வேலைக்கு உங்களை தயாராக்குங்கள்

0
53

வேலை வாய்ப்பு வேண்டுமா? அப்போ… இந்த காரணிகள் இருக்கிறதா என்று உங்களுக்கு நீங்களே சுயபரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளூங்கள். இவை இருந்தால் போதும்; வேலை உங்களுக்குத்தான்…!
நமக்கான பணி வாய்ப்புகளைத் தேடும்போது, நம்மிடம் சில முக்கியமான தகுதிகளை நிறுவனங்கள் எதிர்பார்க்கும். அத்தகுதிகளைப் பெற்றிருக்கும் ஒருவரே, தான் விரும்பிய பணியை, நல்ல சம்பளத்தில் பெறுவார்.
தகவல்தொடர்பு திறன்கள் : ஒருவர் தேவையான மொழிகளில், நல்ல அறிமுகத்தைப் பெற்றிருப்பதுடன், பணியைப் பெறுமளவிற்கு சிறப்பாக மொழியைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். திக்கித் திணறாமல், நல்ல வளமையோடு பேசுபவர், எளிதில் தனக்கான பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்.
வளவளவென்று இல்லாமல், சொல்வதை ரத்தின சுருக்கமாகவும், அமைதியான முறையிலும், சிறப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பேசும்போது, நம்மால் இயல்பாகவே, பிறர் கவரப்படுவார்கள். பேசுவதோடு மட்டுமின்றி, நல்ல எழுதும் திறனும், நமக்கான பணி வாய்ப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
தலைமைப் பண்பு: ஒருவருக்கு தன்முனைப்பும், பொறுப்பும் இருந்தால், அவரை இயல்பாகவே ஒரு நிறுவனத்திற்கு பிடித்துவிடும். இத்தகைய இயல்பு, அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. ஆனால், இந்த பண்புகள், பணி தேடும் ஒருவரிடம் கட்டாயம் எதிர்பார்க்கப்படுகின்றன.
எனவே, தலைமைத்துவப் பண்பைப் பெற்று, தன்முனைப்பும் இருக்கும் ஒருவர், தனக்கு பொருத்தமானப் பணியை எளிதாகப் பெறுவார்.
தன்னம்பிக்கை:
ஒருவர் தனக்கான வேலை வாய்ப்பை பெறுவதற்கு தன்னம்பிக்கை என்பது கட்டாயத் தேவையாகும். நேர்முகத் தேர்வில்கூட, ஒரு குறிப்பிட்டப் பொறுப்பை ஒப்படைத்தால் அதை சிறப்பாக தலைமையேற்று செய்து முடிப்பீர்களா? என்றெல்லாம் கேட்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அப்போது, உங்களின் பதில் எப்படி வருகிறது என்பது கருத்தூன்றி கவனிக்கப்படும். உங்கள் பதிலில் இருக்கும் நேர்மை, உறுதியான குரல் தொனி, தன்னம்பிக்கை வார்த்தைகள் இவைகளையே தனியார் நிறுவனங்கள் நேர்முகத்தேர்வில் அதிகபட்சம் வேலை தேடுனர்களிடம் எதிர்பார்க்கின்றன.
குழு உணர்வு: குழு உணர்வு என்பது ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதற்குரிய அடிப்படைத் தகுதியாகும். யாருமே, இந்த உலகில் தனித்து இயங்க முடியாது. ஒருவரையொருவர் சார்ந்தியங்குவதே இவ்வுலகின் தத்துவம்.
ஒரு வணிக நிறுவனத்திற்கும் அதுவே பிரதானம். இதன்பொருட்டு, உங்களின் குழு உணர்வு சோதித்தறியப்படும். சகிப்புத்தன்மை, பாராட்டும் மனப்பான்மை, அடுத்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை, காலம் தாழ்த்தாமை போன்ற விஷயங்கள் எல்லாம் குழு உணர்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்த காரணிகள் ஆகும்.
இலக்கு: ஒருவர் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் தேர்வாளர்களிடம் எதிர்பார்க்கும் முக்கிய பண்பு நலன்களில் ஒன்று இலக்கு.
எதிர்கால லட்சியம் என்ன? அந்த லட்சியத்தை அடைய என்னென்ன வழிகளை வகுத்து வைத்திருக்கிறார். அந்த லட்சியத்தை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? என்பதெல்லாம் கூட சில நிறுவனங்களில் விவாதிக்கப்படுகிறது. ஏனெனில் தன்னுடைய சொந்த இலக்கில் அவர்காட்டும் ஆர்வத்தில் சிறிதளவேணும், தான் சார்ந்த நிறுவனத்திற்கும் காட்டுவார் என்று நம்புவதாலேயே நேர்முகத்தேர்வில் இலக்கு சார்ந்த கேள்வி மிக பிரதானமாக அமைகிறது.
இலக்கு குறித்த கேள்வி கேட்கும்போது எனக்கு இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை; பணியில் சேர்ந்த பிறகுதான் திட்டமிட வேண்டும் என்று சொல்பவர் வேலை வாய்ப்பை பெறுவது அரிதினும் அரிதே…
படைப்புத்திறன்: படைப்பாக்கத் திறன் கொண்ட ஒருவரை, நிறுவனங்கள் எப்போதுமே விரும்புகின்றன. ஏனெனில், ஒரு நிறுவனத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை, வேறு எந்த முறையில் மாற்றியமைத்தால், செலவு குறைவாகவும், லாபம் அதிகமாகவும் இருக்கும் என்று ஒருவர் புத்தாக்க முறையில் தீர்வுகளை முன் வைக்கும்போது, அவர் இயல்பாகவே, நிறுவனங்களால், போட்டிப்போட்டு தேர்வு செய்துகொள்ளப்படுவார்.
கடின உழைப்பு : எந்தச் சூழ் நிலையிலும் கடின உழைப்பை மட்டும் சமரசம் செய்துகொள்ளவே செய்யாதீர்கள். திறமை, புத்திசாலித்தனம், குழு மேம்பாடு இவற்றையெல்லாம் கடந்து உங்களை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதே கடின உழைப்பு என்ற ஒன்றுதான்.
சோர்வில்லா கடின உழைப்பு என்பது தொழில் ஈடுபாட்டில்தான் இருக்கிறது. எந்த ஒரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்வதே கடின உழைப்பாகும்.
மேற்கண்ட தனித்தன்மைகள் உங்களிடம் இருப்பதாக நீங்கள் நினைத்தால், நெஞ்சை நிமிர்த்தி நடங்கள். ஒரு நிறுவனத்தை தலைமையேற்றுச் செல்ல அனைத்துக் குணாதிசயங்களும் ஒருங்கே பெற்றுள்ளீர்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள். அப்புறமன்ன உங்கள் திறமைக்கேற்ற நிறுவனத்தை தேர்வு செய்து, பணிவாய்ப்பை பெறுவதற்கான முயற்சியை இப்போதே முடுக்கிவிடுங்கள்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here