அம்மா… நான் ரெடி!

0
207

வேகமாக ஓடி கொண்டிருக்கும் வாழ்க்கையில் தினம்தினம் நாம் பல பிரச்சினைகளை சந்திந்து வருகிறோம். அவற்றில் மிகவும் கவனமாக நாம் இருக்க வேண்டிய விஷயம் ‘குழந்தை வளர்ப்பு’ என்று ஆகிவிட்டது. அனைத்து பிரச்சினைகளையும் விட மிகவும் பொருமையாகவும், ஜாக்கிரதையாகவும், கையாள வேண்டிய ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது இன்றைய ‘குழந்தை வளர்ப்பு’ முறை. அதைப் பற்றிய விஷயங்களைத்தான் இந்தத் தொடர் மூலம் நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.
குழந்தைகளின் மனதானது ஆர்வம் மிகுந்தது. எல்லாமும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை கொண்டது. பருவம் அதிகரிக்க அதிகரிக்க இந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். ஆகவே, குழந்தைகளை ஒவ்வொரு பருவத்திலும் கையாள்வது என்பது மிகப்பெரிய கலை. அந்தக்காலத்தில் சர்வ சாதாரணமாக குழந்தைகளைக் கையாளத் தெரிந்த நம் முன்னோர்கள் மாதிரி நம்மால் இப்போது குழந்தைகளை கையாளத் தெரிவதில்லையே, அது ஏன்?
எங்கு திரும்பினாலும் ஊடகங்கள். தவறான வழிகாட்டல்கள், தவறான முன்னுதாரணங்கள், நாம் கற்றுக்கொடுத்து வரும் அறிவைவிட தானாய் தெரிந்துகொள்ளும் விஷயங்கள்தான் இன்றைய குழந்தை வளர்ப்பு முறையை இடியாப்ப சிக்கலாக்கியிருக்கிறது.
எல்லா பிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது. தீர்வில்லாத பிரச்சினையும், விடையில்லாத கேள்விகளும் இந்த பிரபஞ்சத்தில் கிடையவே கிடையாது. அதேபோலத்தான் எல்லா குழந்தைகளையும் கையாள்வது என்பது ஒரு கலை. அந்தக் கலையைத்தான் இந்த இதழின் வாயிலாக உங்களிடம் பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன். இனி, “என் குழந்தையை வளர்க்கறதுக்கு நான் படும் பாடு இருக்கிறதே… அய்யய்யோ..” என்று பெற்றோர்கள் சலித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
சரிதானே… அதற்கு நான் பொறுப்பு!
கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது எளிமையா? எல்.கே.ஜி., ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது எளிமையா? என்று கேட்டால் உங்களின் பதில் என்னவாக இருக்கும்?
“ஆங்… நிச்சயம் கல்லூரி மாணவர்களுக்கு நடத்துவதுதான் எளிமை. ஏனெனில் அவர்கள் சொல்வதைப் புரிந்துகொள்வார்கள். ஒரு தடவைக்கு இரண்டு தடவை அவர்கள் உணரும்படி சொல்லிவிட்டால், எதையும் நம்மால் புரிய வைத்துவிட முடியும். ஆனால், சின்ன குழந்தைகள் அப்படியல்ல… நாம் ஒன்று சொல்ல அவர்கள் ஒன்று சொல்வார்கள், சின்ன குழந்தைங்கள… கையாள்றதெல்லாம் அவ்வளவு ஈஸியான காரியம் இல்லைங்க…” இதுதானே உங்கள் பதில்?
எந்தக் குழந்தைகளை கையாள்வது என்பது மிகச் சிரமம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவர்களிடமிருந்துதான் இந்தப் பகுதியை தொடங்கப்போகிறேன்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை 4 – 5 வயதில்தான் குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் வழக்கம் நம்மிடையே இருந்தது. ஆனால், இப்போதோ 2 வயதிலேயே குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்து விடுகின்றனர். காலை 7 மணி முதல் 8 மணி வரை அனைத்து வீடுகளிலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மிகப்பெரிய போராட்டமே நடந்து முடிந்துவிடுகிறது.

அப்பப்பா… இப்போதான் ‘உசுரே வந்துச்சு…’ என்று பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு பெருமூச்சு வாங்கும் பெற்றோர்களை நான் தினசரி சந்திக்கிறேன். எதற்காக இந்த ஆர்ப்பாட்டம்? நம் செல்லக் குழந்தைகளை அன்பாக பள்ளிக்கு அனுப்பவே முடியாதா?
தடைகள் எங்குதான் இருக்கிறது? எதில், எப்போது, எங்கு மாற்றம் நிகழ்ந்தால் இந்தப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும் என்பதை இனி பார்ப்போம்…
1.படுக்கையிலிருந்து எழுப்பும் முறை!
