ஆபரண தொழில் செய்வதற்கான தேசிய படிப்பு!

0
395

ஆபகரணங்கள் செய்வதில் ஆர்வமுள்ளவரா? வைர நகைகள் மதிப்பிடுதல், தங்க நகை வடிவமைப்பதில் சர்வதேச அளவில் புகழ்பெறவேண்டும் என்ற ஆசை உள்ளவரா? அப்படியென்றால் நீங்கள் படிக்கவேண்டிய கல்வி நிலையம் சூரத்தில் உள்ள இந்தியன் டயமண்ட் இன்ஸ்டிட்யூட் கல்வி நிலையம்.
ஆடைகள் மீதும் அணிகலன்கள் மீதும் மக்கள் மனதில் எப்போதும் தீராத மோகம் ஏற்பட்டுவிட்டது. ஆடம்பரக்காரர்கள் மட்டுமே விதவிதமாக அணிகலன்கள் அணிந்து வந்த காலம் மாறி, தற்போது கௌரவக் குறியீடாகவும் ஆபரணங்கள் மாறியிருக்கிறது. அத்துடன் மனிதர்களின் வித்தியாசமான தேடல்கள், ரசனைக்குத்தகுந்த டிசைன்கள் இவற்றையெல்லாம் தேடித் தேடிச் செல்வதனால், அணிகலன்களின் மவுசும் ஏற ஆரம்பித்திருக்கிறது.
90 ஆம் ஆண்டுகளில் தங்க நகை கிராமிற்கு 400லிருந்து 500 ரூபாய் வரைக்கும் விற்றுக்கொண்டிருந்தது. அப்போதும் விலையேற்றத்தை நினைத்து மூக்கில் மேல் விரல் வைத்துக்கொண்டு, தங்கத்தின் விலையைப் பார்த்து பிரமித்துப் போனாலும், யாரும் வாங்காமல் இல்லை. அதேபோல், இன்று தங்கத்தின் கிராம் விலை இரண்டாயிரம் ரூபாயை நெருங்கிவிட்ட போதிலும் இன்றும் தங்கத்தை வெறுப்பார் இல்லை. சொல்லப்போனால், அன்றைய தினத்தைவிட, இன்றைய தினத்தில் நகைக்கடைகளின் எண்ணிக்கையும், மக்களின் வாங்கும் மோகமும் இரண்டு மூன்று மடங்கு அதிகரிக்கவே செய்திருக்கிறது.
அப்படியானால், இன்னும் பத்து ஆண்டுகளோ இருபது ஆண்டுகள் கழித்தோ தங்கத்தின் விலை இன்னும் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்திருக்கலாம். ஆனால், வாங்கும் திறனும், அதன் மவுசும் இதேபோல் இன்னும் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கும். தற்போதே தங்க நகை வடிவமைப்பாளர், தரம் நிரணயிப்பாளர், பிரித்தெடுப்பாளர்கள் இப்பஐ பல்வேறு துறைகளில் தங்க நகை, கற்கள், வைரம் போன்றவற்றை அழகுற மாற்றுவதில் ஆட்கள் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். வருங்காலத்தில், இவர்களின் தேவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். படித்து முடித்தவுடன் வேலை. அல்லது சொந்தமாக தொழில் தொடங்கும் வாய்ப்பு, வித்தியாசமான படிப்பு இவற்றை விரும்பும் மாணவர்களுக்கு ஆபரண வடிவமைப்பு படிப்பு ஏற்ற சாய்ஸாக இருக்கும்.
ஆபரண வடிவமைப்பு படிப்புக்காக சிறப்பு கல்வி நிலையம் சூரத்தில் இயங்கி வருகிறது. மத்திய அரசின் வணிகவியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தக் கல்விநிலையம், வைரம், முத்து பவளம் வகை கற்கள், தங்க நகை வடிவமைப்பிற்கு சிறந்த கல்வியை சர்வதேச அளவில் வழங்கும் ஒரு கல்வி நிறுவனமாக இந்தியன் டைமண்ட் இன்ஸ்டிட்யூட் திகழ்கிறது.
