கே. பாலச்சந்தர் நினைவு தினம் – டிசம்பர் 23.

0
91

உங்களுடைய தனி அடையாளமே உங்களது தரமாக மாறும் என்பதை வாழ்க்கையில் புரிய வைத்தவர் இவர்.
ஒருவரை பார்த்த மாத்திரத்தில் அவருடைய திறமைகளை கணிக்கத்தெரிந்த தீர்க்கதரிசி அவர். நடிப்புக்கு இலக்கணமாக கமலஹாசனையும், ஸ்டைல் என்ற வார்த்தையை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தித் தந்த ரஜினிகாந்த் என்ற நடிகரையும் திரை உலகுக்கு அடையாளம் உருவாக்கித் தந்த சிற்பி இவர்.
நகைச்சுவை நடிகர் என்றாலே காட்சிகளின் ஊடே வந்துசெல்பவராகவும், மக்களை சந்தோஷப்படுத்த மட்டுமே காட்டிவந்தச் சூழலில் நாகேஷ் என்ற மிகப்பெரும் நகைச்சுவை நடிகரை கதையின் நாயகனாக மாற்றி, யாருமே எதிர்பார்த்திராத வகையில் அவருக்கு கணமான கதாபாத்திரத்தைக் கொடுத்து, அந்தப்படத்தை வெள்ளிவிழா படமாக்கிய திறமை மிக்கவர் இவர். இன்றும் திரைத்துறையில் ஜாம்பவான்களாக இருக்கும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் பெரும்பாலனவர்கள் இவரின் பயிற்சிப் பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்டவர்கள்தான்.
தன் துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட மாபெரும் படைப்பாளி இவர். திரைப்படத்தைப் பார்த்தால் அதில் வரும் தொழில் நுட்ப வல்லுனர்களையெல்லாம் விட்டுவிட்டு நடிகர்களை கொண்டாடிவந்த இந்தச் சமூகத்தில் ஒரு இயக்குனர் என்ற ஸ்தானத்தை கொண்டாட வைத்த சிகரம் இவர்.
ஆம்… இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். திரைப்பட இயக்கத்திற்கு தனிப்பாதை வகுத்து கொடுத்தவர். பிறர் வகுத்து வைத்த பாதையில் பயணிப்பவன் மனிதன். தனக்கென பாதையை தானே உருவாக்குபவன் மாமனிதன். இவர் இரண்டாவது வகையைச் சார்ந்தவர்.
நேர்மறையான விஷயங்கள் மட்டும்தான் வெள்ளித்திரையில் எடுபடும். சமூகத்தின் கண்மூடித்தனமான விஷயங்களை வெள்ளித்திரையில் கொண்டுவந்தால், பெரிய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்ற மிகப்பெரிய கட்டுப்பாட்டையெல்லாம் தகர்த்தெறிந்தவர் கே. பாலச்சந்தர்.
பெரும்பாலும் குடும்ப உறவுகளை பல கோணங்களில் ஆராய்ந்து, உணர்வு ரீதியான பிரச்சினைகளையும், அதில் பொதிந்து கிடக்கும் சிக்கல்களையும் வெள்ளித்திரையில் மிகச்சரியாக பிரதிபலித்ததோடு மட்டுமல்லாமல், அந்த சிக்கல்களுக்கான சரியான தீர்வையும் திரைப்படத்தில் முதல் முதலில் எந்தவித தயக்கமும் இல்லாமல் சொன்னவரும், அதில் மாபெரும் வெற்றிபெற்றதும் இவர் மட்டும்தான். தான் செய்யும் பணியில் நூறு சதவீத ஈடுபாடும், தன்னுடைய துறையில் தான் கொண்ட பக்தியும்தான் அவரை அந்தத் துறையில் தனி அடையாளப்படுத்திக் காட்டியது.
அவருடைய பல படங்கள் வெள்ளிவிழா கண்டிருந்தாலும், சில படங்கள் தோல்வியை தழுவாமலும் இல்லை. ஆனால், எந்த சூழ் நிலையிலும் பாலசந்தர் என்ற இயக்குனர் மீது மக்கள் கொண்ட மானசீக மரியாதை மட்டும் எந்த நிலையிலும் இறங்கவேயில்லை. விருதுகளை நாம் தேடிச் செல்லவேண்டியதில்லை. பலனை எதிர்பாராமல் உன்னுடைய பணியில் நூறு சதவீதம் கரைந்துபோனாலே போதும் விருதுகள் அனைத்தும் உன்னைத் தேடிவரும் என்பதற்கு வாழ்ந்த உதாரணம்தான் கே.பாலச்சந்தர். திரைத்துறையில் இவர் நிகழ்த்திய சாதனையை வீழ்த்த இன்னொருவர் இனி பிறக்கப்போவதில்லை என்பதுதான் இவர் பற்றிய பசுமையான நினைவு நமக்கு கற்றுத்தரும் பாடம்.
வாழ்க்கையை வாழ்வதற்கான அத்தனை சூட்சுமங்களையும் தன் திரைப்படத்தில் விதைத்துச் சென்ற இந்த மாபெரும் கலைஞனை என்றும் நினைவில் கொள்வோம்.
’நாளைய காலம் நம்மோடு, நிச்சயம் உண்டு போராடு’என்ற வரிகளை நாம் வாழ்வதற்கு விட்டுச்சென்ற கே. பாலச்சந்தர் அவர்களின் நினைவு தினம் – டிசம்பர் 23.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here