கவுன்சலிங் ஸ்பெஷல் 2 – கல்லூரியை தேர்வு செய்வது எப்படி?

0
131

பிளஸ் டூ தேர்வு முடிந்து கையில் மதிப்பெண் அட்டையுடன் இருப்பீர்கள். அடுத்தகட்டமாக பொறியியல் படிப்பை தேர்வு செய்யப்போகும் மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங்கை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பீர்கள்.
கவுன்சலிங் செல்லும் முன் மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
முதலில் கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பார்க்க தெரிந்திருக்க வேண்டும்.
அதாவது உங்களுடைய கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பெற்றிருக்கும் மதிப்பெண்களை 200க்கு மாற்ற வேண்டும். அதாவது கணிதப் பாடத்தில் நீங்கள் எடுத்த மதிப்பெண்கள் 100 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் பாடம் மற்றும் வேதியியல் பாடத்தில் 50க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் என்பதைப் பார்க்க வேண்டும். பிறகு இந்த மூன்று பாடங்களில் வந்த மொத்த மதிப்பெண்களின் கூடுதல் தொகையே கட்-ஆஃப் மதிப்பெண்கள் எனப்படும்.
கட் ஆஃப் மதிப்பெண்ணை வைத்து எப்படி கல்லூரியை தேர்வு செய்வது?
தமிழ் நாட்டில் இயங்கும் அத்தனை கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தான் செயல்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆண்டு தோறும் பொறியியல் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கையும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தி வருகிறது.
கட் ஆஃப் மதிப்பெண்களில் முதல் நிலைப் பட்டியலில் இடம்பெறும் மாணவர்கள் தமிழகத்தில் முன்னணி கல்லூரிகளின் வரிசையிலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கல்லூரி வளாகத்திலும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை கட ஆஃப் மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களுக்கு, அவர்களின் மதிப்பெண்களைப் பொறுத்து கல்லூரிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும். இந்த இட ஒதுக்கீடு பல்வேறு வகையில் கணிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவர் விளையாட்டு வீரரா, முன்னாள் படைவீரர்களின் வாரிசா, வெளி நாட்டு வம்சாவளியினரா, சாதிய அட்டவணையின் கீழ் இட ஒதுக்கீடு கோருகிறாரா, மாற்றுத் திறனாளியா, மாற்று பாலினத்தவரா என்கிற படி நிலைகளில் இட ஒதுக்கீடானது வழங்கப்படுகிறது.
நீங்கள் செய்யவேண்டியது முதல் கட்டமாக இதைத்தான்.
அதாவது நீங்கள் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண்கள் அதாவது நீங்கள் பிளஸ் டூ தேர்வில் கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய மூன்று பாடங்களையும் சேர்த்து உதாரணத்திற்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் 200க்கு 145 மதிப்பெண்கள் எடுத்திருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த மதிப்பெண்ணுக்கு கடந்த ஆண்டு (2018) மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு (2017) ஆம் ஆண்டு எந்தெந்த கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் அதாவது.
நீங்கள் கூகுள் தேடுபொறியில் கட் ஆஃப் மதிப்பெண்களை குறிப்பிட்டு கடந்த ஆண்டு கல்லூரி நிலவரம் என்று பதிவிட்டால் உங்களுக்கு கல்லூரிப் பட்டியல் வரும்.
அந்தப் பட்டியலில் உங்களுடைய கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு 10 மதிப்பெண்களுக்கு குறைவாக அதே நேரத்தில் 10 மதிப்பெண்கள் அதிகமாக தேட வேண்டும். அதாவது 135 மதிப்பெண்களிலிருந்து 155 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டு எந்த பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது என்ற பட்டியல் உங்களுக்கு கிடைக்கும்.
அந்த கல்லூரியின் பெயர்களை முதலில் நீங்கள் ஒரு நோட்டில் குறிப்பெடுத்துக்கொண்டு, அந்தக் கல்லூரிகளின் பட்டியலில் நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் பொறியியல் கல்லூரிகளை அடுத்ததாக வகைப்படுத்த வேண்டும்.
அதற்குப் படியாக அந்தக் கல்லூரியின் தரம், நிலை, கடந்த ஆண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு வளாகத் தேர்வு போன்ற தகவல்களை சேர்க்க வேண்டும். இவ்வளவு தகவல்களை சேர்த்த பிற்பாடே ஒரு கல்லூரியின் உண்மையான நிலை என்னவென்று தெரிய வரும்.
இந்தத் தகவல்களை நீங்கள் கவுன்சலிங்க் செல்வதற்கு முன்பாகவே தயார் நிலையில் வைத்திருந்தால், பொறியியல் கல்லூரி கவுன்சலிங்கில் மிக எளிமையாக கல்லூரிகளை தேர்வு செய்ய முடியும்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here