உதவித்தொகை அளிக்கும் தேசிய மாணவர் படை!

0
71

பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேசிய மாணவர் படையில் இருக்கும் மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைள் மட்டுமல்லாது, பாதுகாப்புத் துறையின் முப்படைகளில் ஏதேனும் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பையும் அளிக்கிறது மத்திய அரசின் பாதுகாப்புத் துறை.
தேசிய மாணவர் படை என்பது ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படை போன்ற முப்படைகளைச் சார்ந்த அடிப்படை விஷயங்களை பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக அளவில் பயிற்சி அளிக்கும் ஒரு தன்னார்வ அமைப்பு ஆகும். டில்லியை தலைமையிடமாகக் கொண்டு மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் இந்த அமைப்பானது, பள்ளி மற்றும் கல்லூரி பருவத்திலேயே மாணவர்களிடம் ஒழுக்கம், தலைமைத்துவம், சுயநலமற்ற சேவை, மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றை பல்வேறு பயிற்சிகளின் வாயிலாக மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது.
இந்தப் பயிற்சி நாட்டின் போர் போன்ற அவசர காலத்தில் மட்டுமல்லாது பேரிடர் சமயத்தில், பொதுமக்களுக்கு மாணவர் சேவையை பயன்படுத்துவது போன்ற அடிப்படை விஷயங்கள் தேசிய மாணவர் படையில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், படித்து முடித்தவுடன் ராணுவம், கப்பற்படை, விமானப்படையில் ஒரு தலைசிறந்த போர் வீரனாகவும் பணியமர்த்தவும் வாய்ப்பை அள்ளித் தருகிறது தேசிய மாணவர் படை.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்தபோது, கிட்டத்தட்ட முதல் உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம் அது. பிரிட்டிஷ் நாட்டுப் படைக்கு உதவி செய்வதற்காக இந்தியாவில் பல்கலைக்கழக அளவில் மாணவர்களை கொண்டு ஒரு படையை உருவாக்கினார்கள். யுனிவர்சிட்டி கார்ப்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்தப் படை 1917 ஆம் ஆண்டு, இந்தியா சார்பில் போரில் பங்கெடுத்துக்கொண்டது. அப்போது யுனிவர்சிட்டி கார்ப்ஸ் இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டது. 1920 ஆம் ஆண்டிற்குப் பிறகு, யுனிவர்சிட்டி கார்ப்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்த மாணவர் படையானது, யுனிவர்சிட்டி டிரெய்னிங் கார்ப்ஸ் என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்துது. இந்தப் படையின் முக்கிய நோக்கமே, நாட்டின் பாதுகாப்புப் பணிக்கு இளைஞர்களுக்க பயிற்சி அளிப்பதுதான். இந்தப் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, ராணுவ வீரர்கள் அணியும் சீருடைகளே வழங்கப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு, அதாவது 1948 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதிதான் நேஷனல் கேடட் கார்ப்ஸ் என்று அழைக்கப்படும் தேசிய மாணவர் படை உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தன்னலமற்ற இந்த சேவை அமைப்பில் முதலில் மாணவர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். 1949 ஆம் ஆண்டுதான் முதன் முதலில் மாணவிகள் இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். 1965 ஆம் ஆண்டு மற்றும் 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தோ – பாகிஸ்தான் போரில் என்.சி.சி. மாணவர்களின் பங்கு மகத்துவமானது.
பாதுகாப்புப் படையில் ஓர் போர் வீரருக்கான எல்லாப் பயிற்சிகளும் அளிக்கப்படும் தேசிய மாணவர் படையில் இருக்கும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சஹாரா உதவித்தொகை மற்றும என்.சி.சி. உதவித்தொகை என்ற இரண்டு விதமான உதவித்தொகைகள் அளிக்கப்படுகின்றன.
சஹாரா உதவித்தொகை:
ஆண்டுதோறும் என்.சி.சி. மாணவர்களுக்கு ரூ.ஒரு கோடி உதவித்தொகையை அளிக்கிறது இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தேசிய மாணவர் படை. இளநிலைப் பிரிவைச் சேர்ந்த 570 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகையும், மூத்தப் பிரிவு மாணவர்கள் 380 பேருக்கு ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகையும், தொழிற்கல்வி அல்லது உயர்கல்வி பயிலும் 67 மாணவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு மட்டும் ரூ.30 ஆயிரம் ரூபாயும் சஹாரா உதவித்தொகையின் கீழ் அளிக்கப்படுகின்றது.
