கவின் கலைப் படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு!

0
359

நுழைவுத்தேர்வு என்ற உடன் நமக்கு சட்டென்று தற்போது நினைவுக்கு வருவது நீட் என்ற ஒன்று மட்டும்தான். மருத்துவத்திற்கு மட்டுமல்ல நர்சிங், பொறியியல் கவின் கலை, பாதுகாப்புத்துறை, மொழியியல் இப்படி பல்வேறு படிப்புகளுக்கு தேசிய நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேசிய நுழைவுத்தேர்வு எழுதுவதன் மூலம் நாட்டின் தலைசிறந்த கல்வி நிலையத்தில் நீங்கள் விரும்பிய படிப்பை படிக்க முடியும்.
சிறு வயதில் இருந்தே படம் வரைவது என்றால் ரொம்பப் பிடிக்கும், வண்ணம் தீட்டுதல் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். சிலை வடித்தலை ரசித்து ரசித்து பார்ப்பேன் என்று ஓவியம் குறித்து பல மணி நேரம் பேசிக்கொண்டிருப்பவரா, காலம் முழுவதும் ஓவியம் தீட்டுதலே பணியாக இருக்காதா என்று ஆசைப்படும் ஒவ்வொரு மாணவருக்கும் இந்த நுழைவுத்தேர்வு பெரிய வரப்பிரசாதம்.
கலைப் படிப்பினால் என்ன மாதிரியான வேலைவாய்ப்பு இருக்கிறது?
பெரும்பாலும் பெற்றோரை பொருத்தவரையில் அவர்களுக்கு தன் மகன் அல்லது மகள் ஒரு மருத்துவராகவோ, அல்லது பொறியாளராகவோ வரவே விரும்புகிறார்கள். ஏனெனில் அந்தப் படிப்புகளுக்கு மட்டுமே படித்தவுடன் வேலைவாய்ப்பு அதிகமிருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் எல்லாப் படிப்புக்குமே மவுசு அதிகம்தான். ஆனால், எத்தகைய கல்வி நிலையத்தை தேர்வு செய்திருக்கிறீர்கள்? நீங்கள் எப்படி படிக்கிறீர்கள் என்பது பொருத்தே உங்களின் கனவு நனவாகிறது.
கவின் கலைப் படிப்பை படித்து முடித்து வரும் மாணவர்களுக்கு,
* விளம்பர நிறுவனங்கள்
* பத்திரிகை துறைகள்
* தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பில்
* பெரும் நிறுவனங்களின் லோகோ வடிவமைப்பில்
* திரைப்பட துறையில்
* கல்வித்துறையில்
* நிறுவன வடிவமைப்பில்
இப்படி பல்வேறு பிரிவுகளில் பணி வாய்ப்பு காத்திருக்கிறது. படித்து முடித்தவுடன் மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஊதியம் பெறமுடியும். படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பை பெற்றுத்தரக்கூடிய இந்தப் படிப்பை தேசிய அளவில் சிறந்த கல்வி நிலையத்தில் படிக்க பி.எஃப்.ஏ. நுழைவுத்தேர்வை எழுதியாக வேண்டும்.
பி.எ.ஃப்.ஏ. நுழைவுத்தேர்வு:
இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கவின் கலைக் கல்லூரியில் இள நிலை ஓவியப் பட்டப் படிப்பில் சேருவதற்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. புகழ்பெற்ற கவின் கலைக் கல்வி நிலையங்களில் படிக்கும்போது, பல்வேறு தரப்பட்ட மாணவர்களுடன் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளும் அதிகம் என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
பி.எஃப்.ஏ. (இள நிலை கவின் கலை பட்டப்படிப்பு), பி.வி.ஏ. (இள நிலை கானொளி கலைப் படிப்பு) என்ற இரண்டு படிப்புகளில் சேருவதற்காக இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
படிப்பைப் பற்றிய விவரங்கள்:
கால இடைவெளி : இந்த இள நிலைப் பட்டப் படிப்புக்கான காலம் மொத்தம் 4 ஆண்டுகள்.
படிப்பு நிலைகள்: இந்தப் படிப்பை முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவும் படிக்கலாம்.
கல்வி பயிற்சிக் கட்டணம் : ரூ.2 லட்சம் – 6 லட்சம்.
வயது வரம்பு : 22 வயதுவரை இருக்கலாம்.
நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்:
இந்த நுழைவுத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
இந்த இள நிலைப் பட்டப் படிப்பில் அப்ளைட் ஆர்ட்ஸ், பெயிண்ட்டிங், ஸ்கல்ப்ச்சர், அனிமேஷன் உள்ளிட்ட விஷயங்கள் கற்றுத்தரப்படும்.
இந்த நுழைவுத்தேர்வு எப்படியிருக்கும்?
இந்த நுழைவுத்தேர்வு கேள்வித்தாள் முழுவதும் அப்ஜெக்ட்டிவ் முறையில் அமைந்திருக்கும். மொத்தம் 100 முதல் 200 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு நேரம் மொத்தம் 2 மணி நேரம். இரண்டு வகையான கேள்வித்தாள் இதில் இடம்பெற்றிருக்கும். முதல் பிரிவு கேள்வித்தாள் அப்ஜெக்ட்டிவ் முறையிலும், இரண்டாவது கேள்வித்தாள் கலைத்திறமையை நிரூபிக்கும் வகையில் (ஓவியம் வரைந்து காட்டவேண்டியதிருக்கும்) கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
இந்தியாவின் தலை சிறந்த ஓவியக் கல்லூரிகள்:
1. சத்ரபதி சாஹுஜி மஹாராஜ் பல்கலைக்கழகம், கான்பூர்
2. கமலா நேரு மகளிர் கல்லூரி, காபூர்தலா.
3. டில்லி பல்கலைக்கழகம், டில்லி
4. லக்னோ பல்கலைக்கழகம், லக்னோ
5. ஒஸ்மானியா பல்கலைக்கழகம், ஹைதராபாத்.
6. ஜாமியா மில்லையா இஸ்லாமியா பல்கலைக்கழகம், டில்லி
7. மும்பை பல்கலைக்கழகம், மும்பை.
8. சாவித்ரிபாலே புனே பல்கலைக்கழகம், புனே
9. அமிதி பல்கலைக்கழகம், நொய்டா

மேற்கண்ட இந்தியாவின் தலைசிறந்த இந்த ஒன்பது பல்கலைக்கழகத்தில் நீங்கள் ஏதேனும் ஒன்றில் தேர்வு செய்து படிக்க பி.எஃப்.ஏ. நுழைவுத்தேர்வை எழுதியாகவேண்டியது கட்டாயம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியாகும்.

பெட்டிச் செய்தி:
இந்தியாவின் தலைசிறந்த மற்றும் சில ஓவியக் கல்லூரிகள்:
அகடமி ஆஃப் ஆர்ட்ஸ் ஆஃப் இந்தியா, சென்னை
அம்ரிதா ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ், எர்ணாகுளம்
ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்,
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிராஃப்ட்ஸ் அண்ட் டிசைன், ஜெய்ப்பூர்
நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்.
ரவி வர்மா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், மாவேலிக்கரா
சர் ஜே.ஜே. இன்ஸ்டிட்யூட் ஆஃப் அப்ளைட் ஆர்ட், மும்பை
மும்பை பல்கலைக்கழகம், மும்பை
விஷ்வ பாரதி பல்கலைக்கழகம், மேற்கு வங்காளம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here