எப்படி கலெக்டராவது?

0
198
Businessman with superhero shadow. Ambition and business success vector concept. Leadership super hero in business, motivation leader superhero illustration

படிக்கிற காலத்திலேயே நான் படித்து முடித்த பிறகு மருத்துவராகப் போகிறேன்; நான் படித்து முடித்தப் பிறகு பொறியாளராகப் போகிறேன்; நான் படித்து முடித்தப் பிறகு வழக்கறிஞராகப் போகிறேன்; நான் படித்து முடித்த பிறகு மாவட்ட ஆட்சியராகப் போகிறேன் என்பது போன்ற ஏதோ ஒரு கனவில் நாம் தெளிவோடு இருக்க வேண்டும்.
நாம் நம் கனவில் தெளிவோடு இருக்கிற போதுதான் நாம் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை மிகத் தெளிவாகவும், மிக உறுதியாகவும், பலன் அளிக்கக் கூடியதாகவும் அமைத்துக்கொள்ள இயலும். எனவே படிக்கிற காலத்திலேயே நாம் ஒரு நோக்கத்தை உருவாக்கிக்கொள்ளுதல் வேண்டும்.
மிகக் குறிப்பாக உளவியல் பயிற்சியாக நாம் இதைச் செய்ய வேண்டும் எவ்வாறு என்றால் உங்களது நோட்டுப் புத்தகங்களிலும் பெயர் எழுத வாய்ப்பு இருக்கிற இடங்களிலேயும், மற்ற இடங்களில் எல்லாம் உங்கள் பெயரை எழுதி, படித்து முடித்து இருக்கின்ற படிப்பினையும், அதனால் உங்களுக்கு கிடக்க இருக்கிற பொறுப்பினையும் சேர்த்து எழுத வேண்டும்.
எவ்வாறென்றால் ஒரு மருத்துவராக வேண்டும் என் கிற கனவு பொன் எழிலன் என்ற மாணவருக்கு இருக்கிறது என்றால் அவர் தன் பெயரை எழுதுகிற போதெல்லாம் மருத்துவர் பொன் எழிலன் எம்.பி.பி.எஸ். என்று எழுத வேண்டும். அதுபோலவே பொறியாளர் பண்பரசன் பி.இ. என்று எழுத வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் எழில் முல்லை, ஐ.ஏ.எஸ். என்று எழுத வேண்டும். இவ்வாறு நாம் எழுதுகின்ற அந்த முறைதான் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தித் தருகிறது.
அவ்வாறு நமது கனவில் ஒரு தெளிவை ஏற்படுத்திக்கொண்டபிறகு அதற்கான பயணத்தை தொடங்க வேண்டும்.
அது எப்போது தெரியுமா?
பிளஸ் டூ முடித்த பிறகா? அல்லது இளநிலை பட்டப் படிப்பு முடித்தப் பிறகா? என்பதைக் குறித்தெல்லாம் சிந்தித்து குழம்பக் கூடாது. நாம் இன்றே படிக்க தொடங்கிவிட வேண்டும். இப்போதே தொடங்கிவிடவேண்டும். அப்படி தொடங்கிவிட்டால் வெற்றி நமக்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றுதான் அர்த்தம். ‘நான் மருத்துவராகிவிட வேண்டும்’ என்று நினைத்திருக்கின்ற ஒரு மாணவனாக இருந்தால், இன்றே மருத்துவம் தொடர்பான ஒரு நூலை இன்றே வாங்க வேண்டும். கடையில் விற்கின்ற ஒரு ஸ்டெதஸ்கோப்பை வாங்கி அதை கழுத்திலே மாட்டி ஒரு நிழற்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்பினால் நமக்கு அருகில் உள்ள நீதிமன்றங்களுக்கு சென்று வழக்கறிஞர் உடைகளை அணிந்து ஒரு நிழற்படம் எடுத்து நம் வீட்டிலே, அடிக்கடி நம் பார்வை படுகிற இடத்தில் அமைத்துக்கொள்ள வேண்டும்.
மாவட்ட ஆட்சித்தலைவராக வேண்டும் என்று நினைத்தால் பெயர்ப் பலகை ஒன்றை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். நான் ஓவியராக வேண்டும், திரைப்படக் கவிஞராக வேண்டும், நாட்டியத்தில் சிறந்தவராக வர வேண்டும் என்று எந்த கனவுகளாக இருந்தாலும் சரி அதில் இன்றே பயணிக்க தொடங்கிவிட வேண்டும். நம்மால் அடையக்கூடிய இலக்குகள் மட்டும்தான் நமக்கு கனவுகளாக வரும்.
