம் வருடம், தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள தாதா அப்துல்லா என்ற வியாபாரியின் வழக்கு விஷயமாகத்தான் இந்தியாவிலிருந்து அங்கு புறப்பட்டுச் சென்றார் காந்தி.

காந்தியின் விருப்பத்தின்பேரில், பிரெட்டோரியா நகரத்தின் வட பகுதிக்குச் செல்வதற்காக, காந்திக்கு முதல் வகுப்பு டிக்கெட்டை எடுத்துக் கொடுத்திருந்தார் தாதா அப்துல்லா. அந்த லோகோமோட்டிவ் என்ஜின் பொருத்திய அந்த ரயில் புறப்பட்டது. ரயில் கிளம்பிய சிறிது நேரத்தில் ஒரு ஐரோப்பியர் காந்தி பயணம் செய்துகொண்டிருந்த முதல் வகுப்பு பெட்டிக்கு வருகிறார். வெள்ளையர் அல்லாத எவரும் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யக்கூடாது என்று காந்தியின் உடைமைகளை வெளியே எறிந்து, காந்தியை வெளியேற்றுகிறார்.

அந் ஒரு சம்பவத்தினால் காந்திக்கு ஏற்பட்ட அந்த கோபம்தான், நிறவேற்றுமைக்கு எதிரான தன்னுடைய எதிர்ப்பை வெளிக்கொணர உதவியது. அதற்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மாநகரில் காந்தி வசித்தது கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள். அந்த இருபது ஆண்டுகளும் தனக்கு நிகழ்ந்த அந்த அவமானமும், அந்த கோபத்தினால் விளைந்த தெளிவும்தான் வெள்ளையருக்கு எதிராக இந்தியாவில் அவரை போராட வைத்தது. அகிம்சை முறையில் இந்திய சுதந்திரத்திற்கு அவர் போராட காரணமாகவும் இருந்தது.
இன்று மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியை தேசப்பிதாவாகவும், மகாத்மாகவும் கொண்டாடுவதற்கு அந்த ஒற்றை கோபம் மட்டுமே காரணம்.
நல்ல கோபம் உங்களை பண்படுத்தும், நல்ல கோபம் நம்மைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும். வாழ்க்கையில் இந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு முன்னேற வேண்டுமா? அப்படியானால் கோபம் கொள்ளுங்கள். ஏனெனின்ல் நல்ல கோபம் நல்லது!


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here