பணியை தக்க வைத்துக்கொள்ள…

0
91

வேலை கிடைக்கிறதே குதிரைக்கொம்பா இருக்கிறது. சிலர் தங்களுடைய சொந்த முயற்சியிலே உயர வந்துவிடுகிறார்கள். சிலர் மற்றவர்களின் பாதையை பின்பற்றி உயர வந்துவிடுகிறார்கள். சிலர் குடும்ப பின்புலத்தின் மூலம் வந்துவிடுகிறார்கள். வந்து சேருவது வரைக்கும் போராட்டமோ போராட்டம்தான். வந்த பிறகு அதை தக்கவைத்துக்கொள்வதுதான் தவம் என்பார்கள் மேலாண்மை தத்துவத்தில்.
நீங்கள் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கலாம்; அரசுத் துறையில் பணி செய்யலாம். சொந்தமாக பிஸினஸ் செய்யலாம் எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், இந்த நிலை தொடர வேண்டும். இதன் மூலம் வருவாய் ஈட்ட வேண்டும், இந்த நிலையில் இருந்து மேலே மேலே போய்கிட்டே இருக்கணும்னு நினைக்கிற எல்லோருக்கும் இந்தத் தொடர் ஏதோ ஒரு வகையில் பயன்தரும்.
வேலை கிடைக்கிறதே குதிரை கொம்பா இருக்கு. அந்த வேலைய சூதானமா பாத்துக்கிருணும்ப்பு, அசால்ட்டா இருந்துட்டு மறுபடியும் எருமை மாடு மேய்க்கட்டா, சினிமா போஸ்டர் ஒட்டட்டாணு திரியக்கூடாது. எனக்கு அதப் பத்தியெல்லாம் கவலையே கிடையாது. நான் வேலைக்குப் போறேனோ இல்லியோ, கரெக்டா என்னோட கையெழுத்து ஆபீஸ் ரிஜிஸ்டர்ல விழுந்துடும். டூட்டி டயத்துலேயே சொந்த வேலையெல்லாம் முடிச்சுட்டு, மெடிக்கல் லீவு போட்டுட்டு, தனியா கம்பெனியே நடத்துவம்ல, நாங்கல்லாம் கவர்மெண்ட்டாக்கும், இந்த சட்ட திட்டமில்லாம் என்ன பண்ணும் என்ற வசனமெல்லாம் இனி செல்லாது.
காலம்.. இது உங்களை மட்டுமல்ல; சுற்றியுள்ளவர்களின் குணாதிசயத்தையும் மாற்றக்கூடிய வல்லமை படைத்தது. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். 23 வயசுலேயே வேலை கிடைச்சுடுச்சு. சின்ன வயசுலேயே வேலை கிடைச்சதுனாலேயே கொஞ்சம் அசால்ட்டான பேர்வழிதான் நான். டெய்லி லேட்தான். அலுவலகத்தில் இருக்கும் என்னோட சீனியர், என்னப்பா லேட்.. னு கேட்பார். சார்… செம்ம டிராபிக். வந்துட்டே இருந்தேன் ஆபீஸ்ல இருந்து கரெக்ட்டா ரெண்டு கிலோ மீட்டர் முன்னாடி ஏதோ ஒரு ஆக்ஸிடெண்ட். ஒரே கூட்டமா இருந்துச்சு. ஒரு வண்டி கூட நகர முடியல. ஆம்புலன்சே கஷ்டப்பட்டுத்தான் வந்துச்சுன்னா பார்த்துக்கோங்களேன். கரெக்ட் டைமுக்குள்ளே ஆபீசுக்கு வந்துடணும்னு நினைக்கிற என்னோட சின்சியராட்டிக்கு இன்னிக்கும் ஆப்புதான் சார். என்னோட சீனியர் எல்லோர் கிட்டேயும் கொஞ்சம் நெருக்கமா பேசுறதாலே, நானும் சகஜமா அடிச்சு விடுவேன்.
நான் எழுதிய கதை, வசனம், டைரக்ஷன் எல்லாம் அவருக்கும் தெரியும். அதுக்கு மேல அவரால கேள்வி கேட்க முடியும். ஒழுங்கீனத்திற்காக என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கான எல்லா அதிகாரமும் அவருக்கு உண்டு. ஆனா, எதுவுமே அவர் செய்யல; நாளைக்காவது சரியா வர்றதுக்கு முயற்சிப் பண்ணுன்னு சீட்ல போய் உட்கார்ந்துட்டார். தினசரி நான் சொல்லும் ஏதாவது ஒரு கதையை அலுவலகமே ரசித்துக்கொண்டிருக்கும்.
