மூடத்தனமானதா புதிய கல்விக் கொள்கை?

0
260

இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017ஆம் ஆண்டில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதியன்று தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை ஜூன் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறியது.

இந்த வரைவு அறிக்கை தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

சூர்யா டி.வியில சொன்னப் பிறகுதான் ஏதோ பிரச்சினைன்னு புரிஞ்சதே தவிர முழுசுமா என்னான்னு தெரியல… என்பதுதான் நம்மில் 90 சதவீத பேரின் நிலை. நாம என்னப் பிரச்சினைன்னும் தெரிஞ்சுக்க தயாரா இல்லைங்கறதாலதான் தொடர்ச்சியா மத்திய அரசும், மாநில அரசும் மக்களை பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

புதிய கல்விக் கொள்கை… உங்களுக்குப் புரியும்படியே சொல்றேன்:

1. குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி மூன்று வயது முதல் 7 வயதுவரை என ஐந்து ஆண்டுகளாக இருக்கும் என இந்த வரைவு கூறுகிறது.
2. பழைய கல்வி முறைகளான குருகுலம், மதரசா, பாடசாலை முறை போன்ற புராதன கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவதை இந்த வரைவு முன்வைக்கிறது.
3. மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துதல்.
4. இந்தியா முழுமைக்கும் பள்ளிக்கூடங்களுக்கான பாடப் புத்தகங்களை என்சிஈஆர்டிதான் உருவாக்குமென்றால் மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு பாடப் புத்தகங்களைத் தயாரிக்கும் திறமையே அற்றுப்போய்விடும்.
5. 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தங்கள் எதிர்காலப் படிப்புக்கான பாடங்களை தேர்வுசெய்து படிப்பதை இந்த வரைவு ஊக்கப்படுத்துகிறது.
6. மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு தேசிய திறனறிவுத் தேர்வு.
7. பொறியியல், மருத்துவம் மட்டுமல்ல பி.ஏ. வரலாறு படிக்கணும்னா கூட நுழைவுத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே கல்லூரிக்குப் போக முடியும். அதற்கு தனியாக தேசிய தேர்வு அமைப்பு (நேஷனல் டெஸ்ட்டிங் ஏஜென்சி) என்ற புதிய அமைப்பை உருவாக்கவிருக்கிறது மத்திய அரசு.
8. பாலி, பிராகிருதம், பெர்ஷிய மொழிகளை மேம்படுத்த புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டு நிதியுதவி அளிக்கும்.
9. எம்.பி.பி.எஸ். எம்.டி. தேர்வுகளுக்கு எவ்வாறு நீட் தேர்வு என்பது கட்டாயமோ, அதேபோல் மருத்துவப் படிப்பு முடிந்தவுடன் ‘எக்ஸிட் தேர்வு’ என்ற தேர்வில் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே அவர் மருத்துவப் பணியில் ஈடுபட முடியும்.

இந்த ஆறு விஷயங்களும் தான் புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய முக்கிய விஷயங்கள். பல்கலைக்கழக சட்ட திட்டங்கள், கல்லூரிகள், கல்விக் குழுவின் தலைவர் பொறுப்பு சம்பந்தப்பட்டவை எவற்றையும் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை. சரி புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் சாதக பாதகங்களைப் பார்ப்போம்.

1. குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி மூன்று வயது முதல் 7 வயதுவரை என ஐந்து ஆண்டுகளாக இருக்கும் என இந்த வரைவு கூறுகிறது.

சாதகம் : தற்போதும் நகரங்களில் வசிக்கும் 90 சதவீதத்தினர் தங்கள் குழந்தைகளை 2.5 வயதிலேயே பள்ளியில்சேர்த்து விடுகின்றனர். இன்னும் சிலரோ 2 வயதிலேயே ப்ளே ஸ்கூலில் சேர்த்துவிடும் அவலங்களும் இங்கு நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதனால் இது நகரமக்களுக்கு இந்த நிபந்தனை எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.

