எப்படி வழிகாட்டலாம்?

0
202

ஏப்ரல் மாதம் வந்துவிட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் எல்லா வகுப்புகளுக்கும் தேர்வு முடிந்துவிடும். அதுக்குப் பிறகு முழுசா ஒரு மாசம் ‘ஸ்கூல் லீவு’ என்று குதூகலிக்கும் மனோ நிலையில் இருக்கும் குழந்தைகளை இந்த கோடை விடுமுறையில் எப்படி பல்கலை வித்தகனாக்குவது என்று இப்பவே பெற்றோர்கள் ‘ஸ்கெட்ச்’ போட ஆரம்பித்துவிடுவார்கள்.
இந்த ஒரு மாத விடுமுறை நாட்களில் குழந்தைகளை எப்படி வழி நடத்தலாம்? எப்படி வழி நடத்தவேண்டும் என்பதற்கே இந்தக் கட்டுரை.
எல்லா குழந்தைகளும் சிறந்த குழந்தைகள்தான். ஆனால், அவர்களை எப்படி கையாள்கிறோம் என்பதை பொறுத்துதான் அவர்கள் இந்த சமுதாயத்தில் எதுவாய் மாறுவார்கள் என்பது இருக்கிறது.
எல்லா பெற்றோருக்கும் தன் குழந்தை என்ஜினியராகவேண்டும், மருத்துவராக வேண்டும், கலெக்டராகவேண்டும், சயிண்ட்டிஸ்ட்டாக வேண்டும் என்று பல்வேறு ஆசைகள் மனதில் இருக்கவே செய்யும். நம் குழந்தைகள் நல்லவர்களாக வரவேண்டும், மற்றவர்களுக்கு பயன் தரும் வகையில் தன் குழந்தை வாழ வேண்டும் என்று நம்மில் எத்தனை பெற்றோர் ஆசைப்பட்டிருப்போம்? உங்கள் மனதில் கைவைத்து சொல்லுங்கள்.
30 – 40 வருடங்களுக்கு முன் பள்ளி கோடை விடுமுறையின்போது குழந்தைகள் மாமா வீட்டுக்கு செல்வார்கள், பாட்டி வீட்டிற்கு செல்வார்கள், தூரத்து சித்தி, சித்தப்பா வீட்டுக்குச் செல்வார்கள். அங்கு ஒரு மாதம் இருந்துவிட்டு வருவார்கள். நகரத்தில் தனிக்குடித்தனம் வாழும் அவர்களுக்கு அந்த ஒரு மாதம் சொர்க்கமாக இருக்கும். சித்தி குழந்தைகளுடனும், மாமா குழந்தைகளுடன் பழகும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். தன் குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன தவறுகளை சித்தியும் – சித்தப்பாவும், பாட்டியும் – தாத்தாவும் செல்லமாக கண்டிப்பார்கள்.
மதினி, அத்தான், ஒன்றுவிட்ட சித்தப்பா, தாய்மாமா, அத்தை, கொழுந்தியாள்… இப்படி பல்வேறு உறவுகளை பிள்ளைகள் கற்றுக்கொள்ள அந்த விடுமுறை வாய்ப்புகளை அமைத்துக்கொடுக்கும்.
உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அங்கிள், ஆண்ட்டி என்ற வார்த்தையைத் தவிர்த்து ஏதாவது தெரிந்திருக்கிறார்களா என்று. இன்று முதியோர் இல்லங்கள் பல்கிப் பெருகியிருப்பதற்கு ஒரே காரணம், குழந்தைகள் அல்ல, அந்த குழந்தைகளை சரியாக கையாளத்தெரியாத பெற்றோர்கள்தான்.
நீங்கள் அனுபவித்த உறவுமுறைகளை, நீங்கள் வாய் நிறைய சொல்லி வளர்த்த ரத்த பந்த உறவுமுறைகளை உங்கள் குழந்தைகளுக்கு என்று அறிமுகப்படுத்தி வைக்கப்போகிறீர்கள்.
உறவுகளுடன் சேர்ந்து உறவுகளாக சேரும் வாய்ப்பு கிடைக்கும்போதுதான் அன்பின் அர்த்தம் புரியும், சகோதரத்துவத்தின் மாண்பு புரியும், விட்டுக்கொடுத்தலும், சகிப்புத்தன்மையும் ஆசிரியர் வைத்து கற்றுக்கொடுக்காமலே மனம் புரிந்துகொள்ளும். இன்று இளஞ்சிறார்கள் செய்யும் குற்றச் செயல்களுக்கு அடிப்படைக் காரணமே சகிப்புத் தன்மையும், உறவுகளின் வலிமையும், பெற்றோர்கள், சொந்தங்களின் அரவணைப்பும் இல்லாமைதான்.
