தவறு எங்கே நிகழ்கிறது?

0
87

சென்னையில் அந்த அரசுப் பள்ளியில் பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளுக்கு வகுப்பு நடத்தும் அந்த ஆசிரியருக்கு பெரும் கனவு உண்டு. தானும் அரசுப் பள்ளியில் படித்து வந்தவன் என்றபடியால், தன்னுடைய மாணவர்கள் மீது அந்த ஆசிரியருக்கு அவ்வளவு பெரிய கனவு இருந்தது.
முழு நேரம் தன் மாணவர்களைப் பற்றிய சிந்தனை கொண்ட இந்த ஆசிரியர் கொஞ்சம் வித்தியாசமானவரும் கூட. வகுப்பு நடத்தும்போது காலணிகளைக்கூட கழற்றி வைத்துவிடுவார்.
அரசுப் பள்ளியில் மாணவர்களை கண்டிப்பதற்கு அவ்வளவு சட்ட திட்டங்களை அரசு வகுத்து வைத்திருக்கிறபடியால், மாணவர்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகவே போய்க்கொண்டிருந்தது.
ஒவ்வொரு வகுப்பும், ஆசிரியர்களுக்கு சிம்ம சொப்பணம்தான். அன்றும் வழக்கம்போல் வகுப்பிற்குள் நுழைந்தார் ஆசிரியர். வகுப்பு தொடங்கியது. வகுப்பு நடத்த முடியாதபடி கடைசி பெஞ்சில் இருந்த மாணவர்கள் மத்தியில் லேசான சலசலப்பு. இரண்டு முறை அதட்டிப் பார்த்தார். சத்தம் அடங்கவில்லை. நேரடியாக என்ன இங்க நடக்குது? என்று பார்த்த ஆசிரியருக்கு பயங்கர அதிர்ச்சி. ஒரு மாணவர் கையில் கஞ்சா பொட்டலம் ஒன்று இருந்தது. அதைப் பங்கிட்டுக்கொள்வதற்கான பிரச்சினைதான் அங்கு நடந்துகொண்டிருந்திருக்கிறது.
அதிர்ச்சியடைந்த ஆசிரியர் மாணவனை கையும் களவுமாய் பிடிக்கவே, ‘இனி பிரச்சினை விபரீதமாகிவிடும்’ என்று உணர்ந்த மாணவர், கண் இமைக்கும் நேரத்தில் ஆசிரியர் கழற்றிப் போட்ட காலணி ஒன்றை தூக்கிக்கொண்டு வெளியே ஓடிவிட்டான். ஆசிரியருக்கு ஒரு கணம் நடப்பது என்னவென்றே புரியவில்லை. மைதானத்திற்கு சென்ற மாணவர், சட்டையை கிழித்துக்கொண்டு செறுப்பால் தன்னைத்தானே அடித்துக்கொண்டு… ஆசிரியர் அடித்ததாய் கூச்சலிட ஆரம்பித்தான். பிரச்சினை தலைமையாசிரியர் வரை செல்ல… சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமையாசிரியர் அறைக்கு அழைக்கப்பட்டார். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட மாணவர் வெளியே சென்று பெற்றோர்களை அழைத்துவர.. பிரச்சினை ஊடகம் வரையில் சென்றது.
மீடியாவில் தொடர்ச்சியாக மாணவரை ஆசிரியர் செறுப்பால் அடித்ததாக செய்தி வெளியாக பிரச்சினை இன்னும் பெரிதானது. செய்தி பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகம் வரை செல்ல ஆசிரியர் மீது தனி விசாரணைக் குழுவும் வைக்கப்பட்டது.
திருத்தப்படவேண்டிய மாணவர் நல்லவராகிவிட, மாணவர் நலனே என் மூச்சு என்றிருந்த ஆசிரியர் குற்றவாளியானதுதான் மிச்சமாகிப்போனது.
இந்த விஷயத்தை பொருத்தமட்டில் யார் சரி, யார் தவறு என்ற விவாதத்திற்கே வரவில்லை… நம் சமூகம் எங்கு சென்றுகொண்டிருக்கிறது என்ற கேள்வி ஒன்றுதான் மனதிற்குள் எழுகிறது.
வேலூரில் சமீபத்தில் நிகழ்ந்த மாணவிகள் தற்கொலைச் செயலும் கிட்டத்தட்ட இதே விஷயத்தைதான் மறுபடியும் பிரதிபலித்தது. தன் தவறை மறைக்க மாணவிகள் தற்கொலை என்ற முடிவை தேடிக்கொள்ள, பாதிக்கப்பட்டது திருத்த நினைத்த ஆசிரியரும், பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோரும்தான்.