பாதகம் : கிராமப்புறங்களில் இன்றும் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளை 5 வயதிலோ அல்லது 6 வயதிலோ தான் பள்ளியில் சேர்க்கிறார்கள். ப்ரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. போன்ற வார்த்தைகள் அவர்கள் கேள்விப்பட்டிராத ஒன்றாக இருக்கும். இந்த நிலையில் இதை கட்டாயமாக்கும்போது, ஒன்றும் அறியாத கிராம வாசிகளும், தங்கள் குழந்தைகளை 3 வயதிலேயே பள்ளியில் சேர்க்கும் கட்டாயத்தில் தள்ளப்படுவார்கள்.

தீர்வு : ஐரோப்பிய கல்விக் கொள்கையாகட்டும், உலகமே பின்பற்றத் துடிக்கும் ஃபின்லாந்து கல்விக் கொள்கைகள் கூட குழந்தைகள் கல்வி கற்க தொடங்குவதற்கு ஏற்ற வயது 6 வயது என்று தீர்மானித்திருக்கும் பட்சத்தில், இந்தியா போன்ற வளரும் நாடுகளும் உயர்ந்த கல்விக் கொள்கையை பின்பற்றத் தொடங்குவதுதானே நியாயமாக இருக்க முடியும். மூன்று வயதில் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்களுக்கு அபராதம் என்ற சட்டத்தை இயற்றுவதை விடுத்து, மூன்று வயதில் தொடக்கக் கல்வி என்ற புதியக் கல்விக் கொள்கை அபத்தத்திலும் அபத்தம்.

2. பழைய கல்வி முறைகளான குருகுலம், மதரசா, பாடசாலை முறை போன்ற புராதன கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவதை இந்த வரைவு முன்வைக்கிறது.

சாதகம் : தற்போது பள்ளி ஆசிரியர்களை மாணவர்கள் மதிக்கும் போக்கு என்பது மலையேறிவிட்டது. ஒருவேளை பழைய கல்வி முறைகளான குருகுலம், மதரசா, பாடசாலைகளை மறுபடியும் நடைமுறைப்படுத்தினால், ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு மரியாதையும், மதிப்பும் ஒருவேளை ஏற்படலாம்.

பாதகம் : குருகுலம், மதரசா, பாடசாலை என்ற பழைய முறைகளை மறுபடியும் நடைமுறைப்படுத்தும்போது மறுபடியும் சாதிய பாகுபாடு இன்னும் வேகமாக தலைதூக்காதா? இருக்கும் பிரச்சினை போதாது என்று புதிய பிரச்சினைகளை உருவாக்குவதற்கு எதற்காக இந்த புதிய கல்விக் கொள்கை வித்திடுகிறது என்று தெரியவில்லை.

தீர்வு : குருகுலம், மதரசா, பாடசாலை என்ற பழைய முறைகளை மறுபடியும் நடைமுறைப்படுத்த ஏதோ ஒரு சிறந்த காரணம் பின்புலத்தில் இருக்கும்பட்சத்தில், இந்தப் பெயர்களை நீக்கிவிட்டு, எல்லோருக்கும் பொதுவான பெயரை (மதம், இனம், ஜாதி எதையும் குறிப்பிடாமல்) குறிப்பிட்டு நடைமுறைப்படுத்தலாமே.

3. மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துதல்.

சாதகம் : பிராந்திய மொழி, ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளும் கற்றுக்கொள்ளச் சொல்வது சரியான விஷயம்தான். அதோடு மட்டுமல்லாமல் மிக மிக சிறிய வயதில் கற்றல் திறன் அதிகம் இருக்கும் என்பதால், மூன்று மொழிகள் கற்க பழகச் செய்வது சிறப்பு தான்.

