உன்னை நீ நேசி !

0
64

நம்மில் பலருக்கு முதலில் தன்னைப் பற்றிய தெளிந்த சிந்தனை ஒரு போதும் இருப்பதில்லை. அடுத்தவர் ஒருவழியில் வெற்றி கண்டுவிட்டால் அவனுக்கு அதிர்ஷ்டம், அவனுக்கு எங்கோ சிறந்த மச்சம் உண்டு, குருதிசை உச்சத்தில் நடக்கிறது, அவர்கள் செல்லும் பாதை வெற்றியின் பாதை அஃது எல்லோருக்கும் வாராது. என்றெல்லாம் மற்றவரைப் பற்றி கற்பனை செய்துகொண்டு தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு தானும் வளராமல் அடுத்தவனுடைய வளர்ச்சியினையும் பாராட்டாமல், குறைந்தது அவனுடைய வழியையாவது பின்பற்ற முயற்சி செய்யாமல், அவனிடம் அதைப்பற்றி விவாதிக்க வெட்கப்பட்டு, அவமானத்திற்கு பயந்து, அவனுக்கு எதிராக தனது ஆற்றாமையினால் வரும் துர்தேவதைகளை அவனுக்குத் தீமை விளைவிக்கும் அம்புகளாக செலுத்துவதே மனிதனின் இயல்பாக உள்ளது. இது ஒவ்வொரு தனிமனிதனிடத்திலும் உண்டு. ஏன் மனிதனாகப் பிறந்த அனைவரிடத்திலும் இது இல்லை என்று சொல்வதற்கில்லை. பொறாமையும் ஆற்றாமையும் இல்லாதவன் மனிதனில்லை. அவை இல்லையென்றால் அவன் மனிதனில்லை மனிதனிலிருந்து அது உயர்ந்த ஆன்மா இது உறுதி !.
”ஆகா இந்த அளவுக்கு என் குழந்தையில்லையே என்றும், அய்யோ சாகும்போது இவ்வளவு கூட்டம் கூடுகிறதே என்று பாடையேறி செல்லும் சடத்திடம் வரை என உயர்திணை அஃறிணை என எல்லாவற்றின்மீதும் உங்கள் பின்வீட்டுப் பிள்ளையிடத்திலிருந்து அடுத்தவீட்டுப் பிணத்திடம்கூட பொறாமை ஏற்படும். ஏற்படும்தான் ஏற்பட்டே ஆகவேண்டும் ஏற்பட்டால்தான் மனிதன் ஏற்படுவது இயற்கை. இதோடு மனிதர்கள் அந்தப் பொறாமைச் சுழலுக்குள் மாட்டிக் கொண்டால் அது அவர்களின் முன்னேற்றத்திற்கு முதல் தடை.
உண்மையில் பொறாமை மனிதனுக்குக் கிடைத்த வரம்.

வெற்றி பெற துடிக்கும் மனிதர்களே ! வெற்றி பெற்ற ஒவ்வொரு மனிதனும் நினைப்பது இதுதான்.
எப்படி என்கிறீர்களா?

உண்மையில் ஆரோக்கியமான பொறாமை நம்மை வளர்க்கும். நம் பிள்ளையை உயர்த்துவதும் அந்தப் பொறாமைதான் தாழ்த்துவதும் அந்தப் பொறாமைதான். நம்மை வெற்றுப் பிணமாக்குவதும் அதுதான் வெறிகொண்டு உயர்த்துவதும் அதுதான். முன்னேற்றத்திற்காக நம்மில் நாமே நமக்கு அந்தத் தீயை அளவோடு வளர்க்கவும், நாம் வளர்ந்த பின் அதை நாம் அனைக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இதைத்தான் வள்ளுவர் ”உள்வேர்ப்பர் ஒள்ளி அவர்” என்றார். தீ நம்முடன் இருக்க வேண்டும் எதிராளியை எரிக்கக் கொண்டு சென்றால் அது நீங்கள் முன்னேற முயற்சி செய்யவில்லை அடுத்தவன் வெற்றியை அழிக்க முனைகிறீர்கள். அப்படி சென்றால் அதில் நாமே எரிந்து சாம்பலாகிவிடுவோம்.

முதலில் அடுத்தவனைப்பற்றிச் சிந்தித்து நேரத்தினை வீணே கழிப்பதை விட்டுவிட்டு உங்களை ஓர் சுய தரிசனம் செய்துகொள்ளுங்கள். சுயதரிசனம் என்பது. அமைதியாக ஓர் அறையில் அமர்ந்து தியானம் செய்யுங்கள் ! திசை நோக்கி புண்ணிய தலத்தில் உறங்குங்கள் ! தீர்த்தத்தில் நீராடுங்கள் என்று சொல்லுவதில்லை. எங்குச் சென்றால் உங்களுக்கு மன அமைதி கிடைக்குமோ அங்கே அமைதியாக அமர்ந்து கடந்து வந்த பாதை, வீழ்ந்த காலம் அதிலிருந்து வெற்றி பெற்ற அனுபவம், தற்போது நீங்கள் செல்லும் பாதையின் பலம், பலவீனம் அதை நீங்கள் பெற்ற அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அடுத்தவரிடம் ஆலோசனை பெறுங்கள் ! அறிவுரை பெறுங்கள் ! அனுபவ நிகழ்வுகளை தெரிந்துகொள்ளுங்கள் ! ஆனால், முடிவெடுப்பது நீங்களாகதான் இருக்க வேண்டும் !

