பில்கேட்ஸ் பிறந்த தினம் – அக்டோபர் 28

0
157

தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வாழ்க்கையை எளிமையாக்க வேண்டும் என்று உறுதியாக நம்பிய அவர், சக மனிதர்களின் வாழ்க்கையை தொழில்நுட்ப புரட்சியின் வாயிலாக எளிமையாக்குவதையே தன்னுடைய லட்சியமாகக் கொண்டார். கணினி என்பது ஆடம்பர சாதனம் என்ற நிலை மாறி… ‘வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர்’, என்று வரும் நிலைக்கு வித்திட்டார். “இன்றைக்கு மைக்ரோசாஃப்டின் தயாரிப்புகளை பயன்படுத்தாதவர்கள், இந்த உலகத்தில் ஒருவர் கூட இல்லை என்று அடித்துச் சொல்லமுடியும்” என்கிறார் அவர்.
“நான் சில பாடங்களில் தோல்வியடைந்தேன். என்னுடைய நண்பன் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி அடைந்தான். தேர்ச்சியடைந்தவன் மைக்ரோசாஃப்ட்டில் பொறியாளராக பணிபுரிகிறான். நான் மைக்ரோசாஃப்ட்டின் முதலாளியாக இருக்கிறேன்” என்று சொன்ன இவரின் வாழ்க்கை, ஒரு தனி மனிதன் உலக வரலாற்றையே மாற்றி அமைத்ததற்கு உதாரணம்.
“வாழ்க்கை நியாயமானது இல்லை; அதனை அப்படியே ஏற்றுக்கொள்ள பழகிடுங்கள்” என்ற நம்பிக்கை கொண்ட அவர் கடுமையான தலைமைப் பொறுப்பாளராக இருந்தார். வெற்றிகளை கால் தூசிக்கு சமமாக கருதியதோடு, தோல்விகளிலிருந்து முன்னேற்றத்தை கண்டார். “உங்களை கூறுபோட்டு குற்றம் சொல்பவர்களின் கருத்துகள்தான் உங்களை உயர்த்தும். திருப்தியில்லாத வாடிக்கையாளர்களிடமிருந்தே நீங்கள் அதிகம் கற்றுக்கொள்ள முடியும். உலகத்தின் உயர்ந்த மனிதர்கள் சொல்லும் கருத்துகளை மட்டுமே கேட்பேன் என்ற மாயவலையில் மாட்டிக்கொண்டு விடாதீர்கள்” – இதைச் சொன்ன பில்கேட்ஸ், சொன்னதோடு நிறுத்தாமல் வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு கருத்திற்கும் மதிப்பு கொடுத்ததன் மூலம் தன்னை வளர்த்துக்கொண்டார்
“நல்ல மனிதர்கள் பணம் படைத்தவர்களாகவும் இருக்க வேண்டும்” என்ற வாசகம் உண்மைதான்! பணத்தால் எல்லாவற்றையும் செய்துவிட முடியாதுதான். ஆனால் பணத்தால் என்ன செய்ய முடியுமோ, அதை பணத்தால் மட்டுமே செய்ய முடியும். அதுவும் நல்ல மனிதர்களின் கையில் இருக்கும் பணமானது பல நல்ல காரியங்களின் அடிப்படையாக இருக்கும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து தன்னுடைய பங்களிப்பை குறைத்துக் கொண்ட இவர், “பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்” மூலமாக சேவை மனப்பான்மை கொண்ட பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும், பலதரப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும், கல்விப் பணிகளுக்காகவும் பெருமளவில் உதவி செய்து வருகிறார். உலகத்தாலும், அரசாங்கத்தாலும் கைவிடப்பட்ட பல பிரச்சினைகளை சரி செய்வதற்கு உதவி செய்து வருகிறார். குறிப்பாக பல முக்கியமான ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்கான ஆராய்ச்சிகளுக்கு அதிகளவில் பண உதவி செய்து வருகிறார். தன்னுடைய சொத்தில் 5 சதவீதத்தை மட்டும் பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு, மீதத்தை பொதுக் காரியங்களுக்காக பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார்.
“இந்தியாவின் தரம் வாய்ந்த கல்வி நிலையங்களை பார்க்கும்போது மிகவும் பெருமையாகவும், திருப்தியாகவும் இருக்கிறது; இன்றைக்கு பல இந்தியர்கள் உலக பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்” என்று தன்னுடைய இந்தியப் பயணத்தின் போது குறிப்பிட்டார் இவர். இன்றைக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை வகிப்பது ஒரு இந்தியர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
அவரிடம் ஒருமுறை, “மற்றவர்கள் உங்களிடம் எதிர்பார்க்காத, ஆனால் உங்களுக்கு மிகவும் பிடித்துச் செய்யும் ஒரு விஷயம் என்ன?” என்று கேட்டபோது, “ஒவ்வொரு நாள் இரவும் என் வீட்டில் பாத்திரங்களை நான்தான் சுத்தம் செய்வேன். நான் செய்வதைப் பார்த்து என் வீட்டில் இருப்பவர்கள் எனக்கு உதவி செய்ய வருவார்கள். ஆனால் நான் அதை செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் பதில் சொன்னார். “உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது உங்களையே நீங்கள் அவமானப்படுத்துவதற்கு சமம்” என்று சொன்ன அவர் தன்னுடைய வார்த்தைகளை எல்லா விஷயங்களிலும் கடைபிடித்தார்.
“என்னுடைய வாழ்க்கை என்னுடைய பொறுப்பு” என்பதை உறுதியாக நம்பிய அவர், கடவுள் நம்பிக்கை இல்லாதவரும் இல்லை. “கடவுள் மட்டுமே உங்கள் வாழ்க்கை சரித்திரத்தை எழுதும் ஆசிரியராக இருக்க முடியாது. நீங்களும் துணை ஆசிரியராக கடவுளுடன் சேர்ந்து உங்கள் சரித்திரத்தை எழுதுகிறீர்கள்”. ஒரு நேர்காணலின் போது பில்கேட்ஸ் சொன்ன வார்த்தைகள், “மதங்களின் நம்பிக்கைகளோடு சேர்ந்து, இன்றைக்கு அறிவியலும் ‘உலகம் எப்படி தோன்றியது’ என்ற ரகசியத்தை விளக்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த உலகம், அதிசயமானது, அற்புதமானது, அழகானது. ‘உலகம் எப்படி தோன்றியது’ என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றாலும், கடவுளை நம்புவதில் அர்த்தம் இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் அந்த நம்பிக்கையால், நீங்கள் வாழ்க்கையில் எடுக்கப்போகும் எந்த முடிவை வித்தியாசமாக எடுக்கப் போகிறீர்கள் என்பதுதான் கேள்வி”.
நீங்கள் என்ன கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதைச் சொல்லாமல், உங்களுக்கு எது அவசியமோ அதைச் சொல்பவர்களே உங்கள் வளர்ச்சிக்கு வித்திடுவார்கள். – பில்கேட்ஸ்.
அக்டோபர் 28 – பில்கேட்ஸ் பிறந்த தினம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here