பாரத் ஜாப்ஸ் அதிரடி சர்வே… வேலைவாய்ப்பின்மைக்கு மூலக் காரணம் யார்?

0
132
Hire ME

மிகப்பெரிய நிறுவனங்கள் கூட இழுத்துமூடும் நிலைக்கு வந்துள்ளது ஒருபுறம். வேலை இல்லா திண்டாட்டம் ஒருபுறம். இன்னொருபுறம் எங்கு திரும்பினாலும் வட இந்திய இளைஞர்கள் நம் மாநிலத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும் சூழல். என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது தமிழகத்தில்? உண்மை நிலை தெரியவேண்டுமா… வாருங்கள் முழுமையாக படியுங்கள்.

வேலைவாய்ப்பு தேடும் பிரிவினரை இங்கு மூன்று பிரிவாக பிரிக்கலாம்:

1. கிடைத்த எந்த வேலையை வேண்டுமானாலும் பார்ப்பேன். வாழ்க்கையில் முன்னேறுவேன்.
2. படித்த படிப்புக்கேற்ற வேலைக்குத்தான் போவேன். இல்லாட்டி போகவே மாட்டேன்.
3. அரசு வேலைக்குத்தான் போவேன். அதுவும் தமிழகத்துல கிடைச்சாதான் போவேன்.

இந்த மூன்று பிரிவுகளில் முதல் பிரிவினரால் எங்குமே பிரச்சினை வந்ததே இல்லை. இவர்கள் பட்டப் படிப்பு படித்திருந்தாலும் சரி, பொறியியல் படிப்பை படித்திருந்தாலும் சரி, பத்தாம் வகுப்பு படித்திருந்தாலும் சரி படித்து முடித்த ஒரு மாதத்திற்குள் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து குடும்ப பாரத்தை சுமக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் படிப்பு என்பது அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காகத்தானே தவிர வேலைக்கும் படிப்புக்கும் சம்பந்தமே இல்லை என்று பார்க்கும் வேலையை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். இவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்ற பிரச்சினையே வந்ததேயில்லை.

வேலைவாய்ப்பு இல்லை. வேலைவாய்ப்பு திண்டாட்டம் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கிறது என்பது மாதிரியான மாயையான தோற்றத்தை அதிகரிக்கச் செய்தது, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் இருக்கும் இளைஞர்களால் தான்.

பொறியியல் படிப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். வேலை கிடைச்சா பொறியியல் பிரிவில் தான் வேலை பார்ப்பேன் இல்லாட்டி வேலைக்கே போகவே மாட்டேன்னு சொல்லிட்டு வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருப்பவர்கள் தான் வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கியவர்கள். நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம்… படிச்ச படிப்புக்கேற்ற வேலையைத்தானே எதிர்பார்க்கிறோம், இதில் என்ன தவறு என்றுதானே கேட்குறீங்க…

நீங்க சொல்றது சரிதான். தங்களுடைய துறை சார்ந்த பிரிவில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இதுவரை எங்கெல்லாம் வேலை தேடி அலைந்திருக்கிறீர்கள். இதுவரை எத்தனை ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று உங்கள் பயோ டேட்டாவை கொடுத்திருக்கிறீர்கள். வேலைத் தேடி தமிழகத்தைக் கடந்து எத்தனை மாநிலங்களுக்கு இதுவரை பயணப்பட்டிருப்பீர்கள். லேட்டஸ்ட்டா… உங்க துறையில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகள் குறித்து அரை மணி நேரம் உங்களால் பேச முடியுமா என்று கேள்விகள் கேட்டால், இதில் பெரும்பாலான மாணவர்களிடம் பதிலே இல்லை.

சாக்கு போக்குகள்:

1. மெட்ராஸ்ல ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க… அவங்க வேலை இருந்தா சொல்றோம்னு சொல்லிருக்காங்க…
2. அங்க காஸ்ட் ஆஃப் லிவ்விங் ஜாஸ்தி… அதனால ஒரு மாசம் சென்னையில இருந்துட்டு வந்துட்டேன். என் ஃப்ரெண்ட்ஸ் கால் பண்ணுவாங்க…
3. ஒரு கம்பெனில 10 மணி நேரம் வேலை பார்க்கச் சொன்னாங்க… சம்பளமும் ரொம்ப குறைவாதான் கொடுக்கிறாங்க… அதனால வேலை வேண்டாம்னு வந்துட்டேன்.
4. ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். அது காண்ட்ராக்ட் ஒர்க் தானாம். மூணு வருஷம் கழிச்சுதான் நிரந்தரமாக்குவேன்னு சொல்லிட்டாங்க…

என்று தான் வேலையில்லாமல் போனதற்கு கலர் கலராய் பல்வேறு சாக்குபோக்காய் பதில்கள் வருகின்றன. இன்னும் ஒரு சிலர் இங்க பத்து மணி நேரம் வேலைப் பார்த்து கஷ்டப்பட்றதுக்கு பேசாம, போட்டித் தேர்வு எழுதி கவர்ன்மெண்ட் ஜாப்புக்கு போயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்னு… மேதாவியாய் பதில் சொன்னார்கள் சிலர் .