பெரும்பாலும் முதல் முக்கிய பிரச்சினை படுக்கையிலிருந்துதான் ஆரம்பிக்கும். பொதுவாக பெரியவர்களாகிய நாம் குழந்தைகளை எப்படி எழுப்புவோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். அலாரம் 6 மணிக்கு வைப்போம். ஆனால் கடிகாரம் அடித்த உடன் அதை ’ஸ்னூஸ்’ல் வைத்துவிட்டு தூங்குவோம். பிறகு அரைமணி நேரம் கழித்து ஒரு வழியாக 6.30 மணிக்கு வேறு வழியே இல்லாமல் எழுந்துவிடுவோம். பெற்றோர்களாகிய நாமே இப்படியிருக்க, குழந்தைகளை மட்டும் குறை சொல்வது எந்த வகையில் நியாயம்?
‘பள்ளிக்கு நேரமாகிவிட்டது, எழுந்திரு’ என்று கத்தினால் விழித்துக்கொள்வார்களா என்றால் நிச்சயம் விழித்துக்கொள்வார்கள். ஆனால், நீங்கள் எழுப்பும் அந்த ஒலி, அவர்களுக்குள் அச்சம் கலந்த ஒரு அதிர்வை உருவாக்கும் என்பது நீங்கள் அறியாதது. அந்த அதிர்வுதான், அவர்களின் பயத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது என்கிறது ஆராய்ச்சி. அதுவும் காலையில் குழந்தைகளை அப்படி கத்தி, திட்டி எழுப்பினால் எப்படி அந்த நாள் அவர்களுக்கு நல்ல நாளாக அமையும்? எப்படியும் அரைமணி நேரம் கத்துவது என்று ஆகிவிட்டது. அதை ஏன் நாம் கத்த வேண்டும். கத்தாமல் அதே அரை மணி நேரத்தை ஏன் அழகாக செலவிடக்கூடாது.
6.30 மணிக்கு குழந்தை எழுந்திறிக்க வேண்டும் எனில், 6 மணிக்கே அந்த குழந்தையின் அருகே சென்று மெல்லமாக மணி ஆகிவிட்டது என்று கூறாமல், அந்த குழந்தைகளுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றைப் பற்றி பேசலாம். குறிப்பாக முந்தைய நாள் நடந்த குழந்தைகளுக்குப் பிடித்த சம்பவத்தைப் பற்றியோ, அவர்களுக்கு பிடித்த விளையாட்டுப் பற்றியோ, உணவு, பறவைகளைப் பற்றியோ ஏதாவது பேசுவதன்மூலம் அந்த குழந்தை அந்த பேச்சில் ஆர்வம் கொண்டு, அதைப் பற்றி பேசவோ, பதில் கொடுக்கவோ ஆரம்பிக்கும். அப்போது இயல்பாக தூக்கம் போய்விடும். இதற்கும் அதே அரை மணி நேரம்தான் தேவை. ஆனால், அந்த குழந்தையை எழுப்புவதற்கு முன்பே அடுப்பங்கறை வேலைகளை முடித்துவிட்டிருக்க வேண்டும். அப்போதுதான் பொருமையாக அவர்களை எழுப்ப முடியும்.
இந்தமாதிரி ஆசுவாசமாக எழுந்திருக்கும் குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாகவும், படைப்பாற்றல் மிகுந்தவர்களாகவும், எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்வதற்கான மனப்பான்மை படைத்தவர்களாகவும் இருப்பார்கள். பிறகு நாம் நிதானமாக பிற விஷயங்களை செய்யலாம். இதில் இன்னொரு விஷயத்தை அடிக்கடி உங்களுக்குள் ஞாபகப்படுத்திக்கொண்டேயிருங்கள், பெற்றோர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தைகளை குழந்தைகளாகப் பார்க்க தவறிவிடவேக்கூடாது.
பள்ளி என்றால் என்ன? எதற்காக படிக்க வேண்டும்? எதற்காக காலையிலேயே நம்மை இப்படி துன்புறுத்துகிறார்கள்? நிம்மதியாக தூங்கவே முடியவில்லையே… போன்ற எந்தவொரு எதிர்மறையான சிந்தனைகளும் குழந்தையின் மனதில் ஏற்படாதவாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
அப்படிமட்டும் அவர்கள் எதிர்மறையாக நினைக்க ஆரம்பித்துவிட்டால், பள்ளியும், கல்வியும் அவர்களுக்கு எட்டிக்காய் விஷமாய்ப் போய்விடும். பிறகு அவர்கள் எப்போதும் பள்ளி செல்வதையும், கல்வி பயில்வதையும் எதிரிகள் போல் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
குழந்தைகளுக்கு பெற்றோர்கள்தான் பள்ளி ஒரு நல்ல அனுபவக் கூடம், சிறந்த நண்பர்களைப் பெற்றுத்தரும் சிறந்த இடம் என்ற எண்ணங்களை உண்டுபண்ண வேண்டும். அதற்குப் பதிலாக எதிர்மறையான எண்ணங்களை உங்களின் செயல்கள் மூலமாகவோ, நடவடிக்கையின் மூலமாக வளர்த்துவிடக்கூடாது என்பதில் பெற்றோர் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். அதனால்தான் காலையில் குழந்தைகளை படுக்கையில் இருந்து எழுப்புவது மிக முக்கியமான ஒரு விஷயமாக சொல்லப்படுகிறது.
