உணவுப் பாதுகாப்புக்கு தனி படிப்பு!

0
305

சில படிப்புகளுக்கு சில வருடங்கள்தான் மவுசு. சில படிப்புகளுக்கு சில நாடுகளில் மட்டும்தான் மவுசு இருக்கும். ஆனால், ஒரு சில படிப்புகளுக்கு மட்டும்தான் எப்போதும் எல்லா நாடுகளிலும் தேவை இருந்து கொண்டேயிருக்கும். அந்த மாதிரியான படிப்புதான் உணவு தொழில்நுட்பம் என்று அழைக்கப்படும் புட் டெக்னாலஜி.

புட் டெக்னாலஜியை இன்னும் எளிதில் புரியும் படியாக சொல்லப்போனால், உணவு அறிவியல் என்று சொல்லலாம்.
வைரஸ், பூஞ்சை காளான், நுன் கிருமிகளாலேயே உணவு கெட்டுப் போகிறது. உணவு கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? இயற்கை முறை அல்லது செயற்கையாக வேதிக் காரணிகளால் உணவை எப்படி பதப்படுத்தலாம், சேமித்து வைக்கலாம்; உணவில் உள்ள எந்த சத்துக்களும் கெட்டுப்போகாமல், எவ்வாறு நீண்ட நாள் பயன்படுத்தலாம் காலத்திற்குத் தகுந்தாற்போல் புதிய உணவுப் பொருள்களை கண்டுபிடித்தல் இப்படிபல விஷயங்களை கற்றுத் தருவதுதான் புட் டெக்னாலஜி என்று சொல்லப்படும் உணவு அறிவியல்.

நிக்கோலஸ் அப்பர்ட் 1780ம் ஆண்டு முதல் 1795ம் ஆண்டு வரை பாரீஸ் மாநகரத்தில் ஒரு சமையல்கலை வல்லுநராகத்தான் தன் பணியை தொடர்ந்திருக்கிறார். 1795ம் ஆண்டிற்கு பிறகுதான் மீந்து போகும் தான் தயாரிக்கும் உணவுப் பொருட்கள், சூப், பால் பொருட்கள், காய்கறிகள், மருந்துகளை பாதுகாக்கும் முறைகளை கண்டுபிடிக்க ஆரம்பித்தார். முதலில் அவர் உணவுப் பொருட்களை கண்ணாடி பாட்டில்களில் அடைத்து காற்று புகாதபடிஅடைத்து வைத்தார். அதன் மூலம் ஓரளவிற்கு உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருந்தன.
அந்த சமயத்தில் 1800ம் ஆண்டு மாவீரன் நெப்போலியன், ராணுவத்தில் இருக்கும் தனது வீரர்களுக்கு, கெட்டுப்போகாத உணவு பாதுகாப்பு உபகரணத்தை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 12,000 பிரான்குகள் பரிசு என்ற அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பு நிக்கோலஸை மேலும், உணவுப் பதப்படுத்தல் தொடர்பான தன் ஆய்வை மேற்கொள்ள தூண்டியது. 15 ஆண்டு சோதனைக்குப் பிறகு அந்த சோதனை வெற்றிபெற்று, 1810ம் ஆண்டு உணவு பாதுகாக்கும் முறை குறித்த கண்டுபிடிப்பை நெப்போலியனிடம் சமர்ப்பித்தார் நிக்கோலஸ். அதைப் பார்த்து வியந்துபோன நெப்போலியன், நிக்கோலசுக்கு அந்தப் பரிசுத் தொகையை வழங்கினார். அதோடு நின்றுவிடவில்லை நிக்கோலஸ். உடனடியாக தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்பை புத்தகமாக வெளியிட்டார். உணவு பாதுகாப்பு குறித்த முதல் சமையல் கலை புத்தகம் நிக்கோலஸ் உடையதுதான். இன்னொரு கூடுதல் தகவல்; உணவு பதப்படுத்தலின் தந்தையும், நிக்கோலஸ் அப்பர்ட்தான். அதோடு பாரீசில் மேசி நகரத்தில் லா மேய்சன் அப்பர்ட் என்னும் பெயரில் பாட்லிங் உணவு தொழிற்சாலையை உருவாக்கினார். இதுதான் உலகத்திலேயே முதன்முதலில் தொடங்கப்பட்ட உணவுப் பதப்படுத்தல் தொடர்பாக உருவான தொழிற்சாலையாகும்.
அதற்குப் பிறகு ஆறிப்போன உணவில் வைரஸ் கிருமிகள் இருக்கும். அதையே நன்றாக சூடு செய்தால் உணவில் இருக்கும் வைரஸ் கிருமிகளை கொன்றுவிடலாம் என்று கண்டுபிடித்துக் கூறினார் லூயிஸ் பாய்ச்சியர். இவரும், உணவு பாதுகாத்தல் குறித்த சில விஷயங்களை கண்டுபிடித்தார்.
அதற்குப் பின் வந்த ஆராய்ச்சியாளர்கள் உணவு குறித்த பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். ஆனால், அந்த ஆராய்ச்சி இன்னும் முடிந்தபாடில்லை. இந்த ஆராய்ச்சி இனியும் தொடரத்தான் செய்யும், மனிதக் குலம் இந்த பூமியில் இருக்கும் வரை. இப்படித்தான் புட் டெக்னாலஜி வளர ஆரம்பித்தது.