1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்வி நிலையத்தில், நகைகளை வடிவமைப்பு, வைரக் கற்களுக்கு தரம் நிர்ணயித்தல், பாலீஸ் செய்தல், நகைகளை சர்வதேச அளவில் வடிவமைத்தல், கற்களை மதிப்பீடு செய்தல் போன்ற விஷயங்களை கற்றுத் தரப்படுகிறது.
இந்தக் கல்வி நிலையத்தில் பல்வேறு படிப்புகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ படிப்புகள் கற்றுத்தரப்படுகிறது. அதில் குறிப்பிடும்படியாக மூன்று ஆண்டுகள் டயமண்ட், ஜெம்ஸ், நகைகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் டிப்ளமோ படிப்பு உள்ளது. இந்தப் படிப்பு ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்றது. அடுத்தததாக ஓர் ஆண்டு நகை வடிவமைப்பு, உற்பத்தி செய்தல் மற்றும் மதிப்பிடுதல் சம்பந்தமான ஓர் ஆண்டு டிப்ளமோ படிப்பும் கற்றுத் தரப்படுகிறது.
டிப்ளமோ இன் டயமண்ட் சார்ட்டிங்: இந்த படிப்பில் வைரத்தை பிரித்தெடுக்கும் முறை முழுவதும் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. வெறும் தாதுக்களிலிருந்து வைரம் எப்படி பிரித்தெடுக்கப்படுகிறது என்பதை இந்தப் படிப்பின் போது மாணவர்கள் தெரிந்துகொள்வார்கள். இதைத்தவிர, வைரத்தின் வடிவம், அளவு, சுத்தத் தன்மை ஆகியவற்றை எப்பஐ கணிக்க வேண்டும்? வைரம் எப்படி உற்பத்தியாகிறது. சந்தைப் படுத்துதல் எப்படி? உண்மையான வைரத்திற்கும் போலியான வைரத்திற்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறது? போன்ற விஷயங்கள் இந்த டிப்ளமோ படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. 24 வாரங்கள் பயிற்சியளிக்கப்படும் இந்த டிப்ளமோ படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். 24 வார படிப்பிற்கு கட்டணமாக ரூ. 26,000 வசூலிக்கப்படுகிறது.
டிப்ளமோ இன் டயமண்ட் கிரேடிங்: இந்தப் படிப்பின்போது மாணவர்களுக்கு வைரக்கற்களை புதுப்பித்தல் சம்பந்தமான விஷயங்கள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும். வைரக்கற்களை பாலீஸ் செய்யும் முறை, தயாரிப்பில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிதல், கற்களை மினுமினுப்பாக்குதல், சர்வதேச சந்தையில் வைரத்தின் மதிப்பை உயர்த்தும் வகையில் அதன் வடிவத்தை மேன்மைப்படுத்துதல் போன்றவைகள் இந்த டிப்ளமோ படிப்பின் போது மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது.
18 வாரங்கள் படிப்பான இந்த டிப்ளமோ பயிற்சியில் சேர மாணவர்கள் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்.
டிப்ளமோ படிப்பைத் தவிர வைரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள குறுகியகால சான்றிதழ் படிப்புகள் உள்ளன. 20 வார சர்ட்டிபிகேட் இன் ரஃப் டயமண்ட் அசார்ட்மெண்ட் சான்றிதழ் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் பத்தாம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது. இந்தப் படிப்பில் வைரத்தின் தரத்தைப் பற்றி முழுமையாக கற்றுத்தரப்படும். இதுதவிர டயமண்ட் கிரேடிங், டயமண்ட் பாலீஸ் கிரேடிங், அட்வான்ஸ் ரெஃபரன்ஸ் கோர்ஸ் ஆன் டயமண்ட் கிரேடிங் என்று 12 வகையான சான்றிதழ் படிப்புகள் கற்றுத்தரப்படுகிறது. சான்றிதழ் படிப்பில் சேர மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருந்தாலே போதுமானது. சான்றிதழ் படிப்பு 1 வாரத்தில் ஆரம்பித்து 20 வாரங்கள் வரை கற்றுத்தரப்படுகிறது.