நாம் நம்முடைய மனதால், உடலால் அடையக்கூடிய இலக்குகள் மட்டுமே நமக்கு கனவுகளாகவே வருகின்றன. மற்றவை வருவதில்லை. எடுத்துக்காட்டாக நீச்சலே பயிலாத ஒருவர், பாக்ஜலசந்தியை கடக்க வேண்டும் என்று கனவு வருவதில்லை. ஒருவேளை அப்படி ஒரு கனவு உங்களுக்கு வந்துவிட்டால் அந்தத் திறன் உங்கள் உடல் செல்களிலேயே பொருத்தியிருக்கிறது. அதை நீங்கள் வெளிக்கொண்டுவரவேண்டும் என்பது பொருள்.
எனவே எப்போது நீங்கள் மருத்துவராக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்கான தகுதி உங்களுக்குள் இருப்பதனால் தான் உங்களின் உள்ளம் நீங்கள் மருத்துவராக வேண்டும் என்று உங்களைத் தூண்டுகிறது. எவர் ஒருவர் ‘நான் பொறியாளராக வேண்டும்’ என்று நினைக்கிறார்களோ, பொறியாளராக வேண்டிய அனைத்து கூறுகளும் அவருக்குள் இருப்பதால் தான் அந்த எண்ணம் அவரைத் தூண்டுகிறது. எனவே எது உங்கள் கனவாக இருந்தாலும் சரி, அதை நோக்கிய ‘எனது பயணத்தை இந்த நிமிடமே, இந்த வினாடியே, இக்கணமே தொடங்கிவிட்டேன்’ என்று நீங்கள் நினைக்க வேண்டும். அதுவே உங்கள் வெற்றிக்கான முதல் படி.
‘பல நூறு மைல்கள் கொண்ட பயணத்தின் தொடக்கம் முதலில் எடுத்து வைக்கின்ற அந்த ஒற்றை அடியிலிருந்து தான்’ என்று முன்னோர்கள் சொல்லி வந்துள்ளார்கள். எனவே அந்த வெற்றிக்குண்டான அடியை நீங்கள் எடுத்து வைத்து விட்டீர்கள் வாழ்த்துகள்.
இப்படி நாம் பார்த்தால் ஐ.ஏ.எஸ். பயிற்சி என்பது அசாத்தியமான ஒன்றோ, எட்டிப்பிடிக்க முடியாத கனவோ அல்ல, நீங்களே நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு ஆண்டும் யு.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் பலர் தேர்வு எழுதுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டிலேயும் 700 முதல் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பொறுப்புகளுக்குச் செல்கிறார்கள். சிலர் ஐ.ஏ.எஸ். ஆக, சிலர் ஐ.பி.எஸ். ஆக சிலர் ஐ.எஃப்.எஸ். ஆக, சிலர் ஐ.ஆர்.எஸ். ஆக என்று அனைத்து பொறுப்புகளிலேயும் ஆண்டுதோறும் 700 முதல் 1000 பேர் தங்கள் கனவுகளை அடைந்து கொண்டிருக்கிற இலக்கை ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அந்த 700 பேரில் ஒருவராக நாம் அந்த இலக்கை அடைய இருக்கிறோம். இது கடினமா என்ன…?
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 500க்கும் 700க்கும், 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் செய்து கொண்டிருக்கிற ஒரு செய்தியை மிக இயல்பாக நாமும் செய்ய வேண்டும். நம் இலக்கு மிக எளிமையானது என இப்போது புரிய ஆரம்பிக்கிறது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இந்த உலகத்திலேயே அதுவரைக்கும் இல்லாத விமானத்தை ‘ரைட் சகோதரர்கள்’ கண்டுபிடித்தார்கள். அதுவரையிலேயே உலகத்திலே இல்லாத தொலைபேசியை ‘அலெக்சாண்டர் கிரகாம்பெல்’ கண்டுபிடித்தார். அதுவரையிலே உலகத்திலே இல்லாத வானொலியை ‘மார்கோனி’ கண்டுபிடித்தார். ஆனால், நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். காலியாக இருக்கிற ஒரு பொறுப்பிடத்திற்குரிய நாற்காலியில் சென்று அமர இருக்கிறீர்கள் சிந்துத்துப் பாருங்கள் எளிமைதானே?
இந்த உலகத்தில் இல்லாத ஒன்றையே கண்டுபிடிப்பதற்கு மனித மனத்திற்கு ஆற்றல் இருக்கிறபோது, இங்கே காலியாக இருக்கிற ஒரு பொறுப்பில் சென்று அமர்வதற்கான வழிகள் என்ன என்பதைதான் இங்கு பார்க்கப்போகிறோம்.
