நீங்கள் சிறந்த பெற்றோரா?

0
249

எல்லாப் பெற்றோருக்கும் சதா சர்வகாலமும் மனதிற்குள் எதிரொலித்துக்கொண்டிருக்கும் கேள்விதான் இது. இந்தக் கேள்விக்குள் போகும் முன் சிறந்த பெற்றோர் என்ற வாசகத்திற்கான சரியான அர்த்தத்தை நாம் புரிந்துகொண்டிருக்கிறோமா?
இந்தக் கேள்வியை எனக்கு தெரிந்த சில பெற்றோர்களிடத்தில் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் சொன்ன பதில்கள் அப்படியே உங்களுக்காக….
ஸ்ரீரங்கநாதன் – பத்மா தம்பதி, சென்னை: என் குழந்தையை பெரிய இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல சேர்த்து விட்ருக்கேன். முதல் வகுப்புக்கே 1.5 லட்சம் ரூபாய் ஃபீஸ் கட்டித்தான் படிக்க வச்சுட்டுருக்கேன். மதிய சாப்பாடு, காலை டிஃபன், சாயங்காலம் பால் எல்லாம் ஸ்கூல்லேயே கொடுத்துட்றாங்க. நல்ல படிக்கிறாங்க. அவங்க வேலையை அவங்களே செஞ்சுக்கிறாங்க. லீவுல கூட எக்கச்சக்க எக்ஸ்ட்ரா கிளாஸ்லாம் உண்டு. அந்த ஸ்கூல்ல பிளஸ் டூ முடுச்ச உடனேயே அங்கிருந்தே அப்படியே டாக்டர் சீட்தான். என் பிள்ளைங்களுக்கு பார்த்து பார்த்து செய்யற எங்களை விட சிறந்த பெற்றோர் வேர் யார் இருக்க முடியும்.
ரமேஷ் – மெர்லின், நாகர்கோவில் : இவ்ளோ நாள் சென்னையில பெரிய ஐ.டி. கம்பெனில ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். கடந்த ஒரு வருஷமா மும்பையில ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். என்னோட மனைவி சவுதி அரேபியாவுல நர்ஸா ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க. ரெண்டு பேரோட சம்பளம் மட்டும் மாசம் 2.5 லட்சம் ரூபாய் வரும். போன மாசம் நாகர்கோவில்ல ஒரு தென்னந்தோப்பு வாங்கியிருக்கோம். எனக்கு ஒரே ஒரு பையன். அவன் அவங்க தாத்தா பாட்டி வீட்ல வளர்றான். டெய்லி ஒரு தடவையாவது என் பையன் கூட ஸ்கைப்ல பேசிடுவேன். இப்போ அவன் ஆறாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கான். எங்க குடும்பத்துல ஒருத்தர் கூட டாக்டர் கிடையாது. என் பையனை எப்படியாவது டாக்டர் ஆக்கிடணும். அதுக்கு இப்பவிருந்தே பணம் சேர்த்தாகணும். அவன் பிளஸ் டூ முடிச்சு வரக்கூடிய நேரத்துல 50 லட்ச ரூபாய் சேர்த்து வச்சிட்டேன்னா… எப்படியும் அவன் டாக்டர் ஆயிடுவான்.
இன்னும் மூணு வருஷம் கழிச்சு என்னோட புராஜக்ட் முடிஞ்சிடும். என்னோட மனைவி இன்னும் 7 வருஷம் கண்டிப்பா அரேபியாவுலதான் இருந்தாகணும், அதுக்கப்புறம் முழுக்க முழுக்க என் பையன் கூடத்தான் முழுசுமா என்னோட நேரத்தை செலவழிப்பேன்.
