பொறியியல் கவுன்சலிங் 3 : யாரைத்தான் நம்புவதோ?

0
158

பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவது பொறியியல் கல்லூரியை எப்படி தேர்வு செய்வது என்பதைத்தான்.

இந்தச் சேனலில் இந்த கல்வியாளர் இந்தக் கல்லூரிதான் சிறந்தது என்கிறார்.  வேறொரு சேனலில் இன்னொரு கல்வியாளர் இந்தக் கல்லூரிதான் சிறந்தது என்கிறார்.  தினசரி செய்தித்தாள்களில் வரும் விளம்பரத்திலோ என்னவெல்லாமோ ரேங்கிங் போடுகிறார்கள்.  அதில் எங்கள் கல்லூரியே சிறந்தது என்று மார்தட்டிக் கொள்கிறார்கள்.

உண்மையில் இந்தக் கல்லூரிகளில் எது சிறந்தது, யார் சிறந்தவர்கள்? யார் சொல்வதை நம்புவது? ஒரே குழப்பமாக இருக்கிறது என்ற புலம்பல்கள் தான் பொறியியல் கல்லூரிகளைத் தேர்வு செய்யும் பெற்றோர்களிடம் இருக்கிறது.

உங்கள் குழந்தையின் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகும் மிக முக்கியமான கட்டத்தில் பெற்றோர்களாகிய நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள்.  வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டம் என்றால், பெற்றோர்களாகிய நீங்கள் எவ்வளவு முனைப்புடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.  இந்த சமூகத்தில் நல்லது இருக்கிறது அதே நேரத்தில் நல்லதைவிட கெட்டது அதிகமே பரவிக்கிடக்கிறது.  எனும்போது, கெட்டதை நீக்கிவிட்டு, நல்லதை கண்டுபிடிக்கும் நிலையில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம்.

யார் சொல்வதை நம்புவது? எந்த சேனலை நம்புவது? என்று குழம்புவதைவிட, நீங்கள் செய்யும் கள ஆய்வே உங்களுடைய குழந்தைக்கு நல்ல பொறியியல் கல்லூரியைப் பெற்றுத் தரும்.

பெரும்பாலும் நீங்கள் கள ஆய்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களைத்தான் இங்கு பதிவிட போகிறோம்.

1.முடிந்தவரை நீங்கள் தேர்வு செய்யும் கல்லூரியானது ஆரம்பித்து குறைந்தபட்சம் 25 ஆண்டுகளாகவது ஆகியிருக்க வேண்டும்.

  1. நீங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும் 25 ஆண்டுக்கு மேற்பட்ட கல்லூரிகளின் பின்புலங்களை இதுவரை மீடியாக்களில் வந்திருக்கும் செய்திகளை வைத்து தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
  2. நீங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும் கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழக தர வரிசையில் எத்தனாவது இடத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். சம்பந்தப்பட்டக் கல்லூரி எத்தனை நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கிறது என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
  3. அதற்கடுத்தப்படியாக கல்லூரியின் இணையதளத்திற்கு சென்று கல்லூரியின் வரலாறு, கல்லூரியின் ஆய்வக வசதிகள், கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் பட்டியல் அவர்கள் தற்போது இருக்கும் நிலை ஆகியவற்றை முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள். இவைதான், அந்தக் கல்லூரியின் தரத்தை ஓரளவிற்கு உங்களுக்கு உணரச் செய்யும்.
  4. இது தவிர்த்து அந்தக் கல்லூரி குறித்து எதிர்மறை விமர்சனங்கள், பாதிக்கப்பட்டோரின் புலம்பல்கள் ஆகியவற்றை தெரிந்துகொள்ள கூகுளிற்கு சென்று கல்லூரியின் பெயரை பதிவிட்டு கூடவே கம்ப்ளைண்ட்ஸ், ரிவ்யூ, ஃபீட்பேக் என்று தனித்தனியாக டைப் செய்து, அதில் வரும் விவரங்களை முழுமையாக படித்து தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
  5. அதற்கு அடுத்தப்படியாக கல்லூரி கடந்த ஆண்டு நடத்தி முடித்த வளாகத் தேர்வையும், அதில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு வழங்கிய நிறுவனங்களையும் பட்டியலையும் பெறுங்கள். இந்தப் பட்டியல் எளிதாக கிடைத்துவிடும். ஆனால், வளாகத்தேர்வுக்கு வந்த நிறுவனங்கள் உண்மையில் பணிவாய்ப்பை வழங்கினார்களா? என்பதை களவு ஆய்வு செய்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்.  அதாவது வளாகத்தேர்வில் கலந்துகொண்ட மாணவர்கள் குறைந்தபட்சம் 5 பேரையாவது நேரில் சந்திக்க வேண்டும். அவர்களிடம் வளாகத் தேர்வு நடந்த விதம், அவர்கள் தேர்வு செய்த முறை.  மாணவர்கள் பணிக்குச் சேர்ந்த விவரங்கள் போன்றவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

இவையெல்லாவற்றையும் பெற்றோர்களாக இருந்து நீங்கள் சரியாக ஆய்வு செய்தீர்களேயானால், நிச்சயம் உங்கள் மகன் அல்லது மகளுக்கு நிச்சயம் ஒரு நல்லதொரு பொறியியல் கல்லூரியை நீங்கள் அடையாளம் காட்டுவீர்கள்.

பொறியியல் படிப்பு குறித்து தனிப்பட்ட முறையில் கவுன்சலிங் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் : 6380017652 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here