இந்திய கப்பற்படையில் இலவச பி.டெக். படிப்பு

0
164

கேரள மாநிலம் எழிமலா பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் நேவி அகாதெமியில் முற்றிலும் இலவசமாக பி.டெக். படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் போன்ற ஏதேனும் ஒரு படிப்பில் முற்றிலும் இலவசமாக பி.டெக். படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, படிப்பு முடிந்ததும் சப் லெப்டிணன்ட் பணியையும் அளிக்கிறது கேரள மாநிலம், எழிமலா பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் நேவி அகாதெமி.
இந்தியன் நேவி அகாதெமியில் பி.டெக். படிப்பில் சேர விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 17 முதல் 19.5 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். அதாவது 1993 ஜனவரி 2 மற்றும் 1995 ஜூலை 1 ஆம் தேதிக்கு இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும். திருமணமாகாதவராக இருக்கவேண்டும். பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடங்களில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதேபோல பத்தாம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மொழிப்பாடங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இந்தப் படிப்பில் சேர ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
பி.டெக். படிப்பு முடிந்தவுடன் கடற்படையில் சப்-லெப்டினன்ட் பதவியில் மாணவர்கள் பணியமர்த்தப்படுவதால் சிறந்த உடற்தகுதி எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையையும், சிறந்த பார்வைத்திறனும் பெற்றிருக்க வேண்டும். இந்த உடற்தகுதியில் எந்தப் பிரிவு மாணவர்களுக்கும் விதிவிலக்கோ சிறப்புச் சலுகையோ அளிக்கப்படமாட்டாது என்பதை விண்ணப்பதாரர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
விண்ணப்பதாரர் விண்ணப்பங்களை ஆன்லைன் மற்றும் தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கான வரிசை எண் அளிக்கப்படும். ஆன்லைனிலிருந்து பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட மற்றொரு விண்ணப்பத்தில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர்களுக்காக ஒதுக்கப்பட்ட வரிசை எண்ணை மறக்காமல் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தை தபாலில் அனுப்பும்போது, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ், வேறு ஏதும் கல்வித் தகுதி பெற்றிருப்பின் அதற்கான மதிப்பெண் சான்றிதழ் அல்லது சான்றிதழை நகல் எடுத்து அதை அட்டெஸ்ட் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களின் கட்-ஆஃப் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையே பெங்களூரு, போபால், கோயமுத்தூர் போன்ற ஏதேனும் ஒரு இடத்தில் நடத்தப்படும். நேர்முகத்தேர்வுக்கு செல்லும்போது மாணவர்கள் அசல் சான்றிதழ்களை எடுத்துச் செல்லவேண்டும். மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத்தேர்வில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் ஸ்டேஜ் -1 தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இத்தேர்வில் இன்டலிஜன்ஸ் டெஸ்ட், பிக்சர் பெர்சப்ஷன் மற்றும் டிஸ்கஷன் டெஸ்ட் ஆகியவற்றை மாணவர்கள் எதிர்கொள்ளவேண்டியதிருக்கும். இத்தேர்வில் தேர்ச்சிப் பெறும் மாணவர்கள் மட்டுமே ஸ்டேஜ் – 2 தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஸ்டேஜ் – 2 தேர்வில் சைக்காலஜிக்கல் டெஸ்ட், குரூப் டெஸ்டிங் மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சிப் பெறும் மாணவர்கள், மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இவை அத்தனையும் தொடர்ந்து மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை நடைபெறும்.
மருத்துப் பரிசோதனையிலும் தேர்ச்சிப்பெறும் மாணவர்கள் பி.டெக். படிப்பில் சேர அனுமதிக்கப்படுவார்கள். முதல் முறையாக நேர்முகத்தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு திரும்பிவருவதற்கான குளிர்சாதன வசதியுடன் பயணிக்கக்கூடிய ரெயில் டிக்கட் அளிக்கப்படும்.
தேர்வுசெய்யப்பட்ட மாணவர்கள் நான்கு ஆண்டு பி.டெக். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் அல்லது மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். படிப்பின்போது கப்பற்படை கப்பல் வடிவமைப்புக்கான சிறப்புப் பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்படும். நான்கு ஆண்டு படிப்பு முடிந்தவுடன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டம் அளிக்கப்படும். படிப்புக்காலத்தின்போது மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சி, புத்தகம், தங்கும் செலவு, மருத்துவம் மற்றும் சாப்பாடு, உடை உள்ளிட்ட அனைத்துச் செலவுகளும் முற்றிலும் இலவசம் என்பதுதான் இந்தப் படிப்பிற்கான சிறப்பம்சம்.
பட்டப் படிப்பு சிறந்த முறையில் முடித்துவெளிவரும் மாணவர்கள் இந்திய கப்பற் படையில் சப் லெப்டிணன்ட் பதவியில் பணியமர்த்தப்படுவார்கள். மாதம் 65 ஆயிரம் ஊதியம் அளிக்கப்படும் இந்தப் பதவிக்கு அளிக்கப்படும் சலுகைகள் ஏராளம். குடும்பத்திற்கான மருத்துவச் செலவு, சலுகை விலையில் உணவுப் பொருள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரூ.40 லட்சத்திற்கு இலவச மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here