செக் லிஸ்ட்

0
140

6 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் எந்தவொரு மாணவர்களும் தாங்கள் தேர்வுக்கு தயாராகும்போது, அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு இந்த செக் லிஸ்ட்டை தொடர்ந்து பின் தொடருங்கள். முடிந்தால் வீட்டில் உங்கள் கண்ணில் படும்படி, இந்தப் பக்கத்தை தனியாக பிரித்து ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
• படிக்க ஆரம்பிக்கும் முன் தேர்ச்சிப் பெற்றால் போதும் அல்லது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும் என்ற மனப்பான்மையோடு படிக்கத் தொடங்காமல், முழு மதிப்பெண்கள் பெற்றாக வேண்டும் என்ற உறுதியோடு படியுங்கள்.
• பாடம் நடத்திய அன்றன்றைக்கு பாடங்களை படித்துவிடுங்கள்.
• எந்த ஒரு பாடத்தையும் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி படிக்கும்போது, அந்தப் பாடம் மறந்துபோகாது. என்பதால் ஒவ்வொரு கேள்வியையும் வாழ்க்கையோடு, பொழுதுபோக்கு அம்சங்களோடு தொடர்புபடுத்தி படித்தால் அது மறந்தே போகாது.
• புரியாமல் எந்த ஒரு பாடத்தையும் மனப்பாடம் செய்யாதீர்கள். புரியும்வரை ஆசிரியர்களிடம் தொடர்ந்து சந்தேகம் கேட்டுக்கொண்டே இருங்கள்.
• தேர்வுத்தாளில் கேள்விக்கான விடையை அளிக்கும்போது, அடித்தல் திருத்தல் இல்லாமல் தெளிவாக எழுதுங்கள்.
• தமிழ் பாடத்தைப் பொருத்தவரையில் கட்டுரை ஆசிரியர், பாடல் வரிகள், எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளுக்கு தனிப்பட்ட மதிப்பெண்கள் இருப்பதால் கூடியவரை தேர்வுக்கு செல்லும் முன் ஒன்றுக்கு இரண்டு தடவை எழுதிப் பார்த்து, உங்கள் தவறை சரி செய்துகொள்ளுங்கள்.
• எந்தப் பாடம் மிக எளிது என்று நினைக்கிறீர்களோ அதற்கு கூடுதல் கவனம் செலுத்துங்கள். எது எளிது என்று நினைக்கிறீர்களோ, அதுதான் கடைசியில் உங்கள் மதிப்பெண்ணை குறைக்கும் காரணியாக அமையும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
• கணிதப் பாடத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு பகுதிக்குமான சூத்திரங்களை தனித் தனியாக எடுத்து எழுதி, அதை நன்கு மனனம் செய்துகொள்ளுங்கள். ஏனெனில் சூத்திரங்களுக்கும் தனி மதிப்பெண்கள் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.
• நூறு சதவீத மதிப்பெண்கள் பெற்றாக வேண்டும் என்று முடிவு செய்த பிற்பாடு, புத்தகத்தின் பின்னால் உள்ள கேள்விகளுக்கோ, அதி முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகள் என்று ஆசிரியர் குறிப்பிட்ட கேள்விகளுக்கோ மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், பாடம் முழுவதும் படித்துவிடுங்கள். கேள்வி எப்படி கேட்டாலும் பதில் சொல்லும் அளவிற்கு படித்திருக்க வேண்டும்.
• அறிவியல் பாடங்களை பொறுத்தவரையில் படம் உள்ள கேள்விகளுக்கும், சமன்பாடுகள் உள்ள கேள்விகளுக்கும் பதிலளிப்பதில் முக்கியத்துவம் கொடுங்கள். அதேபோல் அறிவியல் கணக்கீடுகள் கேள்விகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் தவற விட்டுவிடாதீர்கள். ஏனெனில், அதில் முழு மதிப்பெண்கள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
• வரலாற்றுப் பாடங்களை பொறுத்தவரையில் உலக வரைபடம், தேசிய வரைபடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். முக்கிய நிகழ்வுகள், அதன் வருடங்கள். நிகழ்வுகளுக்கான காரணகர்த்தாவின் பெயர், இடங்கள் இவற்றையெல்லாம் சரியாக மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். எந்த நேரத்திலும் இதில் சந்தேகங்கள் என்பது வந்துவிடவே கூடாது.
• இதுதான் எனக்கு ஏற்கெனவே தெரியுமே என்று எந்தப் பாடத்திலும் மெத்தனமாக இருந்துவிடாதீர்கள். மூன்று முறை படிப்பதைவிட ஒருமுறை எழுதிப்பார்ப்பது சாலச்சிறந்தது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அதனால், முடிந்தவரை கேள்விகளை எழுதிப்பார்த்து சுய ஆய்வு செய்துகொள்ளுங்கள்.
• எந்தப் பாடம் சிரமம் என்று தோன்றுகிறதோ அந்தப் பாடங்களை தேர்வுக்கு முன்னர் குறைந்தபட்சம் மூன்று தடவையாவது மீள்பார்வை செய்திருக்க வேண்டியது அவசியம்.
• எந்த ஒரு கேள்வியை எழுதும்போது எழுத்துக்கள் அழகாக இருப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்துங்கள். அது ஒரே நாளில் கைகூடிவிடாது. எழுதி எழுதி பார்ப்பதால் மட்டுமே வரும் என்பதால் தொடர் பயிற்சி எடுங்கள்.
• எந்த நேரத்தில் படித்தால் உங்கள் மனம் அந்தப் பாடத்தை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளமோ, அந்த நேரத்தை படிப்பதற்கு தேர்வு செய்துகொள்ளுங்கள். மற்ற நேரத்தை கணக்கீடுகள் செய்வதற்கும், படங்கள் வரைந்து பார்ப்பதற்கும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
• இந்த நேரம் இன்னொரு முறை கிடைக்காது என்பதால், கிடைக்கும் நேரத்தை முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ள முயற்சியுங்கள்.
• மேற்கண்ட செக் லிஸ்ட் படி நிபந்தனைகளை சரியாக கையாள்வீர்களானால், நீங்கள் முழு மதிப்பெண்கள் பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here