குன்னக்குடி வைத்திய நாதன் பிறந்த தினம் – மார்ச் 2

0
32

ஒரு சொல் அல்லது ஒரு வார்த்தை அல்லது ஒரு சம்பவம் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புரட்டிவிடும். அதுவரை பயணித்த வாழ்க்கைப் பயணமானது வேறு திசையில் பயணிப்பதோடு மட்டுமல்லாமல் அந்தப் பயணம் வரலாற்றில் ஒரு அடையாளத்தினையும் ஏற்படுத்தி தந்துவிடும் என்பதுதான் வாழ்க்கையின் சூட்சுமமே!
ராமசாமி சாஸ்திரிகருக்கு அப்போது வரைக்கும் தன் மகன் இசை சாம்ராஜ்யத்தில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்குவான் என்று அவர் நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை.
ராமசாமி சாஸ்திரிகள் குடும்பம் அடிப்படையிலேயே இசைக்குடும்பம்தான். ராமசாமி சாஸ்திரிகள் வாய்ப்பாட்டு, வயலின் இசையில் புலமை மிக்கவராக இருந்ததோடு, அந்தக் கலையை பலருக்கும் கற்றுக்கொடுக்கவும் செய்தார்.
ஒருமுறை இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார் ராமசாமி சாஸ்திரிகள். ஒப்புக்கொண்டது மாதிரி அந்த நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்த வயலின் வித்வான் வரவில்லை. மனச்சங்கடம் இருந்தாலும், வராமல் போனதற்கான காரணம் உடனடியாக அவரால் அறிந்துகொள்ள முடியவில்லை. இசை நிகழ்ச்சியை நிறைவு செய்த பின்னர், சம்பந்தப்பட்ட வயலின் கலைஞரை தொடர்புகொண்டு ஏன் வரவில்லை என்று கேட்கவே.. ‘‘ஏன் உங்கள் வீட்டு கடைசிப் பையனை வயலின் வித்வான் ஆக்கிவிட வேண்டியதுதானே!’’ என்றார் கிண்டலாக. அதையே சவாலாக எடுத்துக்கொண்ட ராமசாமி சாஸ்திரிகள் 8 வயதே ஆன மகனுக்கு வயலின் கற்றுத் கொடுக்க முடிவு செய்தார்.
ஏற்றுக்கொள்ளும் நிலையில் மாணவர் இருந்தால்தான் ஆசிரியரின் போதனையின் பலனை முழுவதுமாக மாணவரை சென்றடையும். 8 வயதே ஆன அந்தச் சிறுவனும் தன் தந்தையையே குருவாக ஏற்று, கற்றுக்கொடுக்கும் வித்தை அத்தனையையும் அப்படியே உள்வாங்கிக் கொண்டு வயலின் வாசிப்பதில் வல்லவன் ஆனான் அந்தச் சிறுவன்.
தன் தந்தை ஏற்படுத்தித் தந்த அந்த வழியில் பயணித்த அந்தச் சிறுவன், புகழ்பெற்ற இசைக்குழுவில் தொழில்முறை வயலின் இசைக்கலைஞராக முதன் முறையாக இசையமைத்தபோது அந்தச் சிறுவனுக்கு வயது 12.
வயலின் இசையால்… உலகத்தின் பார்வையை தன் பக்கம் ஈர்க்கவைத்த அந்தச் சிறுவன் தான் குன்னக்குடி வைத்திய நாதன்.
அதுவரை வயலின் என்பது கர்னாடக இசைக்கான கருவி என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருந்தது. ஆனால், அது மனிதர்களின் உணர்வுகளை தட்டியெழுப்புவதற்கான கருவி என்பதை தன் இசையால் நிரூபித்துக் காட்டியவர் குன்னக்குடி வைத்தியநாதன்.
பிறர் வகுத்து வைத்தப் பாதையில் பயணிக்காமல், தனக்கென தனி வழியை உருவாக்கி அதில் பயணிப்பவரே வரலாற்றில் இடம் பெருவார். அந்த வார்த்தைக்கு சரியான உதாரணம்தான் குன்னக்குடி வைத்தியநாதன். தன்னுடைய இசைப் பயணத்தில் 22 திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்திருக்கிறார்.
வழக்கமான திரையிசைப் பின்ணணிப் பாடகர்களைத் தவிர்த்து, பாமரர்களிடம் அதிகம் அறிமுகமாயிராத கர்நாடக இசை வித்தகரான மதுரை சோமசுந்தரம், பஜனைப் பாடல்கள் மூலம் மட்டுமே அறிமுகமாயிருந்த பித்துக்குளி முருகதாஸ், கம்பீரமான குரலுடைய பெங்களூர் ரமணி அம்மாள், மதுரை விஜயா ஆகியோரைத் தமிழ் நாட்டின் மூலை முடுக்குக்கெல்லாம் முதன் முதலாய் கொண்டு சேர்த்தவர் குன்னக்குடி வைத்தியநாதன் தான்.
‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்’என்ற பாடல் மூலம் சராசரி மனிதர்களின் மனதில் கூட பக்தி உணர்வுகளைத் தூண்டியவர். பக்தியை இசைமூலம் வெளியிடும் முயற்சியில் பெரும் வெற்றிகண்டவர் வைத்தியநாதன். இசையை அவர் இசையாக மட்டுமல்ல, மருந்தாகவும் மாற்ற பெரும் முயற்சி மேற்கொண்டார். ராக ஆராய்ச்சி மையம் எனும் அமைப்பை நிறுவி, இசையால் நோய்களை குணமாக்க முடியுமென்ற ஆய்விலும் அவர் ஈடுபட்டிருந்தார்.
தன்னுடைய பணியில் சிரத்தையுடன் இருக்கும் எவருக்கும் விருதுகளும் மரியாதையும் தானாகவே வந்து சேரும். அந்த வகையில் பத்மஸ்ரீ விருது, சங்கீத நாடக அகாடமி, சங்கீத மாமணி, கர்நாடக இசை ஞானி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்ற குன்னக்குடி வைத்திய நாதன், வயலின் இசைக் கலைஞர்களுக்கெல்லாம் ஒரு இசை முன்னுதாரணம்.
மார்ச் 2 – வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்த குன்னக்குடி வைத்திய நாதன் பிறந்த தினம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here