பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன?

0
32

சமீபத்தில் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரிய நண்பர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. நண்பர் என்னிடம் பேசுகையில் ”நண்பா என்னால் எந்த வேலையையும் சரிவர செய்ய இயலவில்லை. உனக்கு நன்றாகத் தெரிந்ததுதான் நான் தனியார் பள்ளியில்தான் பணிபுரிகிறேன் சம்பளம் குறைவுதான். எனக்குக் காலை மாலை என எல்லா நேரங்களில் பல ட்யூசன்கள் உள்ளன. திருமணமாகி குழந்தை உள்ளது. குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்றாலும் என்னால் மருத்துவமனைக்குக்கூட அழைத்துச்செல்ல நேரம் ஒதுக்க இயலவில்லை மனைவியின் சுகதுக்கங்களில் அவர்களுக்கான நேரத்தினையும் ஒதுக்கி செலவழிக்க இயலவில்லை. ஒரே மகன் என்பதால் பெற்றோரும் என்னுடந்தான் இருக்கின்றனர். அவர்களுக்கு பொழுதுபோக்க உறவினர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல அல்லது ஒரு நோய் என்றாலும் என்னால் மருத்துவ மனைக்குக்கூட உடன் செல்ல இயலவில்லை. அவரவர்களே அவர்கள் பணியினைச் செய்கின்றனர். என்னை எல்லோரும் எதிர்ப்பார்க்கின்றனர். அவர்கள் எல்லோரும் என்னையே சார்ந்து வாழ்கின்றனர். தனியார் பள்ளியின் ஊதியம் என் குடும்பத்தினருக்கான ஒரு மாத உணவுச்செல்வுக்குத்தான் சரியாக இருக்கும். ஒரு நோய்நொடி என்றாலும் என்னால் பிறர் கையேந்த வேண்டியுள்ளது. சரி ஒரு நாள் இரு நாள் நேரம் ஒதுக்கி இவர்களுடன் செலவழிக்கலாம் என்றாலோ இந்தக் கல்வியாண்டிற்கான ட்யூசன்களையும் என்னால் சரிவர செல்ல இயலவில்லை. எப்படி நண்பா இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பது ? பணிக்குச் சென்றாலும் அங்கும் இதே போராட்டம்தான் எல்லா ஆசிரியர்களும் நம்மிடம் ஒத்துப்போவதில்லை உட்கட்சி அரசியல் நடத்தும் ஆசிரியர்கள். நிலைமை தெரியாமல் விசாரிக்கும் நிர்வாகம் வேறு எல்லாக் கோபத்தையும் எங்கே மாணவர்களிடம் காட்டிவிடுவோனோ என்ற அச்சம் வேறு. வீட்டில் உள்ளவர்களும் என்னைச் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. அரசுப்பணி கிடைத்தால்தான் எனக்கு எல்லாச் சிக்கல்களும் தீருமா ? பெரும் மன அழுத்தத்தில் இருக்கிறேன்” என்று அவர் குமுறிய குமுறல்கள் ஏராளம் என்றாலும் அவருடைய பிரச்சினையின் அடிநாதம் என்ன என்பது என்மனதில் உதித்தது. முதலில் இறைவனிடம் நண்பனின் சிக்கல் தீர வழிவகை செய்யப்பா ! என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டேன். இது ஒரு சாதாரன சிக்கல்தான். ஆசிரியருக்கு இந்தமாதிரி என்றால். உங்களுக்கு ஒரு கோனத்தில் இருக்கும். பிரச்சினை என்ன தெரியுமா ?
கிராமத்தில் சொல்லும் ஓர் பழமொழிதான் “கூழுக்கும் மீசைக்கும் ஆசை” என்பதுதான். ”உண்மையில் ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்பதும் சரிதான்”
ஆனால் உண்மையில் நண்பர் ட்யூசனை இழக்கத் தயாராக இல்லை. ஏனெனில் அவரின் குடும்பப் பொருளாதாரம் அவற்றைச் சார்ந்தே உள்ளது. இவரால் எல்லாவற்றையும் சரிவர செய்ய இயலும். சென்னையில் இவர் வாழ்வதால் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் வேறு.
குடும்பச்சிக்கலின் தீர்வு
இதுபோன்ற மன அழுத்தங்களை உண்மையில் எளிதில் சமாளிக்க இயலும். ஒரே ஒருமணி நேரத்தில் இதன் உண்மைத் தன்மைகளைப் புரிந்து கொண்டு, வீட்டில் உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசிவிட்டால்தான் இந்தச் சிக்கல் தீரும். அதுவரை அவர்ளிடமும் உங்களைப்பற்றிய பார்வையும் அவர்களைப் பற்றி நீங்கள் நினைப்பதும் வானம் பார்த்த பூமியில் மழை பெய்யாமல் இருக்கும் போது ஏற்படும் விரிசல் போல் இரு வேறு எண்ணங்களும் நில வெடிப்புகள் போல் விரிந்துகொண்டே போகும். ஒருமணி நேரப் பேச்சு ஒராயிரம் சிக்கல்களைத் தீர்த்துவிடும் நண்பர்களே ! உண்மையில் நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு உழைக்கிறீர்கள் அந்த உண்மையைக் கூட நீங்கள்தான் உங்கள் குடும்பத்திற்கு உணர்த்த வேண்டிய சூழலில் உள்ளீர்கள். காரணம் உங்களிடம் இருவேறுபட்ட துருவங்களும் எதிர்ப்பார்க்கின்றன. மனைவி ஒருபுறம் எனில் பெற்றோர் ஒருபுறம். இருவருக்கும் தங்களின் பணிகளின் அட்டவனை, ட்யூசன் செல்லும் அந்த வீட்டின் முகவரி மற்றும் தொலைபேசி (உங்கள் தொலைபேசி எண் பழுது அடைந்துவிட்டால் தொடர்பு கொள்வதற்கு) போன்றவற்றைத் தெளிவாக விளக்கி விட முடியும். முதலில் குடும்பச்சிக்கலை இவ்வறுதான் புரியவைத்து தீர்க்க வேண்டும். நீங்கள் வரமுடியாத சூழ்நிலைகளில் உடனடியாகச் செல்ல வேண்டிய இடமாக இருந்தால் அதற்கான ஒரு மாற்றுநர் ஒருவரை அதாவது அவசர சூழலில் அருகில் இருக்கும் ஆட்டோக்காரர் அவரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து விடவேண்டும்.
இது அவருக்கான தீர்வு என்றால் உங்களுக்கானது ஒன்றுதான் நீங்கள் செய்யும் வேலையின் தன்மை நேர அட்டவனை அங்கே நடக்கும் சிக்கல்களின் தன்மை தாமதத்திற்கான காரணம் இது எனத் தெளிவாக விளக்கும் உண்மைத் தன்மையில்தான் குடும்பச்சிக்கல் தீர வழியுள்ளது.
பணிச்சூழலின் தீர்வு
பணியிடத்திலும் நீங்கள் செய்யும் கூடுதல் பணியிலும் எடுக்க வேண்டிய முறைகள்.
திட்டமிடுங்கள். திட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் தெரியுமா ?
அட்டவனை – நீங்கள் செய்யும் வேலைகள், கூடுதல் வேலைகள், உணவுக்கான நேரம், ஓய்வுக்கான நேரம், குடும்பச்செயல்பாடுகள், சமூகச் செயல்பாடுகள், தனிப்பட்ட பொழுதுபோக்குகள், மற்றும் அன்றாட பொறுப்புகளிடையே ஒரு சமனிலைத் தழுவிய அட்டவனையாக அது இருக்க வேண்டும் இதுதான் நம்மால் முடியும் இவற்றைச் சரிவரச் செய்தால் போதும் என்பவற்றைச் சரியாகத் திட்டமிடல் வேண்ட்டும்.
அளவுக்கு அதிகமாகப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது
ஒரு நாளுக்கும் மிக அதிகமான வேலையை ஏற்றுக் கொள்ளக்கூடாது அவற்றைத் தவிர்த்தல் வேண்டும். உங்களிடம் அளவுக்கு அதிகமான வேலைகள் இருக்குமேயானால் செய்ய வேண்டிய எவற்றையும் முழுமையாகச் செய்ய முடியாது. கட்டாயமானவற்றுக்கு மட்டும் முதலிடம் கொடுத்துச் செய்தால் போதுமானது. அதிகப்படியான வேலைகளினால் பணம் வரும் கூடவே நோய்வரும். முடியாத வேலைகளை விட்டுவிடுங்கள் அதனால் வரும் இன்பத்தினைவிட துன்பமே அதிகம். அடுத்தவர் உழைப்பைப்பார்த்து நாமும் அவ்வாறே செய்ய வேண்டும் எனக் கருதி அது அவரின் அதிஷ்டம், இது என்னுடைய துரதிஷ்டம், என்னால் முடியாது போன்ற வார்த்தைகளை தனது வாழ்க்கையில் அடிமட்டத்திலேயே தூக்கி எறிய வேண்டும். நமக்கு எது கிடைக்க வேண்டும் என்பது விதிக்கப்பட்டிருக்கிறதோ அது கட்டாயம் கிடைக்கும் நண்பர்களே அப்போதுதான் வெற்றி வரும். பொய்யான எதற்குள்ளும் நுழையக் கூடாது. எதிலும் நிஜம் இருக்கட்டும். அனாவசியமான ஆசைகளை ஒழித்துக் கொண்டு, அவசியமான ஆசைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். உங்கள் திறமையைத் தூண்டி விட மற்றவர்களால் முடியும். உன்னை வளர்த்துக்கொள்ள உன்னால்தான் முடியும். உண்மைக்காக எதையும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை இழந்துவிடக்கூடாது. குடும்பத்தில்தான் உண்மையான இன்பம் உண்டு நண்பர்களே உழைப்பதில் மகிழ்ச்சி வேண்டும்.
முடிந்த அளவும் உழைக்கத் தயங்கிக் கொண்டேயிருந்தால் தோல்வியைத் தழுவ நேரும். முயற்சி, பயிற்சி, உழைப்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை, இவ்வைந்தும் வெற்றியின் ரகசியங்கள். எதில் ஈடுபட்டாலும் மனஉறுதியோடு ஈடுபட வேண்டும். விட்டுக் கொடுத்தால் மன நிம்மதியோடு விட்டுக் கொடுக்க வேண்டும்.
”உண்மையில் உங்கள் பிரச்சினைகளை விட நீங்கள் வலிமைமிக்கவர்கள்”


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here