நீங்களும் கலெக்டராகலாம்!

0
145

‘கலெக்டர்’ இந்த வார்த்தைக்கு இன்னும் கூட சில குழந்தைக்கு அர்த்தம் தெரியாது அதன் அதிகார வரம்பு தெரியாது, அதன் மதிப்பு தெரியாது. இருந்தாலும் ‘நீ வளர்ந்தபிறகு என்னவா ஆகப்போறே’ன்னு கேட்டா ‘கலெக்டர் ஆவேன்’ என்று மழலைக் குரலில் சொல்லும்.
ஆட்சி அதிகாரம் இந்த இரண்டும் கலந்தே ஒரு பதவிக்கு கிடைக்கும் என்பதால்தான் தமிழில் ஆட்சியர் என்று இந்தப் பதவிக்கு பெயர் வந்திருக்குமோ?
கலெக்டர் என்ற ஒரு பதவி சிலருக்கு கனவு, சிலருக்கு தவம். சிலருக்கு வாழ்க்கையே அதுதான். உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கலெக்டர் என்ற கனவும், ஆசையும் ஏதேனும் ஒரு கணத்தில் தோன்றலாம். அந்த கனவும், ஆசையும் கானல் நீர் போல் கரைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கட்டுரை..
எப்போதிலிருந்து என்னுடைய கலெக்டர் கனவுக்கு அடித்தளம் அமைக்கத் தொடங்கலாம்?
உங்களுக்கு எப்போது இந்த ஆசை மனதில் தோன்றியதோ, அந்த நொடிப்பொழுதிலிருந்தே உங்கள் பயணத்தை தொடங்க ஆரம்பிக்கலாம். இதற்கென்று தனி வயது வரம்போ படிப்போ அவசியமில்லை. கலெக்டர் பதவியில் அமர்வதற்கான பயணம் மிக நீண்ட நெடியது. ஒரு மாதத்திலோ, இரண்டு மாதத்திலோ நிறைவேறிவிடும் கனவல்ல அது. 6 ஆம் வகுப்பிலிருந்து உங்கள் கலக்டர் பதவிக்கான பயணத்தை தொடங்கிவிடலாம். அதை எப்படி தொடங்குவது எங்கு தொடங்குவது என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஐ.ஏ.எஸ். ஆவதற்கு நான் என்ன படித்திருக்க வேண்டும்?
உங்களுடைய கலெக்டர் கனவு பூர்த்தியாக நீங்கள் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். அடுத்ததாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வை எழுத வேண்டும். இதில் தேர்ச்சிப் பெறுபவர்கள் ஐ.ஏ.எஸ். பணியிடத்தில் அமர்வார்கள்.
நான் இந்தப் போட்டித் தேர்வுக்கு எப்படி தயார் செய்வது?
இந்தப் போட்டித் தேர்வுக்கு உங்களை நீங்கள் தயார் செய்ய நிறைய படி நிலைகள் இருக்கின்றன. முதலில் உங்கள் மனப்பான்மையை முற்றிலுமாக மாற்ற வேண்டும். அதாவது தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட ‘நான் கலெக்டர்’ என்ற உணர்வு உங்களுடன் கலந்துவிட வேண்டும். கலெக்டர் என்ற ஆசையைத் தவிர்த்து உங்கள் எண்ணத்தில் வேறெதுவும் கலந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும்.
இந்தப் போட்டித் தேர்வில் வெற்றி பெற நிறைய படி நிலைகள் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா அதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதல் படி நிலை: ஆங்கில அறிவு
இந்தப் போட்டித் தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத முடியும் என்றாலும், ஆங்கிலத்தில் இந்தப் போட்டித் தேர்வை எதிர்கொள்வதே சிறப்பு. கூடிய வரை உங்களது ஆங்கில அறிவை சிறப்பாக வளர்த்துக் கொள்ளுங்கள். கூடிய வரை தினமும் ஒரு புது ஆங்கில வார்த்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுங்கள். அதை சரியாக பின்பற்றுங்கள். நேரமிருந்தால் தினமும் ஒரு வரியில் ஆங்கிலம் பேசி பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். தினம் ஒரு ஆங்கில வரியை நீங்கள் புதிதாக பேசி பயிற்சி எடுத்துக்கொள்வதன் மூலம் ஆண்டு இறுதியில் நீங்கள் 365 புதிய ஆங்கில வரிகளை பேச முடியும். படிப்பு என்ற ஒன்றைக் கடந்து உங்கள் மனதில் உள்ளவற்றை சரியாக வெளிப்படுத்துவதற்கு ஆங்கிலம் மிகச்சரியான கருவி என்பதால், இதை தொடர்ச்சியாக பயிற்சி செய்ய வேண்டும்.
உங்களது பயிற்சி நீங்கள் 6 ஆம் வகுப்பில் இருந்தும் தொடங்கலாம் அல்லது பத்தாம் வகுப்பு படிக்கும்போதோ அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு தொடங்கும்போதோ கூட இருக்கலாம்.
இரண்டாம் படி நிலை : பொது அறிவு
நாட்டில் என்ன நடக்கிறது, உங்களைச் சுற்றி என்னவெல்லாம் மாறியிருக்கிறது என்பதை கூர்ந்து கவனிக்கக்கூடிய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியதுதான் உங்களின் இரண்டாம் படி நிலை.