பாதகம் : சில குழந்தைகளுக்கு மொழிகளை கற்பது பிடிக்கும். சில குழந்தைகளுக்கு படம் வரையப் பிடிக்கும், சில குழந்தைகளுக்கு முழு நேரம் விளையாட பிடிக்கும். அத்தகைய குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை என்பது வலுக்கட்டாயமாய் குழந்தைகளுக்கு புகுத்தும் விஷயம். வலுக்கட்டாயமாய் புகுத்தும் எதுவும் கல்வியாகவோ, கற்றலாகவோ நிச்சயம் இருக்காது.

தீர்வு : அரசின் இந்தக் கல்விக் கொள்கை நிச்சயம் சர்ச்சைக்குரியதுதான். வேண்டுமானால், விருப்ப மொழிகளை தேர்வு செய்வதுபோல், மும்மொழிக்கொள்கையும் பெற்றோர், மாணவர் தேர்வு செய்யும் அடிப்படையில் இந்த வரையறையை திருத்தம் செய்தால், பெரும்பாலானோர் இதை ஏற்பார்கள்.

4. இந்தியா முழுமைக்கும் பள்ளிக்கூடங்களுக்கான பாடப் புத்தகங்களை என்சிஈஆர்டிதான் உருவாக்குமென்றால் மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு பாடப் புத்தகங்களைத் தயாரிக்கும் திறமையே அற்றுப்போய்விடும்.

சாதகம்: தேசிய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வுகள் குறிப்பாக நீட், ஐ.ஐ.டி. ஜே.இ.இ. தேர்வுகள் அனைத்தும் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது. இதனால், மாநில வழி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் ஒரு மாணவருக்கு இந்தத் தேர்வு மிகவும் கடினமாக இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த நடைமுறை மூலம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவரும் இனி வரும் காலங்களில் மிக எளிமையாக தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற முடியும்.

பாதகம் : ஒவ்வொரு பாடத் திட்டங்களையும் ஆசிரியர்கள் வடிவமைக்கும்போது, அந்தப் பாடங்களுக்குத் தேவையான விளக்கங்களை தங்கள் பகுதி புவியியல் சார்ந்த விஷயங்களையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வார்கள். அப்படியிருக்கும்போது அவர்கள் எடுக்கும் உதாரணங்கள் வெவ்வேறு மா நிலங்களுக்கு பொருந்தாமல் இருக்கலாம். இதனால் மாணவர்கள் குழப்பமடையக் கூடும். அந்தந்த மா நிலங்களில் ஆசிரியர்கள் மொழிப்பெயர்ப்பு செய்தாலும் ஆரோக்கியமானதாக இருக்காது.

தீர்வு : இந்தப் பிரச்சினைகளைக் கலைந்து அதாவது பாடத்தில் கொடுக்கப்படும் ஒவ்வொரு உதாரணமும், அந்தந்த மா நிலங்களின் கலாசாரத்தை சிதைக்காத வகையிலும், அந்தந்த மா நிலங்களின் வாழ்வியலோடு தொடர்பு படுத்தி இருக்கும்பட்சத்தில் இதை எல்லோரும் வரவேற்கவே செய்வார்கள்.

5. 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தங்கள் எதிர்காலப் படிப்புக்கான பாடங்களை தேர்வுசெய்து படிப்பதை இந்த வரைவு ஊக்கப்படுத்துகிறது.

சாதகம் : எதிர்காலப் படிப்புகள் இவைதான் என்பது வழக்கமாக 11 ஆம் வகுப்பில் தான் தொடங்கும். அதை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அறிமுகப்படுத்தும்போது அந்தக் குழந்தைகள் எதிர்காலப் படிப்புகள் குறித்த திட்டங்கள் வகுப்பதற்கு சரியாக இருக்கும். அருமையான திட்டம் தான்.

பாதகம் : எதிர்காலப் படிப்புகள், இதைப் படித்தால் தான் வேலைவாய்ப்பு என்ற அழுத்தத்தை எதற்காக 13 வயதிலிருந்தே குழைந்தைகளுக்கு திணிக்க வேண்டும். மனோவியல் ரீதியாக அந்தக் குழந்தைகளுக்கு படிப்பு மீது வெறுப்பு ஏற்படுத்துவதற்கான சூழலையே இந்தப் புதிய கல்விக் கொள்கை வகுக்கும்.

