ஃபயர் சேப்ட்டி என்ஜினீயரிங்

0
236

தீ விபத்து பெரிய பேராபத்தையும், பேரழிவையும் ஏற்படுத்தக்கூடியது. இதனால் ஏற்படும், உயிர் இழப்பும், பொருள் இழப்பும் ஏராளம். தீயினால், ஏற்படும் பேரழிவை தடுப்பதற்கு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு முறைகளை மனிதர்கள் கையாண்டு இருக்கிறார்கள். ஆனால், தொழில் வளர்ச்சி ஏற்பட்டப் பிறகு தீ தடுப்பை தடுப்பதற்கான உத்தியும் மாற ஆரம்பித்தது. அதோடு, அது சார்ந்த கல்வியும், விழிப்புணர்வும் மிகத் தேவையாக இருந்தது.
விபத்து குறித்த தடுப்பு நடவடிக்கைகளும், இதுபற்றிய விழிப்புணர்வும் முதல் நூற்றாண்டிலேயே உருவாகியிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. தீ விபத்து என்றவுடன் வரலாற்றில் சட்டென்று நம் நினைவுக்கு வருவது ரோம் நகரம் தீக்கிரையானது சம்பவம்தான்.
கிபி 64ம் ஆண்டு எதிர்பாராத விதமாக ரோம் நகரம் தீப் பற்றிக்கொள்கிறது, ஒரு நாள் இரண்டு நாள் அல்ல; தொடர்ந்து ஐந்தரை நாட்கள் தொடர்ந்து எரிந்த தீயில் ரோம் நகரமே அலங்கோலமாகியது. கிட்டத்தட்ட 11 மாவட்டங்கள் தீக்கு இறையானதாக வரலாறு கூறுகிறது. மூன்று மாவட்டங்கள் முற்றிலும் அழிந்து போயின. 7 மாவட்டங்கள் தீயின் கோர அடையாளங்கள் தெரிந்தாலும், முற்றிலும் அழியாமல் தப்பிக்கொண்டது என்று சொல்கிறது வரலாற்றுப் புள்ளி விவரம்.
ரோம் நகர் தீப்பற்றிக்கொள்ளும்போது, ரோம் நாட்டைக் ஆண்டுக்கொண்டிருந்த ஜூலியோ கிளாடியன் வம்சத்தைச் சேர்ந்த நீரோ மன்னன் பிடில் இசைத்துக்கொண்டிருந்ததாக சில கதைகள் மூலம் தெரிந்திருப்போம். ஆனால், உண்மையில் நகரம் அழிந்ததைக் கேள்விப்பட்டதும் பதைபதைப்போனாராம் நீரோ. தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் அளித்ததோடு, அந்த மக்கள் தங்குவதற்கு தன் அரண்மனையிலே இடம் கொடுத்தாராம். இதை ரோம் நகரத்தின் செனட்டர் டாசிட்டஸ் தன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, நீரோ மன்னன், அந்த நகரத்தை மறுபடி எப்படி உருவாக்க வேண்டும். அதிலும் கட்டடங்கள் தீப்பற்றிக்கொள்ளாதவாறு எப்படி உருவாக்கவேண்டும் என்று வல்லுநர்களை வைத்து ஆராய்ந்து நகரத்தை புணரமைத்ததாக வரலாறு சான்றளிக்கிறது. அப்படியென்றால், தீ விபத்துக்குறித்த விழிப்புணர்வும், அதன் தேவையையும் உணர ஆரம்பித்தது ரோம் பேரரசு காலத்திலே இருந்திருப்பது நமக்கு இந்த சம்பவம் மூலம் தெளிவாகிறது.
20ம் நூற்றாண்டில் தொழிற்புரட்சிக்குப் பிறகு பெருகிய வேதியியல் சம்பந்தமான உற்பத்தி, பொறியியல் சார்ந்த உற்பத்தி இவைகளினால் ஏற்படும் தீ விபத்துக்கள் அதிகமானது. அத்தகைய தீவிபத்துக்களை தடுப்பதற்கு என்னமாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்த ஆராய்ச்சிகள் அதிகமாக நடந்தன.