முடிவென்பது ஒவ்வொரு தனிமனித அனுபவத்திலிருந்து அவனுக்காக அவனுக்குள் பிறக்க வேண்டும் அடுத்தவர் அனுபவத்திலிருந்து பிறந்தால் தொடங்குவதே தோல்விக்குத்தான். இதை நன்றாக உணருங்கள். அவர்கள் வாழ்ந்த காலம் வேறு நம்முடைய காலங்கள் வேறு, களங்கள் வேறு தொழில் நுட்ப வளர்ச்சி வேறு, மனித மனங்கள் வேறு வேறாகிப்போன காலம் இது. அனைவருடைய அனுபவமும் எல்லாக் காலத்திற்கும் ஒத்துவராது. வெற்றியோ தோல்வியோ அது உங்களுக்குத்தான் இதுதான் உண்மை.

இரண்டாம் தடை

மனிதர்கள் பலருக்கு அடுத்தவர்கள் தங்களைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்ற ஒரு மனநிலை தொடர்ந்து அவர்களை வளர விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கும் முதலில் அந்த மன நிலையை உடைத்தெறியுங்கள். நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சி எங்கே தோல்வி அடைந்துவிடுமோ அதனால் மற்றவர்கள் நம்மைக் குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ ? அதனால் நமக்கு அவமானம் என்றே நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் மிகவும் வருந்தத் தக்க விஷயம் என்னவென்றால் அடுத்தவர் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதோ ! நமக்கு கவுரம் தராமல் இருப்பதோ அல்ல. நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டு, நம்மை நாமே முழுமையாக கவுரவிக்கத் தவறி விடுவதுதான். இது போன்ற அச்சத்திற்குக் காரணம், ஒவ்வொரு மனிதனும் தன் திறமைகளை முற்றிலும் உணராதவனாகவே இருக்கிறான். அதனால் அவற்றை முழுவதுமாகப் பயன்படுத்தாதவனாகவே வாழ்கிறான். மனிதன் தன்னால் என்னவெல்லாம் முடியும், முடிவது எந்த அளவு முடியும் என்பதை அறியாதவனாகவே வாழ்ந்து சாகிறான். இந்தத் தாழ்வு மனப்பான்மை என்ற கொடுமை வேறு அவனை சில நேரங்களில் ஆட்டிப்படைக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் தன் திறமைகளை முற்றிலும் உணராதவனாகவே வாழ்கிறான். அதனால் அவற்றை முழுவதுமாகப் பயன்படுத்தாதவனாகவே வாழ்கிறான். நம்மால் என்னவெல்லாம் முடியும் என்பது முயன்று பார்க்காத வரை நமக்கு நம்மைப் பற்றி தெரிவதேயில்லை. முன் கூட்டியே முடியாது என்று தீர்மானித்து விட்டாலோ முயற்சி செய்யும் சிரமத்தையும் நாம் எடுக்துக்கொள்வதில்லை. இறைவன் நமக்கு எதுவும் தரவில்லை என்பதை என்னேரமும் மறக்காமல் குமுறும் நாம் அவன் தந்ததை எல்லாம் எந்த அளவுக்குப் பயன்படுத்தி இருக்கிறோம் எந்த அளவுக்கு அதன் மூலம் முன்னேற்றத்தினைச் சந்தித்தித்து இருக்கிறோம் என்பதை எல்லாம் சிந்தித்து உணர பெரும்பாலும் மறந்து விடுகிறோம்.

நண்பர்களே ! அடுத்தவர்களைப்பற்றி சிந்திப்பதை விடுங்கள் ! இரண்டாவதாக அடுத்தவர் நம்மைப்பற்றி என்ன சிந்திப்பார்கள் என்ற கவலையை விடுங்கள் ! முதலில் நீங்கள் உங்களைப் பற்றி சிந்தியுங்கள். உலகத்தின் உன்னதப் படைப்பான உங்களை நேசியுங்கள் ! இறைவன் நமக்களித்த நல்ல உடல் உறுப்புகளைப் பற்றி சிந்தியுங்கள் ! அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. நம்மில் நல்ல சிந்தனை உள்ளது நல்லதைத் தான் நினைக்கின்றோம் நாம் முன்னேற நினைக்கின்றோம். தன்னலம் கருதுகின்றோம் ! ஆனால் தனிநலம் கருதுவதில்லை. தன்னலத்திற்கும் தனி நலத்திற்கும் மயிரிழையில் வேறுபாடு உண்டு. நான் வாழ வேண்டும் என்பது தன்னலம். நான் மட்டும்தான் வாழ வேண்டும் தனி நலம். தன்னல வாதியாக இருங்கள் தவறில்லை. ஒவ்வொரு மனிதனின் தன்னலம் தான் நாட்டின் நலம்.

நம்மால் முடியாது என்று நினைத்தால் நம்மால் முடியவே முடியாது: குறைந்தது நம்மால் முடியும் என்று அடியெடுத்து வைத்தால் நம்மால் முடிவது எதுவரை என்பதாவது நம் முடிவுக்கு வரும் !


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here