இந்த உதவித்தொகையைப் பெற விரும்பும் இளநிலைப் பிரிவு மாணவர்கள் எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புகளில் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பில் ஏதேனும் ஓர் வகுப்பு படிக்கும்போது குறைந்தபட்சம் ஓர் ஆண்டு தேசிய மாணவர் படையில் இருந்திருக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், தேசிய மாணவர் படையில் மாணவர் 80 சதவீதம் வருகைப் பதிவு இருக்க வேண்டியது அவசியம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவு மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் சலுகை மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
மூத்தப் பிரிவு மாணவர்களாக இருக்கும்பட்சத்தில் பிளஸ் டூ வகுப்பு படித்திருக்க வேண்டும் அல்லது பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ., பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகைப் பெற தகுதியானவர்கள்தான். பிளஸ் ஒன் அல்லது பிளஸ் டூ வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் ஏதேனும் ஓர் ஆண்டு என்.சி.சி.யில் மாணவர்கள் இருந்திருக்க வேண்டும். என்.சி.சி. வகுப்பில் மாணவர்களின் வருகை 80 சதவீதம் இருக்க வேண்டும். பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பிரிவு மாணவர்களாக இருக்கும்பட்சத்தில் 65 சதவீத மதிப்பெண்களும், வணிகவியல் பிரிவு மாணவர்களாக இருக்கும்பட்சத்தில் 60 சதவீத மதிப்பெண்களும், கலைப் பிரிவு மாணவர்களாக இருக்கும்பட்சத்தில் 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டியது அவசியம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவு மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் 5 மதிப்பெண்கள் அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் 368 மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும்.
இந்த உதவித்தொகையை பெற விரும்பும் உயர்கல்வி அல்லது தொழிற்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் பொறியியல், மருத்துவம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், பேஷன் டிசைனிங், ஜர்னலிசம், எம்.பி.ஏ., உள்ளிட்ட ஏதேனும் ஒரு படிப்பில் படித்துக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் என்.சி.சி.யில் இருந்திருக்க வேண்டும். தேசிய மாணவர் படையில் 80 சதவீதம் வருகை புரிந்திருக்க வேண்டும். இத்தனை தகுதிகள் உடைய 67 மாணவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு மட்டும் ரூ. 30 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும்.
சஹாரா உதவித்உதவித்தொகையை தவிர்த்து, கிராமப்புறம் அல்லது கலவரம் பாதித்த பகுதியைச் சேர்ந்த 250 மாணவர் படை மாணவர்கள் ஆயிரம் பேருக்கு கல்வி உதவித்தொகை 6000 ரூபாயை தேசிய மாணவர் படை வழங்குகிறது.
உதவித்தொகையைத் தாண்டி, தேசிய மாணவர் படையில் பி அல்லது சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வில் மாநில அளவிலும் மத்திய அளவிலும் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாதெமியில் ஆண்டுதோறும் உள்ள காலிப் பணியிடங்களை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்தத் தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படும் என்.சி.சி. மாணவர்களுக்கு, அவர்கள் பெற்றுள்ள சான்றிதழ் அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கப்படும். இதேபோல சென்னையில் உள்ள ஓ.டி.ஏ. என்று அழைக்கப்படும் ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாதெமி, மகளிருக்கான குறைந்தகால ராணுவ÷ சவைப் பிரிவு போன்றவைகளில் என்.சி.சி. மாணவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
சி.ஆர்.பி.எஃப். போன்ற துணை ராணுவப்படையில் தேர்வில் என்.சி.சி. மாணவர்களுக்கு 2 மதிப்பெண்ணிலிருந்து 10 வரை போனஸ் மதிப்பெண்களாக அளிக்கப்படுகிறது. இதேபோல, தொலைத் தொடர்புத் துறையிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள தனியார் நிறுவனங்களில் என்.சி.சி.யில் சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
படிக்கும்போது உதவித்தொகைகள் மட்டுமல்லாது, படிப்பு முடிந்ததும் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகளில் என்.சி.சி. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் தேசிய மாணவர் படையில் பள்ளிகள் அளவில், கல்லூரி அளவில் பங்கு பெறாத மாணவர்கள் இனிமேலாவது பங்கேற்கலாமே!


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here