எதிர்பார்ப்பை வைக்காதீர்கள்!

0
138
SONY DSC

இந்தச் சமூகத்தில் இருக்கும் 90 சதவீத பெற்றோர்களுக்கும் தன் மகன் கலெக்டராக வேண்டும், டாக்டராக வேண்டும், பொறியாளராக வேண்டும், ஆராய்ச்சியாளராக வேண்டும்… இன்னும் பல்வேறு ஆசைகள் அவரவர்கள் தகுதிக்கேற்றார்போல் இருக்கும்.
இந்த ஆசைகளையெல்லாம் அவர்கள் பிறந்த உடனேயே தன் மனதில் விதைத்துக்கொள்கிறார்கள் பெற்றோர்கள். இந்த விதை எல்லா பெற்றோருக்கும் விருட்சமாக வளர்ந்து பலன் கொடுக்கிறதா என்றால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.
எங்கு தவறு நடக்கிறது?
பெற்றோர்கள் தாங்கள் மாணவர்களாக இருந்தபோது ஏற்படும் நிறைவேறாத கனவுகள், தன் குழந்தைகள் மூலமாக எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று நினைக்கத் தொடங்கும் அந்தப் புள்ளியில்தான் இந்த தவறுகள் தொடங்க ஆரம்பிக்கின்றன.
அந்த விதை விருட்சமாக்குவதற்கு, இப்போதைய தங்களின் வாழ்வில் இயல்பாக நிகழும் சந்தோஷத்தைக்கூட தொலைக்கத் தொடங்குகிறார்கள் பெற்றோர்கள். குழந்தைகளிடம் அமர்ந்து பேசுவதில்லை. அவர்களின் உண்மையான ஆசைகளை காது கொடுத்து கேட்பதில்லை. இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கூட தங்கள் கடமையை எளிதாக கடந்துவிடுகிறார்கள் பெற்றோர்கள்.
தங்களுடைய ஒரே லட்சியம் தாங்கள் கண்ட கனவு தன் குழந்தைகள் மூலம் பலித்தே தீர வேண்டும் என்பது மட்டும்தான். பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ், ஸ்பெஷல் கிளாஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ், ஹிந்தி, பிரெஞ்ச்… இப்படி எதையும் விட்டு வைப்பதில்லை. தங்கள் குழந்தை ஆயக் கலைகள் 64ம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே மிக உயர்ந்த லட்சியமாக இருக்கும்.
தங்கள் குழந்தைகள் தாங்கள் கண்ட கனவை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்பதற்காக அதிகபட்சமாக உழைக்க ஆரம்பிக்கிறார்கள். தங்களுக்குள்ளேயே ரணப்பட்டுக்கொள்கிறார்கள். சரி.. இவ்வளவு செய்தும், அவர்கள் கண்ட கனவு நனவாகிவிடுகிறதா என்று ஆராய்ந்தால் 5 சதவீதம் மட்டுமே நேர்மறையாக இருக்கிறது. மற்றவை எல்லாமுமே எதிர்மறையாகவே முடிந்துபோகிறது.
எல்லாமுமே நாம் நினைத்தபடி நடந்துவிடாதா என்று ஏங்கித் தவிக்கும் பெற்றோர்கள் எப்படி நடந்துகொண்டால், இத்தகைய ஏமாற்றத்தை தவிர்க்கலாம் என்பதைத்தான் இங்கு நாம் பார்க்கவிருக்கிறோம்.
எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது வைக்காதீர்கள்: என் குழந்தை படித்து அதுவாகவேண்டும், இதுவாக வேண்டும் என்ற ஏகபோக ஆசைகளை குழந்தைகள் மீது விதைக்காதீர்கள். அது பெரும்பாலும் பலனை தராது.
படிப்பு மட்டும் வாழ்க்கையல்ல என்ற புரிந்துணர்வை வளர்த்துக்கொளுங்கள்: என் குழந்தை படித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற மூடத்தனமான வரையறையை முதலில் உங்கள் மனதிலிருந்து அழியுங்கள். இந்தச் சமூகத்தில் உங்கள் முன் கொடிகட்டிப் பறக்கும் அத்தனை ஜாம்பவான்களும் படிப்பினால் மட்டும் வளர்ந்தவர்கள் அல்ல. படிப்பு வேறு, வளர்ச்சி வேறு. அதையும் இதையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். படிப்பு என்பது அறிவு வளர்ச்சிக்கான சிறு தூண்டுகோல் தானே தவிர, வளர்ச்சிக்கான ஆதாரம் அல்ல. சமுதாயத்தில் கற்றுக்கொள்ளும் படிப்பினையும், அனுசரனையும், சகிப்புத்தன்மையும், சவாலை எதிர்கொள்ளும் மனப்பக்குவங்களும்தான் உங்கள் குழந்தைகளை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லுமே தவிர்த்து, படிப்பு எடுத்துச்செல்லாது என்பதை முதலில் உங்கள் ஆழ் மனதில் பதியுங்கள்.
தூண்டுகோலாக மட்டும் இருங்கள்: அவரவர்கள் வாழ்க்கையை அவரவர்கள் வாழ்வதற்கான உரிமை அவரவர்களுக்கு உண்டு. ஆனால் இதை நாம் சில வரையறைகளின் அடிப்படையில், தேவையில்லாமல் வலுக்கட்டாயமாக பரித்துக்கொள்கிறோம். இதுதான் நம் குழந்தைகள் விஷயத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. பிறப்பு வேண்டுமானால் நம் மூலமாக நிகழ்ந்திருக்கலாம். ஆனால், அவர்களின் பிறப்பு பிரபஞ்சத்தினால் நிச்சயக்கப்பட்டது என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அவரவர்களின் திறமைகளின் மூலம் கிடைக்கும் வளர்ச்சிதான் அளப்பெரியதாக இருக்குமே தவிர்த்து, பெற்றோராகிய உங்கள் ஆசைகளின் மூலம் கிடைக்கும் வளர்ச்சி நிச்சயம் சாதாரணமாக மட்டுமே இருக்கும்.
இதை எப்போதுமே பெற்றோர்கள் புரிந்துகொள்வதில்லை. தூண்டுகோலாக இருப்பது பெற்றோராகிய உங்களின் கடமை. எரிந்து ஒளி கொடுக்கவேண்டியது குழந்தைகளின் கடமை. அவர்களுக்கு பதிலாக எரிந்து ஒளி கொடுக்கும் முயற்சியில்தான் இன்றைய 99 சதவீத பெற்றோர்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இதை என்று பெற்றோர்கள் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறார்களோ அன்று, குழந்தைகளின் வளர்ச்சி பெற்றோர் கண்ட கனவை விட அளப்பெரியதாக இருக்கும். அவர்கள் வாழ பெற்றோர்கள் வழிகாட்டி நின்றாலே அடுத்த தலைமுறையின் வளர்ச்சி எட்ட முடியாத உயரத்திற்கு சென்றுவிடும். புரிந்துகொண்டுவிட்டால் நீங்களும் சிறந்த பெற்றோர்தான்!


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here