உள்ளங்கைக்குள் வேலை!

0
144

கடந்த வாரம் எகனாமிக்ஸ் டைம்ஸ் இதழை படித்துக்கொண்டிருந்தேன். செய்திகளை படித்துக்கொண்டிருக்கும்போது பக்கத்தில் ஒரு விளம்பரம். அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட வாசகம் இதுதான். 15 மாத பயிற்சி. பகுதி நேர வகுப்பு, பயிற்சிக் கட்டணம் வெறும் 30 லட்சம் மட்டுமே என்ற வாசகம் போடப்பட்டிருந்தது. எனக்கு திக்கென்று இருந்தது. 30 லட்சம் கட்டணமா? கண்களை கசக்கிக்கொண்டு மீண்டும் ஒரு தடவை அந்த விளம்பரத்தைப் பார்த்தேன். ஆம் 30 லட்சம்தான். என் கண்கள் பொய் சொல்லவில்லை. நம் ஊரில் எம்.பி.பி.எஸ். படிப்பதெல்லாம் விட அதிகக் கட்டணம். அப்படி என்ன புதிதாக கற்றுத் தருகிறார்கள் இந்தப் பயிற்சி மையத்தில் என்று என் நண்பர் ஒருவரிடம் விசாரித்தேன்.
இதுல சீட் கிடைக்கிறதே கஷ்டம். ஒவ்வொருத்தரும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துக்கறதுக்கு, வருஷ கணக்குல காத்துக்கிடக்கிறான். அதுமட்டுமல்லாம, விளம்பரம் கொடுக்கறதே ஒரு கண் துடைப்புத்தான். விளம்பரம் வெளிவர்றதுக்கு முன்னாடியே மொத்த ஆட்களும் சேர்ந்துடுவாங்கன்னார்.
அப்படி என்ன வகுப்பு இது என்று கேட்டேன். பெரிய பெரிய நிறுவனங்களில் சி.இ.ஓ. களுக்கான வகுப்பு இது. ஒவ்வொரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் சி.இ.ஓ.வின் பங்கு மிக முக்கியமானது. ஆக, இவர்களுக்கு வர்த்தக ரீதியாகவும், சந்தை நிலவரம் குறித்தும் முறையாக பயிற்சி அளித்தாலே நிறுவனத்தின் வளர்ச்சி உச்சம் பெற்றுவிடும். அதற்காகவே இந்த வகுப்பு. ஒவ்வொரு நிறுவனமும், தங்கள் வியாபாரத்தை பெருக்க நினைக்குமே தவிர சுருக்க நினைப்பதில்லை. இந்த வகுப்பில் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை எப்படி பெருக்கிக்கொள்வது, வாடிக்கையாளர்களை எப்படி இன்னும் நம் கைவசம் வைத்துக்கொள்வது போன்ற பல்வேறு ரகசியங்கள் கற்றுத்தரப்படும். அவர்கள் சொல்லித்தரும் சூட்சுமங்கள் பற்றி நடந்துகொண்டால், கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும்.
ஆத்தாடி… அப்போ, அந்தளவுக்கு பயிற்சி அளிக்கணும்னா, கத்துக்கொடுக்கறவங்க, வெளிநாட்டு நிறுவனங்களில் உள்ள பெரிய பெரிய சி.இ.ஓ.வாக இருப்பாங்களோன்னு கேட்டேன்.
இல்லை. எல்லாமே நம்ம ஊரு ஆட்கள்தான். இவங்க சொல்லப்போனா, பெரிய பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவங்கள் கூட சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. உலகளவில் வெளியாகும் வியாபார தந்திரங்கள் குறித்த புத்தகங்கள், தன்னம்பிக்கை புத்தகங்கள் இப்படி பல்வேறு வகையிலான புத்தகங்களை கரைத்து குடித்திருப்பார்கள். அதை தற்போதுள்ள சூழ்நிலைக்கு எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பார்கள். இதைக் கற்றுக்கொடுப்பதற்கு, ஆங்கில அறிவு மட்டும் இருந்தால் போதும். பெரும் படிப்பு படித்திருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், கற்றுக்கொடுப்பவர்களுக்கு பெரும் ஊதியம் அளிக்கப்படுகிறது. மாதம் கோடியைத் தாண்டி சம்பளம் வாங்குகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்.
ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு புலப்பட்டது. பொறியியல், மருத்துவம், கலைப் படிப்பு என்று குறுகிய வட்டத்திற்குள்ளேயே நம் அடங்கிவிட்டோமோ என்ற எண்ணம் அப்போதுதான் எனக்குள் ஏற்பட்டது. நம்மைச் சுற்றி எவ்வளவு இருக்கிறது வாய்ப்புகள். எம்.டெக். புதிதாக முடித்து வெளிவரும் மாணவர்களுக்கு பெரு நகரங்களில் மாதம் பத்தாயிரத்திற்குள்தான் சம்பளம். எம்.பி.பி.எஸ். முடித்த பல மாணவர்கள் இன்று வேலைவாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பது ஒரு புறம். பி.ஏ. ஆங்கிலம் படித்துவிட்டு, ஆங்கில புலமை மட்டும் இருந்தால் போதும் மாதம் ஒரு லட்சம் ஊதியம் தரும் நிறுவனங்கள் நம்மிடையே ஏராளம். இது இன்னொருபுறம். சிறந்த மொழியறிவு உள்ளவர்கள் சம்பாதிக்கும் காலம் இது. இதில் தமிழும் விதிவிலக்கல்ல. தமிழ் மொழியில் கற்றுத் தேர்ந்து, சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரையிலும், தமிழை இலக்கணப் பிழையில்லாமல், சொற், பொருள் பிழை இல்லாமல் எழுதத் தெரிந்தவர்களுக்கும் இங்கு வேலைவாய்ப்புகள் அதிகம். சொல்லப்போனால், அத்தகைய மாணவர்கள் நம்மிடம் அருகிப்போய்விட்டார்கள். பொறியியல் மாணவர்கள் ஏராளம் கிடைப்பார்கள். ஆனால், மொழியியல் பாடம் படித்து திறமையான மாணவர்கள் தேடினாலும் கிடைப்பதில்லை. மறுபடியும் சொல்கிறேன். நம்மைச் சுற்றி வாய்ப்புகள் ஏராளம். இன்னும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டாம். பொறியியல் படிப்பும், மருத்துவமும், தொழில்நுட்பமும் மட்டும் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதில்லை. மொழியியல் படிப்பிலும், வரலாற்றுப் படிப்பிலும் புலமைப் பெற்றிருந்தால் போதும். வேலை உங்களை அழைத்துச் சென்றுவிடும். பாதையை மாற்றுங்கள், வித்தியாசமாக யோசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். தேடலை விஸ்தாரமாக்குங்கள். வேலை உங்கள் உள்ளங்கைக்குள்தான் அடைப்பட்டுக்கொண்டிருக்கிறது, கையை விரியுங்கள். வேலையை பற்றிக்கொள்ளுங்கள். தேடல் வாய்ப்பைத் தரும். வாழ்த்துகள்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here