சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

0
53

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், உயர்கல்வி பயில அவர்களுக்கான கல்விக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கத் தயாராய் இருக்கிறது, தமிழக சிறுபான்மையின நலத் துறை அமைச்சகம். இந்த உதவித்தொகைப் பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆண்டு இந்த உதவித்தொகை 767 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இஸ்லாமிய மாணவர்கள் 366 பேருக்கும், கிறிஸ்தவ மாணவர்கள் 399 பேருக்கும், ஒரு சீக்கிய இன மாணவருக்கும், ஒரு பௌத்த மாணவருக்கும், இந்த உதவித்தொகை அளிக்க தமிழக சிறுபான்மை நலத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த உதவித்தொகைப் பெற விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை தொழிற்படிப்பு, தொழில்நுட்பப் படிப்பு மற்றும் மருத்துவப் படிப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு இந்த உதவித்ததொகை அளிக்கப்படுகிறது. இளநிலை பட்டப் படிப்புக்குச் செல்லும் மாணவர்கள், அந்தப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள், நுழைவுத் தேர்வு இல்லாத பட்சத்தில், பிளஸ் டூ வகுப்பில் பெற்ற மதிப்பெண் (குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்) சான்றிதழை இணைத்து அனுப்ப வேண்டும். முதுநிலை தொழிற்படிப்பு மற்றும் இதரப் படிப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள் இளநிலைப் பட்டப் படிப்பில் கடைசியாக பெற்ற மதிப்பெண் பட்டியலை இணைத்து அனுப்ப வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள், இதற்கு முன் மாநில அளவில் அல்லது மத்திய அரசு அளவில், ஏதேனும் ஒரு தனிப்பட்ட நிறுவனம் அல்லது அமைப்பின் மூலம் எந்தவித கல்விச் சலுகைகள் பெற்றிருக்கக்கூடாது. அப்படி ஏதேனும் பெற்றிருப்பின் இந்த உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த உதவித்தொகையில் 30 சதவீதம் மாணவிகளுக்காக ஒதுக்கப்படுகிறது. விண்ணப்பிப்பவர்களில் மாணவிகள் 30 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும்பட்சத்தில், அந்த உதவித்தொகை மாணவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்தின் பட்டியலின் கீழ் இருக்கும் கல்வி நிலையங்களில், இளநிலை பட்டப் படிப்போ அல்லது முதுநிலை பட்டப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, முழு கல்விக் கட்டணத்தையும், அரசே ஏற்கும். பட்டியலில் அல்லாத கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.20,000 மட்டும் அளிக்கப்படும். விடுதியில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் (மாதம் ஆயிரம் ரூபாய் வீதம்) அளிக்கப்படும். விடுதியில் தங்கியிருந்து படிக்காமல், தினமும் கல்லூரிக்கு வந்து படித்துச் செல்லும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 வழங்கப்படும் (மாதம் ரூ.500).


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here