முதல் வழி: தமிழிலே ஒரு பழமொழி சொல்வார்கள், ‘ஒரு வேளை உண்பவன் யோகி, இருவேளை உண்பவன் போகி, மூன்று வேளை உண்பவன் ரோகி, அதற்கு மேலும் உண்பவன் துரோகி’ ஏனெனில் ‘துரோகி’ யானவன் மற்றவருடைய உணவை உண்ணுகிறான் என்று பொருள். எப்போதும் இரண்டு வேளை உண்பது தான் தமிழர் பண்பாடாக இருந்தது. நமது தாத்தாவும், சித்தப்பாவும் இருந்த தலைமுறை வரையிலே அப்படித்தான் இருந்தார்கள். காலை உணவாக பழைய சோற்றையும், நீர் ஆகாரத்தையும், கூழையும், கஞ்சியையும் சாப்பிட்டு வந்தார்கள். இரவிலே நல்ல உணவைச் சாப்பிட்டு வந்தார்கள். இடைப்பட்ட நேரத்தில் இள நீரையோ, பழங்களையோ சாப்பிட்டு வந்தார்கள். ஆனால், இப்போது நமது மதிய உணவு எப்படி உள்ளது. கண்டதையும், அளவுக்கதிகமாக சாப்பிடுகிறோம். ஒரு அறிஞர் ஒருவர் கேட்பார், ‘உங்களுக்கு சக்தி குறைவாக உள்ளது என்றுதான் நீங்கள் மதிய உணவை நோக்கி பயணம் செய்கிறீர்கள். ஆனால் சாப்பிட்டு முடித்தவுடன் உங்களுக்கு எனர்ஜி கிடைத்திருக்க வேண்டும். விரைவாகச் செயல்படுகிற ஆற்றல் கிடைத்திருக்க வேண்டும், ஆனால் என்ன ஆகிறது. மதிய உணவுமுறை முடிந்ததும் உறங்கலாமா? என்ற எண்ணம் தோன்றுகிறது என்றால் உங்கள் மதிய உணவில் ஏதோ தவறு இருக்கிறது என்று பொருள்’ அதனால் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு நாம் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறோம், மதிய உணவை எடுத்துக்கொள்ளுங்கள், அது எளிதில் செரிக்கக்கூடிய உணவாக இருக்க வேண்டும். மிகக் குறைவான உணவாக இருக்கட்டும், வாய்ப்பு இருந்தால் அது பழமாகவோ, பழச்சாறாகவோ இருக்கட்டும். அப்படி எடுத்துக்கொள்ளும்போது சாப்பிட்டு முடித்த 10, 20 நிமிடத்தில் எளிதில் செரிமானம் ஆகி அது உடலுக்கு குளுக்கோஸ், டிரைக்கோஸாக மாறி, அது உங்கள் உடலில் அது புத்துணர்ச்சியைத் தரும். தொடர்ந்து இயங்க முடியும். படிக்க முடியும்.
எனவே படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சொல்லக்கூடிய முதல் விதி என்னவென்றால் பிற்பகலில் எடுக்கக்கூடிய உணவு, பழங்களாகவோ, பழச்சாறாகவோ எடுத்துக்கொள்ளுங்கள். வேலைக்குப் போகிற வரையிலாவது இதைப் பின்பற்றுங்கள்.
இரண்டாவது வழி: ஆசான் நாகூர் ரூமி கூறிவைத்த ஆல்பா தியானம். நமக்கெல்லாம் ஆறறிவு இருக்கிறது. ஐம்புலன்கள் இருக்கின்றன, மெய், வாய், மூக்கு, கண், செவி என்று ஐம்புலன் கள் இருக்கின்றன. இந்த ஐம்புலன் கள் வழியாகவும் ஏதோ ஒன்றைக் காட்சிப்படுத்திப் பார்க்கிறோம்.