உணவு அறிவியல் என்பது உணவு பாதுகாப்பு மற்றும் பதப்படுத்தலோடு நின்றுவிடுவதில்லை. நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் தேவைக்கும் தகுந்தமாதிரி புதுமாதிரியான உணவுப் பொருட்களை கண்டுபிடிப்பதிலும் புட் டெக்னாலஜியின் பங்கு மிக முக்கியமானது.
இன்று குழந்தைகளுக்கு கொடுக்கும் இன்ஸ்டன்ட் பால் பவுடர் புட் டெக்னாலஜியின் மூலம் வந்ததுதான்.

பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்கள் எடுத்து படித்திருந்தால் போதுமானது. முதுநிலை பட்டப்படிப்பு படிக்க இயற்பியல், கணிதம், பயோ கெமிஸ்ட்ரி, ஹோம்சயின்ஸ், நியூட்ரிசன், ஹோட்டல் மேனேஜ்மென்டில் பட்டப்படிப்பும், பி.டெக்கில் புட் டெக்னாலஜி படித்திருந்தால் முதுநிலைப் படிப்பில் நேரடியாக சேரலாம்.
இதுதவிர மில்லிங் டெக்னாலஜி என்று அழைக்கப்படும் ஆலை தொழில்நுட்பம் சார்ந்த படிப்பில் சேர ஏதாவது ஒரு இளங்கலை பட்டமோ அல்லது பொறியியலில் பட்டப் படிப்பு படித்திருந்தால் போதுமானது.
உணவு தயாரிப்பு நிறுவனம், உணவு ஆராய்ச்சிக் கழகம், ஓட்டல்கள், உணவு விடுதிகள், கல்வி நிலையங்கள், அரசு நிறுவனங்களில் செயல்படும் உணவு விடுதிகள், அரசுத் துறையில் உணவு ஆய்வாளர் பணி, ஹெல்த் இன்ஸ்பெக்டர் போன்ற பணிகளும், ப்ரீலான்ஸ் ஆலோசகராகவும் பணிபுரிந்து கைநிறைய சம்பளம் பெற புட் டெக்னாலஜி படிப்பு பெரிதும் கைக்கொடுக்கும்.

புட் டெக்னாலஜி படிப்பை சிறந்த முறையில், மைசூரில் இயங்கி வரும் மத்திய உணவு தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் படிக்கலாம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், உணவுத் தேவை குறித்தும், உணவுப் பாதுகாப்பு குறித்தும் ஒரு விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டது. இந்தக் குரல் ஆட்சியாளர்கள் மத்தியிலும் எதிரொலிக்க ஆரம்பித்தது. முதன்முதலில் 1943ம் ஆண்டுதான், உணவு ஆராய்ச்சிக்கான ஒரு கழகம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதைத்தொடர்ந்து அந்தக் கோரிக்கைக்கான ஒப்புதலை 1948ம் ஆண்டு அரசு நிறைவேற்றியது. அதற்குப் பின் கட்டடம் எழுப்புதல், பணிக்கு ஆள்சேர்ப்பு என்று பல்வேறு கட்ட வேலைகளுக்குப் பின், மைசூரில் மத்திய உணவு நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மையம் 1950ம் ஆண்டு திறக்கப்பட்டது.
ஆராய்ச்சி மையம் வளர்ச்சியின் அடுத்தக்கட்டமாக அதே மையத்தில் இந்தோ சுவிஸ் கூட்டமைப்பின் முயற்சியாக 1981ம் ஆண்டு சர்வதேச மில்லிங் தொழில் நுட்ப பள்ளி தொடங்கப்பட்டது. இதில் தொழிற்கூடத்தை உருவாக்குவது, வடிவமைப்பது போன்ற கல்வி கற்றுத் தரப்படுகிறது.

என்னென்ன படிப்பு உள்ளது?
சான்றிதழ் படிப்பு, உணவுத் தொழில்நுட்பம் குறித்த முதுநிலைப் படிப்பு மற்றும் ஆலை தொழில்நுட்பம் குறித்த படிப்பும் கற்றுத் தரப்படுகிறது.
முதுநிலைப் படிப்பில் சேர எப்போது விண்ணப்பிக்க வேண்டும் கல்வித் தகுதி என்ன?
ஜூன்9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆலை தொழில்நுட்பம் குறித்த படிப்பில் சேர்வதற்கு ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இயற்பியல் மற்றும் வேதியியல் படிப்பில் பட்டப்படிப்பை முடித்தவர்கள், 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. ஹானர்ஸ் படிப்பில் பி.எஸ்சி பட்டப்படிப்பு படித்திருப்பவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., பிரிவு மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.விவசாயம் மற்றும் பொறியியல் பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருந்தால் போதுமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here