தீர்வு : சில குழந்தைகளுக்கு கணிதம் வரும். சில குழந்தைகளுக்கு வரலாறு பிடிக்கும், சில குழந்தைகளுக்கு வணிகம் மிகவும் பிடிக்கும் என்பதால், 9 ஆம் வகுப்பிலேயே நடைமுறைப்படுத்தி, இந்தப் பாடங்களுக்கு அதிக கவன ஈர்ப்பு கொடுக்கும்போது நிச்சயம் அந்தத் துறைகளில் மாணவர்கள் சாதனைப் படைப்பார்கள். ஆனால், 9 ஆம் வகுப்பில் மாணவர்கள் எந்தப் பாடங்களை விரும்புகிறார்களோ அந்தப் பாடத்தை 80 சதவீதம் அளவிற்கும், மற்றவை 20 சதவீதம் அளவிற்கும் இருந்தால் நிச்சயம் அரசின் இந்த வரையறை சிறப்புதான். ஆனால், அதுகுறித்த எந்தவித தெளிவான வரையறைகளையும் அரசு சொல்லவே இல்லை.

6. மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு தேசிய திறனறிவுத் தேர்வு.

சாதகம் : பத்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு சரியாக வாசிக்கக்கூட தெரியவில்லை என்ற குற்றச்சாட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கோ, தனியார் பள்ளி மாணவர்களுக்கோ சில நேரங்களில் இருக்கவே செய்கிறது. இந்த மாதிரி தேர்வு வைக்கும்போது ஆசிரியர்கள் சரியாக தங்கள் பணிகளை செய்வார்கள். சரியாக பள்ளிக்கு வராத ஆசிரியர்கள், பாடங்களை சரியாக கற்றுக்தராத ஆசிரியர்களுக்கு இந்த சீரமைப்பு பெரிய சவுக்கடி. இதன் மூலம் தங்கள் பிள்ளைகள் என்னவிஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது பெற்றோருக்கும் தெரிய வரும்.

பாதகம் : தேர்வுகளே மன பயத்தை உருவாக்குகிறது என்பதுதான் கல்வியாளர்கள், கல்வி ஆராய்ச்சியாளர்கள் கூறிவரும் இந்த வேளையில் இம்மாதிரியான தேசிய அளவிலான தேர்வுகள் நிச்சயம் மாணவர்கள் மனதில் அச்சத்தையே உருவாக்கும். இது மாணவர்களின் நலனுக்கு நல்லதல்ல.

தீர்வு : செயல்வழிக் கற்றலே சிறந்தது என்பதுதான் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. செயல்வழிக் கற்றலினாலேயே ஒரு மாணவரின் செயல் திறன், மதி நுட்பம் அதிகரிக்கும் என்றிருக்கும் நிலையில் செயல்வழிக் கற்றலை அதிகரிக்கும் வகையில் இந்த தேசிய திறனறிவுத் தேர்வு இருக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் இந்தத் தேர்வுக்காக சிறப்பு புத்தகங்களை வாங்கி பயிற்சி எடுத்தால் மட்டுமே தேர்ச்சியடையும் நிலையை இந்தத் தேர்வு உருவாக்கதவரை, இந்தத் தேர்வை வரவேற்கலாம்.

7. பொறியியல், மருத்துவம் மட்டுமல்ல பி.ஏ. வரலாறு படிக்கணும்னா கூட நுழைவுத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே கல்லூரிக்குப் போக முடியும். அதற்கு தனியாக தேசிய தேர்வு அமைப்பு (நேஷனல் டெஸ்ட்டிங் ஏஜென்சி) என்ற புதிய அமைப்பை உருவாக்கவிருக்கிறது மத்திய அரசு.