அதைத் தொடர்ந்து இது சம்பந்தமான விழிப்புணர்வும், கல்வியும் இளைய தலைமுறையினருக்கு வேண்டும் என்பதற்காக முதன்முதலாக ஃபயர் சேப்ட்டி என்ஜினீயரிங் பட்டப்படிப்பு 1903ம் ஆண்டு மத்திய மேற்கு அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் உள்ள ஆர்மர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (தற்போது இது இலினாய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்று அழைக்கப்படுகிறது) கல்வி நிலையத்தில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பொறியியல் சார்ந்த விஷயங்களில் தீத் தடுப்பு முறை மிகவும் அவசியமான ஒன்றாகப்பட்டதால், இந்தக் கல்வி சார்ந்த விஷயமும் தேவைப்பட்டது. பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாகவும், இந்தப் படிப்பின் அவசியத்தையும் பல்வேறு நாடுகள் புரிய ஆரம்பித்தது. அதன் விளைவாக இன்ஸ்டிட்யூட் ஆஃப் பயர் என்ஜினியரிங் 1918ம் ஆண்டு லண்டனிலும், சொசைட்டி ஆஃப் பயர் புரொடக்ஷன் என்ஜினியர் படிப்பு 1950ம் ஆண்டு அமெரிக்காவிலும் தொடங்கப்பட்டது.
இந்தியாவில் தீ தடுப்புக்கான பயிற்சி கல்விநிலையம் ஆரம்பிப்பதற்கான யோசனையும் திட்டமும் 1950ஆம் ஆண்டுதான் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் 1956ஆம் ஆண்டு தேசிய தீ தடுப்பிற்கான கல்லூரி 1956ஆம் ஆண்டு, உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூரில் தொடங்கப்பட்டது. ஆனால், சிலகாலங்களுக்குப் பின் இந்த கல்வி நிலையம் நாக்பூர் நகரத்திற்கு மாற்றப்பட்டது. இந்த கல்லூரி முற்றிலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.
ஆரம்ப கால கட்டத்தில் இந்தக் கல்லூரியில் தீத் தடுப்பிற்கான படிப்பு மட்டும் ஒரு குறிப்பிட்ட சில மாதங்களுக்கு மட்டுமே கற்றுக்கொடுக்கப்பட்டது. அதன்பின் நாட்டின் வளர்ச்சி ஆலைகள் பெருக்கத்தால், இந்தப் படிப்பின் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து, டிப்ளமோ மற்றும் அட்வான்ஸ் டிப்ளமோ படிப்புகள் கொண்டு வரப்பட்டன. இங்கு படித்து வெளியேறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை மத்திய மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அங்கீகாரம் செய்ததோடு, நடுத்தர மேலாண்மை நிறுவனங்களிலும், மத்திய அரசு தேர்வாணையத்தின் கீழும் இந்தப் படிப்புக்கு அங்கீகாரம் கிடைத்தது.
முதன் முறையாக 1978 ஆம் ஆண்டுதான் இந்தியாவில் முதல் முதலில் தீ தடுப்பு பயிற்சிக்காக பொறியியல் படிப்பு தொடங்கப்பட்டது. மூன்றரை ஆண்டு படிப்பான இந்தப் பட்டப் படிப்பு முடித்தவர்கள் படித்து முடித்தவுடன் பெரிய பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்து, ஆயிரக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள்.
என்னென்ன படிப்புகள் உள்ளன?
சப்-ஆபிஸர் கோர்ஸ். இந்தப் படிப்பு வெறும் 6 மாத கால படிப்புதான். இந்தப் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏதாவது அங்கீகரிக்கப்பட்ட ஒரு கல்வி நிலையத்தில் பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்கவேண்டும் (10+2). இவர்கள் உடல் தகுதியின் அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப் படுவார்கள்.