உண்மையில் வேலைப்பார்க்க சோம்பேறித்தனப்பட்டு போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தான் அதிகம். சொல்லப்போனால் எல்லா நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு இருக்கவே செய்கிறது. ஆனால் பி.இ. படித்தால் 50 ஆயிரம், சம்பளம் 1 லட்சம் சம்பளம் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு சென்னைக்கு வரும் இளைஞர்களுக்கு, 10,000 சம்பளமும், 15,000 சம்பளம் ஏமாற்றமளிப்பதால், வந்தவழியாகவே திரும்பிப்போய்விடுகின்றனர்.

மூன்றாவது வகையினர்…

அரசு வேலைக்குத்தான் போவேன்… இல்லாட்டி சும்மா வீட்டில் இருப்பேன்னு சிலர் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் உண்மையாகவே போட்டித் தேர்வுக்கு தயாராக இருந்தால், எப்போவோ வேலை கிடைத்து போயிருப்பார்கள். ஆனால் இவர்களுக்கும் ஒரு கொள்கை உண்டு. தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கும் குரூப் 4, குரூப் 2 தேர்வில் தான் வேலைக்குப் போவேன்னு கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பார்கள். ஆனால், நம் தேர்வு வாரியமோ இந்தத் தேர்வை ஆண்டுதோறும் நடத்துவது இல்லை. அதனால், இந்த இளைஞர்கள் அரசு மீது பழியைத் தூக்கிப்போட்டுவிட்டு இவர்கள் நல்லவர்கள் போல வீட்டில் தங்களை காட்டிக் கொள்வார்கள்.

தினம் தினம் அரசுப் போட்டித் தேர்வுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. வங்கி வேலைவாய்ப்புகள், பாதுகாப்புத்துறை வேலைவாய்ப்புகள், ரயில்வே வேலைவாய்ப்புகள், மத்திய அரசுத்துறை வேலைவாய்ப்புகள் வாரத்திற்கு ஒன்று வந்துகொண்டிருக்கிறது. ஆனால், இந்தத் தேர்வு எழுத வெளி மாநிலம் போக வேண்டியதிருக்கும். அல்லது பணி கிடைத்தால் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டியதிருக்கும் என்று சாக்குப்போக்குச் சொல்லியே உட்கார்ந்துவிடுவார்கள். கடைசியில் தேர்வு எழுத வயது வரம்பு இல்லாமல் போய், கிடைத்த வேலையை பார்க்க வேண்டிய அபாக்கியமான சூழ் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

மார்க்கெட்டிங் துறையில் மட்டும் தமிழகத்தில் 1 லட்சம் வேலை இருக்கிறது. ஆனால், அந்த வேலையைப் பார்க்க நம் இளைஞர்களுக்கு, தைரியமும் இல்லை, சாமர்த்தியமும் இல்லை. ஏனெனில் மார்க்கெட்டிங் துறை வேலை என்றால், அலைய வேண்டியதிருக்கும், வெய்யில் கொடுமை ஜாஸ்தியா இருக்கும், டார்கெட் டார்ச்சர் பண்ணுவாங்கன்னு அந்தத் துறையையும் இளைஞர்கள் தேர்வு செய்வதில்லை…

வேலைவாய்ப்பு குறித்து இப்போது இளைஞர்களின் மனோ நிலை:

1. இருந்த இடத்திலேயே வேலை கிடைக்கணும்.
2. அதுவும் 1 ஆம் தேதின்னா கரெக்ட்டா சம்பளம் வந்திடணும்.
3. வாரத்துக்கு இரண்டு நாள் லீவ் கிடைக்கணும்.
4. பெரிய சவால் எதுவும் வேலையில் இருக்கவே கூடாது.
5. அதிகபட்சம் 8 மணி நேரம் தான் வேலை பார்க்க முடியும். அதுவும் ரெண்டு பிரேக் வேணும்…
6. அதுவும் வேலை நிரந்தரமானதா இருக்கணும்.
7. அனுபவம் இல்லாட்டியும் படிச்ச படிப்புக்கு கை நிறைய சம்பளம் கொடுக்கணும்…

இதுவெல்லாம் தான் இன்றைய இளைஞர்கள் வேலைவாய்ப்பில் எதிர்பார்க்கும் சிறப்பம்சங்கள். இந்த சிறப்பம்சங்களோடு நிச்சயம் தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லை தான்.

ஒரு விஷயம் கவனித்துப் பாருங்கள்…

நான் சொல்லப் போகும் விஷயத்தை இதுவரை கவனித்திருக்கவில்லை என்றால், இனிமேலாவது கவனியுங்கள் பத்தாம் வகுப்போடு படிப்பை துறந்தவர்கள், பன்னிரெண்டாம் வகுப்போடு படிப்பை துறந்தவர்கள், ஐ.டி.ஐ. படிப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டவர்கள், டிப்ளமோ படிப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டவர்கள் யாரேனும் வேலைவாய்ப்பு இல்லை என்று சொல்லி பார்த்திருப்பீர்களா… ஏனெனில் அவர்கள் நிச்சயம் ஏதேனும் ஒரு பணியில் வேலை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

குறிப்பு :

படித்த படிப்பிற்கான வேலை கிடைக்க வேண்டி, இன்றுவரை தளராமல் ஒவ்வொரு நிறுவனமாய் ஏறிக்கொண்டிருக்கும், ஒவ்வொரு மா நிலமாக அலைந்துகொண்டிருக்கும், உண்மையில் எல்லா சொந்த விஷயங்களையும் புறக்கணித்துவிட்டு போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதே தன்னுடைய வாழ் நாள் லட்சியம் என்ற இளைஞர்களுக்கு இந்தக் கட்டுரை பொருந்தவே பொருந்தாது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here