ராஜேஷ் – செல்வி, திருநெல்வேலி : நான் மாநில அரசு ஊழியர். வேலை பார்க்கறது திருநெல்வேலியிலதான். ஆனா, நான் ஒரு குக்கிராமத்துலதான் சொந்தமா வீடு கட்டி வாழ்ந்துட்டுருக்கேன். கிணறு, மரம், செடி, கொடிகளோட வீடு. எனக்கு ரெண்டு பசங்க. ரெண்டு பேரும் பக்கத்துல உள்ள ஒரு தனியார் பள்ளியிலதான் படிக்கிறாங்க. ஆங்கில வழி பள்ளிதான். எனக்கு தனியார் பள்ளியில சேர்ப்பதற்கு உடன்பாடு இல்லேன்னாலும், வேற வழி இல்லாமதான் இதுல சேர்த்துருக்கேன். ஒருத்தன் 5 ஆம் வகுப்பு படிக்கிறான். இன்னொருத்தன் 2 ஆம் வகுப்பு படிக்கிறான். அடுத்த வருஷம் ரெண்டு பேரையும் அரசுப் பள்ளியிலதான் சேர்க்கப் போறேன். இது ஓடியாடக்குடிய வயசு. இப்பவே நல்ல மரம் ஏறுவாங்க… எந்த கிணத்துலேயும் குதிச்சு நீச்சல் அடிப்பாங்க. 3 கிலோமீட்டர் தூரத்துல இருக்கற என் மாமனார் வீட்டுக்கு நடந்தே போயிடுவாங்க. அவங்க அவங்களுக்கு பிடிச்சத செய்யறாங்க. சின்ன பையனுக்கு ஸ்போர்ட்ஸ் ரொம்ப பிடிக்கும். அதனால அவனை வருங்காலத்துல பெரிய ஸ்போர்ட்ஸ் மேனா மாத்தனும். இன்னொருத்தனுக்கு மரம் செடி நடுறதுன்னா ரொம்ப பிடிக்கும், டெய்லி செடிக்கு தண்ணியெல்லாம் அவன் தான் ஊத்தறான். 2 ஆம் கிளாஸ் தானே படிக்கிறான். அவன் மனசுல என்ன ஆசை இருக்குன்னு தெரியல. எனக்கு அவனை பெரிய விவசாயியா மாத்தணும்னு ஆசை. ஆனா அவனோட ஆசை என்னன்னு தெரியல. பெருசா வளர்ந்த பிறகு அவன் என்ன ஆசைப்படறானோ, அதுவா அவனை ஆக்கிடணும். வருஷத்துக்கு ரெண்டு டிரஸ்தான். இன்னிக்கு வரைக்கும் என்னோட பசங்க ஹோட்டல்ல சாப்பிட்டது இல்ல. பசங்களுக்கும் கஷ்டம் என்னன்னு தெரியணும் சார், நாம என்ன வானத்துல இருந்தா குதிச்சிருக்கோம். நம்ம படுற கஷ்டம் அவங்களுக்கும் கொஞ்சம் தெரியணும். அப்போதான் உறவுகளோட வலிமையும், பணத்தோட மதிப்பும், பாசத்தோட முக்கியத்துவமும் தெரியும். என் பையன் எப்படி ஆகணும்ங்கற ஆசை, எல்லாம் தனிப்பட்ட முறையில எனக்கு கிடையாது. அவங்க ஆசைப்பட்றதை அப்பாவா இருந்து அவங்களுக்கு கிடைக்க வழி அமைச்சு கொடுக்கணும். அவ்ளோதான்!
இந்த மூன்று கதையும் படித்திருப்பீர்கள். இந்த மூன்று கதையில் நீங்கள் எந்த கதையோடு ஒத்துப் போகிறீர்கள். நீங்களே உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள்.
உங்கள் குழந்தையை பொத்தி பொத்தி பார்க்கிறீர்களா? அவர்கள் கண்ணில் கண்ணீர் வடிந்தால் உங்கள் நெஞ்சில் ரத்தம் வடிகிறதா? அவர்கள் எதிர்கொள்ளும் சின்ன சின்ன பிரச்சினைகளைக்கூட உங்கள் பிரச்சினையாய் தலையில் தூக்கிப் போட்டுக்கொண்டு அலைபவர்களா? உங்கள் குழந்தை வசதி வாய்ப்பைத் தவிர வேறு எந்த கஷ்டத்தையும் அனுபவித்துவிடக்கூடாது என்பதற்காக உங்கள் வசதிக்கு மீறி அவர்களுக்கு பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கும் முதல் இரண்டு வகையைச் சேர்ந்த பெற்றோரா நீங்கள்?
அப்படியானால் உங்கள் மனதை நீங்கள் திடமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் தவறான முன்னுதாரன பெற்றோர் ஆவீர்கள். உங்கள் குழந்தைக்கு வாழ்க்கையின் தத்துவத்தை தவறாக போதித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குழந்தையின் அனுமதியில்லாமல் அவர்களின் வாழ்க்கையையும் சேர்ந்து நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
தவறான முன்னுதாரண பெற்றோராக நீங்கள் மாறியதற்கான காரணங்கள் மிக மிக அர்பமான விஷயம்தான். எல்லா பெற்றோருக்கும் தங்கள் குழந்தை தங்களை விட சிறப்பாக வாழ வேண்டும் என்ற ஒற்றைக் கனவைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. நீங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், அந்தக் கனவே உங்கள் குழந்தையின் வாழ்க்கையை பதம் பார்க்கப்போகிறது என்ற விபரீதம் புரியாமல் வழி நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடும் விதவிதமான சாப்பாட்டைவிட அம்மா கொடுக்கும் பழைய சாதம், துவையலில் கிடைக்கும் சுகம் அலாதியானது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்றால், மேலே நான் சொன்னதையும் நீங்கள் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.
விலை உயர்ந்த காலணியை வாங்கிக்கொடுக்க தெரிந்த உங்களால், குழந்தையை நடக்க கற்றுக்கொடுக்க தவறிவிட்டீர்கள் என்பதே இங்கு பொதிந்திருக்கும் யதார்த்த உண்மை.
உச்சபட்ச வசதிகள் தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தையை குழந்தையாய் வாழ கற்பித்துக்கொடுக்கவில்லை.
