தேவை கல்வி புரட்சி!?

0
328

சம்பவம் 1: சமீபத்தில் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்திருக்கிறார்கள். இந்தச் செய்தியை நாம் எல்லோருமே கடந்து போயிருப்போம். இன்னும் சிலர் இந்தச் செய்தியை மறந்தேபோயிருப்போம்.

சம்பவம் 2: திருப்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாததால், மாணவரை பள்ளியை விட்டு வெளியே அனுப்பிய செய்தி (நம்முடைய செய்தி தளத்தில் திருப்பூரில் காந்தி போராட்டம் என்று பதிவிட்டிருக்கிறோம்)

உயிரை மாய்த்த செய்தியைப் படித்த பல பெற்றோர்களின் மனதில் ஓடியது ஒரே ஒரு விஷயம் தான், இந்த நிலை நமக்கு என்று வருமோ என்பதுதான்.

சாதாரணமாய் கடந்துவிடும் செய்தி இதுவல்ல. இந்த நிலை மாறவேண்டுமென்றால் நாம் எல்லோரும் ஒட்டுமொத்தமாய் குரல் எழுப்ப வேண்டும்… இந்தக் குரல் அரசின் செவிப்பறையை கிழித்தெறிய வேண்டும். இது நடந்தால், நாம் நினைக்கும் கல்வி மாற்றம் நம் மாநிலத்திலும் நிகழும்.

அரசு நாம் நினைக்கும்படி இயங்கவேண்டுமென்றால், ஒட்டுமொத்தமாய் குரல் எழுப்ப வேண்டும், அவ்வளவுதான்.

இந்தச் செய்தி உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்தி அல்ல. ஆனால், உணர்வுகளை விழிக்கச் செய்யும் செய்தியே.

இந்தச் செய்தி கண்டனச் செய்தி அல்ல, அரசுக்கு யோசனை சொல்லும் செய்தி. இந்த யோசனை பாரத் ஜாப்ஸ் செய்தித் தளத்திற்கு தோன்றிய புது யோசனை அல்ல. எல்லா கல்வியாளர்களாலேயும், பலமுறை பேசப்பட்டதுதான். அதை மறுபடியும் நினைவுப்படுத்துகிறோம் அவ்வளவுதான்.

தனியார் பள்ளிகள் அடிக்கும் கொட்டங்கள்:

· எந்தக் காரணத்தைக் கொண்டும், அரசு விதித்திருக்கும் விதிகளை பெரும்பாலான தனியார் பள்ளிகள் மதிக்காமல் நடப்பது.
· கல்விக் கட்டணக் கொள்ளை.
· சேவை என்ற நிலை மாறி பெரும்பாலான தனியார் கல்வி நிலையங்கள் (யுனிஃபார்ம் விற்பனை, நோட் புத்தகம் விற்பனை, ஷூ, டை, சாக்ஸ் விற்பனை) வர்த்தக மையங்களாக மாறி வருவது.
· பெரும்பாலான கல்வி நிலையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களே.
· எல்லா கொடுமைகளையும் பெற்றோர்கள் சகித்து நடந்தாலும், பல தனியார் கல்வி நிலையங்கள் சரியான முறையில் வகுப்பு நடத்துவதே இல்லை என்பது இன்னொரு மாபெரும் குற்றச்சாட்டு.

பெற்றோர்களுக்கு இருக்கும் சங்கடங்கள்:

· தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தப் பிறகு அங்கு நடக்கும் கொடுமைகளை, ஆசிரியர்களிடமோ, பள்ளி நிர்வாகத்திடமோ சொல்ல முடிவதில்லை. ஒருவேளை கொடுமைகளை தட்டிக் கேட்க நினைத்தால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் ஆசிரியர்களால் ஓரங்கட்டப்படும் நிலை இருக்கிறது.
· தரம் சரியில்லாவிட்டாலும், பள்ளியிலிருந்து மாற்றுவதற்கு சில பள்ளி நிர்வாகங்கள் கடுமையான சட்ட திட்டங்களை வகுத்து வைத்திருக்கின்றன. அதை மீறி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றுவதில் சிக்கல் இருக்கிறது.

அரசு செய்யவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பது:

· அரசுப் பள்ளிகள் என்றாலே, கழிப்பறைகள் சுத்தமாக இருக்காது. சில வளாகங்களில் கழிப்பறைகளே கிடையாது என்ற குறைகள்.
· ஆசிரியர்கள் முறையாக வகுப்புக்கு வராதது. வகுப்புகளை தொடர்ந்து நடத்தாது
இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளினாலேயே அரசுப்பள்ளிகளை புறந்தள்ளிவிட்டு தனியார் பள்ளிகளை மக்கள் நாடிச் செல்கின்றனர்.

