சம்பளம் உயர்த்தி கோரும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

0
58

‘பணி என்பது சம்பளத்தை மட்டுமே பிரதானமாக கொண்டதல்ல, அங்கே திருப்தியும் முக்கியம்‘ என்பது ஒரு பிரபலமான பொன்மொழி.
அதற்காக, வாழ்க்கைச் செலவினங்கள் கூடிக்கொண்டே போகும் இந்த நடைமுறை உலகில், வெறும் திருப்தியை மட்டுமே வைத்துக்கொண்டு வாழ்ந்துவிட முடியாது. தேவைக்கேற்ப சம்பளமும் அதிகரிக்க வேண்டும்.
சிலருக்கு தாங்கள் செய்யும் பணியில், தேவையான சம்பளம் கிடைத்துவிடும். ஆனால், சிலருக்கு தகுதிக்கேற்ற ஊதியம் கிடைக்காமல், அல்லாடும் சூழல் ஏற்படுகிறது. அவர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களில், தங்களின் ஊதியத்தை உயர்த்திக் கொள்வதற்கு முயற்சிக்கிறார்கள்.
ஊதிய உயர்வு பெற விரும்புவோர், தங்களுக்கான ஊதிய உயர்வை, எந்த முறைகளைக் கையாண்டால், விரும்பியதைப் பெறலாம் என்பது குறித்து சில ஆலோசனைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
சம்பள உயர்வின் பொருட்டு, அதுதொடர்பான நபரை அணுகும் முன்னதாக, அதற்கான சரியான சூழல் இருக்கிறதா என்று அறிந்துகொள்ள வேண்டும். அவர் ஏதேனும் மனநெருக்கடி அல்லது இக்கட்டான பணி பளுவில் இருக்கிறாரா? என்பதை உறுதிசெய்து கொண்ட பிறகுதான், நீங்கள், அவரை அணுகுவதைப் பற்றி முடிவெடுக்க வேண்டும். அவர், சரியான மனநிலையில் இருந்தால் மட்டுமே, நீங்கள் எதிர்பார்ப்பதை அடைவதற்கான சாதக சூழல் உருவாகும்.
மனித சமூக வாழ்க்கையில், ஒரு தவிர்க்க முடியாத அம்சமாய் திகழ்கிறது இந்தப் புகழ்ச்சி. நமக்கு சாதகமான ஒன்றை பெற வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட நபரை சந்தோஷப்படுத்துவது அவசியமாகிறது. அதேசமயம், தேவையான பணிவையும் வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் என்னதான் நிறுவனத்திற்காக கடுமையாக உழைத்தாலும், அதன் உரிமையாளர் மனது வைக்கும்போதுதான் அதற்கான பிரதிபலன் உங்களுக்கு கிடைக்கிறது.
பொதுவாக, விற்பனை செய்யும் வியாபாரியை எடுத்துக்கொண்டால், ஒரு பொருளை ரூ.80க்கு விற்பனை செய்ய வேண்டுமென நினைத்தால், அதை ரூ.100 முதல் ரூ.120 வரை விலை சொல்வார். வாங்குவோருடைய பேரத்தின் அடிப்படையில், அப்பொருள் ரூ.80 முதல் ரூ.110 வரை விற்கப்படும்.
அதுபோல்தான் இதுவும். நீங்கள் ரூ.3000 வரை சம்பள உயர்வு கேட்க வேண்டுமென நினைத்தால், ரூ.5000 முதல் ரூ.6000 வரை கேளுங்கள். அப்படிக் கேட்கும்போது, அந்த தொகை ரூ.3000 முதல் ரூ.4000 வரை வந்து நிற்கலாம்.
சம்பள உயர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரை சந்திக்க செல்கையில், நம்பிக்கை இருப்பது மிகவும் முக்கியம். உங்களுடைய பணித்திறன் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து உங்களுக்கு திருப்தி இருக்க வேண்டும். மேலும், நிறுவனத்திற்காக, சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறீர்கள் என்பது குறித்த நம்பிக்கையும் இருப்பது அவசியம்.
அப்போதுதான், நிறுவன செயல்பாடு மற்றும் நிறுவன வளர்ச்சியில் நீங்கள் ஆற்றிய மற்றும் ஆற்றிவரும் பங்கு குறித்து, தேவையான விஷயங்களை விளக்கி, உங்கள் மீதான அபிமானத்தை அதிகரித்து, நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்ள முடியும்.
ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவருடைய சம்பள உயர்வு என்பது, அந்த நிறுவனத்தில் அவரின் பங்களிப்பு என்ன? அவரால் அந்த நிறுவனத்திற்கு எந்தளவிற்கு நன்மை? அவர் எவ்வளவு தூரம் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுகிறார்? அவரின் திறமைகள் என்னென்ன? உள்ளிட்ட அம்சங்கள், அந்த நிறுவன உரிமையாளருக்கு தெரிந்திருக்க வேண்டியது முக்கியம்.
அப்படித் தெரிந்திருக்க வேண்டுமெனில், நிறுவன உரிமையாளருக்கும், உங்களுக்கும் நேரடி தொடர்பு இருக்க வேண்டும். குறைந்தபட்சம், தேவையான நேரத்திலேனும், அவரை சந்திக்கும் சலுகையைப் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், உங்களின் கோரிக்கை அவரிடம் முறையாக சென்றுசேரும். இல்லையேல், இடைத்தரகர்களின் மூலமாக செல்லும் உங்களின் கோரிக்கை சரியான முறையில் வெற்றியடையாது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here