ஒழுங்கின்மை ஒழுங்கானது

0
206

ஒருவர் தன்னை முழுமையாக (பெர்ஃபக்‌ஷன்) காட்டிக்கொள்ள அதிகமே பிரயத்தனப்படுவார். ஆனால், முழுமைக்காக தன்னை வருத்திக்கொள்ளும் நபர்கள் எத்தகைய பலன்களையெல்லாம் ருசிப்பார்கள் என்பதுதான் இங்கிருக்கும் மிகப்பெரிய கேள்வி.
மாபெரும் ஞானி ஒருவரின் நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சியை காணவேண்டும் என்றால் முன்பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே, அந்த நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தினுள் நுழையவே முடியும். அப்படியான நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணியில் எனக்கு ரசிகர்களுக்கு நுழைவு டிக்கெட் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்.
வரும் ரசிகர்கள் டிக்கெட் பெருவதற்கான குறுந்தகவல் மெயில் மூலமாகவும், வாட்ஸப் மூலமாகவும் ஏற்கெனவே முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்டிருந்தது. வரக்கூடியவர்கள் அந்தத் தகவலை காட்டினால் மட்டுமே அவர்களுக்கு நுழைவுச்சீட்டை வழங்கமுடியும்.
நிகழ்ச்சிக்கு வரக்கூடிய பெரும்பானவர்கள், மொபைல் ஃபோனில் தங்களுக்கு வந்திருந்த குறுஞ்செய்தியை மட்டும் எங்களிடம் காட்டிவிட்டு நுழைவுச்சீட்டை பெற்றுக்கொண்டு திரும்பினர். அப்போது ஒரு நபர் வந்திருந்தார். அவர் உடையலங்காரங்களையெல்லாம் பார்க்கும்போது அவர் பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கணிப்பு. வந்திருந்தவர் கையில் ஒரு ‘எக்ஸிகியூட்டிவ் பேக்’ ஒன்று இருந்தது. பேக்கை திறந்தவர் ஒரு ஃபைல் ஒன்றை எடுத்தார். அவரின் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் கவனித்துக்கொண்டிருந்தேன் நான்.
ஃபைலை திறந்த அவர் அதிலிருந்து ஒரு கவர் ஒன்றை எடுத்தார். அதனுள் அவருடைய அடையாள அட்டை, முகவரி அட்டை, நிகழ்ச்சிக்கான குறுஞ்செய்தி அனுப்பியதற்கான மெயில் பிரதி எல்லாமும் வரிசையாக எடுத்து வந்து என்னிடம் நீட்டினார். இதையெல்லாம் முதலிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, எவ்வளவு ஒரு நேர்த்தியாக வைத்திருக்கிறார். எந்தளவிற்கு ஒழுங்காக பராமரிக்கிறார். இவரைப்போல் நாமும் நம் வாழ்க்கையை வடிவமைக்க கற்றுக்கொள்ள வேண்டும், ஒழுங்கின்மையாக நான் மேற்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும், இனி இவரைப்போல ஒழுங்காக செய்யவேண்டும் அவரைப்போல தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும், என்று எனக்குள்ளேயே நான் சில உறுதிமொழிகளை எடுத்திருந்தேன்.
இம்மாதிரியான செயல் செய்பவர்கள் மீது என்னையறியாமலேயே ஒரு மரியாதை அவர்கள் மீது எனக்குள் ஏற்பட்டுவிடும். அவர்மீதும் எனக்கு அப்படித்தான் ஏற்பட்டது. என் கைகளில் அனைத்து விவரங்களையும் கொடுத்த அவர் நுழைவுச்சீட்டுக்காக காத்துக்கொண்டிருந்தார். எல்லா விவரங்களையும் சரிபார்த்த எனக்கு, “சார்… நாங்க நுழைவுச்சீட்டை பெறுவதற்கான குறுந்தகவல் ஒன்றை மெயிலில் அனுப்பியிருக்கோம். அதை மட்டும் கொஞ்சம் காட்டுங்களேன்” என்றேன்.
“அதுதான் உங்க கையில கொடுத்துட்டேனே” என்றார்.
“சார் நீங்க கொடுத்தது அரங்கத்தினுள் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான நிபந்தனைகள்தானே தவிர்த்து, நாங்கள் அனுப்பிய குறுஞ்செய்தியில் ஒரு வரிசை எண் பதிவிட்டிருப்போம். அதைத்தான் கேட்கிறேன்” என்றேன்.