அரசு ஏன் கட்டணப் பள்ளிகளை தொடங்கக்கூடாது?

சமீபத்தில் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்துவருகிறது. ஆங்கிலப் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளிகளை கொண்டுவருவதற்காக அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்தது உண்மையில் பாராட்டத்தகுந்ததுதான்.

அதேபோல, தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் ‘அரசு எலைட் பள்ளி’ தொடங்கினால் என்ன என்பதுதான் தற்போது பெற்றோர்களின் கேள்வியாக இருக்கிறது.
தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. ஆரம்பித்து ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆண்டுக்கு ரூ.40,000 முதல் 2 லட்சம் வரை கட்டணம் செலுத்தியே குழந்தைகளை பெற்றோர்கள் படிக்க வைத்து வருகிறார்கள். அப்படியிருக்கும்போது ஆண்டுக்கு பத்தாயிரம் கட்டணம் அல்லது ஆண்டுக்கு ரூ.5000 கட்டணத்தில் அரசு ஏன் கட்டணப் பள்ளிகளை தொடங்கக்கூடாது.

இந்தப் பள்ளிகளில், இலவச லேப்டாப், இலவச மதிய உணவு, இலவச சைக்கிள், சீருடை, புத்தகங்கள், காலணி… உள்ளிட்ட அரசின் எந்தவொரு இலவசமும் இந்தப் பள்ளிகளுக்கு அரசு அளிக்க வேண்டியதில்லை. தனியார் பள்ளி எப்படி இயங்குகிறதோ அதேபோல… ஆனால் தமிழகம் முழுவதும் ஒரே கட்டணம் என்ற அடிப்படையில் திட்டம் வடிவமைக்கலாமே.

இந்தப் பள்ளியில் பணியாற்றுவதற்கு தனிப்பட்ட முறையில் போட்டித் தேர்வு நடத்தி ஆசிரியர்களை அரசு தேர்வு செய்யலாம். இந்த தேர்வு முறை, ஜாதிய ஒதுக்கீடு இல்லாமல், மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தபட்சம் இரண்டு மொழிகள் (ஆங்கிலம், இந்தி) சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும். பாடத்திட்டம் முழுமையும் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

முதல் கட்டமாக 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இந்தப் பள்ளிகளைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்கலாம். தமிழகம் முழுவதும் இத்தகைய எலைட் பள்ளிகளை அரசு தொடங்கும்போது, தனியார் பள்ளிகளை நோக்கி ஓடும் பெற்றோர்கள், அரசுப் பள்ளிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பிப்பார்கள்.

இந்த எலைட் பள்ளிகளால் அரசு ஆரம்பிக்கும் பட்சத்தில் நடைமுறையில் இருக்கும் சாதகங்கள்:

· இந்தப் பள்ளிகளை தொடங்குவதால், தனிப்பட்ட நிதிச்சுமைகள் ஏதும் அரசுக்கு ஏற்படுவதில்லை.
· குறைந்தபட்சம் இந்தப் பள்ளிகளின் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
· ஆசிரியர்களுக்கு அளிக்கும் ஊதியம் மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணத்திலிருந்தே அளிக்க முடியும்.

பாதகங்கள்:

· எக்காரணத்தைக் கொண்டும், ஏற்கெனவே இயங்கிக்கொண்டிருக்கும் அரசுப் பள்ளி வளாகத்திலேயே எலைட் பள்ளிகளை இயங்க வைத்தால், இந்தத் திட்டம் தோல்வியையெ தழுவும் என்பதால், புதிய வளாகங்களை உருவாக்க வேண்டியதிருக்கும். அந்த நிதிச்சுமை அரசே சரிசெய்து கொள்ள வேண்டியதிருக்கும்.

முதற்கட்டமாக இந்த மாதிரியான அரசு கட்டணப் பள்ளிகளை சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் தொடங்கலாம். இந்தப் பள்ளியின் செயல்பாடு, தேர்வு முடிவுகள், மக்களிடையே இருக்கும் வரவேற்பு ஆகியவற்றைப் பொறுத்து, இந்தப் பள்ளிகளை மாநிலம் முழுவதும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

தற்போது கல்வித்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் அமைச்சர் செங்கோட்டையன், எலைட் பள்ளி யோசனைனை செயல்படுத்தினால், தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த கொட்டத்தை அடக்குவதோடு, தமிழக மக்களின் நெடு நாளைய கோரிக்கை நிறைவேறும். கல்விக் கட்டண கொள்ளையால் நிகழும் தற்கொலைகளும் தடுக்கப்படும்.

நிகழுமா தமிழகத்தில் கல்வி புரட்சி?


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here