படம் சொல்லும் பாடம்!

0
75

நீங்கள் கற்றுக்கொள்ள தயாராக இருந்தால் பார்க்கும் அத்தனையிலும் நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், பிரச்சினை என்னவென்றால் நாம் எப்போதும் கற்றுக்கொள்ள தயாராகவேயில்லை. கற்றுக்கொள்வதற்கான கட்டமைப்பு அமைத்துக்கொடுத்தாலும் நாம் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான் நம் சமுதாயத்தின் இப்போதுள்ள சாபக்கேடு.
சமீபத்தில் ஒரு திரைப்படம்… வசூலில் பெரிய சாதனை. பெரிய வரவேற்பு அந்த திரைப்படத்திற்கு இருந்தது.
உண்மைக் கதையை பின்புலமாக கொண்ட அந்த திரைப்படத்தில் வரும் வில்லன் பார்ப்பதற்கே மிகக்கொடூரமாக இருப்பார். திரைப்படம் வெளிவந்து பெரிய பரபரப்பு ஏற்படவே… உண்மையில் அந்த வில்லன் யார் என்பது செய்தித்தாளில் வெளிவந்திருந்தது. கொள்ளைக்கார கூட்டத்தில் தலைவராக வெளிவந்திருந்த அந்த மனிதரின் புகைப்படம் பார்ப்பதற்கு மிகவும் அப்பாவியாய், மெலிந்த தேகத்துடன் பரிதாபத்துடன் இருந்தார்.
இந்த அப்பாவி மனிதரா இத்தனை கொலைகளை செய்தார் என்று நமக்கே ஆச்சர்யமாய் இருக்கும். இன்னொரு திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. எவ்ளோ அடிச்சாலும் தாங்கணும். எவ்ளோ அடிச்சாலும் எவன் தாங்குறானோ, அவனாலதான் தலைவனா ஆக முடியும் என்று அந்த வசனம் வேடிக்கையாய் வந்து போகும்.
இரண்டுமே பார்ப்பதற்கு சாதாரண காட்சிகள்தான். ஆனால் இந்த இரண்டு காட்சிகளில் பொதிந்திருக்கும் படிப்பினையை மற்றும் நாம் கற்றுக்கொண்டுவிட்டால், நாம் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு தயாராகிவிட்டோம் என்றுதான் அர்த்தம்.
ஒரு தலைவனுக்குத் தேவை வலியை பொறுத்துக்கொள்வது. வலி என்பது சவால்கள். எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளவும், என்னப் பிரச்சினை வந்தாலும் அதை தாங்கும் வல்லமைப் படைத்தவன் மட்டுமே தலைவனாக முடியும்.
தலைவனாக மாறுவதற்கு பலசாலியாக, ஆஜானுபாகுவாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.
எண்ணத்தில் தெளிவு.
சென்று சேர வேண்டிய பாதையை சரியாக சென்று சேர வேண்டும் என்ற வலுவான ஒரே நோக்கம்.
இந்தப் பயணத்தில் எத்தனை இடர்பாடுகள், வலிகள் இருந்தாலும் அதையெல்லாம் தகர்த்தெறிவதற்கான மனோ பலம்
ஆகிய காரணிகளெல்லாம் எவர் ஒருவர் பெற்றிருக்கிறாரோ அவர்தான் தலைவராக வேண்டும்.
வரலாற்றில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய, சமுதாயத்தில் அதுவரை வகுத்து வைத்திருந்த கட்டுப்பாடுகளையெல்லாம் தன்னுடைய ஒற்றை கொள்கை மூலம் தகர்த்தெறுந்த தலைவர்களின் புகைப்படத்தை எல்லாம் உற்றுப் பாருங்கள். நான் சொன்ன விஷயங்கள் உங்களுக்கே புரியும். ஹிட்லர், மகாத்மா காந்தி, சேகுவேரா, மார்ட்டின் லூதர் கிங், சார்லி சாப்ளின் இவர்களையெல்லாம் பாருங்கள்.
சமுதாயத்தின் போக்கை தன்னுடைய செயல்பாட்டால் பெரும் மாற்றத்தை விளைவித்தவர்கள்.
ஒருவர் அகிம்சையால் சாதித்தார், ஒருவர் சர்வாதிகாரியாய் சாதித்தார், ஒருவர் நகைச்சுவையால் புரட்சியையே உண்டு செய்தார்… ஆனால் இன்றும் அவர்களையெல்லாம் மறக்காமல் இந்த உலகம் கொண்டாடிக்கொண்டேதான் இருக்கிறது. எத்தனை காலங்கள் உருண்டோடினாலும் வரலாற்றின் பக்கங்களில் மட்டும் இவர்கள் எந்தச் சூழ் நிலையிலும் மறந்துவிடவே செய்யாது.
இந்த சாதனைக்கெல்லாம் ஒரே காரணம். வலியைத் தாங்கும் ஒரே வல்லமை மட்டும்தான். இந்த சமூகம் எல்லாபுறங்களிலும் இருந்தும் கற்களை வீசிக்கொண்டேயிருக்கும். கற்களை தடுக்க வேண்டும். அதையும் மீறி மேலே விழும் கற்களையும், அது ஏற்படுத்தும் வலிகளையும் தாங்க வேண்டும், அதற்கிடையில் சமூகத்தில் நாம் விதைக்க நினைத்த விதையை சரியாக விதைக்க வேண்டும் என்ற அவர்கள் வைத்திருந்த மாறாத குறிக்கோள் ஒன்று மட்டும்தான், இன்று அவர்களைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.
இந்த சமுதாயத்தின் வருங்காலத் தூண்களான மாணவர்களாகிய நீங்களும், வரலாற்றில் இடம்பெற ஆசைப்படுங்கள். சமுதாயத்தில் வரையறுத்து வைத்திருக்கும் பாதையை மாற்றி, புதிய பாதையை உருவாக்குங்கள்.
அதற்கு நீங்கள் செய்யவேண்டிய பயிற்சி மனதை பலம் படைத்ததாய் மாற்றும் ஒன்று மட்டும்தான். பார்க்கும் ஒவ்வொரு விஷயத்தில் இருந்தும் கற்றுக்கொள்ள விரும்புங்கள்.
கணித மேதை ராமானுஜம் முதல் அணு ஆராய்ச்சி விஞ்ஞானி மறைந்த நம் மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் வரை பார்க்கும் ஒவ்வொரு விஷயத்தில் இருந்தும் கற்றுக்கொண்டவர்கள்தான். அதனால்தான் அவர்களை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
‘இந்த சின்ன விஷயம் நம்மை இவ்ளோ பெரிய இடத்துக்கு கொண்டு போகுமா’ என்று நீங்கள் எண்ணலாம். மிகப்பெரும் மலையை உடைக்க ஒரு சிறு உளி போதும். அதேபோலத்தான். வரலாற்றில் மிகப்பெரும் நபராக உருவாக நீங்கள் விரும்பினால், பார்க்கும் ஒவ்வொன்றிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புங்கள். விழிப்பாய் இருங்கள். கற்றுக்கொள்ளும் இடம் பள்ளியாகவும் இருக்கலாம், திரையரங்காகவும் இருக்கலாம். கற்றுக்கொள்ளும் இடம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், எல்லா இடங்களிலும் நீங்கள் மாணவராக மட்டும் இருங்கள் போதும். எப்போது எல்லா நேரத்திலும் உங்களுக்குள் இருக்கும் மாணவனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிடுவீர்கள் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
வரலாற்றின் பக்கங்கள் உங்களை சாதனையாளராக பதிவு செய்ய தயாராகிவிட்டது. நீங்கள்?


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here