அப்படி காட்சிப்படுத்திப் பார்க்கின்ற ஒன்றினை, நமக்கு இருக்கின்ற உறுதியினால் நாம் அடைந்துவிடுகிறோம். ஒரு கார் வாங்கவேண்டும் என்று விருப்பப்பட்டால் அது எந்த வண்ணத்தில் வாங்க வேண்டும் என்பது நம் கண்களுக்குத் தெரிய வேண்டும். அதில் செல்கின்ற நமக்கு விருப்பமான பாடல்களை காதுகளில் ஒலித்துக் கொண்டே போவது, அந்த கார், அந்த நறுமணம் உங்கள் மூக்கின் வழியாக இப்போதே உணரப்பட வேண்டும். அந்த காரில் செல்கின்றபோது உங்களுக்குப் பிடித்தமான நொறுக்குத்தீனி ஏதோ ஒன்றை நீங்கள் அதை உண்ணாமலேயே உங்கள் நாக்கு அதன் சுவையை உணர வேண்டும். நீங்கள் அந்த இருக்கையிலே உட்கார்ந்துள்ள நிலையினை அந்தத் தொடு உணர்ச்சியை இப்பொழுதே நீங்கள் உணர வேண்டும். இவ்வாறு ஐம்புலன்களின் வழியாகவும் நீங்கள் வாங்க இருக்கின்ற காரைப் பார்த்து விட்டீர்கள் என்றால் அந்த காரை வாங்கி விட்டீர்கள்… அந்த கார் உங்களை வந்து சேர்ந்துவிடும் என்பதுதான் ஆல்பா தியானத்தின் முதல் அடிப்படை. கார் வாங்குவதைப்போலத்தான் நீங்கள் அரசுப் பணிக்குச் செல்வதும், மாவட்ட ஆட்சியர் ஆவதும், பொறியாளர் ஆவதும், வழக்கறிஞர் ஆவதும், ஆசிரியர் ஆவதும், வங்கி அதிகாரி ஆவதும் எல்லாம் அப்படித்தான்.
நீங்கள் பணி செய்யப்போகும் அலுவலகத்தில் உள்ள அந்த மேசை தெரிகிறது. நீங்கள் அந்த கணினியைப் பயன்படுத்துகின்றபோது ஏற்படும் தொடு உணர்ச்சி தெரிகின்றது. இடைவெளியில் நீங்கள் சாப்பிடுகின்ற தேனீரின் சுவையை நீங்கள் உங்கள் நாவினால் உணர முடிகிறது. அங்கு இருக்கின்ற சில மனிதர்கள் உங்கள் கண்ணுக்கு தெரிகிறார்கள். அவர்களின் பேச்சு ஒலி உங்கள் செவிகளிலே கேட்கிறது. அந்த அறையிலே உள்ள நறுமணம் உங்கள் மூக்கால் இப்போதே உணரப்படுகிறது என்று வந்துவிட்டால் நீங்கள் அதை அடைந்துவிடுவீர்கள் என்று சொல்வதுதான் ஆல்பா தியானம்.
இந்த தியானத்தின் அடுத்த அடிப்படை நன்றியுணர்வு. இந்த நன்றியுணர்வு என்பது பெற்றோர்களுக்கு, உறவினர்களுக்கு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, கல்லூரி ஆசிரியர்களுக்கு, நம்முடன் பயின்றுக் கொண்டிருக்கிற மாணவ நண்பர்களுக்கு, நம்முடைய விடைத் தாள்களை திருத்தும் பேராசிரியர்களுக்கு நாம் உட்கார்ந்திருக்கிற நாற்காலியைத் தயாரித்த நண்பர்களுக்கு, நாம் அணிந்து இருக்கின்ற ஆடைகளுக்கு, நாம் சுவாசிக்கும் காற்றுக்கு என்று எதெற்கெல்லாம் நன்றி தெரிவிக்க முடியுமோ, அதற்கெல்லாம் நன்றி சொல்லி முடிப்பது என்பது ஆல்பா தியானத்தை முழுமை அடையச் செய்யும்.
மூன்றாவது வழி: ‘கற்றலில் கேட்டல் நன்று’ என்று சொல்வது. எவற்றையெல்லாம் நாம் தொடர்ந்து செவி வழியாகக் கேட்கிறோமோ அவையெல்லாம் நமது காதுகளில் சென்று மூளையில் சென்று ஒலிப்பதிவாகி விடுகின்றன. அப்படித்தான் பல்வேறு திரைப்படப் பாடல்களையும், நமக்குத் தெரிந்த திருக்குறள்களையும் நாம் சொல்லி வருகிறோம். ‘கற்க கசடற’ என்று நாம் சொன்னால் உடனே சொல்லிவிடுகிறோம். வகுப்பிலே மனப்பாடப் பகுதியிலேயே நாம் கேட்டு இருக்கின்றோம். தொலைக்காட்சிகளிலே அதே குறளைக் கேட்கின்றோம். மீண்டும் மீண்டும் நாம் அதைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதால் நமது மூளையிலே சென்று நிரந்தரமாகப் பதிவாகி விடுகிறது.