ஒரு விஷயம் தெரியுமா? 2016 ஆம் ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது 2017 ஆம் ஆண்டில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை மட்டும் 67 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்கிறது புள்ளிவிவரம்.
பெற்றோர்களின் போதிய அரவணைப்பு இல்லாமை, சொந்தபந்தங்களின் வலிமையை புரிந்துகொள்ளாமை, சகோதரத்துவத்தின் அர்த்தம் புரிந்துகொள்ளாமையைத்தான் இந்த புள்ளி விவரம் நமக்கு சொல்லாமல் சொல்லும் செய்தி.
கிடைக்கும் இந்த ஒரு மாத கோடை விடுமுறையில் குழந்தையை ஃப்ரன்ச் படிக்க வைக்கப்போறேன், ஸ்போக்கன் இங்கிலீஷ் படிக்க வைக்கப்போறேன், ட்ராயிங் கோச்சிங் அனுப்பப் போறேன், ஒரு மாசம் கதக் கத்துக்க வைக்கப்போறேன், எதிர்த்த வீட்டு பொண்ணு மியூசிக்ல பிண்ணி பெடல் எடுக்கறா, என் பிள்ளையையும் ஒரு மாசம் கீ-போர்ட் கிளாஸ் அனுப்பப் போறேன்… என்று கலர் கலரா கற்பனை பண்ணி வச்சிருந்தீங்கன்னா, தயவுசெய்து அந்த கற்பனையையெல்லாம் மூட்டைக் கட்டி வச்சிடுங்க.
கடிகாரத்தின் பெண்டுலம் இடது முனைக்குச் செல்வதே, வலது முனைக்குச் செல்வதற்கான ஆற்றலை சேமித்துக்கொள்வதற்காகத்தான். உங்கள் குழந்தை அடுத்த ஆண்டு படிக்கப் போகும் வகுப்பில் சிறப்பாக படிக்க வேண்டும், ஒழுக்கமுடன் நடந்துகொள்ளவேண்டும், நேர்மறையாக சிந்திக்க வேண்டும், பெற்றோர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்களாக இருந்தால், இந்த கோடை விடுமுறை காலத்தை அவர்களுக்கு பயன்படும் வகையில் மாற்றுங்கள்.
இந்த ஒரு மாதம் அடுத்த ஆண்டு உங்கள் குழந்தை முழு ஆற்றலுடனும், முழு வீச்சுடனும் இயங்குவதற்கான ஆற்றலை ஊட்டுவதற்கான காலமாக இந்த கோடை விடுமுறை காலத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இதுதான் பெற்றோர்களாக நீங்கள் குழந்தைக்கு செய்யப்போகும் மிகப்பெரிய கைமாறு.
இந்த ஒரு மாதம் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஊட்டும் ஆற்றல்தான், அடுத்த ஆண்டு அவர்கள் தங்கு தடையில்லாமல் பயணிக்க வைப்பதற்கான உந்து சக்தி என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு அதிகபட்ச ஆற்றல் ஊட்டுவதுதான் எங்களின் நோக்கமும். அதற்கு நாங்கள் செய்யவேண்டியது என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
• விடுமுறையின்போது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கிராமத்தில் இருக்கும் உங்கள் நெருங்கிய உறவுகளின் வீட்டில் விட்டுவிடுங்கள். தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி, சித்தப்பா, திருவிழா, குச்சிமிட்டாய், சவ்வு மிட்டாய் வகைகளை அவர்களும் தெரிந்துகொள்ளட்டும்.
• அதேபோல் அவர்களின் குழந்தைகளை முடிந்தால் நகரத்திற்கு அழைத்து வாருங்கள். நகர கலாசார முறைகளை அவர்களின் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.
• உங்கள் குழந்தைகளுக்கு அன்பின் வலிமையையும், சகிப்புத்தன்மையையும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க சொந்தங்களிடம் நாசுக்காக சொல்லிவையுங்கள். குழந்தைகளோடு குழந்தைகளாய் உங்கள் குழந்தையும் வியர்வை சொட்ட சொட்ட விளையாட அனுமதிக்கச் சொல்லுங்கள்.