இப்படி சந்தோஷமாக எழும் குழந்தைகளின் மன நிலைதான் மிக சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
2. பள்ளிக்கு தயார்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளை கிளப்பும்போதுதான், பென்சிலைக் காணோம், ஷூவைக் காணோம், சாக்ஸைக் காணோம் என்று தேடி ஓடுவார்கள்.
இதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதாவது குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்குத் தேவையான பாட புத்தகப் பை, அவர்களது அடையாள அட்டை, சாக்ஸ், டை, பெல்ட் போன்றவற்றை ஒரே இடத்தில் வைத்து, அதே இடத்திலிருந்து எடுக்க பழகிக்கொண்டால், கடைசி நேர பதற்றத்திற்கு வழியில்லாமல் போய்விடும். இந்தப் பழக்கத்தை குழந்தையிடம் கொஞ்சம் கொஞ்சமாக பழக்குங்கள்.
பழக்குங்கள் என்பது நீங்கள் நேர்த்தியாக பத்திரப்படுத்தும் அழகு, பொருட்களை வைத்து எடுக்கும் பாங்கு அத்தனையும் கவரும் வகையில் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு முதல் ஆசான் பெற்றோர்கள்தான். உங்களைப் பார்த்துதான் குழந்தைகள் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறது என்பதை மட்டும் ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் தினந்தோறும் செய்யும் ஒரு விஷயத்தை, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குழந்தைகள் அவர்களாகவே செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்பதை முதலில் பெற்றோர்களாகிய நீங்கள் நம்ப வேண்டும். அதுவரை, அவர்கள் செய்யும் சின்ன சின்ன வேலையைக்கூட பெரியவர்களாகிய நீங்கள்தான் செய்தாகவேண்டும். இதற்கு மாற்று எதுவும் இல்லை.
குழந்தைகள் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் உபகரணங்கள் மட்டுமல்லாது, நாளை பள்ளிக்கு குழந்தைகளுக்கு என்னமாதிரியான ஸ்நாக்ஸ் கொடுத்துவிட வேண்டும், என்ன டிஃபன் செய்ய வேண்டும், மதிய உணவு என்ன செய்யப் போகிறோம் என்பது வரை இன்று இரவு படுக்கைக்கு செல்லும் முன்னரே தீர்மானித்துவிடவேண்டும்.
அதேபோல் இரவில் சாப்பிட்ட பாத்திரங்களை தேய்த்துவைப்பது, அலமாரியில் உள்ள சமையல் செய்யும் பாத்திரங்களை எடுப்பதற்கு ஏதுவாக அடுக்கி வைப்பது போன்ற சின்ன சின்ன விஷயங்கள், மறு நாள் உங்களுக்கு பெரிய புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லும் காலைப்பொழுதானது மிக வேகமாக நகர்வதைப்போன்ற உணர்வை உங்களுக்குள் ஏற்படுத்துவதற்கு ஒரே காரணம் பெற்றோர்களாகிய நீங்கள், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு வைத்த முந்தைய நாள் வேலையினால் நிகழ்வதே. இன்றைய நாளுக்கான தேவையை முந்தைய நாளே தயாராக வைத்துவிட்டால், குழந்தைகள் பள்ளி செல்லும் அந்தக் காலைப் பொழுது மிக மகிழ்ச்சியாய் அமையும். உங்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் சேர்த்துதான்.
குழந்தைகள் பள்ளிக்கு புறப்பட்டுச் செல்லும் அந்த கண நேரம், முகம் மலர்ந்து, மகிழ்ச்சியாய் “அம்மா… பை..” என்று சொல்லிச் செல்லும் அந்த நிகழ்வாய் ஒவ்வொரு காலைப் பொழுதும் அமையவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், மேலே நான் சொன்ன அந்த இரண்டு வழிமுறைகளையும் கொஞ்சம் பின்பற்றி பாருங்கள், பெரியதொரு மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் இனி உணர ஆரம்பிப்பீர்கள்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here