அதுபோலவே ‘கற்றலில் கேட்டல் நன்று’ என்னவென்றால் ஒலிப்பதிவு செய்து கேட்பது,
இப்போதிருக்கும் காலகட்டத்தில் ஒலிப்பதிவு செய்வது என்பது மிக எளிதான ஒன்றுதான். நமது செல்ஃபோனில் நமது குரலிலேயே ஒலிப்பதிவு செய்து பாடத்திட்டத்திற்குரிய செய்திகளை நாம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
அது குடியரசுத் தலைவர்களின் பட்டியலாக இருக்கலாம், பிரதமர் பட்டியலாக இருக்கலாம், அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருக்கலாம், சிறப்புக்குரிய ஆண்டுகளாக இருக்கலாம், ஒலிம்பிக் நடந்த ஆண்டுகளாக இருக்கலாம், வேறு எந்த முக்கியச் செய்திகளாகவும் இருக்கலாம். மனப்பாடப் பகுதிகளாக இருக்கலாம். இவற்றை எல்லாம் நம் குரலிலேயே பதிவு செய்து மீண்டும் மீண்டும் நாம் கேட்டுக்கொண்டே இருந்தால், விரல் முனையில் மட்டுமல்ல, செவி முனைகளிலும் கூட நாம் விடைகளை வைத்திருக்க முடியும்!
நான்காவது வழி: ஓடிவிளையாடு பாப்பா என்றார் பாரதியார். விளையாட்டு என்பது படிக்கும் மாணவர்களுக்கு மிக அவசியமாகத் தேவைப்படுகிறது. இப்போது இருக்கிற தலைமுறையினர் விளையாடுகிறார்களா? எங்கே விளையாடுகிறார்கள்? கணினியில் விளையாடுகிறார்கள், செல்ஃபோனில் விளையாடுகிறார்கள், ஆன்லைனில் விளையாடுகிறார்கள். அதன் மூலமாக உடம்பில் ஏதேனும் கலோரிகள் செலவிடப்படுகின்றனவா? உடலில் ஏதேனும் கட்டுமானம் நிகழ்கிறதா? வியர்வைத் துவாரங்கள் திறக்கப்பட்டு கழிவுகள் வெளியேற்றப்படுகின்றனவா? என்று பார்த்தால் வெளியேற்றப்படுவதே இல்லை. ஆதலால் ‘விளையாடுங்கள்’ என்ற செய்தியை மாணவர்களுக்கு முக்கியமான செய்தியாக வலியுறுத்துகிறோம்.
நீங்கள் நன்றாக விளையாடும்போது, ‘வியர்வைத்துவாரங்கள் திறக்கப்படும். நோய்த் துவாரங்கள் மூடப்படும்’. நீங்கள் நன்றாகத் தூங்குகின்ற போதுதான் உங்களின் நினைவாற்றல் கூடுகிறது. நினைவாற்றல் பெருகும்போது தான் உங்களுக்குப் புதிய செய்திகளை ஏற்கின்ற பக்குவம் வருகிறது.
நமது மூளையும், கணினியும் ஒன்றுதான். நமது மூளையை வைத்துதான் கணினி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆதலால் நீங்கள் குறைந்தது 6.5 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரம் வரை உறங்கினால்தான் நீங்கள் படித்திருக்கிற பாடப்பகுதிகளை நமது மூளை பகுத்து பிரித்து எடுத்து வைத்து கொள்கிறது. இவையெல்லாம் இயற்பியல், இவையெல்லாம் வேதியியல், இவையெல்லாம் கணக்கு, இவையெல்லாம் வரலாறு, இவையெல்லாம் பொருளாதாரம், இவையெல்லாம் பொறியியல் என்று மூளை தனக்குத்தானே பிரித்து முறையாக அந்தந்த கோப்புகளை நியூரான் செல்களுக்கிடையே மிகச்சிறப்பாக அடுக்கி வைக்கிறது. தேவைப்படும்போது நம்மால் எடுக்கவும் முடிகிறது.
‘நல்ல தூக்கத்தினால் தான் மட்டும் தான் நினைவாற்றலுடன் இயங்க முடிகிறது’ அதுபோலவே நாம் அரட்டை அடித்தது, திரைப்படம் பற்றி பேசியது எல்லாம் தேவையில்லை என்று குப்பைத் தொட்டிக்கு அனுப்பி விடுகிற வேலையையும் மூளை செய்துவிடுகிறது. அதனால் நல்ல தூக்கமிருந்தால் தான் நாம் நன்றாகப் படிக்க முடியும்.
எனவே இந்த நான்கு வழிகளை பின்பற்ற ஆரம்பித்தால், நாம் குறித்த இலக்கை எளிதாக சென்றடையலாம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here