சாதகம் : எல்லாப் படிப்புகளும் மதிப்பு வாய்ந்தவைதான். எல்லாப் படிப்புகளுமே வேலைவாய்ப்பு பெற்றுத் தரக்கூடியதுதான். ஆனால், அந்த மதிப்பு வாய்ந்த பாடத்தை தகுதி வாய்ந்த மாணவர்கள் தான் படிக்க வேண்டும் என்ற இந்த நடவடிக்கை மிகச்சரியானது.

பாதகம் : இத்தகைய நிலை வந்தால், பல கல்லூரிகள் இழுத்து மூடக்கூடிய நிலைக்குத் தள்ளப்படும். அப்படியென்றால், பிளஸ் டூ மதிப்பெண்கள் எதற்கு? பிளஸ் டூ பொதுத்தேர்வு எதற்கு என்ற கேள்வி எழும். இதையும் கடந்து ஒரு படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் கண்டிப்பாக சிறப்புப் பயிற்சி எடுத்தாக வேண்டும். இந்த சிறப்புப் பயிற்சிக்கு சம்பந்தப்பட்ட மாணவர் தயாராக வேண்டும்.

தீர்வு : கல்லூரிகளுக்கான இந்த நுழைவுத்தேர்வை முறைப்படுத்த வேண்டும். முறைப்படுத்தப்படும் அந்த நுழைவுத்தேர்வு எல்லா மாணவர்களுக்கும் சாதகமானதாக இருக்கும் வகையில் அமைய வேண்டும்.

8. பாலி, பிராகிருதம், பெர்ஷிய மொழிகளை மேம்படுத்த புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டு நிதியுதவி அளிக்கும்.

சாதகம் : அழிந்துவரும் பாலி, பிராகிருதம், பெர்ஷிய மொழிகளை மேம்படுத்த அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கக்கூடியதே. ஜப்பான் மொழிகளை கற்றால் வேலைவாய்ப்பு கிடைக்கும், ரஷ்ய மொழி படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதுபோல் இந்த மொழிகளை கற்றால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தினால் மட்டுமே மொழிகளை மேம்படுத்தும் அரசின் இந்த முடிவு சரியாக இருக்கும்.

பாதகம்: பாலி, பிராகிருதம், பெர்ஷிய மொழிகளை மேம்படுத்துவதற்கு புதிய அமைப்புகளை ஏற்படுத்தும் முயற்சி வரை சரி தான். ஆனால், இதையே காரணமாய் வைத்து பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்தியைப் போல், சமஸ்கிருதம் போல் திணிக்காமல் இருந்தால் சரி தான்.

9. எம்.பி.பி.எஸ். எம்.டி. தேர்வுகளுக்கு எவ்வாறு நீட் தேர்வு என்பது கட்டாயமோ, அதேபோல் மருத்துவப் படிப்பு முடிந்தவுடன் ‘எக்ஸிட் தேர்வு’ என்ற தேர்வில் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே அவர் மருத்துவப் பணியில் ஈடுபட முடியும்.

சாதகம் : மருத்துவப் படிப்பு முடித்தப் பிறகு மருத்துவர்கள் சரியாக, நேர்மையாக தேர்ச்சிப் பெற்றிருக்கிறார்களா? என்று தெரிந்துகொள்ள இத்தகைய தேர்வுகளை நடத்துவது உண்மையிலேயே வரவேற்கத்தக்கதுதான். இதன் மூலம் மருத்துவத் துறையில் புதிதாக சேரும் மருத்துவர்கள் நிச்சயம் திறன் வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

பாதகம் : மருத்துவப் படிப்பில் சரியான மாணவர்களைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே நீட் என்ற நுழைவுத்தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அப்படியானால், மருத்துவப் படிப்பை முடித்தப் பிறகு எக்ஸிட் தேர்வு என்பது எந்த வகையில் நியாயம்? அப்படியானால், தேர்வு என்ற விஷயத்தை மட்டும்தான் அரசு முன்னிருத்துகிறதா? அல்லது தரம் என்பதை முன்னிருத்துகிறதா என்ற மக்களின் சந்தேகத்தை அரசு தவிர்க்கவே முடியாது.