அப்போதுதான் அவருடைய தவறு அவருக்கே புரிந்தது. பிரிண்ட் அவுட் எடுக்கும் அவசரத்தில் எதை பிரிண்ட் அவுட் எடுக்கவேண்டுமோ, அதை மட்டும் விட்டுவிட்டு மற்றதையெல்லாம் எடுத்து வந்திருக்கிறார் என்பது அப்போதுதான் எனக்கும் புரிந்தது.
இது ஒன்றும் அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை. மொபைலில் இணையதள வசதி இருந்தால் உடனடியாக மொபைலிலேயே மெயிலை திறந்து அந்த விவரத்தை எனக்கு காட்டியிருக்கலாம். அல்லது வேறு யாருக்காவது ஃபோன் செய்து, அந்த மெயிலில் வந்த தகவலை மட்டும் ஃபோட்டோ எடுத்து அனுப்பச் சொல்லியிருக்கலாம். இப்படி பல வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இவ்வளவு வாய்ப்புகள் பற்றியும் அவர் யோசிக்கவேயில்லை. அல்லது என்ன செய்யலாம் என்று எங்களிடமாவது கேட்டிருக்கவேண்டும். அதற்கு நாங்கள் தயாராகவே நின்றுகொண்டிருந்தோம். ஆனால் அவர் அதெற்கெல்லாம் வாய்ப்பே தரவில்லை. தனியாக உட்கார்ந்து கைகளை பிசைந்துகொண்டிருந்தார். முகம் எல்லாம் வியர்த்துப்போய் கொஞ்சம் படபடப்பாக அமர்ந்திருந்தார். பிறகு எதையோ தீவிரமாக யோசித்தவர் எழுந்து சென்றுவிட்டார்.
எனக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. மறு நாள் சம்பந்தப்பட்ட அந்த பிரிண்ட் அவுட்டை எடுத்து வந்து கொடுத்துவிட்டு நுழைவுச்சீட்டை பெற்றுக்கொண்டாலும், அவரின் அந்த நடவடிக்கை என் மனதில் ஓடிக்கொண்டேதான் இருந்தது.
பல பேர் பிரிண்ட் அவுட் எடுத்துவரவில்லை. மொபைலிலேயே குறுந்தகவலைக் காட்டி நுழைவுச்சீட்டை பெற்றுக்கொண்டு சென்றார்கள். மற்றும் சிலரோ, என் நண்பர் ஒருவருக்கு மெயில் வந்திருக்கிறது. ஆனால் அவர்களால் வரமுடியவில்லை… அவர்களிடம் இருந்து மெயிலைப் பெற்று நாங்களே அவர்களுக்கும் சேர்த்து நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாமா என்று கேட்டு, சாத்தியமே இல்லாத, எங்கள் வரையறைகளுக்கப்பாற்பட்ட விஷயங்களையெல்லாம் சாத்தியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எல்லாம் முழுமையாக செய்த ஒருவரால் தன்னுடைய குறிக்கோளை சரியான நேரத்தில் சென்றடையமுடியவில்லையே என்று கேள்வி எழுந்தபோது பதில்களும் சேர்ந்து எனக்குள் விரிய ஆரம்பித்தது.
நம்முடைய இலக்கு மாலைக்குள் நுழைவுச்சீட்டு எப்படியாவது பெற்றுவிடுவதே என்ற எண்ணம் மட்டும் முழுமையாக மனதில் நிரம்பியிருக்கும்பட்சத்தில், எந்த ஒரு சவால் வந்தாலும் நிச்சயம் நுழைவுச்சீட்டு அவரால் பெற்றிருக்க முடியும்.
ஆனால், அவருடைய எண்ணங்கள் முழுவதுமே எதைச் செய்தாலும் அழகாக, முழுமையாக செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது. அதனால்தான் அழகான பையை தயார் செய்து, தன்னுடைய அடையாள அட்டைகளையெல்லாம் பத்திரப்படுத்துவதற்கு அழகான ஃபைலை தேர்வு செய்து, ஆவணங்களையெல்லாம் முறைப்படி வைப்பதற்கு, அதற்குத்தகுந்த கவரை தயார் செய்திருக்கிறார். இந்த எண்ணங்கள் மேலோங்கியபடியால், நுழைவுச்சீட்டு எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணம் அதில் காணாமல் போய்விட்டது.
அவர் எண்ணங்களின்படி தன்னுடைய முழுமையான செயல் காத்திருப்பை ஏற்படுத்திதராது. எதிர்ப்பார்ப்பாளர்களின் எண்ணங்களை முழுமையாக பூர்த்திசெய்யும் என்று முழுமையாக நம்பியிருந்தார். நுழைவுச்சீட்டை பெறுவதில் எந்த ஒரு தடையையோ, சவாலையோ தன்னுடைய ஒழுங்குமுறை ஏற்படுத்தித் தராது என்று முழுமையாக நம்பிக்கொண்டிருந்தார்.