இதற்கு நீங்கள் படிக்க வேண்டும். ‘கண்டதைக் கற்க பண்டிதன் ஆவான்’ என்ற பழமொழி இருக்கிறதே அதுபோல. வீட்டிற்கு வரும் செய்தித்தாள், வார இதழ்கள், மாத இதழ்கள் இவற்றை படியுங்கள். இவற்றில் வரும் சின்னச் சின்ன பொது அறிவு விஷயங்களை தனியாக ஒரு நோட் போட்டு எழுதி வாருங்கள். ஒரு முறை எழுதிய விஷயம் மறுபடியும் எழுதக்கூடாது என்ற எந்தத் தடையும் கிடையாது என்பதால், எதெல்லாம் உங்களுக்கு புதிதாக தெரிகிறதோ அதையெல்லாம் எழுதுங்கள். அந்தத் தகவல் இதற்கு முன்பு ஒருமுறை எழுதியிருந்தால்கூட பரவாயில்லை. இந்தப் பயிற்சி தொடக்கத்தில் சோர்வை ஏற்படுத்தினாலும், போகப் போக இந்தப் பயிற்சி பேரும் புகழையும் உங்களுக்கு பெற்றுத்தரும். தொலைக்காட்சி செய்திகளை தொடர்ந்து கவனியுங்கள். கூடியவரை ஆங்கிலச் செய்திகளைப் பார்த்தால் இன்னும் கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள முடியும். கூடியவரை அரசியல் விவாதங்கள், பொது நிகழ்வு குறித்த டி.வி. விவாதங்களை பார்க்கும்போது நிறைய நடப்பு நிகழ்வுகளை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
நீங்கள் படித்த விஷயங்களை சரியாக நான் புரிந்து வைத்திருக்கிறேனா, முறையாக படித்திருக்கிறேனா என்பதை சோதித்தறிய பள்ளி அளவில் நடைபெறும் வினாடி வினா நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி சேனல்களில் நடைபெறும் வினாடி வினா போட்டிகளில் கலந்துகொள்ளுங்கள். செய்தித்தாள், இதழ்களில் வரும் அறிவுப் புதிர்கள் விளையாட்டுகளை விளையாடுங்கள். இவற்றை நீங்கள் மேற்கொள்வதன் மூலம் உங்கள் திறனை நீங்களே தெரிந்து கொள்ளமுடியும். அதே நேரத்தில் இத்தனை நாள் நீங்கள் செய்த பயிற்சிக்கு ஏதேனும் பரிசுகள், சான்றிதழ்கள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
மூன்றாவது படி நிலை : கட்டுப்பாடு
உடல் கட்டமைப்பும், உள்ளக் கட்டுப்பாடும் இந்தப் பதவிக்கு மிக அவசியம் என்பதால் உங்களை நீங்கள் ஆரம்பத்திலிருந்தே மெருகேற்றிக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
• சரியான நேரத்திற்கு தூங்குங்கள்.
• சரியான நேரத்திற்கு எழுந்திருங்கள்.
• சரியான நேரத்தில் சாப்பிடுங்கள்.
• கண்ட நேரத்தில் கண்டதையும் உண்ணாதீர்கள்.
• விரல் நகங்களை சீராக வெட்டி சுத்தப்படுத்துங்கள்.
• ஆடைகளை சுத்தமாக அணியுங்கள்.
• சிகை அலங்காரம் மற்றவர்கள் எரிச்சலடையும் விதத்தில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
• பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள்.
• அவசியமில்லாத வார்த்தைகளை பொது இடத்தில் பேசாதீர்கள்.
• அவசியப்பட்டால் யாராக இருந்தாலும் உங்கள் கருத்துக்களை சொல்லத் தயங்காதீர்கள்.
• சரியான நேரத்தில் பள்ளிக்குள் நுழைந்துவிடுங்கள்.
• உங்களுக்கு வரையறுத்த நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக குறிப்பிட்ட இடத்தில் இருப்பதற்கான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
• கற்றுக்கொள்ள ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று இருப்பதால், மற்றவர்களை பேசவிட்டு அவர்களின் கருத்துக்களை ஆராயுங்கள்.
• உங்கள் முன் இருக்கும் சவால், அது எத்தகையதாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
• தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள் அல்லது ஓடியாடி விளையாடுங்கள்.
• 10 நிமிடம் இறைவழிபாடு செய்யுங்கள். அல்லது மனதை அமைதிப்படுத்தும் வகையில் தியானம் மேற்கொள்ளுங்கள்.
• தினமும் அரைமணி நேரம் உங்கள் பாடத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
மேற்கண்ட இத்தனை விஷயங்கள் ஒரே மாதத்தில் கைகூடி விடாது. ஒவ்வொரு விஷயங்களாக இன்றிலிருந்து கடைப்பிடிக்க ஆரம்பித்தால் ஓரிரு ஆண்டுகளில் இவை அத்தனையும் முழுமையாக செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். அதற்குப் பிறகு இதுவே உங்களது பழக்கமாகிவிடும். அதற்குப் பிறகு உங்களையே நீங்கள் புதிய மனிதராக பார்க்க ஆரம்பிப்பீர்கள்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here