பாகற்காய் சாப்பிட்டால் வயிற்றுக்குள் இருக்கும் பூச்சியை கொன்றுவிடும் என்று சொல்லி சொல்லித்தான் நம் பெற்றோர்கள் நம்மை வளர்த்தார்கள். ஆனால், இன்று நாம் என்ன செய்கிறோம், ‘என் குழந்தை பாகற்காயே சாப்பிடமாட்டான், கசக்குதுன்னு சொல்றான்’னு அப்படியே விட்டுவிடுகிறோம்.
சரி என்பதை சரி என்று சொல்லும் அத்தனை அதிகாரமும் நமக்கு இருந்தும், அதை வலுக்கட்டாயமாய் திணிப்பதையும் தவிர்த்துவிடுகிறோம். உங்கள் பெற்றோர் உங்களை கண்டிப்புடன் தானே வளர்த்தார்கள். ஆனால், அந்தக் கண்டிப்பை உங்கள் குழந்தைகளின் மேல் காட்டுவதற்கு ஏன் தயங்குகிறீர்கள்.
அவனைப் பார் முதல் ராங்க் வாங்குறான், உனக்கு நான் கேட்டதை எல்லாம் வாங்கித் தாரேன்.. ஆனா நீ எப்பவுமே ரெண்டாவது ரேங்க்தான் வாங்குற. அந்த வீட்டு குழந்தையை பார் காலையில மியூசிக் கிளாஸ் போறான், சாயங்காலம் ஹிந்தி கிளாஸ் போறான். நீ தண்டத்துக்கு டி.வி.தான் பார்த்துட்டு இருக்க… இதுதான் நீங்கள் குழந்தையை கடிந்துகொள்ளும் உச்சபட்ச கண்டிப்புகள்.
முதல் ரேங்க் வாங்குவதற்கும், மேடை ஏறி பாட்டுப் பாடுவதற்கும், ஊர் ஊராய் போய் டான்ஸ் ஆடுவதற்கும் உங்கள் குழந்தைக்கு அடிப்படையில் ஞானம் இருக்கிறதா? ஆசை இருக்கிறதா? என்று எப்போதுமே நாம் யோசிப்பதேயில்லை. ஆய கலைகள் அறுபத்தி நான்கும் எப்படியாவது நம் குழந்தைகள் பெற்றாக வேண்டும் என்று ஏன் துடிக்க வேண்டும். அவர்களை இயல்பாய் இருக்க விடலாமே. அந்த குழந்தைக்கான தனித்தன்மையை வளர்க்க சந்தர்ப்பம் அளிக்கலாமே. பந்தயக் குதிரைகளா குழந்தைகள்.
நீங்கள் குழந்தைகளை பளபளப்பான சாலையில் ஓட வைத்து பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் சமுதாயம் என்பதோ கரடு முரடான பயணிக்க முடியாத அளவிற்கான பாதை ஆயிற்றே. இந்தப் பாதையில் எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் எப்படி பயணிக்கப் போகிறார்கள் என்பதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா. இன்று சமுதாயத்தில் இளம் குற்றவாளிகள் அதிகரித்து போனதற்கும், விவாகரத்து எண்ணிக்கைகள் பெருகிப் போனதற்கும் பிள்ளைகள் காரணமல்ல, தவறாக வழி நடத்திக்கொண்டிருக்கும் பெற்றோர்களே காரணம்.
கணித மேதை ராமானுஜம் முதல், இன்று நாம் உதாரணப்புருஷராக பார்க்கும் அப்துல்கலாம் வரை அவர்கள் குழந்தையாக இருந்த தருணங்களில் அவர்கள் விரும்பியதை மட்டுமே செய்தார்கள். அதற்கு உறுதுணையாய் பெற்றோர்கள் இருந்தார்கள். அதனால்தான் இன்று அவர்களை உதாரணப் புருஷர்களாக கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். பெற்றோரின் ஆசையினால் திணிக்கப்பட்டு வளர்ந்த குழந்தைகள் எவரும் இதுவரை வரலாற்றை வெற்றிக் கொண்டதாக சரித்திரம் இல்லை. உங்கள் குழந்தை சரித்திரம் படைப்பதும், குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதும் உங்கள் வளர்ப்பில்தான் இருக்கிறது.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், அவர்களை அவர்கள் விரும்பும் போக்கில் வளர விடுங்கள். சரி என்பதை வலுக்கட்டாயமாய் திணியுங்கள். அவர்களின் ஆசைக்கு வடிகாலாகத்தான் பெற்றோர்களாகிய நாம் இருக்கவேண்டுமே தவிர்த்து, உங்கள் ஆசைக்கான வடிகாலாக அவர்களை மாற்றிவிடாதீர்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ உங்கள் பெற்றோர் உங்களை அனுமதித்ததைப் போல, அவர்களின் வாழ்க்கையை அவர்கள் முழுமையாக வாழ அனுமதியுங்கள். உங்கள் குழந்தையும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு உதாரணப் புருஷர்களாக மாறுவதற்கு வழி அமைத்துக் கொடுங்கள். அப்படி செய்துவிட்டால், நீங்களும் சிறந்த பெற்றோர்தான்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here