மறுநாளும் இதே நிலைதான். ஆனா, என்ன நடந்துச்சோ தெரியல; சீனியர் என்கிட்ட சரியா முகம் கொடுத்து பேசல. விசாரிச்சதுல, மேலாளர் சீனியர்கிட்ட உன் டீம்ல உள்ளவங்கள கரெக்ட் டைமுக்கு வரச்சொல்லி கடிந்து பேசியது எனக்கு அதற்குப் பிறகுதான் தெரிய வந்தது. உள்ளுக்குள் அவமானமாய் இருந்தது எனக்கு. 10 மணிக்கு வரக்கூடிய அலுவலகத்திற்கு தினமும் 10.15, 10.20 என்று வந்துகொண்டிருந்தேன். நான் அலுவலகத்திற்கு வருவதற்கான தாமதத்தை யோசித்தேன். 15 நிமிடம் 20 நிமிடத்திற்கு முன்பாக கிளம்பினால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாமே என்று யோசித்ததுடன், என் சீனியருக்கு முன்பாக ஒரு நாளாவது அலுவலகத்திற்கு சென்று விட வேண்டும் என்று முடிவு செய்தேன். மறுநாளில் இருந்து கரெக்ட் டைமுக்கு பத்து நிமிஷத்திற்கு முன்பாகவே போய்விட்டேன். ஆனால், அதற்கு முன்பாகவே என் சீனியர் வந்திருந்தார்.
எனக்கு ஆச்சர்யம், இவ்வளவிற்கும் என்னோட சீனியருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் கூட உண்டு. அவருடைய நேரம் தவறாமை என்னை ஆச்சர்யப்பட வைத்தது. சீனியரிடமே கேட்டுவிட்டேன், எப்படி சார் இவ்வளவு கரெக்ட் டைமுக்கு வர்றீங்க. இவ்வளவு சீக்கிரம் வர்றதால சம்பளத்தை கூட்டியா தந்துட போறாங்க.. என்று கேட்டதும், டைமுக்கு கரெக்ட்டா வர்றது, மற்றவர்களுக்காகவோ, அலுவலகத்திற்காகவோ அல்ல; எனக்காக, காலத்தை சரியாக வகைப்படுத்தி, சரியாக வாழ பழகிக்கொண்டால், மற்றவர்கள் நம்மை மதிப்பதைவிட, நம் மீது நமக்கு ஏற்படுமே ஒரு நம்பிக்கை, அந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அந்த மகிழ்ச்சியை நீ அனுபவிக்க பழகிக்கொண்டால், யாருக்காவும் அந்த சந்தோஷத்தை விட்டுக்கொடுக்க மாட்டாய். காலந்தவறாமை என்பது என் சந்தோஷத்திற்கான காரணி.
நீ தாமதமாக அலுவலகத்திற்கு வரும்போதெல்லாம் நீ சொல்லும் காரணங்களுக்கு எப்போதாவது உன்னுடை ய ஆழ்மனது சந்தோஷப்பட்டிருக்கிறதா? நிச்சயம் இருக்காது. நீ ஒழுங்கீனமாவன் சொன்னதை சொன்ன நேரத்தில் செய்யமாட்டான் என்று பலவாறு, உன்னை உன் மனதே கொன்று தின்றிருக்கும். காலம் தவறாமை, உன் தன்னம்பிக்கையை தொடர்ந்து வலுப்படுத்திக்கொண்டே இருக்கும் என்பதை மட்டும் எப்போதும் மறந்துவிடாதே.
வரலாற்றைப் புரட்டிப்பார், நம் சமுதாயத்தில் உழைப்பால் முன்னுக்கு வந்தவர்களை பட்டியலிட்டுப் பார். அவர்கள் அந்த நிலையை அடைய அவர்கள் சொல்லும் முதல் காரணமாக இருப்பது நேரம் தவறாமைதான் இருக்குமே தவிர்த்து, வேறெதும் இருக்காது. வாழ்க்கையில் பத்தோடு பதினொன்றாக வாழ, நேரம் தவறாமை என்ற குணாதிசயம் அவசியமில்லைதான். ஆனால், இந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு முன்னேற வேண்டும் என்று ஆசைப்பட்டுவிட்டால், நேரம் தவறாமை என்ற குணாதிசயம் அன்றி, எந்த முன்னேற்றமும் சாத்தியப்படாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள் என்றார். அன்றிலிருந்து காலந்தவறாமையை என் முதற் குணமாக கொண்டேன்.
சீனியர் சொன்னது போல் எனக்கும் காலந்தவறாமை, மகிழ்ச்சிக்கான விஷயமாக போனது. அதை சந்தோஷத்தை தினந்தோறும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள்?


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here