ஸ்டேஷன் ஆபீஸர் அண்ட் இன்ஸ்ட்ரக்டர் கோர்ஸில் சேர விரும்புபவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் விலக்களிக்கப்படும். மொத்தம் 30 இடங்களே உள்ள இந்தப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பதாரர்கள், இதே கல்லூரியில் சப் – ஆபீஸர் படிப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அதோடு ஃபயர் மேனாக வேலை பார்த்த அனுபவம் பெற்றிருக்கவேண்டும். இவர்களும் உடல் தகுதியின் அடிப்படையிலேயே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தப் படிப்பும் 6 மாத காலம்தான்.
டிவிஷன் ஆபீஸர் படிப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50 வயதுக்கு குறையாமல் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக இந்த கல்வி நிலையத்தில் டிப்ளமோ மற்றும் அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்கவேண்டும். ஸ்டேஷன் ஆபீஸர் பதவியில் 3 ஆண்டுகள் பதவி வகித்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் லைசன்சும் பெற்றிருக்கவேண்டும். இந்தப் பதவிக்கும் உடல் தகுதியின் அடிப்படையில் இந்த படிப்புக்கு சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். 20 இடங்களே உள்ள இந்தப் படிப்பு, வெறும் ஐந்தரை மாத கால அளவுதான்.
இந்தக் கல்வி நிலையத்தில் உள்ள இன்ஜினியரிங் பட்டப் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் 19 வயதிலிருந்து 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்தப் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் பி.எஸ்சி நாக்பூர் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அல்லது நாட்டில் உள்ள ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இயற்பியல் அல்லது வேதியியல் பாடங்களோடு கணிதத்தை துணைப்பாடமாக எடுத்து தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால், பயர் சர்வீஸ் காலேஜில் சேரும்போது, பி.எஸ்சி முழுவதும் தேர்ச்சிப் பெற்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு, உடல் தகுதியின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தப் படிப்புக்கு வெறும் முப்பது இடங்களே உள்ளன.
பயர் ப்ரிவென்ஷன் படிப்புக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் முப்பது வயதுக்குள் இருக்க வேண்டும். 20 இடங்களே உள்ள இந்தப் படிப்புக்கான காலம் ஒன்றரை மாதங்கள்தான்.
வேலைவாய்ப்பு எப்படி?
சேப்ட்டி இன்ஸ்பெக்டர், சேப்ட்டி இன்ஜினீயர், சேப்ட்டி ஆபீஸர், சேப்ட்டி சூப்பர்வைசர், சேப்ட்டி அசிஸ்டெண்ட், பயர் புரடக்ஷன் டெக்னீஷியன், சேப்ட்டி ஆடிட்டர், ஃபயர் சூப்பர்வைசர், ஃபயர் மேன், ஹெல்த் அஸிஸ்டெண்ட், ஃபயர் ஆபீஸர் போன்ற பதவிகளுக்கு நாட்டில் உள்ள பல்வேறு பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் படித்து முடித்தவுடனேயே அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் கிடைக்கிறது.
இந்தக் கல்லூரியில் பயர் இன்ஜினீயரிங் படிப்பு முடித்தவர்கள்தான் மத்திய தேர்வாணையம் நடத்தும் இந்தியன் இன்ஜினீயரிங் சர்வீஸ் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சிப் பெற்று அரசு தீயணைப்புத் துறையின் பெரிய பதவிகளில் இருக்கிறார்கள்.
சேவை மனப்பாண்மையும், ரிஸ்க் எடுத்து வேலைப் பார்க்கும் ஆர்வமும், படித்து முடித்தவுடன் எளிதான முறையில் பணிவாய்ப்புக்கும் ஏற்றப் படிப்பு இந்த பயர் சேப்ட்டி இன்ஜினீயரிங் படிப்பு.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here