இப்போது நாம் யோசிக்க வேண்டியது ஒன்றே ஒன்று மட்டும்தான். தவறு எங்கே நிகழ்கிறது என்ற ஆய்வு மட்டும்தான்.
உங்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குற்றங்களுக்கும் அடி நாதமாய் இருப்பது பெற்றோராகிய உங்களின் தவறான வழிகாட்டல்தான். ஆசிரியர்கள் என் குழந்தையை அதட்டக்கூடாது, திட்டக்கூடாது, அடித்துவிடக்கூடாது என்று பதறும் பெற்றோராகிய நீங்கள், உங்கள் வீட்டில் குழந்தைகளை கண்டிக்காமல், அடிக்காமலா வளர்க்கிறீர்கள்? இரும்பை சுட்டால்தானே வார்ப்பாகும், கல்லை வடித்தால்தானே சிலையாகும்…!!
பெற்றோராகிய உங்கள் பார்வையின் வழியாகத்தான் குழந்தைகள் இந்த உலகத்தை பார்க்கிறார்கள் என்பதை எந்தச் சூழ்நிலையிலும் மறந்துவிடாதீர்கள். உலகத்தைப் பார்க்க நீங்கள் குழந்தைகளிடம் எப்படி கற்றுக்கொடுக்கிறீர்களோ, அப்படித்தான் குழந்தைகளும் உலகத்தைப் பார்க்கிறது.
குழந்தைகளிடம் உலகத்தை பார்க்க கற்றுக்கொடுங்கள். ஆசிரியர்களின் மேன்மையைச் சொல்லிக்கொடுங்கள். பெற்றோர் ஸ்தானத்திற்கு மேலான ஸ்தானம் ஆசிரியர்களுடையது என்று சொல்லி வளருங்கள். ஆசிரியர்களின் கண்டிப்பு மட்டுமே உன்னை நல்வழிப்படுத்தும் என்பதை ஆணித்தரமாக அவர்களை உணரச்செய்யுங்கள். அப்புறம் பாருங்கள்… ஆசிரியர்கள் மீது உங்கள் குழந்தை வைத்திருக்கும் மரியாதை அளப்பெரியதாகும். மரியாதை எங்கு அளப்பெரியதாகிறதோ அங்கு பக்தியைக் கடந்து எதுவும் பிரதிபலிக்காது. இது பிரபஞ்ச தத்துவம்.
அதேபோல் உங்களை நம்பி பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகளை உங்கள் குழந்தையாய் பாவியுங்கள். ஆசிரியருக்குள் ஓர் பெற்றோர் இருப்பதை மாணவர்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த சமுதாயத்தில் உங்கள் மாணவன் வளர்ந்து நிற்கும்போது, அவன் உரக்கச்சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வது உங்களது பெயரைத்தான் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். மாணவர்களால் மட்டுமே ஒரு ஆசிரியர் வரலாற்றில் இடம் பெறுவார் என்பதை பல சரித்திரங்கள் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். பாடம் நடத்துவதுமட்டுமல்ல உங்கள் கடமை, வாழ்க்கையை கற்றுக்கொடுங்கள், வாழ்க்கையின் சவாலை எதிர் நோக்குவதற்கான வித்தையை அவர்கள் புரிதலுக்கு ஏற்ப அவர்கள் மனதில் பதிய வையுங்கள். அவர்களுக்குள் என்னாளும் தன்னம்பிக்கையை எனும் தீயை மூட்டிக்கொண்டே இருங்கள். இதை நீங்கள் செய்திருந்தால், மேலே சொன்ன அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்காது.
இனி ஒரு குற்றம் மாணவர்களின் பெயரில் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தக் கட்டுரை. இனியும் இந்தச் சம்பவம் தொடர்ந்து நிகழாமல் இருக்க, நீங்கள் செய்யவேண்டியது, சமூகத்தைப் பார்க்கும் உங்களின் பார்வை மாற வேண்டும் அவ்வளவுதான். ஆசிரியர், மாணவர், பெற்றோர் என்ற உறவு முக்கோணம் வலுப்பெற வேண்டும். வாரத்திற்கு ஒரு நாள் இந்த மூன்று தரப்பினரும் நேரில் சந்திக்க வேண்டும். சகஜமாக பேச வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் பின் புலத்தையும் ஆசிரியர்கள் அவசியமாக தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியர்களின் குணாதிசயத்தை தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த முக்கோண செயல்பாடு மட்டும் வலுப்பெற்றுவிட்டால், பள்ளி சார்ந்த குற்றங்கள் இனியொருதடவை நம் சமூகத்தில் நிகழவே நிகழாது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here