தீர்வு : படிப்பு தொடங்கும் முன் நுழைவுத்தேர்வு, படிப்பு முடிந்தவுடன் தகுதித் தேர்வு என்ற இரண்டு விஷயங்கள் வரை சரிதான். ஆனால், வெளி நாட்டில் மருத்துவப் படிப்பை படித்துவரும் இந்திய மாணவர்களுக்கு எந்தவித நுழைவுத்தேர்வை நடத்தப்போகிறது என்ற விஷயத்தை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

பொதுமக்களுக்கு இருக்கும் கேள்விகள்:

1. மூன்றாம் வகுப்பிலிருந்து வேலைக்குப் போகும்வரை, தகுதித் தேர்வுகள், திறனறித் தேர்வுகள் என்று மாற்றி மாற்றி தேர்வுகளையே அரசு புதிய கல்விக் கொள்கையில் வரையறுத்து வைத்திருக்கிறது என்றால், படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்புக்கு என்ன மாதிரியான திட்டங்களை வரையறுத்து வைத்திருக்கிறது?

2. மூன்றாம் வகுப்பிலிருந்து டியூஷன் வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடைய நம் கல்வி கட்டமைப்பு, இந்தப் புதிய தேர்வுகளுக்கு என்ன மாதிரியான பயிற்சியை நோக்கி ஓட வேண்டியதிருக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

3. இது கல்வித் தரத்தை முன்னேற்றக்கூடிய கொள்கை மாதிரி தெரியவில்லை. மாறாக பயிற்சி மையங்களை முன்னேற்றக்கூடிய கொள்கை வரைவு மாதிரியே தெரிகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

4. சமீப காலமாக பைஜுஸ் என்ற டிஜிட்டல் பயிற்சிக்கான அப்ளிகேஷன் எல்லா சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதேபோல, சில ஆண்டுகளுக்கு முன் ரிலையன்ஸ் குழுமம் ஒரு ஆன்லைன் கோச்சிங் மையத்தில் பல நூறு கோடி முதலீடு செய்த செய்திகளையும் படித்திருக்கும்பட்சத்தில், அரசின் இந்தப் புதிய கல்விக்கொள்கை பெரு முதலாளிக்கு சம்பாதித்து தரும் திட்டமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

விடை தெரியாத விடுகதைகள்:

1. படித்த படிப்புக்கேற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி புதிய கொள்கைகளையோ, சட்ட திட்டங்களையோ மக்கள் கொண்டாடும் அளவிற்கு இதுவரை வெளியிட்டதில்லை.

2. மஸ்குலர் டிஸ்ட்ரஃபி, எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இன்னும் நம் தேசம் தீர்வையே கண்டுபிடிக்க முடியவில்லை. தேசிய நதிகளை ஒன்றிணைக்க முடியவில்லை. ஆனால், சந்திரனை ஆராய்ச்சி செய்ய தயாராகிவிட்டோம்.

3. புத்தம் புது கல்விக்கொள்கைகளை வரையறுக்கும் மத்திய அரசு, தபால் வழிக் கல்வி, தொலைதூரக் கல்வி, தேசிய ஓப்பன் ஸ்கூலிங் மூலமாக நேரடியாக பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, பட்டப் படிப்பு படிக்கும் முறைகளை என்ன செய்யப்போகிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். இந்த முறையில் கல்வி கற்றவர்களின் சான்றிதழின் உண்மைத் தன்மைக்கு எத்தகைய அளவுகோலை வைத்துள்ளது என்பதையும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். அரசுத் தேர்வுகளில் விண்ணப்பிக்க எத்தகைய கல்விச் சான்றிதழ் ஏற்புடையதாக இருக்கும் என்பது உள்ளிட்ட விஷயங்களை அலசி ஆராயமல், தீர்வு சொல்லாமல், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது என்பது அபத்தத்திலும் அபத்தம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here