இதெல்லாம் நியாயமா : கொந்தளிக்கும் தேர்வர்கள்!

0
175

சில விஷயங்களை, சில செயல்பாடுகளைப் பார்க்கும்போது இதெல்லாம் நியாயமா? என்று கேட்கத் தோன்றும். நாமும் கேட்போம். ஆனால், மனதிற்குள். சத்தமிட்டு குரல் கொடுத்தால், பிரச்சினை வந்துவிடுமோ, நம்மை கைது செய்துவிடுவார்களோ, நம்மை முக நூல் பக்கத்தில் விமர்சிப்பார்களோ, என்று பல்வேறு வகையில் பயந்து பயந்தே நம் கண் முன் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட நாம் அலட்சியமாய் விட்டுவிடுகிறோம். இதனால், ஏதோ நாம் ஒரு விஷயத்தைக் கடந்துவிட்டதுபோல் நினைத்தாலும், இந்த விஷயத்தால் பாதிக்கப்படுவது உங்கள் உறவினர்களின் குழந்தைகள், உங்கள் அண்டைவீட்டில் வசிக்கும் குழந்தைகள், எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளும் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்தால், இந்தச் சமூகத்தில் எதையும் மாற்றிவிட முடியும். சின்ன சின்ன பிரச்சினைகளைக் கூட கோரிகையாய் வெளியிடுவோம். அரசின் கவனமின்மையை சுட்டிக்காட்டுவோம். நிச்சயம் ஒரு நாள் நிச்சயம் அந்த கோரிக்கைகள் சரிசெய்யப்படும், களையப்படும்.
அந்த வகையில் போட்டித் தேர்வில் நடக்கும் மிகப்பெரும் அநீதி தான் தேர்வுக் கட்டணம் செலுத்துவது.
போட்டித் தேர்வு எழுதக்கூடிய ஒவ்வொரு மாணவர்களும் இந்தப் பிரச்சினையை நாள்தோறும் எதிர்கொள்ளவே செய்கிறார்கள்.
வேலையில்லா திண்டாட்டம் பிரச்சினை நாட்டில் விஸ்வரூபமாய் எழுந்து நிற்கிறது. பொறியியல் பட்டதாரிகளுக்கே வேலைவாய்ப்பு என்பது குதிரைகொம்பாய் இருக்க, பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, கலை அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு என்பது சிம்ம சொப்பனமாகவே இருக்கிறது.
வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் சமுதாயத்தில் சந்திக்கும் அவமானங்களைக் கடந்து வீட்டில் படும் அவமானங்கள் சொல்லி மாளாது. இந்தப் போட்டித் தேர்வு இல்லையென்றால், அடுத்தப் போட்டித் தேர்வு, அடுத்தப் போட்டித் தேர்வும் இல்லையென்றால் அதற்கடுத்தப் போட்டித் தேர்வு என்று மனம் தளறாமல் போட்டித் தேர்வுகளே எழுதிக்கொண்டிருக்கிறார்கள், ஏதாவது ஒரு வேலைவாய்ப்பு கிடைத்துவிடாதா என்ற கனவில்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்து, வாழ்வாதார பிரச்சினையை எதிர்கொள்வதே சவாலாக இருக்கும் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞருக்கு போட்டித் தேர்வு தேர்ச்சிப் பெறுவது என்பதைக் கடந்து அந்தத் தேர்விற்கு விண்ணப்பிப்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
ஒரு தேர்வுக்கு 500 ரூபாய் கட்டணம். இன்னொரு தேர்வுக்கு 750 ரூபாய் கட்டணம், இன்னொரு தேர்வுக்கு ரூ.250 கட்டணம் என்று எந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதாக இருந்தாலும் பணம் தான். அரசு பணிவாய்ப்பைக் கடந்து தற்போது இந்த விண்ணப்பக் கட்டணம் தனியார் துறை வரை வந்து நிற்கிறது.
தேர்வுக் கட்டணம் வசூலிப்பதில் தவறில்லை. ஆனால், தேர்வுக் கட்டணத்தில் கூட ஒதுக்கீட்டு அடிப்படையில் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?
பணிவாய்ப்பில் தான், திறமை என்ற ஒன்றைக் கடந்து இட ஒதுக்கீட்டு முறையை அரசு கடைப்பிடித்து வருகிறது. ஆனால், விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலுமா? இது எந்த வகையில் நீதி என்பதை அரசுதான் தெளிவுப்படுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் என்பது தொடக்கக் காலத்தில் இருந்தது நியாயமே. ஏனெனில் விண்ணப்பங்கள் அனைத்தும் காகிதத்தில் அச்சிட வேண்டும். அந்த விண்ணப்பங்களை கவரில் வைக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை சரியாக வினியோகிப்பதிலிருந்து அதை முறைப்படுத்துவட்து வரை பல சிக்கல்கள் இருந்தன. சில நேரங்களில் அந்த மாதிரியான நேரங்களில் தாற்காலிக பணியாளர்களைக்கூட அரசுத் துறைகள் நியமித்திருந்தன.
ஆனால், இன்று நிலை அப்படியில்லையே. எல்லா போட்டித் தேர்வுகளுக்கும், விண்ணப்பங்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கிறோம். ஹால் டிக்கெட் மெயிலியே வந்திவிடுகிறது. விண்ணப்பங்களை முறைப்படுத்துவது, அதை பராமரிப்பது எல்லாமே கணினி மயமாக்கப்பட்டப் பிறகு எதற்காக இவ்வளவு உச்சபட்சமான தேர்வுக்கட்டணம் என்பது புரியவில்லை.
தேர்வுக் கட்டணம் ரூ.100க்குள் இருந்தால், வேலையில்லா பட்டதாரிகள் பலர் பல போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பாக இருக்கும். ஆனால், விண்ணப்பக் கட்டணத்தின் விலையைப் பொறுத்தே இப்போது போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கட்டாயச் சூழலுக்கு விண்ணப்பதாரர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
பட்டியலில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் விண்ணப்பக் கட்டண விலக்கானது, பொதுப்பிரிவில் வறுமைக்கோட்டில் நின்றுகொண்டிருக்கும் எங்கள் தலையில் அரசு ஏற்றி வைக்கிறதோ என்றும் விண்ணப்பதாரர்களை சந்தேகப்பட வைக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு என்ன பதில் வைத்திருக்கிறது அரசு போட்டித் தேர்வு ஆணையம்.
இப்போது போட்டித் தேர்வர்கள் அரசுக்கு முன் வைக்கும் கோரிக்கைகள் இவைதான்:
• வேலையில்லா திண்டாட்டம் உச்சகட்டத்தில் இருக்கும் இந்த நிலையில் போட்டித் தேர்விற்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்களிக்க வேண்டும்.
• தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் எந்தவித இட ஒதுக்கீட்டையும் அரசு அனுமதிக்கக்கூடாது.
• விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்க முடியாத பட்சத்தில், குறைந்தபட்சக் கட்டணத்தை மட்டும் அரசு வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய முடியாத மத்திய, மாநில அரசுகள் குறைந்தபட்சம் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கவாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போட்டித்தேர்வர்கள் அத்தனைபேரின் ஒட்டுமொத்த கோரிக்கை!!


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here