சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்ஸஸ்!

0
168

அறிவியல் சார்ந்த அடிப்படை விஷயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பும் மாணவர்களும், அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்களும் மும்பையில் உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்ஸஸ் கல்வி நிலையத்தில் சேர்ந்து படிக்கலாம்.
2007 ஆம் ஆண்டு இந்திய அணுமின் துறை, இந்திய அரசு மற்றும் மும்பைப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து உருவாக்கிய கல்வி நிலையம்தான் மும்பையில் உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்ஸஸ் கல்வி நிலையம். மாணவர்கள் அறிவியல் பாடத்தில் அடிப்படை விஷயங்களை நன்கு தெரிந்தகொள்ளவேண்டும் என்பதற்காகவும் அறிவியல் பாடத்தில் ஆராய்ச்சிக்கான ஆர்வத்தை மாணவர்களிடம் வளர்ப்பதற்காகவே இந்தக் கல்வி நிலையம் திறக்கப்பட்டது. அறிவியல் பாடத்தில் ஆர்வமும் ஆராய்ச்சி எண்ணங்களும் நிறைந்த மாணவர்கள் இந்தக் கல்வி நிலையத்தில் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்புகளை படிக்கலாம்.
கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் வாழ்க்கை அறிவியல் போன்ற பாடங்களில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுநிலைப் பட்டப் படிப்புகளை இந்தக் கல்வி நிலையத்தில் படிக்க முடியும். அறிவியல் பாடத்திற்கான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கல்வி நிலையத்தில் இடம் கிடைக்கும் மாணவர்கள், அறிவியல் பாடத்தில் சிறந்த ஆராய்ச்சியாளராகவும், அறிவியல் பாடத்தில் சிறந்த ஆசிரியராகும் வாய்ப்பையும் அள்ளித் தருகிறது. இந்தக் கல்வி நிலையத்தில் இடம் கிடைக்கும் மாணவர்கள் பொதுப் பிரிவினராக இருக்கும் பட்சத்தில் ஒரு செமஸ்டருக்கு ரூ.1750 கல்விக் கட்டணமாகவும், ஒதுக்கீடு அடிப்படையில் சேரும் மாணவர்களுக்கு ரூ.75 மட்டுமே கல்விக் கட்டணமாக பெறப்படுகிறது. இதுதவிர கல்வி நிலையத்தில் விடுதியில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்களுக்கு ஒரு செமஸ்டருக்கு ரூ.600 மட்டும் விடுதிக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த முதுநிலைப் பட்டப் பட்டப் படிப்பில் சேர்ந்து படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், முதல் செமஸ்டர் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் பொதுவானதாகவே இருக்கும். இரண்டாவது செமஸ்டரில் இருந்து சிறப்புப் பிரிவு தேர்வு செய்தவர்களுக்கு தனித்தனியாக பாடத்திட்டங்கள் பிரித்து கல்வி கற்பிக்கப்படும்.
இந்தக் கல்வி நிலையத்தில் பாடத்திட்டங்களை விட, அறிவியல் செய்முறைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் கல்வி முறை உள்ளதால், இயற்கையாகவே மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர். கல்வி நிலைய ஆசிரியர்களைத் தவிர்த்து பாபா அடாமிக் ரிசர்ச் சென்டர், டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச், மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, ஹோமி பாபா சென்டர் ஃபார் சியன்ஸ் எஜுகேஷன் உள்ளிட்ட ஆராய்ச்சிப் பிரிவில் இருந்தும், விஞ்ஞானிகளும் நேரடியாக வந்து வகுப்பு நடத்துகின்றனர்.
இந்தக் கல்வி நிலையத்தில் உள்ள பாடத்திட்டங்கள் அனைத்தும், நாட்டின் தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்படுவதால், இந்தக் கல்வி நிலையத்தில் படித்து முடித்த பெரும்பாலான மாணவர்கள், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையங்கள், இந்திய அணுசக்தித் துறை, இந்திய அணுசக்திக் கழகம் உள்ளிட்ட இந்தியாவின் அதி முக்கியத் துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது.
இந்தக் கல்வி நிலைத்தில் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்பில் சேருவதற்கு பிளஸ் டூ வகுப்பில் வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்களுடன் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. அதுமட்டுமல்லாமல் பிளஸ் டூ வகுப்பில் 2009 அல்லது 2010 அல்லது 2011 ஆம் ஆண்டில் தேர்ச்சிப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். தற்போது பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்தான். பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 1986 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதிக்குப் பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணர்களுக்கு இந்த வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை உண்டு.
இந்தக் கல்வி நிலையத்தில் மொத்தம் 35 சீட்களே உண்டு. 18 இருக்கைகள் பொதுப்பிரிவினருக்காகவும், 7 இருக்கைகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காவும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 5 பேருக்கும், பழங்குடியின மாணவர்கள் 2 பேருக்கும் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளியான ஒரு பொதுப் பிரிவு மாணவருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மீதமுள்ள மூன்று இடங்கள் ஈகூ/ஙஒ/Nகூ பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இந்தப் பிரிவில் மாணவர்கள் விண்ணப்பிக்காத பட்சத்தில் அந்த இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அளிக்கப்படும்.
இந்தக் கல்வி நிலையத்தில் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்பில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் இன்ஸ்பயர் உதவித்தொகையை வழங்குகிறது. இதன் மூலம் இந்தக் கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு முதுநிலைப் படிப்பில் சேரும் மாணவர் மாதந்தோறும் ரூ.5000 உதவித்தொகை பெறுவார். இந்த உதவித்தொகையானது முதல் இரண்டு பருவத்தேர்வு வரை வழங்கப்படும். பிறகு ஒவ்வொரு மாணவர்களின் படிக்கும் திறன் கணக்கிடப்படும். அதன்பஐ சி.ஜி.பி.ஏ. என்று அழைக்கப்படும் கியூமுலேட்டிவ் கிரேட் பாயிண்ட் அவரேஜ்ஜின் படி மாணவர்கள் 10 புள்ளிகளுக்கு 6 புள்ளிகளாவது குறைந்தபட்சம் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு வழங்கும் உதவித்தொகை மீதியுள்ள ஆண்டுகளுக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒருங்கிணைந்த இந்த முதுநிலைப் பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் நெஸ்ட் அன்று சொல்லப்படும் நேஷனல் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட் தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வு ஆண்டு தோறும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும். இந்தத் தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
அறிவியல் அறிவை வளர்த்துக்கொள்வதற்கு மட்டுமல்லாமல், அறிவியலில் பெரிய ஆராய்ச்சியாளனாக விரும்பும் ஒவ்வொரு மாணவர்களும், மும்பையில் உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்ஸஸ் கல்வி நிலையத்தில் சேர்ந்து படிக்கலாம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here