இளநிலை டிப்ளமோ இன் ஜூவல்லரி டிசைனிங் : இந்த நகை வடிவமைப்பு டிப்ளமோ படிப்பில் மாணவர்களுக்கு, கைகளால் நகைகளை வடிவமைத்தல், இயந்திரங்களைக்கொண்டு நகைகளை வடிவமைத்தல், டெக்னிக்கல் டிராயிங், நகைகளில் கற்களை பதித்தல், ரப்பரைப் பயன்படுத்தி நகைகள் வடிவமைப்பு, சர்வதேச அளவில் பயன்படும் கண்ணாடி இழைகளைக்கொண்டு, நகைகளை வடிவமைத்தல், கம்ப்யூட்டரை பயன்படுத்தி நகைகளை வடிவமைத்தில் போன்றவை இந்தப் படிப்பின்போது மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. இந்த இளநிலை டிப்ளமோ மொத்தம் 52 வாரங்கள் கற்றுத்தரப்படுகிறது. ஆண்டுக்கு 3 பிரிவுகளில் இந்த நகை வடிவமைப்பு படிப்பு நடத்தப்படுகிறது. ஒரு பிரிவுக்கு 10 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தப் படிப்பில் சேர மாணவர்கள் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்திருக்கவேண்டும்.
வைரம் மற்றும் நகை வடிவமைப்பில் டிப்ளமோ : மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பான இதில் சேர்ந்து படிக்க மாணர்வகள் பிளஸ் டூ வகுப்பு படித்திருந்தால் போதுமானது. இந்தப் படிப்பில் மாணவர்களுக்கு மோதிரம், வளையல், செயின் போன்றவை வடிவமைத்தல், கம்ப்யூட்டர் துணைகொண்டு நகைகளை வடிவமைத்தல், 2டி மற்றும் 3டி வடிவத்தில் நகைகளை புதுமாதிரி வடிவமைத்தல், கற்கள் பதித்தல், பழைய நகைகளை பாலீஸ் செய்தல், வைரக் கற்களின் தரம் பிரித்தல், வைரத்தை வெட்டுதல், நகைகளில் ஏற்றுமதி செய்யும்போது அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஆகியவை இந்தப் படிப்பில் கற்றுத்தரப்படுகிறது.
டிப்ளமோ இன் ஜெம்மாலஜி : கற்களைப் பற்றி முழுமையாக இந்த டிப்ளமோ படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. கற்களின் ஏழு வகைகள் என்னென்ன? அதன் இயற்பியல் பண்புகள் என்ன? உற்பத்தி? ஒவ்வொரு கற்களின் தரம், அதன் குணாதிசயம் இவைகள் அனைத்தும் கற்றுத்தருவதோடு அதை விதவிதமாக நகைகளில் வடிவமைப்பது பற்றியும் கற்றுத்தரப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருந்தால் போதும். ஆண்டுக்கு மூன்று பிரிவாக இந்த டிப்ளமோ படிப்பு கற்றுத்தரப்படுகிறது. 16 வார பயிற்சி வகுப்பான இந்த டிப்ளமோ படிப்பில் சேருவதற்கு கட்டணமாக ரூ.22,000 வசூலிக்கப்படுகிறது. இந்தக் கல்வி நிலையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பிரபல தங்க நகை நிறுவனங்கள் மாணவர்களை பணியமர்த்திக் கொள்கின்றனர்.
இதுதவிர வைரக்கற்கள் உற்பத்தி செய்யும் இடங்களில் வைரத்தை தரம்பிரிக்கும் அலுவலர்களாக, வைரத்தை அறுக்கும் பிரிவு என்று பல்வேறு பிரிவுகளில் பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதுதவிர அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் அப்ரைசர் எனும் பதவி இருக்கிறது. இவர்களுக்கு வேலையே தங்கம், வைரம், கற்கள் இவற்றின் தரத்தை சோதித்து தருவதே. இந்தப் பதவிக்கு திறமையான நபர்கள் எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. இதுதவிர தனியார் தங்க நகைக் கடைகள், தங்க உற்பத்தி நிறுவனங்கள் போன்றவற்றிலும் பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன. சொந்தத் தொழிலிலும் ஈடுபடவும் வாய்ப்பு இருக்கிறது.
படித்து முடித்தவுடன் வேலை, அல்லது சொந்தமாக தொழில் தொடங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு டைமண்ட் இன்ஸ்டிட்யூட் கல்வி நிலையம் சிறந்த சாய்ஸாக இருக்கும்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here