• பத்து நாள் கழித்து உங்கள் குழந்தைகளை முடிந்தவரை ஏதேனும் ஒரு ஊறுக்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லுங்கள். அப்போதுதான் புதிய மனிதர்களிடம் எப்படி பழகவேண்டும், சமூகத்தில் பல்வேறு தரப்பட்ட மனிதர்களை எப்படி அணுக வேண்டும் என்பதை உங்கள் குழந்தைகள் தெரிந்துகொள்வார்கள்.
• இந்த விடுமுறை நாட்களில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்திருந்தாலும் சரி, பிடிக்கவில்லையென்றாலும் சரி கோவில்களுக்கு தவறாமல் அழைத்துச் செல்லுங்கள். கோவிலின் வரலாறுகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.
சொல்றது நல்லாதான் இருக்கு. ஆனா, எனக்கு ஆஃபீஸ்ல லீவு கிடையாது. நீங்க நினைக்கிற மாதிரி கிராமத்துக்கு அழைச்சுட்டுப் போகணும்னு எங்களுக்கும் ஆசைதான். ஆனா, எங்களுக்கு சொல்லிக்கிற மாதிரி எந்த சொந்தங்களும் கிடையாதே என்று ஆதங்கம் உங்கள் மனதில் இருந்தால், அதையும் தூக்கி கடாசுங்கள்.
• படிப்பை தவிர்த்து உங்கள் குழந்தைக்கு எதில் ஈடுபாடு அதிகமோ அதை முழுமனதாக செய்ய அனுமதியுங்கள்.
• எந்தக் காரணத்தைக் கொண்டும் வீடியோ கேம்ஸ், செல்போன் கேம்ஸ் விளையாட அனுமதிக்கவே செய்யாதீர்கள்.
• உங்கள் குழந்தைக்கு சமையல் செய்ய பிடிக்குமா சமையலில் சின்ன சின்ன விஷயங்கள் செய்ய கற்றுக்கொடுங்கள்.
• அவர்களுடன் அதிகபட்ச நேரம் செலவிடுவதற்கான வழிகளை யோசியுங்கள். அந்த நேரத்தில் வாழ்வில் நீங்கள் எதிர்கொண்ட சவால்களையும், அதை சாமர்த்தியமாக கடந்துவந்த விதத்தையும் கற்றுக்கொடுங்கள். அது அவர்களின் வாழ்க்கையில் பயணிக்க உந்துதலாக இருக்கும்.
• உங்களின் குழந்தையின் ஆசைகளை, உணர்வுகளை புரிந்துகொள்வதற்கான நாட்களாக இந்த கோடை விடுமுறையை மாற்றுங்கள்.
• கிடைத்திருக்கும் இந்த கோடை விடுமுறை அவர்கள் வாழ்க்கையை கற்றுக்கொள்ள, வாழ்வின் சவால்களை எதிர்கொள்வதற்கான விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான அரிய சந்தர்ப்பம் என்பதை மட்டும் பெற்றோர்கள் மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்.
• கற்றுக்கொள்ளல்தான் உங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்றால், நம் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் புத்தகங்களை வாங்கிக்கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். அறிவியல், ஆராய்ச்சி சார்ந்த புத்தகங்களை படிக்கச் சொல்லுங்கள்.
• இந்த ஒரு மாத கோடை விடுமுறை உங்கள் குழந்தைகளுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்த திருப்தியை நீங்கள் உணரும் அதே நேரத்தில் உங்கள் குழந்தையும் உணர்ந்துவிட்டால் நீங்கள் சிறந்த பெற்றோர்தான்.

உறுதிமொழி:
• இந்த கோடை விடுமுறையில் என் குழந்தைக்கு நிச்சயம் ஒரு புது அனுபவத்தை பரிசளிப்பேன்.
• இந்த தேசத்தின் பண்பாடு, கலாசாரத்தை கற்றுக்கொடுக்கும் பொறுப்பு என்பதை நான் உணர்ந்துள்ளேன். இதை என் குழந்தைக்கும் உணரச் செய்வேன்.
• வெற்றியாளன், சாதனையாளன் என்ற வார்த்தைகளைக் கடந்து என் குழந்தை சிறந்த மனிதன் என்று சொல்வதையே இன்று முதல் கொள்கையாக ஏற்று நடப்பேன்.
• சிறந்த மனிதர்களாலேயே சிறந்த சமுதாயத்தைப் படைக்க முடியும் என்பதால், இன்று முதல் என் குழந்தையை சிறந்த மனிதனாக மாற்றும் முயற்சியில் நான் ஈடுபடுவேன்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here