ஆனால் தன்னுடைய முழுமையான நம்பிக்கையும், அங்கு தோற்றுவிட்டபடியால் சவாலை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் அவருக்கு இல்லாமல் போய்விட்டது. அந்த மனப்பக்குவமின்மைதான் சவாலை கண்டு பயப்படுதலும், படபடப்பும் ஏற்படுவதற்கு காரணமாய் இருக்கிறது.
ஆனால் தன்னை முழுமையாக தயார்படுத்திக்கொள்ளாத ஒரு நபர் தன்னுடைய குறிக்கோளை எளிதாக அடைந்ததற்கு காரணம், அவர் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய மன நிலையில் இருந்தார். அந்த சவாலுக்கான தீர்வுகள் எப்படியாவது அந்தச் சூழலில் கிடைக்கும் என்றோ, அல்லது அந்த சூழலை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவம் தனக்கு முழுமையாக இருக்கிறது என்ற அவர்களின் நம்பிக்கைதான் அவர்களை குறிக்கோளை எட்டிப்பிடிக்கச் செய்தது.
அப்படியானால் ஒழுங்குமுறையுள்ளவர்கள் சவாலை எதிர்கொள்ள அச்சப்படுவார்களா? அவர்களால் உச்சபட்ச நிலைக்கு செல்லவே முடியாதா? வரலாற்றில் இடம் பிடித்த அத்தனைபேரும், இன்று நமக்கு முன்மாதிரியாக இருக்கும் நபர்கள் அனைவரும் ஒழுங்குமுறை என்ற பண்பை பெறாதவர்களா என்று ஆராய்ந்து பார்த்தபோது இந்தப் பிரச்சினைக்கு ஆழமான விடை ஒன்று கிடைத்தது.
இன்று வாழ்க்கையில் பலருக்கு முன்மாதிரியாக இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லோருமே ஒழுங்குமுறை பண்பை பிடிவாதமாய் பின்பற்றுபவர்களே. அதில் மாற்று கருத்து இல்லவே இல்லை. முன்னால் நாம் படித்த ஒருவரின் அத்தனை குணாதிசயங்களும் வாழ்க்கையில் உச்சபட்ச நிலையில் இருப்பவர்களுக்கு அப்படியே பொருந்தும். ஆனால், ஒரேஒரு குணாதிசயம் மட்டும் முன்னவரை விட கூடுதலாக இருக்கும். அதுதான் சூழ்நிலை புத்திசாலித்தனம் (ஆங்கிலத்தில் இதை situation brilliant என்று சொல்வார்கள்). எதிர்பாராத சவால் ஒன்றை திடீரென்று எதிர்கொள்ளும்போது தன்னுடைய நிதானத்தை தவறவிடாமல், அதே அழகோடு அதை எதிர்கொள்வதுதான் அது. அந்த சவாலைக்கூட ஒழுங்குமுறையோடு எதிர்கொள்வார்கள். இந்த சவாலும் வாழ்வில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் என்பதை சட்டென்று அவர்கள் புரிந்துகொண்டு, அந்தச் சூழலில் இருக்கும் வாய்ப்புகளையெல்லாம், சவாலை எதிர்கொள்வதற்கான கருவியாக பயன்படுத்துவார்கள். அதோடுமட்டுமல்லாமல் இந்தப் படிப்பினையின் மூலம் கிடைத்த அனுபவத்தினால், வாழ்வில் இம்மாதிரியான சவால் இனி எந்தவொரு சூழ் நிலையிலும் எதிர்கொள்ளாதபடி விழிப்புணர்வுடன் இருப்பார்கள், மற்றவர்களையும் இருக்கச் செய்வார்கள்.
ஒழுங்குமுறையற்றவர்கள், சந்தர்ப்ப சூழ் நிலைகளில் எதிர்கொள்ளும் சவால்களையெல்லாம், அந்த நேரத்தில் எளிதாக கடந்துவிட்டாலும், வாழ்வின் உச்சபட்ச நிலையை எட்டிப்பிடிக்க அவர்கள் ஒழுங்குமுறை என்ற பண்பை வளர்த்துக்கொண்டே ஆகவேண்டும். உச்சபட்ச நிலையை அடைய ஒழுங்குமுறை என்ற பண்புதான் மூல மந்திரம். அந்த ஒழுங்குமுறையோடு சூழலை எதிர்கொள்ளக்கூடிய புத்திசாலித்தனமும் சேர்ந்துவிட்டால், வரலாற்றில் உங்கள் பெயர் இடம்பெருவதை யாரும் தடுக்க முடியாது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here